மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சிவமகுடம் - பாகம் 2 - 2

சிவமகுடம் - பாகம் 2 - 2
பிரீமியம் ஸ்டோரி
News
சிவமகுடம் - பாகம் 2 - 2

ஆலவாய் ஆதிரையான் - ஓவியங்கள்: ஸ்யாம்

தந்தப்பேழையும் குகை ரகசியமும்!

அந்த மலையடிவாரத்துக் கிராமம், திடுமென ஒலித்த விஜய பேரிகைகளின் முழக்கத்தால் மலர்ச்சி பெற்றது. இரண்டொரு நாழிகைகளில் அந்தி மயங்கிவிடும் என்பதால், தீபங்கள் ஏற்றுவதற்கு ஏதுவாக விளக்குமாடத்தை ஆயத்தப்படுத்திக்கொண்டிருந்த கணக்காயரின் மனைவி, பேரிகையொலி கேட்டதோ இல்லையோ, தனது பணியை அப்படியே விட்டுவிட்டு வாயிலுக்கு விரைந்தாள்.

முற்றத்தில் பாடப்பயிற்சியில் ஈடுபட்டிருந்த கணக்காயரின் சீடப் பிள்ளைகளும் இருந்த இடத்திலிருந்து துள்ளியெழுந்து அவளைப் பின்தொடர்ந்து ஓடினார்கள். அனைத்தையும் கவனித்துக்கொண்டிருந்த கணக்காயருக்கு அவர்களைக் கடிந்து கொள்ளத் தோணவில்லை. ஏனெனில், அடுத்து அவரும் அதே காரியத்தையே செய்யவிருந்தார். ஆம்! ஒரு புன்முறுவலோடு இருக்கையிலிருந்து எழுந்து, இடை வஸ்திரத்தைச் சற்று தளர்த்தி மீண்டும் இறுக்கிக் கட்டிக்கொண்டவர், தானும் வாயிலுக்கு விரைந்தார். அவரின் திருமுகத்திலும் அப்படியொரு மலர்ச்சி!

சிவமகுடம் - பாகம் 2 - 2

கணக்காயர் வெளியே வருவதற்குள், ஏறக்குறைய அந்த வீதிவாசிகள் அனைவருமே அவர் இல்லத்தின் முன் குழுமிவிட்டிருந்தார்கள். அடுத்தடுத்த வீதிகளிலிருந்தும் மக்கள் வந்துகொண்டிருந்ததையும் கவனித்தார். மட்டுமன்றி, இன்னும் சில கணப்பொழுதில் ஒட்டுமொத்த கிராமமும் அங்கே கூடிவிடும் என்பதும் அவருக்குத் தெரியும்.

ஆம்! எவரது வருகையின் பொருட்டு பேரிகைகள் முழங்கினவோ, ‘அவர்’ மீது அந்த மக்களுக்கு அப்படியொரு பிடிப்பு - பற்றுதல். அவருக்காக உயிரையே தியாகம் செய்ய சித்தமாக இருக்கும் கிராமம் அது.

சரி! வருவது `அவர்’தான் என்பது இந்த மக்களுக்கு எப்படித் தெரியும்? வேறு நபராகவும் இருக்கலாம் அல்லவா? நிச்சயமாக இருக்காது! ஏனெனில், வேறொருவரின் வருகையாக இருந்திருந்தால், பேரிகைகள் இப்படி முழங்கியிருக்காது. இந்த முழக்கம் கிராமத்தவருக்கு மிகப் பரிச்சயமானது; பிடித்தமானது. ஏன்... விசேஷமானதும்கூட! 

`தொம் தொம்...’ `தொம் தொம் தொம்...’ என்று சீரான இடைவெளியில் ஏற்றமும் இறக்கமுமாக ஒருவிதத் தாளகதியில் ஒலிக்கும் இந்த முழக்கம், ஐந்தெழுத்தை உச்சரிப்பதாகத் தோன்றும்; செவிமடுப்பவரின் நாடி நரம்புகளை முறுக்கேற்றும். ஒருகணம் கண்ணைமூடி அந்த ஓசையை உள்வாங் கினால், சிவதாண்டவத்தையே மனக்கண்ணில் காட்டிவிடும்.

இப்படியான அந்த அற்புத முழக்கம் `அவரின்’ விஜயத்துக்காக மட்டுமே என்பது அந்தக் கிராமத்தவருக்கு நன்கு தெரியும் ஆதலால், குதூகலம் பொங்க ஒன்றுகூடிக் காத்திருந்தார்கள், அவர் வருகையை எதிர்நோக்கி. அவர்களுக்கு மத்தியில் - கூட்டத்தோடு கூட்டமாக, அந்தக் கிராமத்த வருக்கு அதுவரையிலும் பரிச்சயம் இல்லாத அந்த இளைஞனும் நின்றிருந்தான், முகத்தில் ஆர்வம் கொப்பளிக்க!

ஆனால், அவன் நமக்குப் பரிச்சயமானவன் தான். ஆம்! ஆலவாய் நகரின் அரண்மனை வெளிச் சதுக்கத்தில் - விழா ஆரவாரத்தில்... தனது இடைக்கச்சையில் பொதிந்து பத்திரப்படுத்திவைத்திருந்த மிக முக்கியமான வஸ்துவைப் பறிகொடுத்த அதே வீர இளைஞன்தான் அவர்களுக்கு மத்தியில் நின்றிருந்தான்.

அவர்களுக்குப் பரிச்சயமான பெரிகை முழக்கம், அவனுக்குப் பரிச்சயமில்லாதது தான் என்றாலும், அந்தப் பஞ்சாட்சர தாள லயம் அவனுக்குப் பெரும் வியப்பை அளித்திருந்தது. ஆகவே, வருவது யாராக இருக்கும் என்பதை அறிந்துகொள்வதில் ஆர்வமும் அதிகரித்தது அவனுக்குள். அதேநேரம், ‘ஒருவேளை, தான் எதிர்பார்க் கும் நபர் வந்துசேர்ந்தால் தனது வேலை சுலபமாகிவிடுமே’ என்ற எண்ணமும் அவன் மனதில் எழாமலில்லை.

அடுத்த சில கணங்களில்... அவன் எண்ணம் பொய்க்காத வகையில்,  தனது பரிவாரத்துடன் கிராமத்துக்குள் நுழைந்தார், பாண்டிய தேசத்தின் பிரதம அமைச்சர் குலச்சிறையார்!

எல்லை வரையிலும் வெகு வேகமாக வந்த அவரின் புரவி, கிராமத்துக்குள் நுழைந்ததும் வேகம் குறைத்துத் தளர்நடை போட்டு வந்தது. அதன்மீது கனகம்பீரமாக ஆரோகணித்திருந்தார் பாண்டிய அமைச்சர்.

உறையூர்ப் போருக்குமுன் சோழ தேசத் தில் உலாவிய தருணங்களில் பலமுறை அவரை தரிசித்திருக்கிறான் இளைஞன். ஆனால், இப்போது அவரின் திருவுருவம் முற்றிலும் வேறுபட்ட தோற்றத்தைக் காட்டியது அவன் கண்களுக்கு.

சிவமகுடம் - பாகம் 2 - 2

ஆடை அலங்காரத்தை,  ஆடம்பரத்தை அளவிடவில்லை அவன் கண்கள்; குலச்சிறையாரின் உடல்மொழியையும், அணுகுமுறையையுமே எடைபோட்டன. அவ்வகையில், அங்கே எளிமையைக் காட்டியவர், இங்கே தனது கம்பீரத்தைக் காட்டினார். கிராமத்தவரின் வரவேற்பு கோஷங்களும்கூட அவரைச் சலனப் படுத்தியதாகத் தெரியவில்லை. வாய்மொழி உத்தரவு எதுவும் தேவைப்படாமல் அவரின் முகக்குறிப்பையே ஆணையாக ஏற்றுச் செயல்படுத்தினார்கள் சேவகர்கள். அவரின் முகம் வழக்கத்துக்கு மாறாக இறுகிக்கிடந்தது என்றாலும், மக்கள் ஆர்வத்தோடு அணுகி வந்தபோது சற்று மலரவே செய்தது.

அனைத்தையும் வியப்பொடு கவனித்துக்கொண்டி ருந்தான் இளைஞன். அவனைப் பொறுத்தவரையிலும் தந்தையின் நண்பராக, தந்தையின் இடத்தில் அவரைப் பார்த்துப் பழகியிருந்ததால், அங்கு நடப்பவையும் அவரின் அணுகுமுறையும் விநோதமாகப் பட்டது. அந்தக் கணத்தில், தான் வந்த காரியத்தையும் மறந்து தனக்குள் மெள்ள சிரிக்கவும் செய்தான்.

அதற்குள் குலச்சிறையாரின் புரவியும் பரிவாரமும் கணக்காயரின்  இல்லத்தை வந்தடைந்தன. சிரம்தாழ்த்திப் பணிந்தார் கணக்காயர். அவரின் வணக்கத்தைத் தலையசைத்து ஏற்றுக்கொண்ட குலச்சிறையார், கண்களால் வேறு எவரையோ தேடினார். அதைப் புரிந்துகொண்டதுபோல், அவசர அவசரமாகக் கூட்டத்தை விலக்கிக்கொண்டு வெளிப்பட்டது ஓர் உருவம்.

‘‘பிரபு, நான் இங்குதான் இருக்கிறேன். உங்களை அருகில் தரிசிக்கும் ஆர்வத்தில் என்னைப் பின்னால் தள்ளிவிட்டுவிட்டார்கள் இவர்கள். மன்னிக்கவும்’’ என்று பணிந்து நின்றது அந்த உருவம்.

‘‘இருக்கட்டும் வரியிலாரே! திங்கள் இறையிலி தலைநகருக்குப் போய்விட்டதா?’’

‘‘ஆம் ஸ்வாமி. அதில் குறையேதும் வைப்பதில்லை.’’

‘‘தற்போதைய அளவுத் தொகை...’’

‘‘ஆயிரம் கழஞ்சுகள்.’’

‘‘விளைச்சல் எப்படி?’’

‘‘அமோகம் பிரபு!’’

அதுவரையிலும் வேடிக்கையாய் தன் தந்தையின் நண்பரைக் கவனித்துக்கொண்டிருந்த இளைஞனுக்கு, ஒற்றை வரி வினாக்களும் - பதிலுமாக நடந்த இந்த உரையாடல் மனதை உறுத்தியது.

ஆம்! வெளித்தோற்றத்துக்கு அது அமைச்சரின் சம்பிரதாயமான விசாரிப்பாகத் தோன்றினாலும், அந்த இளைஞனுக்கு மட்டும் அது ஏதோ சங்கேத பரிபாஷையாகவே பட்டது.

வினாவின் சில வார்த்தைகளுக்குக் குலச்சிறையார் அழுத்தம் கொடுத்தையும், அதே அளவிலான அழுத்தத்துடன் சில சொற்களை வரியிலார் அதிகாரி பதிலாக உதிர்த்ததையும், மதியூகியான அந்த இளைஞன் கவனித்தான். ஆகவே, வாய்மொழி உரையாடலை மட்டுமன்றி அவர்களின் உடல்மொழியையும் ஆராயத் தலைப்பட்டான். குலச்சிறையாரின் கண்ணசைவுகளும் முகக்குறிப்புகளும் வரியிலாருக்கு ஏதோ ரகசியக் கட்டளைகளைப் பிறப்பிக் கின்றன என்பதும் தெள்ளத்தெளிவானது அவனுக்கு. எனினும், இப்படியான ரகசிய நடவடிக்கைகள் ஏனென்பதுதான் புரியவில்லை அவனுக்கு.

அதற்குமேலும் பொறுக்கமுடியாமல், தனது வருகையைக் குலச்சிறையாருக்கு வெளிப்படுத்தத் தீர்மானித்தான். தன்னைப் பார்த்துவிட்டால், நிச்சயம் அவரோடு தன்னை அழைத்துச் செல்வார்.  தனது பிரச்னைக்கு எளிதில் தீர்வு கிடைக்கலாம். அத்துடன், இந்த சம்பாஷணை ரகசியத்தையும் தெரிந்துகொள்ளலாம் என்று திடமாக நம்பினான். இந்த எண்ணத்துடன் அவன் கூட்டத்தை விலக்கி முன்னேறிச் செல்ல பிரயத்தனத்துடன் முனைந்தபோதுதான் அந்தக் காட்சியைக் கண்டான்; அதிர்ந்துபோனான்!

ஏதோ ஒன்றை கணக்காயர் தன்னுடைய இரண்டு கரங்களில் ஏந்தியபடி கொடுக்க, புரவியிலிருந்தபடியே மிடுக்கோடு பெற்றுக்கொண்ட குலச்சிறையார், தான் பெற்றதை அருகிலிருந்த வீரன் ஒருவனிடம் ஒப்படைத்தார். அது என்னவென்று உற்றுக்கவனித்தவன்தான் மேற்கொண்டு நகரவொட்டாமல் கல்லாய்ச் சமைந்துபோனான்.

அது, அவன் தொலைத்த... இல்லையில்லை, அவனிடமிருந்து களவாடப்பட்ட வஸ்து - தந்தத்தாலான சிறிய பேழை!

இது துவக்கம் மட்டுமே! அந்த வீர இளைஞனை அடுத்தடுத்து பேரதிர்ச்சியில் ஆழ்த்திய சம்பவங்கள் தொடரவே செய்தன.

குலச்சிறையாரிடமிருந்து தந்தப்பேழையை ஒரு பொக்கிஷம் போன்று பெற்றுக்கொண்ட வீரன், அதற்குமேலும் அங்கே நிற்கவில்லை. சடுதியில் ஓடிச்சென்று தனது புரவியில் ஏறி அதை முடுக்கியவன் புயல்வேகத்தில் பாய்ந்து மறைந்தான்.

கணநேரத்தில் எல்லாம் நடந்துமுடிந்துவிட்டாலும், சடுதியில் சுதாரித்துக்கொண்ட வீர இளைஞன், அதன்பிறகு குலச்சிறையாரிடம் தனது வருகையை வெளிப்படுத்த விரும்பவில்லை. தந்தப்பேழை குறித்து அவனுக்குள் எழும்பிய வினாக்களுக்கு விடைதேட விரும்பினான். அவன் தேடலுக்குக் காலமும் கைகொடுத்து உதவியது. பேழையுடன்  குலச்சிறையாரின் சேவகன் சென்றடைந்த ரகசிய இடத்தை அவனுக்குக் காட்டிக்கொடுக்கவும் செய்தது.

வெகு அருகிலேயே இருந்த அந்த மலைக்குகையில், இளைஞன் சந்தித்த நபர்கள் அவனுக்குப் பேரதிர்ச்சியை அளித்தார்கள் என்றால்,  பேழையை அவனிடமிருந்து பறித்துச்செல்லும்படி ஆணையிட்டவர் இன்னார்தான் என்று அவர்கள் கூறிய பெயர், அவனை நிலைகுலைய வைத்தது.
அந்தப் பெயர் - பாண்டிமாதேவியார்!

- மகுடம் சூடுவோம்...