Published:Updated:

யோகி ராம்சுரத்குமார் - நூற்றாண்டு சமர்ப்பணம் - 2

யோகி ராம்சுரத்குமார் - நூற்றாண்டு சமர்ப்பணம் - 2
பிரீமியம் ஸ்டோரி
யோகி ராம்சுரத்குமார் - நூற்றாண்டு சமர்ப்பணம் - 2

எழுத்துச்சித்தர் பாலகுமாரன் - படங்கள்: க.முரளி

யோகி ராம்சுரத்குமார் - நூற்றாண்டு சமர்ப்பணம் - 2

எழுத்துச்சித்தர் பாலகுமாரன் - படங்கள்: க.முரளி

Published:Updated:
யோகி ராம்சுரத்குமார் - நூற்றாண்டு சமர்ப்பணம் - 2
பிரீமியம் ஸ்டோரி
யோகி ராம்சுரத்குமார் - நூற்றாண்டு சமர்ப்பணம் - 2

றுகோண முக்கோணம். கறுப்பு வெள்ளைப் புகை. அங்கங்கே எழுத்துகள். `உய்ய்ய்... ங்ங்' என்று காதில் குத்துகின்ற சப்தம். நெஞ்சில் வலி. பெரிய சிரமம். மூச்சுவிட முடியாத வேதனை. இப்படி இருந்தால் மரணமடைந்து விடுவேன் என்கிற இம்சை.

கண்களிலிருந்து அழுகையில்லாது நீர் வந்தது. நான் பயணப்பட்டேன். பெரும் நிலத்தில் நுழைந்தேன். வேகம். சொல்ல வொண்ணா வேகம். மனித சக்திக்கு அப்பாற் பட்ட வேகம். இது வேறு ஓர் இடம். இது வேறுவித நகர்வு. இது வேறுவித சக்தி. இதற்கும் இந்தப் பூமிக்கும் சம்பந்தம் இல்லை. ஆனால், இது எல்லோருள்ளும் இருக்கிறது. எல்லோராலும் நகர முடிந்த விஷயம். எல்லோரும் அவசியம் போக வேண்டிய விஷயம். கற்க வேண்டிய வித்தை. நெற்றி நடுவே கபால உச்சி அதற்கு அப்பாலும் நான் என்கிற என் சக்தி நகர்ந்தது. எங்கும் துகள். எங்கும் துகள். எல்லா இடத்திலும் நீக்கமற நிறைந்திருக்கும் துகள். அந்தத் துகள்கள்நகர்ந்துகொண்டிருக்கின்றன. நடனம் போலும் நகர்ந்துகொண்டிருக்கின்றன.

யோகி ராம்சுரத்குமார் - நூற்றாண்டு சமர்ப்பணம் - 2

இதுதான் நடராசன். இதுதான் ஆடல் தத்துவம். உலகைச் சுற்றி உள்ள பிரபஞ்ச சக்தி இது. இந்தச் சக்தி நகர்ந்துகொண்டு இருக்கிறது. இந்தச் சக்தி நம்மோடு சம்பந்தப்பட்டது. ஆனால், நம்மைத் தொடர்புகொள்ளாது. நமக்கு நன்மையோ, தீமையோ, ஆசீர்வாதமோ தராது. அது எங்கும் நிறைந்திருக்கும். அசைந்திருக்கும். இதுவற்று நாம் இல்லை. நம் அசைவெல்லாம் இந்த அசைவினுடைய உத்வேகம்தான். நான் என்பது இந்த சக்திதான். கடவுளே... கடவுளே... கடவுளே... நான் தவித்தேன். ஆமாம். அந்த சக்தியே கடவுள். அந்த அசைவே கடவுள். காது பொத்திக்கொண்டேன். ரீங்காரம் தாங்க முடியவில்லை. தலையைப் பிடித்துக்கொண்டேன். என் வேகம் எனக்குப் பிடிபடவில்லை. உடம்பு வலித்தது. கண்கள் பிதுங்கின. வியர்வை வழிந்தது. தலை கனத்தது. உதடு கோணலாயிற்று. உடம்பு முறுக்கியது. மறுபடி வேறுவித ரீங்காரம். எங்கும் நிறை நாத பிரம்மம். நான் அழத் தொடங்கினேன். முகம் பொத்தி விக்கி விக்கி ஆனந்தமாய் அழத் தொடங்கினேன்.

யோகி ராம்சுரத்குமார் - நூற்றாண்டு சமர்ப்பணம் - 2


இது சந்தோஷத்தினால் வந்த துக்கம் . அவர் பிடியைத் தளரவிட்டார். நான் நேரே அமர்ந்தேன். அப்போது நான் நானாக இல்லை. நான் வேறு ஒரு ரூபத்தில் இருந்தேன். வேறுவித மனோநிலையில் இருந்தேன். எதிரே இருப்பவரின் உள்ளுக்குள்ளே, அவர் உயிரோ, ஆத்மாவோ... அது என்னவோ அது தெரிந்தது. வலப்பக்கம் இருப்பவர் யார் என்று தெரிந்தது. தெருவில் போகிறவர் யார் என்று தெரிந்தது. நாய் ஒன்று ஓடியது. அதனுள்ளும் அது இருந்தது. திரும்பி அவரைப் பார்த்தேன். எல்லோருள்ளும் இருப்பது அவருள் திகழ்ச்சக்கரமாக இருந்தது. நான் அவரைப் பார்த்துக் கண்களால் நன்றி சொன்னேன். அவர் பதிலுக்குச் சிரித்து முதுகில் அடித்தார். நானும் அவரும் கொஞ்சம் பேசிக்கொண்டோம். வாய் திறக்கவில்லை. மொழி இல்லை. நான் என்ன நினைக்கிறேன் என்று அவருக்குத் தெரிந்தது. அவர் என்ன பதில் சொல்கிறார் என்று எனக்குப் புரிந்தது. இப்படி பேச முடியுமோ, முடியும். இப்படி ஒரு வாழ்க்கை உண்டோ, உண்டு. இப்படி ஒரு மனித மனோநிலை இருக்குமா, இருக்கிறது. அதனால் என்ன பிரயோசனம்? மற்ற மனிதர்களுக்கு என்ன உதவி? இந்த, என்னை இழந்த மனோநிலையிலேயே நான் யோசித்தேன். மழை பெய்வதும், பூமி சுழல்வதும், உயிர்கள் பிறப்பதும் இறப்பதும் இந்த சக்தியினாலேயே. இந்த எங்கும் நிறைந்த சக்தி இவரிடத்தில் ஒன்றுகூடியிருக்கிறது. அச்சக்தியில் ஒரு துளி எனக்கும் தரப்பட்டது. இதை வளர்க்க வேண்டியது என் பொறுப்பு.

யோகி ராம்சுரத்குமார் - நூற்றாண்டு சமர்ப்பணம் - 2

வளர்த்தேனா, இப்போது எப்படி இருக்கிறேன் என்பது இப்போது பேச்சு அல்ல. இப்படிப்பட்ட ஒரு சக்தி வாய்ந்த மனிதர் நம்மிடையே இருந்தார். தன்னைப் பிச்சைக்காரன் என்று சொல்லிக்கொண்டார். கங்கை நதிக் கரையிலிருந்து கடவுள் தேடி பயணப்பட்டு, திருவண்ணாமலையைத் தன் இடமாகத் தேர்ந்தெடுத்தார். பகவான் ரமணரைச் சந்தித்து மனம் நெகிழ்ந்தார். அரவிந்தருடைய இருப்பு வட்டத்தில் தன்னை நிறுத்திக்கொண்டு பின்னடைந்தார். தன்னுடைய குருவான ஸ்ரீராமதாஸரின் கட்டளைப்படி இடையறாது இடையறாது ராமநாமம் சொல்லி ஓர்அற்புத நிலையை அடைந்தார். இடையறாது ராமநாமம் சொல்லி உயர் நிலைக்கு வந்தார். திருவண்ணாமலை ரயில் நிலையத்துக்கு அருகே இருக்கின்ற ஒரு புன்னை மரத்தடியில் அமர்ந்திருந்தவரைச் சுற்றி அன்பர்கள் வந்தார்கள். சந்நிதி தெருவில் தங்கியிருந்து, பலருடைய துக்கத்தைத் தீர்த்தார்.  

`‘நோபடி எக்ஸிஸ்ட். நத்திங் எக்ஸிஸ்ட். காட் அலோன் எக்ஸிஸ்ட்.'' - `இங்கு எதுவும் இல்லை. எவரும் இல்லை. கடவுள் மட்டுமே' என்பதே அவர் அடிக்கடி சொல்லும் வாசகம். நான் அவரைப் பற்றிச் சொல்லும்போது அவரைக் கொண்டாடும்போது நான், என் பார்வை வழியாகத்தான் கொண்டாட முடியும். ஒருவேளை மறுபிறவி என்று ஒன்று இருந்தால், இந்தப் பிச்சைக்காரன் பால்குமாரோடு இருக்க விரும்புகிறான் என்று சொல்லியிருக்கிறார். எனக்கு அர்த்தம் புரியவில்லை. அவருக்குப் பிறவி உண்டா? எனக்கு உண்டு என்று தோன்றுகிறது. அடுத்த பிறவியிலும் இவர் பலம், இவர் நிலை என்னோடு இருக்கும் என்பதாய் நான் அர்த்தம் செய்துகொண்டிருக்கிறேன். செத்து பிறந்த பிறகுதான் லட்சணம் தெரியும்.

யோகி ராம்சுரத்குமார் - நூற்றாண்டு சமர்ப்பணம் - 2

இங்கு எல்லாருடைய இயக்கத்துக்குப் பின்னாலும் ஞானிகள் இருக்கிறார்கள். உங்களை ஆடவிட்டு வேடிக்கை பார்க்கிறார்கள். எப்போது கால் இடற வேண்டுமோ, இடறுகிறார்கள். எப்போது எவரை உயர்த்த வேண்டுமோ, உயர்த்துகிறார்கள். இதை நம்புவது கடினம். வெளிப்பார்வைக்குத் தெரியாது. தேடிக்கொண்டு போனால், நீங்கள் அவரிடம்தான் முடிய வேண்டும். அவரைப் போன்ற ஞானியரிடம்தான் முடிய வேண்டும். அங்குதான் அசைவு ஆரம்பிக்கிறது என்று உங்களுக்கு அப்போதுதான் தெரியும்.

ஞானிகள் அழைத்தால்தான் அருகே போக முடியும். காரணமின்றி அவர்கள் யாரையும் அழைப்பதில்லை. `பால்குமார் ஈஸ் மை பென்' என்று சொல்லியிருக்கிறார். நான் அந்த நினைப்போடுதான் வாழ்கிறேன். பஞ்சகச்ச வேட்டியும், வெளிர் மஞ்சள் ஜிப்பாவும், பச்சைத் தலைப்பாகையும் கையில் கொட்டாங்குச்சியும், இன்னொரு கையில் கோலும் வைத்துக்கொண்டு, திருவண்ணாமலை முழுவதும் சுற்றியிருக்கிறார். பலருக்கு அடைக்கலம் தந்திருக்கிறார். 

மகா பெரியவாளின் சந்நிதியில் அவர் தன்னை இழந்திருக்கிறார். நான் மகா பெரியவாளின் முன் நின்றுகொண்டிருந்தேன். பக்கத்தில் இருந்த சந்திரமௌலி, ‘பால்குமார் எழுத்தாளர். திருவண்ணாமலையில விசிறி சாமியாரை பார்த்துட்டு வரார்.  (அவருக்கு அப்படி ஒரு பெயர் உண்டு) நான் கை கூப்பினேன். மகா பெரிசு பெரிதாய் சிரித்தது. கழுத்து தடவியது. அவர் கழுத்திலிருந்து ஏலக்காய் மாலையை எடுத்து சந்திரமௌலி என் கழுத்தில் போட்டார். மனம் கொண்ட குருவின் அன்பால், குலகுரு கொடுத்த ஆசீர்வாதம். ‘`பால்குமாரிடம், மகாபாரதம், பாகவதம், ராமாயணம் எழுதணும்னு சொல்லியிருக்காராம். இவர் எழுத ஆரம்பிக்கணு மாம். வேண்டிக்கறா.’’ மறுபடியும் மகா பெரியவா; கழுத்தைத் தடவினார்.  இன்னொரு ஏலக்காய் மாலையைக் கொண்டு வந்து சந்திரமௌலி என் கழுத்தில் போட்டார்.

யோகி ராம்சுரத்குமார் - நூற்றாண்டு சமர்ப்பணம் - 2

அவர் பிறந்தது முதல் கடவுள் தேடி அலைந்தது வரை நீண்ட கதைகள் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால், நான் அவரை உணர்ந்தது, என் தலையின் உச்சிக்கு அப்பால் என்னைக்கொண்டு போனது. இதைவிட அற்புதங்கள் எவருக்கேனும் நிகழ்ந்திருக்கக்கூடும். அவர்கள்தான் பேச வேண்டும். ஞானி, மகான், குரு என்று ஸ்தூல ரூபத்தில் இருந்தவர், இப்போது சூட்சம ரூபத்தில் இருக்கிறார். திருவண்ணாமலை ஆசிரமத்தில் அவர் சிலையை உற்றுப்பார்க்கும்போது உங்களுக்கு ஏதேனும் செய்தி கிடைக்கக்கூடும். அதற்குப் பிறகு உங்களுக்குள் ஏற்படும் அடர்த்தியான நினைப்புதான் அவரிடம் உங்களைக் கொண்டுபோய்ச் சேர்க்கும். பிறகு நீங்கள் வேறு விதம்.

இவ்விதம் மற்றவரைப் பக்குவப்படுத்துவதுதான் குருவின் வேலை. அப்படி செய்பவருக்கு பெயர் தான் குரு. யோகி ராம்சுரத்குமாரின் படத்தை உள்ளுக்குள் தேக்கிக்கொள்ளுங்கள். அவர் பெயரை மூன்று முறை, ஏன்... பலமுறை சொல்லுங்கள். உங்களுக்கு என்ன வேண்டுமென்று கேளுங்கள். கேட்டது நடந்த பிறகு நிகழ்ந்ததை ஊருக்குச் சொல்லுங்கள். குரு தெய்வ ரூபம். அந்த இருப்பை மற்றவருக்குச் சொல்லுதலே வாழ்க்கை.

யோகி ராம்சுரத்குமார் யோகி ராம்சுரத்குமார் யோகி ராம்சுரத்குமார் ஜெய குருராயா!