Published:Updated:

சித்திரம் சிற்பமாகும் அதிசயம்!

சித்திரம் சிற்பமாகும் அதிசயம்!
பிரீமியம் ஸ்டோரி
சித்திரம் சிற்பமாகும் அதிசயம்!

எஸ்.கண்ணன்கோபாலன் - படங்கள்: ச.வெங்கடேசன்.

சித்திரம் சிற்பமாகும் அதிசயம்!

எஸ்.கண்ணன்கோபாலன் - படங்கள்: ச.வெங்கடேசன்.

Published:Updated:
சித்திரம் சிற்பமாகும் அதிசயம்!
பிரீமியம் ஸ்டோரி
சித்திரம் சிற்பமாகும் அதிசயம்!

க்த துருவனின் அம்சமாக அவதரித்த ஒரு மகானும் பக்த பிரகலாதனின் அம்சமாக அவதரித்த ஒரு மகானும் தங்கி, தவம் இயற்றிய புனித பூமி முளபாகல்.

பக்த துருவனின் அம்சமாக அவதரித்தவர் ஸ்ரீஸ்ரீபாதராஜ சுவாமிகள். பக்த பிரகலாதனின் அம்சமாக அவதரித்தவர் ஸ்ரீவியாஸராய சுவாமிகள். இவரே பிற்காலத்தில் ஸ்ரீராகவேந்திரராக அவதரித்தார். ஸ்ரீவியாஸராயர் தேசமெங்கும் பிரதிஷ்டை செய்த 732 ஆஞ்சநேயர் திருவுருவங்களில் இரண்டாவதாக பிரதிஷ்டை செய்யப்பட்ட ஆஞ்சநேயர் முளபாகலில் காட்சி தருகிறார்.

கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் அமைந்திருக்கிறது முளபாகல். தலம், மூர்த்தி, தீர்த்தம் ஆகிய மூன்று சிறப்புகளைக்கொண்ட இந்தத் தலத்தில் காட்சிதரும் ஆஞ்சநேயரை தரிசிக்கச் சென்றோம். அங்கே சென்ற பிறகுதான், அது கோயில் இல்லையென்றும், மகான் ஸ்ரீஸ்ரீபாதராஜரின் மடம் என்பதும் நமக்குத் தெரியவந்தது. ஆனால், அந்தத் தலத்துக்கு மற்றுமொரு உன்னதச் சிறப்பும் இருக்கிறது.  சித்திரத்தில் தோன்றிய நரசிம்மரின் திருவுருவ விக்கிரகம்தான் அந்தச் சிறப்பு. அதுமட்டுமல்ல, கங்கை இந்தத் தலத்தில் நரசிம்ம தீர்த்தம் என்றே அழைக்கப்படுகிறாள். முதலில் இந்தத் தலத்தில் நரசிம்ம மூர்த்தி தோன்றிய வரலாற்றைப் பார்த்துவிடுவோம்.

சித்திரம் சிற்பமாகும் அதிசயம்!

கற்சிற்பமான கரித்துண்டு ஓவியம்!

சுமார் அறுநூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்னர், விஜயநகரப் பேரரசின் சாளுவ மன்னன் ஆட்சிக் காலம். அவனது அவையில் இடம் பெற்றிருந்து ராஜகுருவாகத் திகழ்ந்தார் சாஸ்திர ஞானி ஒருவர். அவர் நாடெங்கிலுமுள்ள பண்டிதர்களை வரவழைத்து, அவர்களை வாதத்தில் வெற்றிக்கொண்டு, அதன் காரணமாகவே வித்யாரண்யர் - கல்வியில் அடர்ந்த காடு போன்றவர் என்ற சிறப்புப் பட்டத்தைப் பெற்றார். இதனாலெல்லாம் அவர் மிகவும் கர்வம் கொண்டிருந்தார். அவரது அந்தச் செருக்கினை அடக்கிட ஸ்ரீநரசிம்மர் திருவுள்ளம் கொண்டிருக்க வேண்டும் போலும்.

மன்னன் சாளுவ நரசிம்மன், ‘தன் ஆஸ்தான குருவான வித்யாரண்யருக்குச் சமமாகவோ அல்லது அவரைவிட சிறந்த சாஸ்திர நிபுணரோ நாட்டில் இருந்தால் அவருடன் வாதத்துக்கு வர வேண்டும். அப்படி யாரும் வரவில்லை என்றால், அவரே தலைசிறந்த சாஸ்திர ஞானி என்று ஏற்கப்பட்டு, அவருக்கே அரசு மரியாதைகள் யாவும் செய்யப்படும்’ என்று அறிவித்துவிட்டான். நாடெங்கும் செய்தி பரவியது.

சித்திரம் சிற்பமாகும் அதிசயம்!

அவ்வேளையில் துவைத சித்தாந்தம் அருளிய ஸ்ரீமாத்வரின் சீடர் பரம்பரையில் ஸ்ரீஅட்சோப்பிய தீர்த்தர் என்பவர் முளபாகலில் தங்கியிருந்தார். மிகச்சிறந்த ஞானியான இவரிடம் பல பண்டிதர்கள் சென்று, வித்யாரண்யரின் செருக்கினை அடக்குமாறு கேட்டுக்கொண்டனர். அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றத் திருவுள்ளம்கொண்ட ஸ்ரீஅட்சோப்பிய தீர்த்தர், தாம் தினமும் ஆராதிக்கும் ஸ்ரீநரசிம்ம சுவாமிக்கு சிறப்பான பூஜைகள் செய்து, நெருப்புத் தணலால் தூபம் காட்டி, அந்த நெருப்புத் தணலை தாம் ஜபம் செய்து வைத்திருந்த பாத்திர நீரில் போட்டார். தணல் நெருப்பு நீரில் நனைந்து கரியானது. (கன்னட மொழியில் கரியை ‘அங்காரம்’ என்று அழைப்பார்கள். அதை நெற்றியில் இட்டுக் கொள்வர்) அகங்காரம் கொண்டிருந்த வித்யாரண் யரின் செருக்கினை அடக்க, அங்காரம் என்ற கரித்துண்டினால் ஸ்ரீநரசிம்மரின் அருள் வேண்டி, அவரை பிரார்த்தனை செய்தபடி அங்கிருந்த பாறையில் ஸ்ரீநரசிம்மரைத் தியானித்துக் கொண்டே ஸ்ரீநரசிம்மரின் திருவுருவம் வரைந்தார்.

தாம் வரைந்த ஸ்ரீநரசிம்மரை ஆராதனை செய்து வழிபட்டபிறகு, தம்முடன் வாதிட வேண்டி முளபாகலில், அஞ்சனைமலை மீதிருந்த ஓர் ஆலயத்தில் தங்கியிருந்த வித்யாரண்யருடன் வாதத்துக்குத் தயாராகிச் சென்றார். இருவருக்கு மிடையே நடைபெறும் வாதங்களைக் கேட்டு தீர்ப்புச் சொல்லும் நடுவராக இருக்க ஸ்ரீதேசிகர் ஒப்புக்கொண்டார்.

சித்திரம் சிற்பமாகும் அதிசயம்!

ஸ்ரீஅட்சோப்பிய தீர்த்தரும் ஸ்ரீவித்யாரண்யரும் தங்கள் தங்கள் வாதங்களை எழுதி ஸ்ரீதேசிகரிடம் அனுப்பினார்கள். அவர்களின் கருத்துகளை நன்கு அலசி ஆராய்ந்த ஸ்ரீதேசிகர், வாதத்தில் ஸ்ரீஅட்சோப்பிய தீர்த்தரே வெற்றி பெற்றார் என்பதைக் கூறும் வகையில்:

‘அசிநாதத்வ மஸிநா பரஜீவப்ரபேதினா
வித்யாரண்ய மஹாரண்யம்
அக்ஷ்யோப்ய முனிரச்சி நத்’


என்னும் சுலோகம் எழுதி சாளுவ நரசிம்ம மன்னனுக்கு அனுப்பினார்.

அதற்குச் சான்றாக நரசிம்ம தீர்த்தத்துக்கு அருகிலுள்ள குன்றின்மேல் கல்லினால் ஜயஸ்தம்பம் அமைக்கப்பட்டு, கல்லில் மேற்கண்ட நிகழ்ச்சி செதுக்கப்பட்டிருக்கிறது.

அன்று ஸ்ரீஅட்சோப்பிய தீர்த்தரின் பிரார்த்தனைக்காக, பாறையில் சித்திரவடிவில் தோன்றிய ஸ்ரீநரசிம்ம சுவாமி, நாளுக்கு நாள் வெளிப்பக்கமாக வளர்ந்து, பாறையில் சிலா வடிவமாகத் தோன்ற ஆரம்பித்து, இன்றைக்கும் வளர்ந்த வண்ணமாக இருக்கிறார். இதனாலேயே பல வருடங்களுக்கு முன்னர் அவருக்காகச் செய்த கவசம், இன்றைக்குப் பொருந்தாமல் இருக்கிறது என்கிறார்கள்.

சித்திரம் சிற்பமாகும் அதிசயம்!

ஸ்ரீவியாஸராயர் பிரதிஷ்டை செய்த இரண்டாவது ஆஞ்சநேயர்!

இங்கு யோக நரசிம்மர் தமது திருக்கால்களைக் குறுக்காக மடித்தபடி ஸ்ரீஐயப்பன் வீற்றிருப்பது போல் வீற்றிருக்கிறார். திருக்கால்களிரண்டும் நழுவாதிருக்க யோகப் பட்டயம் கட்டிய நிலையில், மேலிரு கரங்கள் சங்கும் சக்கரமும் தரித்திருக்க யோக நிலையில் அருட்காட்சி தருகிறார். யோக நரசிம்மரின் கருவறைக்கு அருகிலேயே ஒரு கருவறையில் ஸ்ரீஆஞ்சநேயர் அருள்கிறார். இவரும் ஒரு பெரிய பாறையில் புடைப்புச் சிற்பமாகவே காணப்பெறுகிறார்.

இந்த ஆஞ்சநேயரிலும் ஒரு விசேஷம் இருக்கிறது. ஸ்ரீஸ்ரீபாதராஜரின் அருளால் சகல சாஸ்திர விற்பன்னராகி, பிற்காலத்தில் தென்னாடு முழுவதும் எழுநூற்றுக்கும் மேற்பட்ட ஆஞ்சநேயர் திருவடிவங்களைப் பிரதிஷ்டை செய்த இரண்டாவது ஆஞ்சநேயர் ஆவார் இவர்.

யோக நரசிம்மரையும், ஸ்ரீஸ்ரீபாதராஜரையும் வணங்கி வெளிவந்தபோது, நம்முடன் வந்த அன்பர் எதிரிலிருந்த ஒரு தீர்த்தத்தைக் காட்டி, “இதுதான் யோக நரசிம்மரின் ஆலயத்தின் தீர்த்தம். இதன் பெயர்தான் இன்றைக்கு இத்தலத்துக்கு வழங்கப்பெறும் நரசிம்ம தீர்த்தம் என்பது. ஸ்ரீஸ்ரீபாதராஜரால் தோற்றுவிக்கப்பட்ட இந்தத் தீர்த்தத்தில் கங்கையே பலர் காண ஆகாய கங்கையாகப் பொழிந்து புனிதம் சேர்த்தாள்” என்றார். அப்படி கங்கா தேவி ஆகாய கங்கையாகப் பொழிந்து புனிதம் சேர்த்ததன் பின்னணியில் ஒரு சுவையான வரலாறு இருக்கிறது. மகான் ஸ்ரீஸ்ரீபாதராஜர் காலத்தில் நிகழ்ந்த அந்த வரலாறு...

தேடிவந்தாள் கங்கை!

ஸ்ரீஸ்ரீபாதராஜர் முளபாகல் ஸ்ரீநரசிம்ம க்ஷேத்திரத்திலேயே பலகாலம் தங்கி ஸ்ரீநரசிம்மரை வழிபட்டு வந்தார். எப்போதும் அவரைச் சுற்றி பக்தர்கள் கூட்டம் குறையாமல் இருந்தது. துருவனின் அவதாரமான ஸ்ரீஸ்ரீபாதராஜர் தாம் சந்நியாசியாக இருந்தாலும், தினமும் வாசனை எண்ணெய் தேய்த்து ஸ்நானம் செய்து, பட்டுப் பீதாம்பரமும், முத்துக்குல்லாயும் அணிந்து, கண்ணனுக்கு நிவேதனமாகச் சமர்ப்பிக்கும் அறு சுவை உணவுகளையும் உண்டு, ராஜரிஷியாகத் திகழ்ந்தார்.

ஒரு முறை ஸ்ரீஸ்ரீபாதராஜர் காசிக்குச் சென்று கங்காஸ்நானம் செய்து வர தீர்மானித்து அதற்கான ஏற்பாடுகளில் முனைந்தார். அவரைச் சுற்றியிருந்த வயதான பக்தர்களுக்குத் தங்களால் காசிக்குச் செல்ல இயலவில்லையே என்ற ஏக்கம்; மன வருத்தம். தமது பக்தர்களின் ஏக்கம் நீங்கிட என்ன செய்வது என்ற சிந்தனையில் ஸ்ரீஸ்ரீபாதராஜர் ஈடுபட்டார்.

சித்திரம் சிற்பமாகும் அதிசயம்!

அவரது சிந்தனையைக் கலைப்பதுபோல் கங்கா தேவி அசரீரியாகத் தோன்றி, `எங்கே தினமும் கடவுள் வழிபாடு நடைபெறுகிறதோ அந்த இடம் பல புண்ணியத் தலங்கள் மற்றும் புண்ணிய நதிகளின் சந்நிதியாகவும் திகழும். துருவனின் அவதாரமான நீ உன் தெய்வத்தை பக்தியுடன் பூஜித்துவருவதால் ஸ்ரீ நரசிம்ம தீர்த்தம் பவித்ரமான இடமாகி விட்டது. எனவே, நான் நாளை காலை நரசிம்ம தீர்த்தத்தின் ஈசானிய மூலையில் தோன்றுகிறேன்' என்று கூறியருளி மறைந்தாள். இந்த அசரீரி வாக்கினை அங்கிருந்த அனைத்து பக்தர்களும் கேட்டனர். ஸ்ரீஸ்ரீபாதராஜரின் அருளால் தங்களுக்கு இந்தப் பெரும் பாக்கியம் கிடைத்திருப்பதாகப் போற்றினார்கள்.

பக்தர்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் இரவு முழுவதும் பக்திப் பாடல்களைப் பாடியபடி அந்த இடத்தைப் புனிதப்படுத்திக் கொண்டிருந்தனர். ஸ்ரீஸ்ரீபாதராஜரும் யோக நரசிம்மருக்குச் சிறப்பு பூஜைகள் செய்து, நரசிம்ம தீர்த்தக் கரைக்கு வந்து, ஈசானிய மூலையில் அமர்ந்து, கங்காதேவியைப் பிரார்த்திக்கத் தொடங்கினார்.

ஸ்ரீஸ்ரீபாதராஜர் யோக நிலையிலிருந்த அதேநேரத்தில் வானில் திடீரென்று மின்னல் தோன்றியதுபோல் அனைவர் கண்களும் கூசும்படியாக; வெள்ளியை உருக்கிவிட்டது போல் வெண்மையான நிறத்தில் கங்கா தேவி ஆகாய கங்கையாக வர்ஷித்தாள். ஸ்ரீஸ்ரீபாதராஜர் அமர்ந்திருந்த இடத்திலும் கங்கைநீர் பொழிந்தது. சற்றைக்கெல்லாம் நரசிம்ம தீர்த்தம் முழுவதும் நிறைந்துவிட்டது.

அங்கிருந்த பக்தர்கள் அனைவரும் மகிழ்ச்சி வெள்ளத்தில் கங்கையில் புனித நீராடி மகான் ஸ்ரீஸ்ரீபாதராஜரின் அருளாசிகளைப் பெற்றனர். அன்றிலிருந்து இன்று வரை அந்தத் தீர்த்தத்தில் கங்கா தேவி நிலை பெற்றிருக்கிறாள். அதற்கு எடுத்துக்காட்டாகப் பல வருடங் களுக்கு முன்னர் ஒரு சம்பவம் நடைபெற்றது.

சித்திரம் சிற்பமாகும் அதிசயம்!

பஞ்சம் தீர்ந்தது!

அப்போது முளபாகலில் கடும் தண்ணீர்ப் பஞ்சம் ஏற்பட்டு, பல குளங்களும் ஏரிகளும் வற்றிவிட்டன. நரசிம்ம தீர்த்தத்திலும் ஈசானிய மூலையில் கங்கா தேவி விழுந்த இடம் தவிர மற்ற இடத்தில் வெறும் சகதிதான் இருந்தது. எனவே, ஆட்களை அழைத்துச் சகதியை எடுத்துச் சுத்தப்படுத்த எண்ணிய ஸ்ரீவிக்ஞான நிதி சுவாமிகள், ஆட்களை வரவழைத்தார்கள். வந்தவர்கள் தீர்த்தத்தின் ஈசானிய மூலைப் பகுதியைத் தவிர, பெரும்பகுதியைச் சுத்தம் செய்துவிட்டு, மறுநாள் ஈசானிய மூலையைச் சுத்தம் செய்வதாகக் கூறிச் சென்றனர்.

ஆனால், அவர்கள் சென்ற சில மணி நேரத்துக்குள்ளேயே, அப்பகுதியில் பலத்த மழை பெய்து, தீர்த்தம் நிறைந்துவிட்டது. ஈசானிய மூலையில் கங்கையின் வாசம் இருப்பதால் அங்கு சுத்தம் செய்யக் கூடாது என்பதற்காகத்தான் இப்படி நேர்ந்தது போலும்!

சித்திரம் சிற்பமாகும் அதிசயம்!

எப்படிச் செல்வது?

சென்னையிலிருந்து சித்தூர் வழியாக பெங்களூரு செல்லும் சாலையில் சுமார் 250 கி.மீ தொலைவில் அமைந்திருக்கிறது முளபாகல். முளபாகல் நகருக்குக் கிழக்கே சுமார் ஒரு கி.மீ முன்னதாகப் பாதையை ஒட்டி அமைந்திருக்கிறது ஸ்ரீநரசிம்ம தீர்த்தம்.