Published:Updated:

சிவமகுடம் - பாகம் 2 - 1

சிவமகுடம் - பாகம் 2 - 1
பிரீமியம் ஸ்டோரி
சிவமகுடம் - பாகம் 2 - 1

ஆலவாய் ஆதிரையான் - ஓவியங்கள்: ஸ்யாம்

சிவமகுடம் - பாகம் 2 - 1

ஆலவாய் ஆதிரையான் - ஓவியங்கள்: ஸ்யாம்

Published:Updated:
சிவமகுடம் - பாகம் 2 - 1
பிரீமியம் ஸ்டோரி
சிவமகுடம் - பாகம் 2 - 1
சிவமகுடம் - பாகம் 2 - 1

வைகைக் கரையில்...

பொழுது நன்கு புலர்ந்துவிட்டிருந்தது. அன்றாட வழக்கப்படி ஆதவன் தனது பொற்கிரணங்களை வீசி ஆலவாய் அண்ணலின் ஆலயக் கோபுரத்தைத் தழுவி வணங்கி ஆறேழு நாழிகைகள் ஆகிவிட்டிருந்தன. தளர்நடை போட்டுக்கொண்டிருந்த அந்தப் புரவியைக் கடிவாளம் பற்றி இறுக்கி, மேலும் நடக்கவொட்டாது நிறுத்திய அந்த வாலிபன், புரவியின் முதுகிலிருந்து தரையில் குதித்தான். ஓடோடிச் சென்றான் வைகையை நோக்கி!

 வைகையைக் கண்டுவிட்டால்போதும்; தாயைக் கண்டதுபோல் துள்ளிக்குதிக்கும் அவன் உள்ளம். நதிக்கரையை நெருங்கியவன் பாதச் சரடுகளைக் கழற்றினான். கரையில் மெள்ள முழந்தாளிட்டு அமர்ந்து குனிந்து  வைகையின் நீரில் கைவைத்தவன், சட்டென்று கரங்களை விலக்கி ஒருமுறை உதறவும் செய்தான். `அப்பப்பா என்ன குளிர்’ என்று அவன் வாய்சொன்னதே தவிர, மனம் அலுத்துக்கொள்ளவில்லை என்பதை அவனுடைய முகமலர்ச்சிக் காட்டியது. மீண்டும் கைகளால் ஓரிரு முறை வைகையின் நீரை அளாவியவன், பின்னர் இரண்டு கரங்களாலும் நீரை முகந்து முகத்தில் தெளித்துக்கொண்டான். அக்கணத்திலேயே, மூன்று நாள்களாக இடைவிடாமல் தொடர்ந்த நெடும்பயணத்தின் விளைவால் எழுந்த ஒட்டுமொத்த களைப்பும் காணாமல்போனது.

வேறொரு தருணமாக இருந்திருந்தால் வைகைத் தாயின்  மடியில் சிறிது நேரமாவது குதித்து விளையாடியிருப்பான்; நீந்திக் களித்திருந்திருப்பான். ஆனால், இப்போது அதற்கு நேரம் வாய்க்காததால், ஏக்கப் பெருமூச்சொன்றை வெளிப்படுத்தியவன், வைகையின் நீரை முகத்தில் தெளித்துக் கொண்டதோடு, சிறிது அள்ளிப்பருகவும் செய்தான். அங்ஙனம் இரண்டு மூன்று முறை நீரெடுத்துப் பருகியவனுக்குப் பசியும் மட்டுப்பட்டதாகத் தோன்றியது. `எப்போதும் என் அன்னை, அன்னைதான்’ எனப் புளகாங்கிதத்தோடும் திருப்தியோடும் திரும்ப யத்தனித்தவன், ஏதோ நினைவுக்கு வந்தவனாக இடைக்கச்சையைத் தொட்டுப் பார்த்தான். அதில் பொதிந்து  முடிச்சிட்டு வைக்கப்பட்டிருந்த அந்த வஸ்து மிகப் பத்திரமாக இருப்பதைத் தெரிந்துகொண்டவன், அந்தத் திருப்தியோடு புரவியை நோக்கினான். அதுவும் நீரைப்பருகி தனது களைப்பை ஆற்றிக்கொண்டிருந்தது.

ஒரு புன்னகையை வெளிப்படுத்திக் கொண்டவன்  வைகையின் கரையாகத் தென்பட்ட அந்த மண்மேட்டைக்கண்டு, பாதம் புதையும் அதன் மணற்பரப்பின்மீது கால்பதித்துச் சிறிது சிரமத்துடன் ஏறத் தொடங்கினான். அதன் உச்சியை அவன் அடைந்ததும் வேறோர் உச்சம் தென்பட்டது அவனுக்கு.

ஆம்... ஆழிசூழ் உலகின் நாகரிகங்களுக் கெல்லாம் உச்சம் அதுதான். மாண்பின் உச்சம்; பண்பாட்டின் உச்சம்.

பரந்துபட்ட இவ்வுலகில் எத்தனையோ சாம்ராஜ்ஜியங்கள் தழைத்தோங்கித் திகழ்ந்திருக்கின்றன. ஏதென்ஸ், ரோம் என்பவை போன்ற அந்த ராஜ்ஜியங்களின் ராஜதானிகளைப் பற்றிச் சொல்வதானால்... `ஒரு காலத்தில்...’ என்றே தொடங்கவேண்டியிருக்கிறது.  ஏனெனில் ஏதோ ஒரு காலத்தில், ஏதோ ஒரு காரணத்தால் அந்த நகரங்களெல்லாம் அழிக்கப்பட்டுவிட்டன. ஆனால், யுக யுகாந்திரங்களைக் கடந்து, மனித நாகரிகத் தொட்டிலின் ஆதி மடியாகத் திகழ்ந்து, இதோ இப்போது நாம் வாழும் சமகாலத்திலும் தலைநிமிர்ந்து கம்பீரமாக நிற்கும் ராஜதானி எதுவென்றால், அது நம்  மாமதுரை மட்டும்தான்.

சிவமகுடம் - பாகம் 2 - 1

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஏழாம் நூற்றாண்டிலும் மாண்போடு திகழ்ந்த அந்த மாமதுரையின் ஆலவாய்க் கோயிலின் விமானக்கலசத்தையே அந்த வாலிபனும் தரிசித்தான். அதன் பின்னணியில் அப்போதுதான் வானுக்கு ஏறியிருந்த ஆதவன் ஒளிர, பிறைசூடிய பெருமான் அன்றைக்குக் கதிர்சூடிக்கொண்டிருந்தது போல் தோன்றியது இளைஞனுக்கு. மனம் இனிக்க, கண்கள் பனிக்க, சிரம்மேல் கரம் குவித்து வணங்கினான். எம்பிரானை இங்கே இப்போது வணங்கினால்தான்  உண்டு. ஆலவாய்க்குள் நுழைந்துவிட்டால் வணங்க வாய்ப்பு கிடைக்காது என்பது அவனுக்குத் தெரியும்.

சிலிர்ப்பின் காரணமாகக் கண்ணில் பனித்த நீர்த்திரையை கைகளால் துடைத்து விலக்கியவன், மீண்டும் ஒருமுறை ஆலவாய்க் கோயிலை - பாண்டியன் அரண்மனையைச் சூழ்ந்திருந்த மாமதுரையை நோக்கினான். அந்த நகரம் அவன் பார்வைக்கு ஒரு தாமரையாகத் தோன்றியது. அவனுக்கு மட்டுமல்ல, பரிபாடல் புலவர் ஒருவருக்கும் அவ்வண்ணமே தோன்றியிருக்க வேண்டும்.

மாயோன் கொப்பூழ் மலர்ந்த தாமரைப்
பூவொடு புரையும் சீரும் பூவின்
இதழகத்து அனைய தெருவம் இதழகத்து
அரும்பொகுட்டு அனைத்தே அண்ணல் கோயில்
தாதின் அனையர் தண்தமிழ்க் குடிகள்


என்று பாடியிருக்கிறார் அந்தப் புலவர். அவர் மட்டுமா ? மதுரைக் குமரனார், நக்கீரனார், மாங்குடி மருதனார் என்று எத்தனை எத்தனையோ புலவர்கள் மாமதுரையைப் பாடிக்களித்திருக்கிறார்கள். மதுரைக்காஞ்சி, பரிபாடல், நெடுநெல்வாடை, சிறுபாணாற்றுப்படை, சிலப்பதிகாரம் என்று மாமதுரையைப் பணிந்து போற்றிய பழந்தமிழ்ப் பனுவல்களும், திருவிளையாடல் புராணம் போன்ற ஞானநூல்களும் ஏராளம் உண்டு.

மீனாட்சி அரசாளும் இந்த ராஜதானிக்குத்தான் எத்தனையெத்தனைத் திருப்பெயர்கள்.

மதுரம் நிறைந்த பூக்கள் பொலிந்த ஊராதலால் மதுரை எனும் பெயர்.  வைகையாற்றுத் துறையை திருமருதநீர்ப்பூந்துறை எனப் போற்றுகிறது பரிபாடல். ஆக, மருதப்பூக்கள் நிறைந்த இவ்வூர் `மருதை’ எனப்பட்டுப் பின்னாளில் மதுரை என்றானதோ?!

அகன்ற வாயிலை உடைய நகரம் என்பதால் ஆலவாய் என்றொரு திருப்பெயர். அதேபோல் ஆலம் என்றால் நஞ்சு என்ற பொருளும் உண்டு. நஞ்சுடைய வாய் கொண்டது சர்ப்பம். பண்டைய பாண்டியன் ஒருவனுக்குப் பாம்பு ஒன்று வால் தலையில் படும்படி மதுரை நகரைச் சுற்றிக்கிடந்து அதன் எல்லையைச் சுட்டிக்காட்டியதாம். இந்தக் காரணம்தொட்டும் மாமதுரைக்கு ஆலவாய் என்ற பெயர் வந்தது என்பார்கள். எனினும் கூடல் என்ற திருப்பெயர்தான் இலக்கியங்களில் இவ்வூர்ப் பற்றியதாக அதிகம் குறிப்பிடப்படுகிறது. நான்மாடக் கூடல், சேய்மாடக் கூடல், நெடுமாடக் கூடல் என்றெல்லாம் விளிக்கின்றன இலக்கியங்கள். நதிகள் கடலுடன் சங்கமிக்கும் இடத்தைக் கூடல் என்பார்கள் பொதுவாக. ஆனால், தமிழ்ப்புலவர்கள் கூடிய இடம் என்பதால் `கூடல்’ எனப் பெயர் பெற்றிருக்கலாம் என்கிறார்கள் ஆய்வுச் சான்றோர்கள்.

ஆனால், பாண்டியப் பேரரசின் பண்டைய தலைநகரம் இதுவல்ல. தென் குமரிக்கண்டத்தில் திகழ்ந்த தென்மதுரைதான் அது. முதல் தமிழ்ச் சங்கம் அமைந்திருந்ததும் அங்குதான். குமரிக்கோடு, பன்மலை முதலான மலைகள் திகழ, பஃறுளி மற்றும் குமரி நதிகளும் பாய்ந்து வளப்படுத்திய குமரிக்கண்டத்தில் தென்பாலி முக நாடும், பஃறுளி ஏழ்மதுரை, ஏழ்தெங்க நாடு முதலான மொத்தம் 50-க்கும் மேற்பட்ட வளநாடுகள் திகழ்ந்தன. இவையனைத்தும் பெரும் கடல்கோளினால் அழிந்துபட, கபாட புரம் எனும் தலைநகருடன் மீண்டும் நிர்மாணிக்கப்பட்டது பாண்டியப் பேரரசு. இடைச்சங்கம் தழைத்தோங்கிய இந்தக் கபாடபுரமும் கடலில் மூழ்கியபிறகு, முடத்திருமாறன் என்ற மன்னன் மணலூர் எனும் சிறுநகரை நிர்மாணித்து அரசாள ஆரம்பித்தான். அந்த நகரையும் இயற்கை சீற்றங்கள் பயமுறுத்த, வைகைக் கரையில் இதோ இந்த மதுரை மாநகர் உருவானது. மூன்றாம் தமிழ்ச்சங்கம் திகழ்ந்தது இங்குதான்.

அடடா... வரலாற்றில் மூழ்கித் திளைத்ததில் அந்த இளைஞனைப் பின்தொடரத் தவறி விட்டோமே?!  எங்கே அவன்?

சிவமகுடம் - பாகம் 2 - 1

பாண்டிமாதேவியார் பிரவேசம்!

நான்மாடக் கூடலின் ராஜவீதியில் பிரவேசித்துவிட்டிருந்தான் அந்த வீர இளைஞன். விழாக்கோலம் பூண்டிருந்த மாமதுரை அவனுக்கு இந்திரபுரியாகவே தோன்றியது. வீதிகளில் வண்ணக்கோலமிடும் பெண்டிரின் குழந்தை குதூகலமும், அவர்களைக் கேலி பேசியபடியும் வம்புக்கு இழுத்தபடியும் தோரணம் கட்டிக்கொண்டிருக்கும் ஆண்களின் வெள்ளந்திப் பேச்சுகளும் அந்த இளைஞனை வெகுவாகக் கவர்ந்தன.

இடப்புறமாகத் திரும்பி பாண்டியன் மாளிகையை நெருங்கினான்.  வாயிலில் தொடங்கி, அரண்மனை வெளிச்சதுக்கம் முழுக்க நிரம்பி வழிந்தது பெருங்கூட்டம். இவன் வாயிலை அடைந்தானோ இல்லையோ, சட்டென்று அடையாளம் கண்டுகொண்ட சேனாதிபதிகள் அவனுக்கு மரியாதை செலுத்தும்விதமாகத் தலை தாழ்த்தியதோடு, கூட்டத்தை விலக்கி அவனை அரசவை மண்டபத்தையொட்டிய விருந்தினர் மாளிகைக்கு அழைத்துச் சென்றார்கள்.

அங்கே சென்றவன் ஓய்வெடுக்க விரும்ப வில்லை. சடுதியில் நீராடி, புத்தாடை அணிந்துகொண்டு அவசர அவசரமாக அரசவைக்குள் வந்து சேர்ந்தான். அரசவை முழுக்க தீபத் தோரணங்களால் ஜொலி ஜொலித்தது. அத்துடன் அமைச்சர் பெருமக்கள், சேனைத் தலைவர்கள், மந்திராலோசனை குரு மூர்த்திகள் முதலான அனைவரும் முன்னரே வந்து தயாராக இருப்பதையும் கண்டான்.

வெளியே சதுக்க வாயிலின் அருகே பட்டத்து யானை மாலையோடு காத்திருக்க, பொன் கவசம் பூண்டிருந்த அசுவத்தமும் நின்றிருந்தது. கூடவே அஷ்டமங்கலப் பொருள்களை ஏந்தியபடி மங்கல மங்கையரும் நின்றிருந்தார்கள். 

சற்று நேரத்துக்கெல்லாம் ஜெயகோஷமும் வாழ்த்தொலியும் எழும்பின.

பாண்டிய சக்கரவர்த்திகளின் மெய்கீர்த்தி பாடப்பட்டது. கம்பீரமாக  சதுக்க வாயிலைத் தாண்டி உள்ளே நுழைந்த கூன்பாண்டியர், மரியாதைகளை ஏற்றுக்கொண்டு யானையின் அருகில் வந்து நின்றுகொண்டார். அடுத்த சில கணங்களில், பெரும் வாழ்த்தொலிகள் உச்சஸ்தாயியில் விண்ணதிர முழங்க உள்ளே பிரவேசித்தார்...

வளவர்கோன் பாவை
வரிவளைக்கைம்மட மானி
பங்கையச் செல்வி
பாண்டிமாதேவி - மங்கையர்க்கரசி!


கூட்டத்தின் உற்சாகமும் ஆரவாரமும் அந்த வீர இளைஞனையும் தொற்றிக்கொள்ள, அதன் விளைவாக உள்ளமும் உடலும் உதற உணர்ச்சிவயப்பட்டவனாகத் தானும் குரலெழுப்பி முழங்கினான்...

‘பாண்டிமாதேவி வாழ்க வாழ்க’

அவனோடு அமைச்சர்களும் மற்றுமுள்ள பிரமுகர்களும் சேர்ந்துகொள்ள வாழ்த்தொலி விண்ணைத்தொட்டது.

உற்சாகத்துக்கு இடையே, பாண்டிமா தேவியாருக்குப் பரிசளிப்பதற்காக தந்தையார் கொடுத்துவிட்ட மிக முக்கியமான அந்த வஸ்துவை எடுக்க யத்தனித்த அந்த இளைஞன், இடைக்கச்சையில் அது இல்லாதது கண்டு அதிர்ந்தான்.

அது தொலைந்துபோனால், பாண்டிய சாம்ராஜ்ஜியத்தின் தலையெழுத்தே தொலைந்துபோகுமே!

 - மகுடம் சூடுவோம்...