Published:Updated:

சகலமும் அருளும் கெளரி தேவி வழிபாடு!

சகலமும் அருளும் கெளரி தேவி வழிபாடு!
பிரீமியம் ஸ்டோரி
சகலமும் அருளும் கெளரி தேவி வழிபாடு!

சகலமும் அருளும் கெளரி தேவி வழிபாடு!

சகலமும் அருளும் கெளரி தேவி வழிபாடு!

சகலமும் அருளும் கெளரி தேவி வழிபாடு!

Published:Updated:
சகலமும் அருளும் கெளரி தேவி வழிபாடு!
பிரீமியம் ஸ்டோரி
சகலமும் அருளும் கெளரி தேவி வழிபாடு!
சகலமும் அருளும் கெளரி தேவி வழிபாடு!

ஸ்ரீகெளரிதேவியை வழிபடுவது, சகல தெய்வங் களையும் ஒருங்கே வழிபடுவதற்குச் சமம். ஆதிசக்தியே பிரபஞ்சத்தின் சகல அம்சங்களிலும் உறைந்து கெளரிதேவியாக அருள்பாலிக்கிறாள். அவளை வழிபடுவதால் இல்லறம் செழிக்கும். வீட்டில் செல்வம், தானியம், கால்நடைகள் முதலான சகல சம்பத்துகளும் சந்தோஷமும் நிரந்தரமாகக் குடிகொள்ள கெளரிதேவி வழிபாடு அருள் செய்யும்.
ஞானநூல்கள் 16 வகையான கெளரி தேவியரின் மகிமையைச் சொல்கின்றன. அவர்களில் மூவரின் சிறப்பை இந்த இணைப்பில் காண்போம். முன்னதாக, கெளரி மந்திரத்தின் மகிமையை அறிவோம்.

தொகுப்பு: பூசை. ச.அருணாவசந்தன்

சகலமும் அருளும் கெளரி தேவி வழிபாடு!

கெளரி தேவி மகா மந்திரம்

கெளரிதேவிக்குரிய மகா மந்திரம்  ‘கௌரி மந்திரமாகும்.’ இதனைக் கண்டறிந்து உலகுக்கு உபதேசித்தவர் ஸ்ரீதட்சிணா மூர்த்தி; சந்தஸ் - காயத்திரி; மந்திரத்துக்குரிய தேவதை - அம்பிகை. இதன் பயன் சகல சௌபாக்கியங்களைத் தருவது. இது குரு மூலமாகவே கேட்டு அறியத் தக்கதாகும்.

இந்த மந்திரத்தை ஒரு லட்சம் முறை ஜபிக்கும் பக்தர்களுக்கு அம்பிகை காட்சி தருவாள் என்கிறது சுந்தரபாண்டியம் எனும் நூல். மதுரையில் இறைவன் நிகழ்த்திய திருவிளையாடல்களை விவரிக்கும் பழைமையான இந்த நூலில் ‘பாலன், குமாரன், விருத் தனான' படலத்தில், கெளரி என்ற பக்தை குறித்த தகவல் உண்டு.

அவள் இந்த கௌரி மந்திரத் தைத் தன் தந்தையிடம் உபதேசம் பெற்று அம்பிகையை வழிபட்டு வந்தாள். அதன் பயனாய் சிவனருள் கைகூட,  பார்வதியின் உருவத்தை அடைந்து திருக் கயிலாயத்தை அடைந்தாள் என்கிறது அந்த நூல்.

சகலமும் அருளும் கெளரி தேவி வழிபாடு!

கௌரி மந்திரத்தை ஜபிக்கு முன் கெளரிதேவியின் திருவுரு வத்தை விளக்கும் தியான சுலோகத்தைக் கூறி தியானிப்பர். அந்த தியான சுலோகத்தின் கருத்து இங்கே உங்களுக்காக:

‘அம்பிகை அமுதக்கடலின் நடுவேயுள்ள நவமணித் தீவில், வசிக்கிறாள். அந்தத் தீவின் மத்தியில் சூரிய மண்டலத்தின் பிரகாசத்துக்கு நிகரான சிவந்த ஒளியுடன் திகழ்கிறது மணி மண்டபம் ஒன்று. அதில் சதாசிவ பீடத்தின் மீது மலர்ந்திருக்கும் தாமரையில் கெளரி தேவி வீற்றிருக்கிறாள். அவளுக்கு இருபுறமும் பிள்ளையாரும் முருகனும் அமர்ந்துள்ளனர். சந்திரனைப் போன்ற வெண்ணிறம் கொண்ட கௌரி தேவி செம்பட்டாடை அணிந்து, நவரத்தினங்கள் இழைத்த பொன் ஆபரணங்களைப் பூண்டவளாக ஜொலிக்கிறாள். அவள் தன் கருணை விழியால் அன்பர்களுக்கு வேண்டி யதை விரும்பியவாறு அளிக்கிறாள்’

இப்படிப் பொலிவுற விளங்கும் தேவியை மனதால் தியானிக்கும் அன்பர்களின் மனதில் சஞ்சலங்கள் அகலும், சகல சுபிட்சங்களும் பொங்கிப் பெருகும். இனி, கெளரிதேவிக்குரிய மந்திரங்களைக் காண்போம்.

சகலமும் அருளும் கெளரி தேவி வழிபாடு!

கௌரி காயத்ரி மந்திரங்கள்

ஓம் ஸூபதாயை வித்மஹே காம மாலின்யை தீமஹி
தன்னோ கௌரீ ப்ரசோதயாத்:

சகலமும் அருளும் கெளரி தேவி வழிபாடு!


கருத்து: சுபத்தைத் தருபவளும், ஆசைகளை நிறைவேற்றுபவளுமான மகாகௌரி தேவியை தியானிக்கிறேன்.

ஓம் மகாதேவ்யைச வித்மஹே ருத்ர பத்நியை ச தீமஹி!
தன்னோ கௌரீ ப்ரசோதயாத்.


கருத்து: மகாதேவியாக இருப்பவளும் மகாருத்திர மூர்த்தியின் மனைவியாய் இருப்பவளுமான கௌரிதேவியை தியானிக்கிறேன்.

ஓம் சுவேத வர்ணாய வித்மஹே ம்ருக டங்காய தீமஹி!
தன்னோ கௌரீ ப்ரசோதயாத்.


கருத்து: வெண்மையான வண்ணம் கொண்டவளும், மான், மழு ஏந்தியவளுமான கௌரிதேவியை தியானிக்கிறேன்.

சகலமும் அருளும் கெளரி தேவி வழிபாடு!

கல்யாண வரம் தரும் சுயம்வர கெளரிதேவி

உலகம் நன்கு செயல்பட கட்டமைப்புடைய சமுதாயம் அவசியம். சமுதாயத்தின் அடிப் படை நல்ல குடும்பங்கள். குடும்பத்தின் விளக்கு மனைவி. நல்ல மனைவியை அடைந்தவன் எல்லாவிதமான மேன்மைகளையும் பெறுகிறான்.

சாவித்திரி என்ற நல்ல மனைவியை அடைந்ததால்தான் சத்தியவானுக்கு நீண்ட ஆயுள் வாய்த்ததுடன், அவன் இழந்திருந்த ராஜ வாழ்வும், செல்வங்களும் மீண்டும் கிடைத்தன. புத்திரப்பேறும் உண்டாயிற்று.

அதேபோல் பெண்களின் சிறப்பான வாழ்க்கைக்கு, மனதுக்கு இனிய நல்ல கணவன் வாய்க்கவேண்டும். ஆக, ஆணோ பெண்ணோ இருதரப்பினருக்கும் நல்லதொரு வாழ்க்கைத் துணை அமைய அருள்பாலிப்பவள் சுயம்வர கெளரி.

சுயம்வர கௌரி, பெண்களுக்கு அழகு, திருமணப்பேறு ஆகியவற்றைத் தருகிறாள். திருமணத்தடையால் வருந்தும் பெண்கள் சுயம்வர கௌரியை வணங்கி வழிபட்டால் விரைவில் நல்ல கணவனை அடைவார்கள். மகாபாரதத்தில் ருக்மிணி, ராமாயணத்தில் சீதை, மகா புராணங்களில் சாவித்திரி முதலானோரின் கதைகள் கௌரி பூஜையின் சிறப்பை வெளிப்படுத்துகின்றன.

சகலமும் அருளும் கெளரி தேவி வழிபாடு!

சுயம்வர கௌரிதேவி, சிவ பெருமானைத் தன் மணமகனாக மனத்துள் எண்ணியவாறு நடந்து செல்லும் கோலத்தில் காட்சி யளிக்கிறாள். அவளுடன் கமலினி என்ற தோழி மண மாலையுடன் நிற்கிறாள். சுயம்வர கௌரியுடன் கல்யாண கணபதி வீற்றிருக்கிறார். வாணி, கமலா ஆகிய தேவிய ருடன் காட்சியளிக்கும் இந்தப் பிள்ளையாரும் நல்ல மண வாழ்க்கையை அருள்பவர்.

பெளர்ணமி தினங்களிலோ, அம்பாளுக்கு உகந்த நாள்களிலோ சுயம்வர கெளரிதேவியைப் பூஜித்து வழிபடலாம். 

விரிவான பூஜை முறைகள் ஞானநூல்களில் உண்டு. எளிய முறையில், அம்பாளுக்கு இனிப்பு நைவேத்தியங்கள் படைத்து, நெய்தீபங்கள் ஏற்றி வைத்து வழிபடலாம். பூஜையின் போது,  கெளரி மந்திரத்தைச் சொல்லி வழிபடுவது விசேஷம்.  கன்னிப்பெண்கள் தினமும் வீட்டில் விளக்கேற்றிவைத்து இந்த மந்திரங்களைச் சொல்லி அம்பாளைப் பிரார்த்தித்தால், கல்யாணம் விரைவில் கைகூடும்.

சுயம்வர கௌரி மந்திரம்


ஓம் ஹ்ரீம் யோகினி யோகினி
    யோகேஸ்வரி யோகபயங்கரி
ஸகல ஸ்த்தாவர ஜங்கமஸ்ய
    முகஹ்ருதயம் மம வசம்
ஆகர்ஷய ஆகர்ஷய ஸ்வாஹா!
  ஸ்வயம்வர கௌரி ஸ்ரீபாதுகாம்
    பூஜையாமி நம:

சகலமும் அருளும் கெளரி தேவி வழிபாடு!

குறைவற்ற செல்வம் தரும் ஸ்ரீசுவர்ண கெளரி

வாழ்க்கைக்கு அடிப்படைத் தேவை செல்வமாகும். அது, சமுதாயத்தில் நமது செல்வாக்கை உயர்த்துகிறது. செல்வம் மனை, வீடு எனப் பலவகையாக இருந்தாலும் அது பொற்கட்டிகளாகவும் பொற்காசுகளாகவும் இருப்பதே உயர்ந்ததாகக் கருதப்படுகிறது. பொன்னின் தேவியாக விளங்கும் கௌரியை ‘சுவர்ண கௌரி' என்று அழைக்கின்றனர். இந்த தேவியின் மகிமைகுறித்து செவிவழிக் கதைகள் உண்டு. அவற்றில் ஒன்று...

ஒருமுறை, ஊழிக்காலம் முடிந்து உலகம் மீண்டும் படைக்கப்பட்டது. நீரின் மத்தியில் நிலமும் அதில் மலைகள், மரங்கள், செடிகொடிகள் முதலானவையும் தோன்றின. தேவர்கள், முனிவர்கள், யக்ஷர்கள், மனிதர்கள் முதலான அனைத்து உயிர்களும் படைக்கப்பட்டன. அப்போது, சிவபெருமான் அலைகடலுக்கு நடுவில் சுவர்ண லிங்கமாகத் தோன்றினார்.

அந்த லிங்கத்தை இந்திரன் முதலான தேவர்களும், அசுரர்களும், முனிவர்களும், நாகர்களும் சிறப்பாகப் பூசித்தனர். அவர்களுக்கு அருள்புரிய சிவபெருமான் அந்த சுவர்ண மயமான சிவலிங்கத்திலிருந்து பொன்மேனி கொண்டவராக வெளிப்பட்டார். அவரைத் தழுவிய பொற்கொடியாகப் பராசக்தி உடன் தோன்றினாள். அவளை சுவர்ண வல்லி என்று தேவர்கள் போற்றினர்.

கடல் அரசனும், நாகலோக வாசிகளும் இந்த அம்பிகையைத் தங்கள் நாட்டுக்கு வந்திருக்கும்படி வேண்டினர்.

அதன்படியே அவள் பாதாள உலகம் சென்று தங்கினாள். அவள் அருளால் பூமியில் இரும்பு, தங்கம், வெள்ளி, ஈயம், செம்பு முதலிய உலோகங்கள் விளைந்தன.

நீண்டநாள்கள் தேவர்களும் முனிவர்களும் செல்வங்களை வேண்டி தவம் புரிந்தனர். அவர்களுடைய தவத்தால் மகிழ்ந்த பராசக்தி பொன் மயமான பிரகாசத்துடன் பாதாளத் திலிருந்து கடல் நடுவே பெரிய மீன்மீது தோன்றினாள்.

சகலமும் அருளும் கெளரி தேவி வழிபாடு!

கரங்களில் ஞானத்தை அளிக்கும் தாமரை, போகத்தை அளிக்கும் நீலோற்பல மலர், ஆயுளை விருத்திசெய்யும் அமுதக் கலசம், செல்வங்களின் வடிவமான பணப்பேழை ஆகியவற்றை ஏந்தியிருந்தாள்.

அவளைக்கண்டு அனைவரும் மகிழ்ந்து, `மீனாட்சி, சுவர்ண கௌரி, சாகரபுத்திரி' ஆகிய  திருப்பெயர்களைத் துதித்து  வழிபட்டனர். அம்பிகை அவர் களுக்கு ஆசி மொழிந்தாள்.

அவளுடைய திருவருள் தங்களை விட்டு என்றைக்கும் நீங்காதிருக்கும்படியான வரத்தை வேண்டினார்கள் தேவர்கள். அம்பிகையும் அப்படியே வரம் அளித்தாள்.

அவ்வேளையில் சிவ பெருமான் அங்கு தோன்றினார். அவள் அவரை மகிழ்வுடன் பூசை செய்தாள். அவர் தனது இடப் பாகத்தில் அவளை அமர்த்திக் கொண்டு கயிலைக்குச் சென்றார்.

பின்னர் அனைவரும், அம்பிகை மீன்மீது அமர்ந்து காட்சியளித்த கோலத்தைப் பொன்னால் செய்து வழிபடத் தொடங்கினர். அவள் அந்த வழிபாட்டை ஏற்று அனைவருக்கும் அருள்புரிந்தாள். அதுவே சுவர்ண கௌரி வழிபாடாக மலர்ந்துள்ளது.

அகஸ்திய மகரிஷி சுவர்ண கௌரி வழிபாட்டின் பெருமை களைப் பல்வேறு தருணங்களில் அருள்மொழியாக வெளிப் படுத்தியுள்ளார்.

அதன்படி சுவர்ண கௌரியை வழிபடுவதால் திருஷ்டி தோஷங்கள் விலகும், வறுமை நீங்கும், இனிய இல்வாழ்க்கை நடத்தலாம். குலதெய்வங்களின் அருள் கிடைக்கும்.

சகலமும் அருளும் கெளரி தேவி வழிபாடு!

குல தெய்வத்தை மறந்து போனவர்களும் தம் குலதெய்வம் எது என்பதை அறியாதவர்களும், சுவர்ண கௌரியை வழிபட்டால் குலதெய்வங்கள் மகிழ்ந்து அருள் புரிவார்கள்.

சுவர்ணகௌரி விரதத்தை ஆவணி மாத வளர்பிறை திரிதியை நாளில் கடைப்பிடிக்க வேண்டுமென்று புராணங்கள் கூறுகின்றன என்றாலும், நடை முறையில், கடலரசியான அவளை மாசி மாதத்தில் வழிபடுவதால் பூரணமான பலனை அடையலாம் என்று அனுபவத்தில் கூறுகின்றனர்.

மட்டுமின்றி, அனுதினமும் அம்பிகையை சுவர்ண கெளரி யாக தியானித்து வழிபட்டால், இல்லத்தில் செல்வம் செழித்தோங்கும்.

மீன் செல்வத்தின் அடையாள மாகும். அதன்மீது அமர்ந்து வலம் வரும் சுவர்ணகௌரி செல்வத்தினை அன்பர்களுக்கு தாராளமாக அளிக்கிறாள். பத்ம நிதியும் சங்க நிதியும் யக்ஷர் வடிவில் அவளுடன் உள்ளனர். இவள் அருளால் அன்பர்களுக்கு வேண்டிய செல்வம் நிறைவாகக் கிடைக்கிறது.

இந்த தேவியை வழிபடுவதால் திருஷ்டி தோஷங்கள் விலகும், வீண் விரயங்கள் குறையும் மன அமைதியும் நிறைவான எண்ணமும் கிடைக்கும். பாடுபட்டு சம்பாதித்த செல்வம் கையை விட்டுப் போகாமல் பயன் தந்து சுகமளிக்கும்.

சகலமும் அருளும் கெளரி தேவி வழிபாடு!

அதிகார யோகம் அருளும் சாம்ராஜ்ய மகாகௌரி

நல்ல இல்லறம், தேவையான செல்வம், நல்ல புதல்வர்கள், பெரும் புகழ் ஆகிய பேறுகளைப் பெற்றிருந்தாலும், அவற்றைச் சுதந்திரமாக அனுபவிக்க, `அதிகாரம் செலுத்தும் ஆற்றல்' அதாவது ஆளுமைத் திறன் வேண்டும் அல்லவா?

அப்படியான ஆளுமைத் திறனுக்கும், ஆணை செலுத்தும் வல்லமைக்கும், சுதந்திர அதிகாரத் துக்கும் வீரமே அடிப்படையாகும்.

நிலையான வாழ்வுக்கு உரமாக அமைவது வீரம் மட்டுமே,

எது வரினும் அதுபற்றிய நிலையை ஆராய்ந்து செயல்படுவது சுதந்திர வீரத்தின் அடையாளமாகும். அன்பு, ஒழுக்கம், தெய்வ பக்தி இல்லாதவனுடைய வீரத்தால் எதுவும் பயனில்லை. அதுவே அவனுடைய அழிவுக்கும் காரணமாகும்.

மாறாக, அன்பும் வீரமும் குடி கொண்டவனின் ஆணைக்கு அனைவரும் தாமாகவே கட்டுப் பட்டு அவன் சொல்படி நடப்பர். அத்தகைய தலைமைப்பண்பு கொண்ட வீரத்தைத் தரும் சக்தியே ஸ்ரீசாம்ராஜ்ய மகா கெளரி.

செங்கோல் ஏந்தி வீர சிம்மாசனத்தில் வீற்றிருக்கும் இந்த தேவியை வழிபடுவதால், அரசாளும் திறனும் தலைமைப் பண்பும் உண்டாகின்றன.

செயல்திறனற்று, ஒழுக்கமின்றி, வெறும் வீரனாக மட்டுமே ஒருவன் திகழ்வதால் எந்தப் பயனும் இல்லை. பண்பாடுகள் நிறைந்த வீரனே எல்லோரையும் எளிதில் அன்பால் அடக்கி அடிபணிய வைக்கிறான்.

அவனுடைய அன்புக்கும் பண்புக்கும் கட்டுப்பட்டு எல்லோரும் தத்தம் பணிகளை ஒழுங்காகச் செய்கின்றனர்.

ஒப்பற்ற வீரர்களாகத் தலைமைப்பண்புடன் இருப்பவர் களே ராஜ்யாதிபர்களாகவும், தலைவர்களாகவும் ஆக முடியும்.

மகாராஜாக்களின் திருமுடி யிலும் தோளிலும் வாளிலும், தேசத்தின் எல்லைகளிலும், சாம்ராஜ்ய மகா கெளரி தம் சேனைகளுடன் வீற்றிருந்து அருள்பாலிப்பதாகச் சொல் கின்றன ஞானநூல்கள்.

அவள் கொற்றவனிடத்தில் உறைவதால் `கொற்றவை' என்றும், வாளில் உறைவதால் `வாள் வாய்ப் பாவை' என்றும் அழைக்கப்படுகிறாள்.

மோட்ச சாம்ராஜ்யத்தில் சுதந்திரமாக இன்பம் அனுபவித்துக்கொண்டிருக்கும் மகாஞானிகளுக்கும் இவளே தலைவி.

ஞானச்செங்கோலை ஏந்தி, முக்தி சிம்மாசனத்தில் வீற்றிருந்து, அந்த ஞானியர்களுக்கு அருள்பாலிக்கிறாள் இந்த அம்பிகை.

சகலமும் அருளும் கெளரி தேவி வழிபாடு!

சாம்ராஜ்ய மகாகௌரி ஸ்ரீமீனாட்சி

செழியர் பிரான் திருமகளாய்
   கலைபயின்று முடி புனைந்து
செங்கோலோச்சி முழுதுலகும்
   செயங்கொண்டு திறை கொண்டு
நந்திகண முனைப்போர் சாய்த்துத்
  தொழுகணவற்கு அணிமணி
மாலிகை சூட்டித் தன்மகுடம் சூட்டிச்
  செல்வந் தழைவுறு தண் அரசளித்த
பெண்ணரசி அடிக்கமலம்
   தலைமேல் வைப்பாம்


- திருவிளையாடற் புராணம்


அன்னை பராசக்தி, பாண்டி யர் குலத்தில் திருமகளாய்த் தோன்றித் தடாதகை என்ற பெயர் கொண்டு வளர்ந்தாள். வேதாகமம் தொடங்கி, போர்க் கலைகள் உள்ளிட்ட அனைத்துக் கலைகளையும் பயின்று, பாண்டிய நாட்டுப் பேரரசியாக மணிமகுடம் சூடி, செங்கோல் நடத்தினாள். உலகத்திலுள்ள அரசர்களை வெற்றி கொண்டு அவர்களிடம் கப்பம் வசூலித்தாள்.

பின்னும் வெற்றிவேட்கையால் கயிலாயத்தின் மீதும் படையெடுத்துச் சென்றாள் அங்கு தம்மை எதிர்த்த நந்தி முதலிய சிவசேனைகளை வென்று அடக்கினாள்.

அதைக்கேட்டுப் போர்க்களத்துக்கு வந்த சிவ பெருமானைக் கண்டு, முன்வினைப்பயன் தெரிந்து, அவருக்கு மணமாலை சூட்டிக் கணவனாகக் கொண்டாள். தனது அரசை அவருக்கு அளித்து மகிழும் பெண்ணரசியாகத் திகழ்கிறாள்.

இத்தகைய ஒப்பற்ற சாம்ராஜ்ய மகாராணியின் திருவடிகளை என் தலைமேல் வைத்துத் துதிக்கிறேன்.

மதுரை மீனாட்சியம்மையை சாம்ராஜ்ய மகா கெளரியாகவே போற்றுவர். மேற்காணும் பாடலைப்பாடி, அனுதினமும் மீனாட்சி அம்பிகையைத் துதித்து வழிபடவேண்டும். அதனால் ஆளுமைத் திறனுடன், பதவியோகம் கைகூடும்; தலைமைப் பொறுப்பு தேடி வரும்.

சோடச கௌரிதேவியரும் வழிபாட்டுத் தலங்களும்!

தென்னகத்தில் கௌரிதேவிக் கான ஆலயங்கள் சிலவே உள்ளன. ஞானநூல்கள் விவரிக்கும் 16 கெளரிதேவியரை தரிசிக்க விரும்பும் அன்பர்கள், கீழே கொடுக்கப்பட்டுள்ள தலங்களுக்குச் சென்று, அங்குள்ள சிவாலயங்களில் அருளும் அம்பிகையரை வழிபட்டு அருள்பெறலாம்.

அவ்வாறு, குறிப்பிட்ட ஆலயத்துக்குச் செல்லும்போது, முதலில் அங்குள்ள விநாயகருக்கு அர்ச்சனை வழிபாடுகள் செய்தபின் அம்பிகையை வழிபட வேண்டும். வழிபாட்டின் முடிவில் வளையல், மஞ்சள், குங்குமம், வெற்றிலை, பாக்கு, கண்ணாடி, கண்மை, விசிறி முதலியவற்றை தானம் செய்ய வேண்டும். மீண்டும் விநாயகருக்கு வழிபாடு செய்து அம்பிகை வழிபாட்டின் பயனை அடைந்து சுகம் பெறப் பிரார்த்திக்க வேண்டும்.

இந்த அடிப்படையில் 16 திருத் தலங்களை... அந்தத் தலங்களில் அருளும் கெளரியின் அம்சம் - அம்பாளின் திருப்பெயர் - விநாயகரின் திருப்பெயர் ஆகிய விவரங்களோடு காண்போமா?

சகலமும் அருளும் கெளரி தேவி வழிபாடு!

1. காளஹஸ்தி

கெளரி அம்சம்: ஞானேஸ்வர கௌரி
அம்பிகை: ஞானப் பூங்கோதை
விநாயகர்:  பாதாள விநாயகர்

2. திருக்கடவூர்

கெளரி அம்சம்: அமிர்த கெளரி
அம்பாள்: அபிராமி
விநாயகர்: கள்ள வாரணர்

3. தருமபுரம்

கெளரி அம்சம்: சுமித்ர கெளரி
அம்பாள்: தரும நாயகி
விநாயகர்: தரும விநாயகர்

4. களந்தை

கெளரி அம்சம்: சம்பத் கெளரி
அம்பாள்: ஆவுடை நாயகி
விநாயகர்: சௌபாக்கிய விநாயகர்

5. திருவாரூர்

கெளரி அம்சம்: யோக கௌரி
அம்பாள்: கமலாம்பிகை
விநாயகர்: மூலாதாரவிநாயகர்

6. திருப்புகலூர்:

கெளரி அம்சம்: வஜ்ரசிருங்கல கௌரி
அம்பிகை: கருந்தாழ்குழலி
விநாயகர்: விலங்கு தெரிந்த விநாயகர்

சகலமும் அருளும் கெளரி தேவி வழிபாடு!

7. திருக்கழுக்குன்றம்:

கெளரி அம்சம்: திரைலோக்கிய கௌரி
அம்பிகை: திரிபுரசுந்தரி
விநாயகர்: வண்டுவனப் பிள்ளையார்

8. திருவீழிமிழலை

கெளரி அம்சம்: சுயம்வர கெளரி
அம்பிகை: காத்யாயணி தேவி
விநாயகர்: படிக்காசு விநாயகர்

9. திருச்செங்காட்டாங்குடி

கெளரி அம்சம்: கஜகெளரி
அம்பிகை: திருகுகுழல் உமை
விநாயகர்: வாதாபி விநாயகர்

10. விஜய மங்கை:


கெளரி அம்சம்: விஜய கெளரி
அம்பிகை: மங்கைநாயகி
விநாயகர்: விஜய விநாயகர்

11. காஞ்சிபுரம்:

கெளரி அம்சம்: சத்ய வீரகௌரி
அம்பிகை: பிரமராம்பிகை
விநாயகர்: விகடசக்ரர்

12. திருமயிலை:

கெளரி அம்சம்: வரதான கௌரி
அம்பிகை:  கற்பகாம்பாள்
விநாயகர்: நர்த்தன விநாயகர்

13. காளையார்கோவில்

கெளரி அம்சம்: சுவர்ண கௌரி
அம்பிகை: சுவர்ணாம்பிகை
விநாயகர்: சுவர்ண விநாயகர்

14. மதுரை

கெளரி அம்சம்: சாம்ராஜ்ய மகாகௌரி
அம்பிகை: மீனாட்சியம்மன்
விநாயகர்: ஐராவத விநாயகர்

15. அம்பர்மாகாளம்:

கெளரி அம்சம்: அசோக கெளரி
அம்பிகை: பயக்ஷய நாயகி
விநாயகர்: ஸ்தல விநாயகர்

16. சீர்காழி


கெளரி அம்சம்: விஸ்வபுஜா கௌரி
அம்பிகை:  திருநிலை நாயகி
விநாயகர்: கணநாதர்.

துளசி ராமாயணத்தில் கௌரி வழிபாடு

துளசிதாசரின் ராமாயணத் தில், கௌரி ஆலயத்துக்குச் செல்லும் வழியில் சீதை ராம பிரானைக் காண்கிறாள். அவனையே கணவனாக அருள வேண்டுமென்று கௌரிதேவி யிடம் பிரார்த்திக்கிறாள்.

அப்போது தேவியின் கழுத்தி லுள்ள மாலை சீதையின் கரத்தில் வந்து விழுந்தது. தொடர்ந்து, சீதாதேவிக்குக் காட்சி தந்து,  ராமனையே கணவனாக அடை யும் நல்வரத்தையும் அளித்தாள்.

அப்போது, சீதாதேவி கௌரி தேவியைப் போற்றித் துதித்த (துளசி ராமாயணத்திலுள்ள) பாடல்களின் கருத்து கீழே தரப் பட்டுள்ளது.

இதனை மொழிபெயர்த்தவர் காந்தியடிகளின் அன்புக்குரிய பக்தையாகிய எஸ்.அம்புஜம்மாள் ஆவார். 1940-ல் வெளியாகியுள்ள இந்த நூலுக்கு காந்தியடிகள் ஆசிச் செய்தி வழங்கியுள்ளது குறிப்பிடத் தக்கது.

சகலமும் அருளும் கெளரி தேவி வழிபாடு!

ஸ்ரீகௌரிதேவி துதி

பர்வத ராஜகுமாரியே உனக்கு ஜெயம் உண்டாகுக. ஜெயம் உண்டாகுக.

மகேசனின் முகமாகிய சந்திரனுக்குச் சகோரப் பட்சியைப் போன்றிருப்பவளே, ஜய ஜய.

யானை முகத்தோனையும் ஆறு முகத்தோனையும் ஈன்ற அன்னையே ஜய ஜய.

மின்னற்கொடியென ஒளிவீசும் மேனியை உடைய லோகமாதாவே, உனக்கு ஜெயமுண்டாகுக ஜெயமுண்டாகுக.

ஹே தேவி! நீ ஆதி மத்யாந்தம் அற்றவள்; வெற்றி தோல்வி யாவற்றுக்கும் காரணமாயிருப்பவள்.


திரிபுவனத்தையும் உன் லீலையால் மோகமுறச் செய்து யதேச்சையாக விளங்குபவள்.

தன் பதியையே தெய்வமாகக் கொண்டொழுகும் பெண்களில் உனது பெயரே முதலில் நிற்கிறது.

உனது முடிவற்ற மகிமையை ஆயிரம் சாரதைகளும் சேஷர்களும் சொல்ல வல்லவரல்லர்.

ஹே தேவி, வரம் தரும் வள்ளலே, திரிபுராரிக்குப் பிரியமானவளே! உன்னை அடுத்துத் தொண்டாற்றும் மக்கள், அறம், பொருள், இன்பம், மோட்சம் என்கிற நான்கு விதமான பெரும் பேறுகளையும் அடைகின்றனர்.

உன் தாமரை போன்ற திருப்பாதங்களைத் தொழுது பூஜிக்கும் தேவர், முனிவர், மானுடர் யாவரும் சுகமுற வாழ்கின்றனர்.

அனைவருடைய இதயக் கோட்டையிலும் வாழ்கின்ற நீ, எனது மனோரதத்தை நன்கு அறிவாய். ஆதனால் உன்னை அடைந்தேன். எனக்கு வேண்டியதை அருளுக.


தினமும் இந்தத் துதியைப் படித்து அம்பிகையை வழிபடும் அன்பர்களது இல்லத்தில் இல்லாமை என்பதே இல்லாமல் போகும். நினைத்தது நடந்தேறும்.