Published:Updated:

இன்று மாதாவின் தேர் பவனி... வேளாங்கண்ணியில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தார்கள்!

மு.இராகவன்
இன்று மாதாவின் தேர் பவனி... வேளாங்கண்ணியில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தார்கள்!
இன்று மாதாவின் தேர் பவனி... வேளாங்கண்ணியில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தார்கள்!

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டுத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான, பெரிய திருத்தேர் பவனி இன்று (7.9.2018) இரவு நடைபெற உள்ளதால் நாடெங்கிலுமிருந்து வேளாங்கண்ணிக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.  

நாகை மாவட்டம், வேளாங்கண்ணியில் சர்வ மதத்தினரும் வழிபடும் ஆரோக்கிய மாதாவின் பிறந்தநாள், ஆண்டுதோறும் பெருவிழாவாக 11 நாள்கள் தொடர்ந்து நடைபெறுவது வழக்கம். இந்த ஆரோக்கிய மாதா ஆலயம் அமைந்ததே ஓர் அற்புத நிகழ்வாகும். 17-ம் நூற்றாண்டின் மத்தியில் சீனாவில் உள்ள மாக்கோயிலிருந்து போர்த்துக்கீசிய வியாபாரக் கப்பல் ஒன்று இலங்கையை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது திடீரெனத் தாக்கிய புயலால் நிலை குலைந்தது. `திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை' என்பார்கள். கப்பல் கடலில் மூழ்கிவிடாமல் இருக்க மாலுமிகளும் கப்பல் ஊழியர்களும் மரியாவிடம் 'தங்களைக் காப்பாற்றுமாறும், உயிருடன் நாங்கள் கரை சேருமிடத்தில் கன்னி மரியாவுக்கு ஆலயம் ஒன்றை அமைத்துத் தருவதாகவும்' வேண்டிக்கொண்டனர். மாதாவின் கருணையால் அந்தக் கப்பல் பத்திரமாக வேளாங்கண்ணியில் கரை சேர்ந்தது. உயிரைக் காப்பாற்றிய நன்றிக் கடனுக்காகப் போர்த்துக்கீசியர்களால் சிறிய மாதா ஆலயம் ஒன்று அமைக்கப்பட்டது (இன்றும் அது பழைய மாதா கோயில் என்றழைக்கப்படுகிறது).  

அதன் பின் மாதா மீது நம்பிக்கை கொண்ட பக்தர்களின் காணிக்கையால் இன்று பேராலயமாகவும் தியானக் கூடமாகவும், பல்வேறு கட்டடங்களாவும் உயர்ந்து நிற்கிறது. இங்குள்ள மாதாவை நாடி வருபவர்களின் மனக் குறைகளையும் உடற்பிணிகளையும் அகற்றி மாதா பல அற்புதங்கள் நிகழ்த்துவதாகப் பக்தர்கள் நம்புகின்றனர். அதனால் ஜாதி, மதங்கள் கடந்து அனைவரும் வழிபடும் கருணை மிகுந்த ஆலயமாக இது திகழ்கிறது.  

இந்தத் தேவாலயத்தில் கடந்த ஆகஸ்ட் 29-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய விழாவில் மகுடமாக அமைவது மாதாவின் திருத்தேர் பவனிதான். இன்று இரவு வண்ண மயமான மின் அலங்கார விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட மாதாவின் திருத்தேர் பாண்டு வாத்தியங்கள் முழங்க முக்கிய வீதிகளின் வழியாக வலம் வந்து பேராலயத்தை அடையும்.  

நாளை 8-ம் தேதி மாதாவின் பிறந்தநாளை முன்னிட்டு தஞ்சை மறைமாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் தலைமையில் சிறப்புக் கூட்டுத் திருப்பலி நடத்தப்படுகிறது. அன்று மாலை 6.00 மணிக்கு திருக்கொடி இறக்கப்பட்டு விழா இனிதே நிறைவடையும். இந்நன்னாளில் அனைவரும் கலந்துகொள்ளும் பொருட்டு நாகை மாவட்டத்துக்கு உள்ளுர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்றும், இதை ஈடுசெய்ய வரும் 13-ம் தேதி பள்ளிகளுக்கு மட்டும் வேலை நாளாகும் என மாவட்ட ஆட்சியர் சுரேஷ் குமார் அறிவித்துள்ளார்.

பேராலய இறுதி நாள் விழாவில் கலந்துகொள்ள தமிழகத்தின் பல்வேறு ஊர்களிலிருந்து பலநூறு மைல்கள் பாதயாத்திரையாக பக்தர்கள் வந்து கொண்டுள்ளனர். பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்தும் பக்தர்கள் வருகை தந்துள்ளனர். பொதுமக்களுக்குத் தேவையான குடிநீர் மற்றும் அடிப்படை சுகாதார வசதிகளை மாவட்ட மற்றும் பேராலய நிர்வாகம் செய்துள்ளது. நகரில் பல்வேறு பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்களுடன் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

வேளாங்கண்ணி கடலில் குளிக்கும் பக்தர்கள், கடல் அலையில் சிக்கி அடிக்கடி உயிரிழப்புகள் ஏற்படுவதால் அங்கு கடலோரக் காவல் படையும், ரோந்துப் படகுகளும் காவல் புரிகின்றன. தீயணைப்பு வீரர்களும் தயார் நிலையில் உள்ளனர். பக்தர்களுக்குப் பாதுகாப்பான உணவு கிடைப்பதை உறுதி செய்திடும் வகையில் மாவட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலர் செல்வராஜ் தலைமையில் இறைச்சி விற்பனை இடங்கள், ஹோட்டல்கள், சாலையோர உணவு விடுதிகள், மளிகைக் கடை, பெட்டிக் கடை உள்ளிட்ட இடங்களில் ஆய்வு செய்து வருகின்றனர். இதில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள், காலாவதியான உணவுப் பொருள்கள் மற்றும் குளிர்பானங்களை பறிமுதல் செய்து அழித்து வருகின்றனர்.  

ஆண்டு பெருவிழாவால் வேளாங்கண்ணி நகரமே மின் அலங்கார விளக்குளால் அலங்கரிக்கப்பட்டு விழாக்கோலம் பூண்டுள்ளது. பக்தர்கள் மாதாவுக்கு மெழுகுவத்தி ஏற்றி மெய்யுருக வேண்டி, தங்கள் வேண்டுதலை நிறைவேற்றி மகிழ்ச்சியடைந்து வருகின்றனர்.