Published:Updated:

சகலமும் சாயி!

சகலமும் சாயி!
பிரீமியம் ஸ்டோரி
சகலமும் சாயி!

படம்: எஸ்.ரவிகுமார்

சகலமும் சாயி!

படம்: எஸ்.ரவிகுமார்

Published:Updated:
சகலமும் சாயி!
பிரீமியம் ஸ்டோரி
சகலமும் சாயி!

ஏன் இந்த தண்டனை?

கலா பாஸ்கர், சென்னை 92

என் வாழ்வின் ஒவ்வொரு நொடியும் உடன் இருந்து ரட்சிப்பவர் ஸ்ரீசாயிபாபா. அவரருளால் என் வாழ்வில் நடந்த அற்புதங்கள் நிறைய. அதீத மனக்குழப்பத்தில் நான் ஆழ்ந்து விடும் தருணங்களில், எவர் மூலமாவது தகுந்த அறிவுரையை வழங்கிவிடுவார் என் பாபா.

சகலமும் சாயி!

சில வருடங்களுக்கு முன் உறவினர்களுடன் திருவண்ணா மலைக்குச் சென்றிருந்தேன். கிரிவலம் வரும்போது, நானும் என் பெரிய ஓர்ப்படியும் மற்றவர்களைவிடவும் சற்று முன்னால் சென்றுகொண்டிருந்தோம். வழியில் ஓரிடம் மிக ரம்மியமாக இருந்தது. `இங்கே அருகிலேயே பாபா கோயில் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்’ என்ற எண்ணத்துடன் நகர்ந்த வேளையில் ஒரு கூழாங்கல் கவனத்தை ஈர்க்க, குனிந்து அதை எடுத்துக்கொண்டு நிமிர்ந்தால்... எதிரே மிக அற்புதமான பாபாவின் சிலை வைக்கப்பட்டிருந்தது. கண்கொள்ளா காட்சி. ஒருவேளை, கூழாங்கல் கவனத்தை ஈர்க்காமல் போயிருந்தால் சிந்தனைவயப்பட்டவளாகவே அந்த இடத்தைக் கடந்திருப்பேன். என் கவனத்தை ஈர்த்து தரிசனம் கொடுத்த பாபாவின் திருவருளை என்னவென்பது?!

சகலமும் சாயி!இன்னொரு சம்பவம். சுமார் 12 வருடங்களுக்கு முன் நடந்தது. திடீரென ஒரு விபத்தில் என் கணவர் காலமானார். மிக்க துயரத்தில் இருந்த நான் பாபாவைத் திட்டியபடியேதான் (சண்டை போட்டபடி) நாள்களை ஓட்டினேன். ஒருநாள் டி.வி-யில் சாயிசரிதம் பார்த்துக்கொண்டிருந்தேன். அதில், என்னைப் போலவே துயருற்ற பெண்ணொருத்தி, ‘‘உன்னையே சரணடைந்துள்ளேன்... அப்புறமும் ஏன் சாயி எனக்கு இந்தத் தண்டனை?’’ என்று புலம்புகிறாள். அப்போது சாயி கூறுகிறார்: ‘‘பெண்ணே! உன் கணவரை மூன்று முறை காப்பாற்றியுள்ளேன். இந்த முறை மேலேயுள்ளவன் உன் கணவனை அழைத்துக்கொள்ளும்போது நான் எப்படித் தவிர்க்க முடியும். அவன் சொர்க்கத்தையே அடைந்துள்ளான்.’’

சாயியின் அந்த வாக்கு எனக்கானதாகவேபட்டது. ஆம்! என் கணவருக்கும் மூன்று முறை உடல்நலம் பாதிக்கப்பட்டு மிகவும் சீரியஸ் நிலைக்குச்சென்று மீண்டுவந்தார். ஆக, சாயி எனக்காகவே இந்தப் பதிலைச் சொன்னதுபோன்று உணர்ந்தேன். நானும் கொஞ்சம் கொஞ்சமாகத் தெளிவுற்றேன். இப்போது சாயி மீதான பக்தி மேலும் அதிகமாகிவிட்டது என்றே சொல்ல வேண்டும்.

சகலமும் சாயி!

எனக்குக் கிடைத்த சாயி!

கே.எஸ்.கல்பனா, சென்னை-85

நான் ஓய்வுபெற்ற தனியார் பள்ளி ஆசிரியை. நானும் என் மகளும் சில நாள்களுக்குமுன் மயிலை சாயிபாபா ஆலயத்துக்குச் சென்றிருந்தோம். அன்று கோயிலில் கூட்டம் அதிகம். மூட்டுவலியால் பாதிக்கப்பட்டுள்ள நான், வெளியிலிருந்தபடியே பாபாவைத் தரிசித்துவிட்டு, அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்திருந்தேன். என் மகள் பாபாவைத் தரிசிக்க வரிசையில் நின்றுகொண்டிருந்தாள். அப்போது, தரிசனம் முடிந்து சென்றுகொண்டிருந்தவர்களின் கைகளில் பாபாவின் வண்ணப்படம் இருப்பதைப் பார்த்தேன். பிரார்த்தனை நிறைவேறிய பக்தர், சாயியின் படத்தை வழங்குகிறார் என்பதை அறிந்தேன். எனக்கும் அந்தப் படத்தை வாங்க வேண்டும் என்ற ஆசை; ஆனால், கால் வலியோடு கூட்டத்தில் நுழைந்து வாங்குவதெல்லாம் சாத்தியம் இல்லையே... ஆனாலும், என் ஆசையை சாயி அறியாமல் இருப்பாரா?

அப்போது என் அருகே வந்த பெரியவர், ‘‘இதை நீங்கள் வைத்துக்கொள்ளுங்கள்’’ என  சாயிபாபா படத்தைக் கொடுத்தார். எனக்குச் சிலிர்த்துவிட்டது. படத்தைக் கண்களில் ஒற்றிக்கொண்டேன். அந்த ஒருகணத்தில் பெரியவரை மறந்துபோனது புத்தியில் உரைக்க, அவருக்கு நன்றி சொல்வதற்காக நிமிர்ந்து பார்த்தால், எங்கே தேடியும் அவரைக் காணவில்லை. என் மகள் வந்தபிறகு, நான் சொன்ன அடையாளத்தை வைத்து அவளும் தேடிப்பார்த்தாள். ஆனால், அவர் தென்படவே இல்லை. நானோ, சாயிபாபாவே அவரின் படத்தை நேரில் வந்து தந்ததாகவே உணர்ந்தேன். அவரின் கருணையை எண்ணி வணங்கினேன்.

இப்போதும் வாழ்கிறார் சாயி!

சகலமும் சாயி!


எஸ்.ஜெயலெட்சுமி செந்தில், சென்னை-64

என் கணவர் வேலை பார்க்கும் இடத்தில் செய்யாத தவறுக்காக ஒரு பிரச்னையில் சிக்கித் தவித்து வந்தார். இதனால், நிம்மதியிழந்த என் கணவர், சாயிபாபா கோயிலுக்குச் சென்று, சாயியின் முன் அமர்ந்து பிரார்த்தனை செய்துள்ளார். சகலத்தையும் சாயியிடம் சமர்ப்பித்துவிட்ட திருப்தியோடு வெளிப் பிராகாரத்துக்கு  என் கணவர் வரவும், எவரோ ‘சாயி சாயி’ என்று அழைக்கும் குரல்.

அந்தக் கோயிலில் என் கணவருக்குத் தெரிந்தவர்கள் எவரும் இல்லை. ஆதலால், ‘இங்கே நம்மை யார் கூப்பிடப் போகிறார்கள்?’ என்ற எண்ணத்துடன் மேற்கொண்டு நகரமுற்பட்டவரின் முதுகைத் தொட்டு நிறுத்தியது ஒரு கரம். இவர் திரும்பிப் பார்க்கவும், இளம் தம்பதியர் புன்னகையுடன் நின்றிருந்தார்களாம். அவர்கள் இவரிடம் ‘SAI BABA IS STILL ALIVE’ (சாயிபாபா இன்னமும் வாழ்கிறார்) என்ற புத்தகத்தைக் கொடுத்துள்ளனர். இவருக்கோ திகைப்பு. அந்தத் திகைப்பு விலகாமலேயே `என்ன புத்தகம் என்று பார்க்கலாம்?’ என அதை ஒரு புரட்டு புரட்டிவிட்டு நிமிர்ந்தால் அந்தத் தம்பதியைக் காணவில்லை. மூன்று முறை ஆலயத்தை வலம்வந்து தேடியும் அவர்களைப் பார்க்க முடியவில்லை. அந்தப் புத்தகத்தை வாசிக்க ஆரம்பித்த பிறகு, என் கணவருக்கு அலுவலகத்தில் பிரச்னைகள் குறையத் தொடங்கின. இப்போது நானும் என் கணவரும் சந்தோஷத்துடன் இருக்கிறோம் என்றால், அதற்குக் காரணம் சாயிதான். சர்வம் சாயி சமர்ப்பணம்!

- அனுபவங்கள் தொடரும்

அன்பார்ந்த வாசகர்களே!

ஸ்ரீசாயியின் திருவருளால் உங்கள் வாழ்விலோ, உங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வாழ்விலோ பல அற்புதங்கள் நிகழ்ந்திருக்கலாம். அந்த அற்புத அனுபவங்களை எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். அவற்றில் சிறப்பான அனுபவங்கள் சக்தி விகடன் இதழில் இடம்பெறுவதுடன், அவற்றுக்குச் சிறப்புப் பரிசும் காத்திருக்கிறது. 

அனுப்பவேண்டிய முகவரி: ‘சகலமும் சாயி - அனுபவம் அற்புதம்’ பகுதி, சக்தி விகடன், 757, அண்ணாசாலை, சென்னை-2

இ.மெயில் முகவரி: sakthi@vikatan.com