Published:Updated:

சனங்களின் சாமிகள் - 16 - மூன்று குண்டாத்தாள் கதை

சனங்களின் சாமிகள் - 16 - மூன்று குண்டாத்தாள் கதை
பிரீமியம் ஸ்டோரி
சனங்களின் சாமிகள் - 16 - மூன்று குண்டாத்தாள் கதை

அ.கா.பெருமாள் - ஓவியங்கள்: ரமணன்

சனங்களின் சாமிகள் - 16 - மூன்று குண்டாத்தாள் கதை

அ.கா.பெருமாள் - ஓவியங்கள்: ரமணன்

Published:Updated:
சனங்களின் சாமிகள் - 16 - மூன்று குண்டாத்தாள் கதை
பிரீமியம் ஸ்டோரி
சனங்களின் சாமிகள் - 16 - மூன்று குண்டாத்தாள் கதை

க்னிப் பிழம்புகள். ஒரே வரிசையில் ஆறு அக்னிப் பிழம்புகள், கோளம்போல உருண்டு கொண்டிருப்பது தெரிந்தது. அவற்றிலிருந்து ஒரு ஜ்வாலை எழுந்து, அவன் கண்களை நெருங்கியது. மேஜருக்குப் பார்வை வந்துவிட்டது. கோயிலுக்குள் நுழைந்தவன் நெடுஞ்சாண் கிடையாகக் கீழே விழுந்து மூன்று குண்டாத்தாள் சாமிகளை வணங்கினான்.

கொஞ்சம் ஆசுவாசமான பிறகு கோயில் பூசாரியை அழைத்தான். அந்தச் சாமிகளின் வரலாற்றைச் சொல்லும்படி கேட்டுக்கொண்டான். எளிய மாந்தர்கள் சாமிகளான அற்புதக் கதையை, மூன்று குண்டாத்தாள் சரித்திரத்தை அவர் விளக்கிச் சொல்ல ஆரம்பித்தார். அது ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட வரலாறு.

அது பிற்காலச் சோழர்கள் தமிழகத்தை அரசாண்டுகொண்டிருந்த காலம். சோழர்களின் `நெற்றிப்படை’ எனப்படும் வேளைக்காரப் படை நாமக்கல்லில் இருந்தது. இந்தப் படைக்கு ஒரு தலைவன் இருந்தான். அவன் தம்பி உதவித் தலைவனாக இருந்தான்.

சனங்களின் சாமிகள் - 16 - மூன்று குண்டாத்தாள் கதை

இருவருக்கும் தீராத மனக்குறை ஒன்று இருந்தது. வீரம், செல்வம், செல்வாக்கு எல்லாம் இருந்தும், இருவருக்குமே குழந்தைகள் இல்லை. கண் நிறைந்த அவர்களின் மனைவிமார்கள் வேண்டாத தெய்வம் இல்லை. ஆனாலும், குழந்தை பாக்கியம் தள்ளிப்போய்க்கொண்டே இருந்தது. ஒருநாள் அண்ணனும் தம்பியும் சந்தைக்குப் போனார்கள். அப்போதுதான் பிறந்திருந்த ஓர் ஆட்டுக்குட்டியைச் சந்தையில் பார்த்தார்கள். விலை கொடுத்து வாங்கி வந்தார்கள். மனித மனத்தைப்போல விசித்திரமானது வேறு ஒன்றுமில்லை. ஒன்றுக்குமே பெறாத ஒரு சிறு கல்கூட சில நேரங்களில் பெரும் பொக்கிஷமாகச் சிலருக்குத் தெரியும். அண்ணன், தம்பி இருவருக்கும் அன்றைக்கு அதே மனநிலை. அந்த ஆட்டுக்குட்டியை வெறும் ஜீவனாக அவர்களால் பார்க்க முடியவில்லை. அதன் துறுதுறு நடை, சுற்றிச் சுழலும் மணிக்கண்கள், ஒட்டிய வயிறு, அடர்த்தியான ரோமம்... இவையெல்லாம் பார்க்கப் பார்க்க அதன்மேல் ஒரு வாஞ்சை வந்தது. அடக்க முடியாத பாசம் கிளர்ந்தெழுந்தது. அதை ஆடாக அவர்களால் நினைக்க முடியவில்லை. தங்களின் வெறுமையைப் போக்க வந்த குழந்தையாகக் கருதினார்கள். அன்று தொடங்கி இருவரும் ஆட்டின் மேல் பிரியத்தைப் பொழிந்தார்கள். 

அவர்களின் அன்பான அரவணைப்பில்,  ஆடு ஊட்டத்தோடு வளர்ந்தது. ஆட்டை மேய்ச்சலுக்கு அனுப்ப வேண்டுமா... அண்ணனோ, தம்பியோ கூடவே துணையாகக் காவலுக்குச் சென்றார்கள். இப்படி ஒருவர் மாற்றி ஒருவர் அதைக் கவனமாகப் பார்த்துக் கொண்டார்கள். சகோதரர்களின் மனைவியரும் அந்த ஆட்டைப் பேணி வளர்த்தார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சனங்களின் சாமிகள் - 16 - மூன்று குண்டாத்தாள் கதை

ஓர் ஆட்டுக்கு, சகோதரர்கள் இருவரின் துணை. அதிலும் இருவரும் படையில் முக்கியப் பொறுப்பு வகிப்பவர்கள். ஊர் முழுக்க இவர்கள் வளர்க்கும் ஆடு பற்றிய பேச்சாகவே இருந்தது. `ஊரார் கண்படுவது அத்தனை நல்லதல்ல’ என்பார்கள். அது, இவர்கள் விஷயத்தில் மிகப் பொருத்தமாகவே இருந்தது.

ஒருநாள் காலை தஞ்சையிலிருந்து அரச தூதுவன் வந்திருந்தான். தூதுவன் ஓலையை நீட்டியதும், அண்ணன் வாங்கிப் படித்துப் பார்த் தான். சோழ அரசர் இருவரையும் உடனே கிளம்பிவரச் சொல்லி உத்தரவிட்டிருந்தார். தூதுவனுக்கு நன்றி சொல்லி, உடனே கிளம்பி வருவதாகத் தகவலும் சொன்னார்கள்.

சகோதரர்கள் இல்லம் திரும்பினார்கள்.  கலந்தாலோசித்தார் கள். `நாமக்கல்லிலிருந்து தஞ்சைக்குப் போக வேண்டும். சரி... போகலாம். அதில் பிரச்னை இல்லை. கண்போல வளர்த்த ஆட்டை என்ன செய்வது? மனைவியர் பார்த்துக் கொள்வார்கள்தான். ஆனால், ஆட்டை மேய்ச்சலுக்கு அழைத்துப்போக வேண்டுமே... அது அவர்களால் முடியாதே. தவிரவும், நெருங்கிய உறவினர் இல்ல விழா ஒன்றுக்கு அவர்கள் அடுத்த நாள் செல்ல வேண்டியிருந்தது. ஆட்டைக் கூட அழைத்துப் போக முடியாது...’ எல்லாவற்றையும் இருவரும் யோசித்தார்கள். அவர்கள் இருவருக்குமே ஒருவன்தான் அந்தக் கணத்தில் நினைவுக்கு வந்தான்.

அவன், வேளைக்காரப் படையில் முரசடிப்பவன். இருவருக்கும் மிக நெருக்கமானவன். நம்பிக்கைக்குப் பாத்திரமானவன். இவர்களின் அருமையை உணர்ந்தவன். இப்படியெல்லாம் யோசித்தவர்கள்... ஆட்டை முரசு அடிப்பவனிடம் ஒப்படைப்பது என முடிவு செய்தார்கள். அவனை அழைத்தார்கள். விஷயத்தைச் சொன்னார்கள். ஆட்டைப் பார்த்துக்கொள்வதற்குக் கூலிப்பணமாகப் பெரும் தொகை ஒன்றைக் கொடுத் தார்கள். அவன் மகிழ்ச்சியோடு பெற்றுக்கொண்டான். ``ஆடு இனி என் பொறுப்பு. பத்திரமாகப் போய் வாருங்கள்!’’ என்று விடை கொடுத்தான். சகோதரர்கள் நிம்மதியாக தஞ்சைக்குக் கிளம்பிப் போனார்கள்.

சனங்களின் சாமிகள் - 16 - மூன்று குண்டாத்தாள் கதை

நம்பிக்கை... பல மனிதர்களை வாழ வைப்பதும் இதுதான்; சிலரைப் படுபாதாளத்தில் வீழ்த்துவதும் இதுதான். சகோதரர்கள் இருவரும் அந்த முரசறைபவன் மேல் வைத்திருந் தது நம்பிக்கை. அது, அவர்களை என்ன பாடுபடுத்தப் போகிறது என்பது அப்போது அவர்களுக்குத் தெரியவில்லை.

தஞ்சாவூருக்குப் போனவர்களின் வேலை நல்லபடியாக முடிந்தது. அரசரைச் சந்தித்த மகிழ்ச்சியோடும், அவர் வழங்கியிருந்த சன்மானங் களோடும் ஊர் திரும்பினார்கள். அவர்கள் நினைவெல்லாம் தாங்கள் வளர்க்கும் ஆட்டின் மேலேயே இருந்தது. வீடு திரும்பியவர்கள் முதல் வேலையாக முரசடிப்பவனை அழைத்து வர ஆள் அனுப்பினார்கள். போனவர்கள், வெறுங்கையோடு திரும்பி வந்தார்கள். அவன் வீட்டில் இல்லை என்கிற தகவலைச் சொன்னார்கள். சகோதரர்கள் பதறிப் போனார்கள். இருவரும் அவனைத் தேடிப் போனார்கள். 

முரசடிப்பவன் வீட்டில் இல்லை; அவர்கள் அவனிடம் ஒப்படைத்துச் சென்ற ஆட்டையும் காணவில்லை. அக்கம்பக்கத்தில் விசாரித்தபோது விஷயம் தெரிந்தது. அவன் அவர்களை மோசம் செய்துவிட்டான். அவர்கள் பிரியமாக வளர்த்த ஆட்டைக் கொன்று, கறி சமைத்துச் சாப்பிட்டுவிட்டான். இந்தச் செய்தி அவர்களுக்குத் தாங்க முடியாததாக இருந்தது. `இப்படியும் நடக்குமா... நம்பிக்கை துரோகத்துக்கு ஓர் அளவில்லையா... அந்த ஆடு இவனை என்ன செய்தது... வளர்க்கச் சொன்ன, பாதுகாப்பாக விட்டுச் சென்ற ஆட்டைக் கொன்று தின்ன யாருக்காவது மனம் வருமா... இனி ஆசை ஆசையாக வளர்த்த ஆட்டைப் பார்க்கவே முடியாதா?’ அவர்களால் துயரத்தைத் தாங்க முடியவில்லை. புத்தி பேதலித்ததுபோல் ஆகி விட்டது. அண்ணனும் தம்பியும் ஒரு முடிவுக்கு வந்தார்கள். `இனி வாழ்வதில் அர்த்தமில்லை.’

வீட்டுக்குத் திரும்பாமல் ஊர் எல்லைக்குச் சென்று விறகுகளையும் மரக்கட்டைகளையும் சேகரித்து சிதை மூட்டினார்கள். நெருப்பில் இறங்கி உயிர் துறந்தார்கள். இருவரும் இறந்த செய்தியைக் கேள்விப்பட்டார்கள் அவர்களின் மனைவியர். அவர்களுக்கும் வாழ்க்கை அர்த்தமில்லாதது என்று தோன்றவே, நெருப்பு வளர்த்து, அதில் இறங்கி உயிர்விட்டார்கள்.

பழியும் பாவமும் ஒருவனை இறுதிவரை துரத்திக்கொண்டேயிருக்கும். இந்தத் தீராப்பழி முரசடிப்பவனைத் துரத்தியது. விஷயத்தைக் கேள்விப்பட்டான். மனசாட்சி அவனைப் பிடித்து உலுக்கியது. `ஐயோ... பெரும் தவறிழைத்து விட்டோமே...’ என்று தன் உடைவாளை எடுத்து தரையில் நட்டு, அதன் மேல் பாய்ந்து உயிரை விட்டான். கணவன் இறந்த துன்பம் பொறுக்காமல் முரசடிப்பவனின் மனைவியும் தீயில் புகுந்து உயிரை மாய்த்துக்கொண்டாள்.

ஒருவன் செய்த சிறு பிழை... ஆறு உயிர்களைக் குடித்தது. நாமக்கல் வேளைக்காரப்படையில் இருந்தவர்கள் இதை அறிந்து அதிர்ந்துபோனார்கள். இவர்களின் மரணம் படை வீரர்களை நிலைகுலையச் செய்தது. இறந்தவர்களுக்காகக் கோயில் எழுப்ப முடிவு செய்தார்கள். இறந்த ஆறு பேருக்கும் கோயில் எழுப்பினார்கள். அண்ணன், தம்பி, அவர்களின் மனைவியர், முரசடிப்பவன், முரசடிப்பவனின் மனைவி அத்தனை பேருக்கும் தனித் தனிக் கோயில் எழுப்பினார்கள். வழிபாடு நடத்தினார்கள். இந்தக் கோயிலில் அந்த மூன்று பெண்களும் தெய்வங்களாக்கப்பட்டார்கள்.

`மூன்று குண்டாத்தாள் கோயில்’ இப்போதும் நாமக்கல்லில் இருக்கிறது.  இந்தக் கோயிலில் தினப் பூஜை இல்லை. இப்போது சோழிய வேளாளர்கள் சிலரின் முயற்சியால் சிறப்பு பூஜை நடைபெறுகிறது. நாமக்கல் பகுதியில் தீப்பாய்ந்த அம்மன் வழிபாடு உண்டு.  இந்த வழிபாட்டிலில் தாலி, கூறைப்புடவை போன்றவற்றை வைத்து வணங்குகிறார்கள். கேட்டதனைத்தும் அம்மன் அருளுவாள் என்பது அவர்களின் நம்பிக்கை.

தொகுப்பு: பாலு சத்யா

சனங்களின் சாமிகள் - 16 - மூன்று குண்டாத்தாள் கதை

அனுமனுக்கு அபிஷேகம் இல்லை!

திருப்பனந்தாள் அருகிலுள்ள கீழக்காட்டூர் ஸ்ரீவரதராஜ பெருமாள் திருக்கோயிலில் அருளும் அனுமன், ‘தாரு’ எனும் அபூர்வ மரத்த்தால் உருவாக்கப்பட்டவர். அதனால் அவருக்கு அபிஷேகம் செய்யப்படுவதில்லை. தினமும் சாம்பிராணி தைலம் மட்டும் சாற்றப்படுகிறது. இவரை வழிபட்டால், தீய சக்திகள் அழிந்துபோகும் என்பது நம்பிக்கை.

மதுரை, அழகர்கோயில் சாலையில் உள்ள முத்தப்பசுவாமி திருக்கோயிலில் சுமார் 42 அடி உயரத்தில், அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கிறார் அனுமன். சுமார் 6 மாத காலத்தில் இந்த அனுமனை உருவாக்கினார்களாம்.

- ஆர்.பத்மபிரியா, சேலம்-302