Published:Updated:

கனம் கூடும்... திருமுகம் வியர்க்கும்! - நாச்சியார்கோவில் கருடசேவை அற்புதம்

கனம் கூடும்... திருமுகம் வியர்க்கும்! - நாச்சியார்கோவில் கருடசேவை அற்புதம்
பிரீமியம் ஸ்டோரி
கனம் கூடும்... திருமுகம் வியர்க்கும்! - நாச்சியார்கோவில் கருடசேவை அற்புதம்

எம்.ஏ.வி.மதுசூதனன் - படங்கள்: கே.குணசீலன்

கனம் கூடும்... திருமுகம் வியர்க்கும்! - நாச்சியார்கோவில் கருடசேவை அற்புதம்

எம்.ஏ.வி.மதுசூதனன் - படங்கள்: கே.குணசீலன்

Published:Updated:
கனம் கூடும்... திருமுகம் வியர்க்கும்! - நாச்சியார்கோவில் கருடசேவை அற்புதம்
பிரீமியம் ஸ்டோரி
கனம் கூடும்... திருமுகம் வியர்க்கும்! - நாச்சியார்கோவில் கருடசேவை அற்புதம்

கும்பகோணத்துக்கு அருகில் உள்ள திருநறையூர் என்கிற அழகிய வைணவத் திருத்தலத்துக்கு ஒரு தனிச்சிறப்பு. ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே பெண்ணுக்கு முன்னுரிமை வழங்கப்பட்ட ஊர் அது. ஆம்! திருநறையூர்க் கோயிலில் தாயாருக்குதான் முதலில் அபிஷேகம், நைவேத்தியம், புறப்பாடு எல்லாம். பிறகுதான் பெருமாளுக்கே! அந்த ஊரின் பெயரே “நாச்சியார்கோவில்” என்றுதான் இன்றும் வழங்கப்பெறுகிறது. சரி, அவ்வளவுதானா சிறப்பு என்றால், நம்மை வியக்கவைக்கும் பல சிறப்பு அம்சங்கள் இன்னும் பல நிறைந்த தலம் என்கிறது புராணங்கள். சிறிது பார்ப்போம்!

பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னர், இவ்வூரில் மேதாவி என்ற ஒரு மகரிஷி வாழ்ந்துவந்தார். அவர் மகாலட்சுமி தனக்கு மகளாகப் பிறக்க வேண்டுமென விரும்பினார். அதற்காக மகாவிஷ்ணுவிடம் பிரார்த்தனைகள் செய்தார். அவருடைய பிரார்த்தனைக்கு இரங்கி, மஹாலக்ஷ்மியே அவருக்குக் குழந்தையாக இருக்க விரும்பினார். அதன்படியே அவர் ஒரு நாள், “வஞ்சுள  மரம்” என்றழைக்கப்பட்ட மரத்தின் கீழ் அழகான ஒரு பெண் குழந்தையைக் கண்டார். அதன் காரணமாக அக்குழந்தைக்கு “வஞ்சுளவல்லி” என்று பெயரிட்டார்.

கனம் கூடும்... திருமுகம் வியர்க்கும்! - நாச்சியார்கோவில் கருடசேவை அற்புதம்

அவரின் மாணவர்களுக்கு ஞானத்தைக் கற்பிப்பதன் மூலம் அமைதியான வாழ்க்கையை அவர் வழிநடத்திவந்தார். படிப்படியாக வஞ்சுளவல்லி வளர்ந்து திருமணப்  பருவத்திற்கு வந்தாள். அப்போது ஸ்ரீமஹா விஷ்ணு வஞ்சுளவல்லியைக் கைத்தலம் பற்றுவதற்காக அவ்வூருக்கு வந்தார். ஆனால், ஒருவராக வராமல், வாசுதேவன், சங்கர்ஷணன், ப்ரத்யும்னன், அநிருத்தன், புருஷோத்தமன் (இவை  வியூகம். அதாவது, திருப்பாற்கடலில் எழுந்தருளியுள்ள மூர்த்திகளின் பெயர்கள்) என்கிற ஐந்து உருவங்களில் அதிதிகளாக வந்தார். அவ்வாறு வந்த அதிதிகளை வரவேற்று விருந்தளித்தார் மேதாவி மகரிஷி. சாப்பிட்டவர்கள் கை கழுவுவதற்குத்  தண்ணீர் ஊற்றச் சென்றார் வஞ்சுளவல்லி. எல்லோரும் கையைக் கழுவிக்கொண்டு சென்றுவிட,  வாசுதேவன் மட்டும் வஞ்சுளவல்லியின் கையைப் பற்றினார். ஓர் அதிதியாக வந்தவர் இப்படியொரு அடாத செயல் செய்யவே,  வஞ்சுளவல்லி கூக்குரலிட்டார். மேதாவி மகரிஷி  ஓடி வந்து பார்த்தபோது ஐவரையும் காணவில்லை. அங்கே மஹாவிஷ்ணு மட்டும் வஞ்சுளவல்லியின் கையைப் பிடித்த கோலத்தில்  சேவை சாதித்துக்கொண்டு நின்றார். தம்முன் மஹாவிஷ்ணுவே நிற்பதைக் கண்ட மேதாவி தன்னுடைய பாக்கியத்தை எண்ணி ஆனந்தம் அடைந்தார். அப்போது பகவான் மேதாவியைப்  பார்த்து அவர் பெண்ணைத் தமக்குக் கன்னிகாதானம் செய்துகொடுக்க வேண்டினார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கனம் கூடும்... திருமுகம் வியர்க்கும்! - நாச்சியார்கோவில் கருடசேவை அற்புதம்


மேதாவியும் இசைந்து சில நிபந்தனைகளை விதித்தார். தமக்கும் அவ்வூர் மக்களுக்கும் முக்தி அளிக்க வேண்டும் என்றும், திருமணம் ஆனாலும் தாம் அன்போடு செல்லமாக வளர்த்த பெண்ணுக்கே எல்லா முன்னுரிமைகளும் கொடுக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். பெருமாளும் இசைந்து வஞ்சுளவல்லியை மணம் புணர்ந்தார்.

அந்த மணக்கோலத்திலேயே அன்றுமுதல் நாம் எல்லோரும் உய்ய அவ்வூரிலேயே கோயில் கொண்டு எழுந்து அருளினார். கர்ப்ப கிரகத்தில் தாயார் ஓர் அடி முன்னால் நிற்க, பெருமாள் மற்ற வியூக மூர்த்திகளுடன் சேவைசாதிக் கின்றார். பெருமாளுக்கு நம்பி என்றும் ஸ்ரீநிவாசன் என்றும் வேறு சில பெயர்களும் வழங்கப்பட்டுவருகின்றன. இதுவரை தல வரலாற்றைச் சிறிது அனுபவித்தோம். இத்தலத்தின் மேலும் ஒரு முக்கியமான சிறப்பு என்னவென்றால், அவர்தான் கல் கருடன்!

பொதுவாகப் பெருமாள் கோயிலில் கருட சேவை எனப்படும் நிகழ்ச்சி மிகவும் விசேஷமாக நடைபெறும். அதற்காக மரத்தின் மேல் வெள்ளி அல்லது தங்கம் பூசப்பட்ட ஒரு கருட வாகனத்தை வைத்திருப்பார்கள். ஆனால், இவ்வூரில் மட்டும் கல்லால் ஆன கருட வாகனம் இருப்பது ஒரு தனிச் சிறப்பு. மேலும் எல்லாக் கோயில்களிலும் கருட சேவை முடிந்தவுடன்  கருட வாகனத்தை வாகன அறையில் வைத்துப் பூட்டிவிடுவார்கள். ஆனால், இத்தலத்தில் மட்டும் கருடனை அறையில் வைத்துப் பூட்டாமல் பெருமாள் சந்நிதி அருகிலேயே ஒரு தனிச் சந்நிதியில் எழுந்தருளச் செய்து, பெருமாளுக்கு நடக்கும் பூஜைகள் போல் தினமும் பூஜைகள், நைவேத்தியங்கள் செய்யப்படுகின்றன.

வ்வூரின் அருகில் இருந்த ஒரு கிராமத்தில் ஒரு சிற்பி கல்லினால் கருடனைச் செதுக்கி, சிறகுகளை அமைத்து பிராணப் பிரதிஷ்டை செய்தபோது அந்தக் கல்கருடன் திடீரென்று பறக்க ஆரம்பித்துவிட்டதாம். அதைக்கண்ட சிற்பி ஒரு கல்லை வீச, அது கருடனின் அலகைத் தாக்க, கருடன் இந்த இடத்தில் விழுந்ததாம். பெருமாள் கருடனை இங்கேயே இருக்க வரம் அளித்துத் தன் சந்நிதிக்கு அருகிலேயே ஓர் இடமும் கொடுத்தாராம். இந்த கருடனை வியாழக்கிழமைகளில் வழிபடுவது விசேஷம் என்று ஊர் மக்கள் கூறுகின்றனர்.

கனம் கூடும்... திருமுகம் வியர்க்கும்! - நாச்சியார்கோவில் கருடசேவை அற்புதம்

ருடனுக்கு தினமும் அமிர்தக் கலசம் எனும் ஒருவகை மோதகம் நைவேத்தியமாகப் படைக்கப்படுகிறது. (இந்த மோதகத்தைச் சாப்பிட்டால் குழந்தை வரம் கிட்டும் என்றும் ஒரு நம்பிக்கை உண்டு.)

மார்கழி பிரம்ம உற்சவத்தின்  நான்காவது நாளன்று மாலை கல்கருட சேவை உற்சவம் நடைபெறும். அன்று  வஞ்சுளவல்லித்தாயார் அழகிய அன்னவாகனத்தின் மீது முதலில் எழுந்தருள, அவருக்குப் பின்னால் ஸ்ரீநிவாசன் கல் கருடன்மீது அமர்ந்து  நாச்சியார் கோயில் வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பர்.

ந்த கருட சேவையின்போது ஓர் அற்புதம் நடைபெறுகின்றது. அதாவது, கருடனின் கனம் (எடை) அதிகமாகிக்கொண்டே போவதுதான். சந்நிதியிலிருந்து வெளியே வரும்போது கருடனை நான்கு பேரால் எழுந்தருளப் பண்ணமுடியும். அதுவே அடுத்த பிராகாரத்துக்கு வரும்போது எட்டுப் பேர் வேண்டும், அடுத்தடுத்த பிராகாரங்களில் வரும்போது முறையே  பதினாறு பேர், முப்பத்துரெண்டு பேர் வேண்டும். வெளியே வரும்போது அறுபத்து நான்கு பேர் வேண்டும்.  அதேபோல் பெருமாள் திரும்பி வரும்போது அதே விகிதத்தில் எடை குறைந்துகொண்டே வருமாம்!

பெருமாள் மேதாவிக்குக் கொடுத்த வரம், `தாயாருக்கே எப்போதும் முதலிடம்’ என்று.  தாயார் அன்ன வாகனத்தில் எழுந்தருளுகிறாள். அன்னமோ நளினமான பறவை. பெருமாள் எழுந்தருளும் கருடனோ பலம் மிகுந்தது. பெருமாள் கொடுத்த வாக்குப்படி கருடன் அன்னத்தின் பின்தானே செல்லவேண்டும்? எனவே கருடனின் எடை கூடிக்கொண்டே செல்கின்றது. எப்போதும் தாயாருக்கே  முதலிடம் என்று பெருமாள் கொடுத்த வாக்கை கருடன் இந்நாளில் காப்பாற்றுகிறார்.

மேலும், பெருமாளைத்  தாங்கிக் களித்து உலா வருவதால் கல்கருடன் முகத்தில் வியர்வை வரும் அதிசயத்தையும் நாம் காணலாம். எம்பெருமானுக்கு தாசனாகவும், சகாவாகவும், வாகனமாகவும், ஆசனமாகவும், த்வஜமாகவும் (கொடி), விதானமாகவும் இருந்து பலவாறாகத் தொண்டு செய்யும் வேதமே வடிவெடுத்த கருடனுக்குப் பெருமாளைப் பல மணிக்காலம் சுமந்து அனுபவித்துத் தோளில் எழுந்தருளச் செய்த களிப்பில் முத்தான வியர்வைத்துளிகள் வராதா என்ன?

திருநறையூர் நம்பியின் கருட சேவையைத் திருமங்கை ஆழ்வார் அற்புதமாகப் பாடி அனுபவிக்கிறார்.

“தூவாய புள்ளுர்ந்து வந்து துறைவேழம் மூவாமை நல்கிமுதலை துணித்தானை தேவாதிதேவனைச் செங்கமலக் கண்ணானை  நாவாயுளானை நறையூரில் கண்டேனே.’’ இப்பாடலில் பரிசுத்தமான வாயையுடைய கருடனை வாகனமாகக் கொண்டு வந்து  கஜேந்திரன் எனும் யானையின்  துயர் தீர அருள்புரிந்து முதலையை ஒழித்தவனும்,  செந்தாமரைப் பூப்போன்ற திருக்கண்களை உடையவனுமான எம்பெருமானைத் திருநறையூரில் கண்டேன் என்கிறார்.  ஆழ்வாரின் வழியில் நாமும் திருநறையூர் கல்கருட சேவையை தரிசிப்போம்; திருநறையூர் நம்பியின் திருவருளாலும், நாச்சியாரின் அனுக்கிரகத்தாலும் நாம் வாழ்வில் நன்மைகளே நிறைந்திட வரம் வாங்கி வருவோம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism