மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நாரதர் உலா... - பெண் பக்தர்களுக்குப் பிரச்னையா?

நாரதர் உலா...  - பெண் பக்தர்களுக்குப் பிரச்னையா?
பிரீமியம் ஸ்டோரி
News
நாரதர் உலா... - பெண் பக்தர்களுக்குப் பிரச்னையா?

நாரதர் உலா... - பெண் பக்தர்களுக்குப் பிரச்னையா?

லுவலகத்தில் பக்கத்து அறையில் அமர்ந்திருந்தார் நாரதர். அச்சுக்கு அனுப்ப வேண்டிய நமது  இதழ் வேலைகள் சிறிது பாக்கியிருப்பதை அறிந்தவர், அவை முடியும் வரையிலும் காத்திருப்பதாகச்  சொல்லிவிட்டு அந்த அறையில் நுழைந்துகொண்டார்.

அங்கிருந்த டி.வி-யில்... ‘கல்லிலே கலைவண்ணம் கண்டான்...’, ‘ஆறு மனமே ஆறு...’ எனப் பாடல்கள் மாறி மாறி ஒலிக்க, நாரதர் சேனல்களை மாற்றிக் கொண்டிருப்பதையும், குறிப்பாக ஏதோ ஒரு சேனலைத் தேடுவதையும் நம்மால் அனுமானிக்க முடிந்தது. சட்டென்று செய்தி வாசிக்கும் சப்தம் கேட்கவும், நாம் பணியை முடிக்கவும் சரியாக இருந்தது. மெள்ளச் சென்று கதவைத் திறந்தால் செய்தி சேனல் ஒன்றில் மூழ்கியிருந்தார் நாரதர். சிலை கடத்தல் தொடர்பான ஃப்ளாஷ் நியூஸ் ஓடிக்கொண்டிருந்தது. நம்மைக் கவனித்ததும் டி.வி-யை மியூட் செய்துவிட்டுப் பேச ஆரம்பித்தார்.

‘‘தொன்மையான கோயில்களில் உரிய பாதுகாப்பு இல்லை என்று சிலை திருட்டு தடுப்புப் பிரிவு ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் கூறியுள்ளதைக் கவனித்தீரா?’’ என்று நாரதர் கேட்க, தலையை ஆட்டி ஆமோதித்தோம் நாம். நாரதர் தொடர்ந்தார்...

நாரதர் உலா...  - பெண் பக்தர்களுக்குப் பிரச்னையா?

‘‘சிலைகள் கொள்ளையடிக்கப்படுவதும் கடத்தப்படுவதும் தொடர்கதையாகிக் கொண்டிருப்பதுதான் கவலையளிக்கிறது. நாகை மாவட்டத்தில் நாராயணபுரம், கல்யாண சோழபுரம் உள்ளிட்ட சில ஊர்களில் உள்ள கோயில்களில் பாதுகாப்பு இல்லாத காரணத்தால், அந்தக் கோயில்களின் சிலைகள், கடலங்குடி ரத்தின புரீஸ்வரர் கோயிலில் வைக்கப்பட்டிருந்தனவாம். அவற்றோடு சேர்த்து ரத்தின புரீஸ்வரர் கோயிலிலிருந்த நடராஜர் சிலையும் கொள்ளை போனதாம். அந்தச் சிலைகள் கொள்ளையடிக்கப்பட்டு ஐந்தாண்டுகள் கழித்தும் இதுவரை அவற்றைக் கண்டறிய முடியவில்லையாம்.

இதுபோன்ற விஷயங்களுக்குத் தீர்வுகாணும்விதமாகவே சிலை கடத்தல் தடுப்புப் பிரிவின் நடவடிக்கைகள் தொடர்கின்றன என்றே சொல்லலாம். சில நாள்களுக்குமுன், நாகை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த கடலங்குடி, நாராயணமங்கலம் உள்ளிட்ட பகுதிகளை ஆய்வுசெய்த பொன். மாணிக்கவேல், பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கோயில்கள் பராமரிப்பு இல்லாமல் இருப்பது குறித்து மிகவும் ஆதங்கத்தோடு பேசினார். `ஒரு கோயில் வளாகத்தில் கடந்த 10 வருடங்களாக ஓர் ஆலமரத்தையே வளர விட்டிருக்கிறார்கள். அந்த அளவுக்குத்தான் பராமரிப்புப் பணிகள் இருக்கின்றன' என்றும் குறிப்பிட்டார்.’’

இடையில் குறுக்கிட்டு, ‘‘அவருக்கு இருக்கும் அக்கறையும் ஆதங்கமும் மற்றவர்களுக்கும் இருந்தால் நன்றாக இருக்கும்’’ என்று நாம் சொல்ல, அதை ஆமோதித்தவராகத் தொடர்ந்தார் நாரதர்.

‘‘இன்னொரு விஷயத்தையும் பகிர்ந்துகொண்டார் அவர். அதாவது, புகார் கொடுக்க வரும் மக்களிடம்,  ‘சிதிலமடைந்த சிலைகளும்கூட கோடிக்கணக்கில் விலைபோகும். எனவே, அந்தச் சிலைகளையும் கண்ணும் கருத்துமாகப் பாதுகாக்க வேண்டும்’ என அறிவுறுத்துகிறாராம்.’’

‘‘நல்ல விஷயம்தான். தொடரட் டும் பணி’’ என்று நாம் கூற, அதை ஆமோதித்த நாரதர், அவராகவே வேறு விஷயத்துக்குத் தாவினார்.

நாரதர் உலா...  - பெண் பக்தர்களுக்குப் பிரச்னையா?


‘‘ `சிறப்புக் கட்டணத்தில் சென்றாலும், கடவுளை வழிபடு வதற்கான தூரம், அனைவருக்கும் சமமாகவே இருக்க வேண்டும்’ என, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதைப் பார்த்தீரா..?’’ என்றவர் அதுபற்றிய விவரத்தைப் பகிர்ந்துகொண்டார்.

‘‘தனியார் அறக்கட்டளையின் ஒன்றின் நிர்வாக அறங்காவலர், அரவிந்த லோச்சனன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

‘காஞ்சிபுரத்தில் உள்ள ஏகாம்பரநாதர் கோயில், உப்பிலியப்பன் கோயில் மற்றும் வில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில்களுக்குச் சென்றிருந்த நிலையில், இலவச தரிசன வரிசையில் சென்றேன். இலவசமோ, கட்டணமோ எந்த வரிசையாக இருந்தாலும் நிறைவில் சுவாமியைத் தரிசனம் செய்யும் தூரம் அனைவருக்கும் சமம் என்றே கருதியிருந்தேன்.

ஆனால், அவ்வாறு இல்லை. சிறப்புக் கட்ட ணத்தில் செல்பவர்களுக்கு தனி சலுகைகள் வழங்கப்படுகின்றன. பணத்தின் அடிப் படையில் பக்தர்களிடம் பாகுபாடு காட்டப் படுகிறது. இது, அடிப்படை உரிமையை மீறுவதாக உள்ளது. பக்தர்கள் அனைவரையும், சமமாக பாவிக்க வேண்டும்’
இப்படியான சாராம்சத்துடன் கூடிய அவர் அளித்த மனு மீதான விசாரணையின் நிறைவில் தான், மேற்சொன்னபடி தீர்ப்பு தந்துள்ளது நீதிமன்றம். இனியாவது கடவுளின் சந்நிதியில் பாகுபாடில்லாத தரிசனம் எல்லோருக்கும் கிடைக்கட்டும்’’ என்ற நாரதர், அடுத்து நாம் என்ன கேட்கப்போகிறோம் என்பதை அவராகவே யூகித்துக்கொண்டு, புதுச்சேரி அருகிலுள்ள கோயில் குறித்த பிரச்னைகளைக் கொட்டத் தொடங்கினார்.

‘‘காரைக்கால் மாவட்டத்தில் பிரசித்திப் பெற்றது அம்பகரத்தூர் பத்ரகாளியம்மன் திருக் கோயில். இவ்வூருக்கு அருகிலுள்ள கோயில் திருமாளம் என்ற ஊரிலிருந்து புறப்பட்டு வந்த அம்மன், பத்ரகாளியாக உருவெடுத்து, ‘அம்பர்’ என்ற அரக்கனை சம்ஹாரம் செய்தாளாம். அதனால்தான் ‘அம்பகரத்தூர்’ என்று பெயர் பெற்றதாம் இந்த ஊர்.

இங்கு அருள்பாலிக்கும் பத்ரகாளியம்மனைக் கால்நடைகளின் காவல் தெய்வமாகப் போற்று கிறார்கள் பக்தர்கள்.

அதேபோல், சுற்று வட்டாரத்தில் எவரொரு வர் புதிய வாகனம் வாங்கினாலும், இங்கு வந்து வழிபட்டுச்செல்வது வழக்கம். இவ்வளவு சிறப்புமிக்க இந்தக் கோயிலில் ‘படுக்கைமுறை பிரார்த்தனை’ விசேஷ வழிபாடாகி வருகிறது. அது தொடர்பாகவே சில பிரச்னைகள்!’’

‘‘படுக்கைமுறை பிரார்த்தனையா?!’’ ஆச்சர்யத்தோடு நாம் கேட்க, அந்தப் பிரார்த்தனையைப் பற்றியும், அதை யொட்டிய பிரச்னைகளையும் விரிவாக விளக்கினார் நாரதர்.

நாம் அவர் பேச்சுக்கிடையில் எவ்வித குறுக்கீடும் செய்யாமல், கவனமாகக் குறிப்பெடுக்க ஆரம்பித்தோம்.

‘‘கடந்த பத்து வருடங்களாகத் தொடர்கிறது இந்தப் பிரார்த்தனை. இதை மேற்கொள்ளும் பக்தர்கள், செவ்வாய்க்கிழமை இரவு வேளையில் கோயில் வளாகத்திலேயே தங்கி அங்கேயே படுத்துறங்குவார்கள்.

அவரவர் வேண்டுதலுக்கு ஏற்ப ஒன்பது அல்லது 18 வாரங்கள் எனத் தொடரும் படுக்கைமுறை பிரார்த்தனை. இதன்பொருட்டு கோயிலில் கூடும் ஆயிரக்கணக்கான பெண் பக்தர்களோடு சில சமூக விரோதிகளும் கலந்துவிடுகிறார்களாம். அவர்களால் ஏற்படும் பாலியல் தொந்தரவுகளால் மிகவும் அவதிக் குள்ளாகிறார்களாம் பெண் பக்தர்கள்.''

‘‘அடப்பாவமே... இதுபற்றி கோயில் நிர்வாகத்திடம் பேசினீரா நாரதரே?’’

‘‘பேசினோம். ‘பக்தர்களின் நம்பிக்கையால் ஏற்பட்ட பிரார்த்தனை இது. ஆரம்ப காலத்தில் ஓரிருவர்தான் வந்து படுத்தார்கள். நாளடைவில் கூட்டம் அதிகரித்து விட்டது. கோயில் வளாகத்தில் எந்தத் தவறும் நடக்க வாய்ப்பில்லை.

கோயில் ஊழியர்களும் காவல் துறையினரும் இரவு முழுவதும் பாதுகாப்புப் பணியில் இருக்கிறார்கள். மேலும், கோயிலைச் சுற்றி, கண்காணிப்பு கேமராக்களும் இருக்கின்றன. அதேநேரம், கோயிலுக்கு வெளியே தவறுகள் நடக்கின்றனவா என்று எங்களுக்குத் தெரிய வில்லை.

அதேபோல், திடீரென படுக்கைமுறையை நிறுத்துவதும் சாத்தியமில்லை. நீங்கள் சொல்வதுபோல் தவறுகள் நடக்கின்றனவா என்பதை விசாரிப்பதோடு, தவறுகளைத் தடுக்கவும் ஒழுங்குப்படுத்தவும் முயற்சி செய்கிறோம்’ என்று சொல்கிறார்கள் கோயில் தரப்பில்.’’

நாரதர் பேசி முடிக்கவும், அன்றைய ஃபாரம் நமது அப்ரூவலுக்குத் தயாராகவும் சரியாக இருந்தது. ‘‘சரி, நீர் உமது பணியைக் கவனியும்’’ என்றபடியே மீண்டும் செய்தி சேனல்களில் மூழ்கிப்போனார் நாரதர்.

படங்கள்: க.சதீஷ்குமார்