Published:Updated:

சித்திர ராமாயணம்

சித்திர ராமாயணம்
பிரீமியம் ஸ்டோரி
News
சித்திர ராமாயணம்

பி.ஸ்ரீ.

கத்தியரும் மறுமலர்ச்சியும்ராமன் சமீபத்தில் வந்து விட்டான், நெருங்கி வந்து விட்டான், பக்கத்தில் வந்து விட்டான், எதிர்கொண்டு வந்து பார்த்து விட்டார் முனிவர். ஆனால், கண்ணீர் மறிக்கிறது இடைச்சுவராக வந்து.

கண்டனன் இராமனை வரக்கருணை கூரப்புண்டரிக வாள்நயனம் நீர்பொழிய நின்றான்எண்திசையும் ஏழுலகும் எவ்வுயிரும் உய்யக்குண்டிகையி னில்பொருவில் காவிரி கொணர்ந்தான்.

ராமனை அருகே கண்டுகொண்டதும், முகமுகமாய் உரையாடக்கூடிய வண்ணம் கண்டதும் அகத்தியருக்கு உள்ளமெல்லாம் உருகிக் கண்ணீராய்ப் பொழிவது போலத் தோன்றுகிறது. அடியெடுத்து வைக்கவும் இயலாமல் அப்படியே நின்றார். அப்படிக் கண்ணீர் வடிப்பது தவிரப் பேசவும் தெரியவில்லை, தமிழ்க்கடல் குடித்த முனிவருக்கு. கண்ணீரால், தெளிவாகக் கண்டு கொண்டிருக்கவும் முடியவில்லையென்றால், ராமனைக் கண்ட தமிழ் முனிவர் பட்டபாட்டை என்னென்பது?

சித்திர ராமாயணம்

இதற்குமுன் குறுமுனிவருக்குக் கிடைத்திருக்கும் பல பெருமைகளுடன், இப்போதும் ஒரு பெருமை அளிக்கிறான் கவிஞன். மலை கடந்த, கடல் குடித்த, உலகைச் சமனாக்கிய, தமிழால் உலகளந்த பெருமைகளுடன் காவிரிகொணர்ந்த பெருமையும் சேர்ந்துகொள்கிறது.

கம்பன் காவிரிதீரவாசி, சோழவள நாட்டான், தமிழ் நாட்டின் உணவுப் பஞ்சம் தீரச் சோழவள நாட்டைச் ‘சோறு’டைய தாக்கிக் கவலையின்றி அறிவுப் பயிரும் தழைத்தோங்குமாறு உதவிய காவிரியைத்தான் எவ்வளவு தூரம் ஆசை வெள்ளம் பெருகக் குறிப்பிடுகிறான்:

எண் திசையும் ஏழுலகும்
    எவ்வுயிரும் உய்யக்
குண்டிகையி னில்பொருவில்
    காவிரி கொணர்ந்தான்.

சித்திர ராமாயணம்

சாதாரண மக்கள் அகத்தியரே தமிழையும் கொண்டு வந்ததாகச் சொல்லுகிறார்கள். தமிழையும், தென்றலையும், தாமிரவருணியையும், காவிரியையும் ஒரே மூட்டையாகக் கட்டிக் கொணர்ந்து குடகு மலைச் சாரலிலும், பொதிய மலைச் சாரலிலும் உதறிவிட்டாராம் அகத்தியர்.

ராமனை வரவேற்ற அகத்திய மகரிஷி தம் ஆசிரமத்துக்கு அழைத்துச் செல்லுகிறார். அப்போது அகத்தியரது குருகுலத்தின் மாணாக் கர்களான வேதியர்கள், பல்வேறு வேத மந்திரங் களைக் கோஷிக்கிறார்கள். சீடர்களான முனிவர் கள் பூர்ண கும்பங்களில் தீர்த்தம் கொணர்ந்து புரோட்சிக்கிறார்கள்.

பிறகு அவர்கள் அழகிய மலர்களைத் தூவி, ராமனை அப்படியே அகத்தியர் தமது சோலைக் குள் அழைத்துக்கொண்டு போகிறார்.

அங்கே அவனுக்கு விருந்து ஏற்பாடாகி யிருந்தது. வனபோஜனம்தான். விருந்துக்குப்பின் அகத்தியர் ஆனந்தமாக அமர்ந்து தனது உணர்ச்சிகளை விருந்தாளியிடம் தாராளமாக வெளியிடுகிறார். அதுவே ஓர் ஆனந்தமான விருந்தாகிறது ராமனுக்கு.

சித்திர ராமாயணம்

அதுமட்டுமா ‘‘என் தவம் பலித்துவிட்டது. அருளின் அரசு என்னைத் தேடி வந்துவிட்ட தால்’’ என்கிறார் அகத்தியர். இதற்கு ராமனின் பதிலென்ன தெரியுமா? ‘‘வென்றனன் அனைத்துலகும் மேல் இனி என்?’’ என்றான்.

அகத்தியரின் தரிசனம் பெற்றதையே தனி வெற்றியாகக் கருதி களிப்படைந்தான் ராமன். அத்துடன் ‘‘இனிமேல் நான் செய்வது யாது?’’ என்றும் கேட்டு அகத்தியரின் ஆணையை எதிர்பார்க்கிறான். அவரோ, ராமனை அவரிடத்திலேயே தங்கும்படி பணித்தார்.

அவர் சொன்னபடி அந்த அழகிய சோலை சூழ்ந்த ஆசிரமத் தில் தங்குவது வசதியாகத்தான் இருக்கும். எனினும் அரக்கர்களை வெகு விரைவில் வதஞ்செய்ய வேண்டுமென்ற ராமனுடைய லட்சியம் நிறைவேறுவதற்கு அந்த இடம் அவ்வளவு சௌகரியமானதல்ல என்று ராமன் எண்ணினான்.

அரக்கர்கள் செருக்கித் திரிந்து தீமை செய்வதையே லட்சியமாகக் கொண்டிருக்கிறார் களென்றும், ராட்சஸ ராஜதானியாகிய லங்கையி லிருந்தும், காதூஷணாதியர் தங்கியிருந்த ஜனஸ்தானத் திலிருந்தும் அவர்கள் வந்து உல்லாச சஞ்சாரம் செய்யக்கூடிய பிரதேசம் இன்னும் தெற்கேதான் இருக்கிறதென்றும், தண்டகாரணிய முனிவர்கள் மூலமாகவும் அகத்தியர்  சிஷ்யர்கள் மூலமாகவும் ராமன் கேள்விப்பட்டிருந்தானென்று கருதலாம்.

விரைவில் ராட்சஸவதம் நேர்ந்தால்தான் அந்தச் சாதுக்களுக்கும், உலகத்துக்குமே க்ஷேமம் என்று தீர்மானித்தவனாய், ராமன் அகத்தியரை நோக்கி `‘அரக்கர்கள் வரும் தெற்குத் திசையில் நான் முற்பட்டுப் போயிருப்பதே நலமென்று எனக்குத் தோன்றுகிறது. இனி உங்கள் விருப்பம் எப்படியோ அப்படியே நடந்துகொள்ளச் சித்தமாயிருக்கிறேன்'’ என்றான்.

அது கேட்ட அகத்தியர்  திருப்தியடைந்து, ‘`நீ சொன்னது பொருத்த மானதுதான்’' என்று சொல்லிவிட்டு, ராமனுக்கு விசேஷமான அஸ்திர சஸ்திரங்களைக் கொடுத்து, அகண்ட கோதாவரிக் கரையிலுள்ள பஞ்சவடி என்ற பிரதேசத்தில் போய்த் தங்குமாறு விடை கொடுத்து அனுப்பினார்.

சித்திர ராமாயணம்

ஜடாயு தரிசனம்

கத்திய ஆசிரமத்திலிருந்து பல காதம் நடந்தார்கள், ராமன் முதலிய மூவரும்.

நடந்தனர் காவதம் பலவும்; நன்னதி
கிடந்தன நின்றன கிரிகள் கேண்மையின்
தொடர்ந்தன துவன்றின - சூழல் யாவையும்
கடந்தனர் கண்டனர் கழுகின் வேந்தையே.


கிடந்த நதிகளையும் கண்டார்கள். நின்ற நதிகளையும் கண்டார்கள்.

ஆம், பெரிய மலையருவிகளைத்தான் ‘நின்ற நதிகள்’ என்கிறான் கவிஞன், குழந்தை பார்ப்பது போல் பார்த்து. சீதைக்கு அப்படி அதிசயமாக அக்காட்சிகளைக் காட்டிக்கொண்டு போனான் ராமன் என்பது குறிப்பு.

மலைகளைப் பார்த்தார்கள். தொடர்ந்த மலைகள் - நட்புக்கொண்டு கைகோத்து நிற்பது போல் ஒன்றையொன்று தொடர்ந்துள்ள மலைகள். நெருங்கியுள்ள குன்றுகள் - ஆம், அவ்வளவு நெருக்கமான நட்புக்காதல். அத்தகைய சூழல்களோடு கூடிய கட்டங்களைக் கடந்தார்கள். இவற்றையெல்லாம் கண்டு, கடந்து சென்றதும், பார்க்கிறார்களாம் ஒரு மலையுச்சியில் அதிசய மாக ஒன்றினை!

உருக்கிய சுவணம் ஒத்(து)
    உதயத்(து) உச்சிசேர்
அருக்கன், இவ் அகலிடத்(து)
    அலங்கு திக்கெலாம்
தெரிப்புறு செறிசுடர்ச்
    சிகையினால், சிறை
விரித்திருந் தனன் என,
    விளங்கு வான்தனை


முதல் முதல் உருக்கிய பொன்போல் ஒரு தோற்றம். பிறகு ‘உதயசூரியன்தானோ?’ என்ற திகைப்பு, அப்பால் ‘இல்லை, கழுகுதான்; அந்த விரிந்த சிறகுகளே பரந்த இளங்கதிர்கள் போலத் தோன்றின!’ என்று தெளிவு, கண்டார்களாம்!

(4.4.48, 11.4.48, 25.4.48 மற்றும் 2.5.48 ஆனந்தவிகடன் இதழ்களிலிருந்து...)