Published:Updated:

கங்கையில் கிடைத்த ராஜகோபாலன்!

கங்கையில் கிடைத்த ராஜகோபாலன்!
பிரீமியம் ஸ்டோரி
கங்கையில் கிடைத்த ராஜகோபாலன்!

படங்கள்: எல்.ராஜேந்திரன்

கங்கையில் கிடைத்த ராஜகோபாலன்!

படங்கள்: எல்.ராஜேந்திரன்

Published:Updated:
கங்கையில் கிடைத்த ராஜகோபாலன்!
பிரீமியம் ஸ்டோரி
கங்கையில் கிடைத்த ராஜகோபாலன்!

முற்காலத்தில் கடலுக்கு நடுவில் தோயமாபுரம் என்ற பட்டணம் அமைந்திருந்தது. அதில் வசித்த மூன்று கோடி அசுரர்கள் தேவர்களையும், முனிவர்களையும், உலக மக்களையும் வாட்டி வதைத்துக்கொண்டிருந்தனர்.

இந்த நிலையில் பாண்டவர்களில் ஒருவனான அர்ஜுனன் இந்திர லோகத்துக்குச் செல்ல விரும்பினான். அதன்பொருட்டு தேவேந்திரனிடம் அனுமதி கோரினான். அப்போது இந்திரன், ‘`அர்ஜுனா, நீ தாராளமாக இந்திரலோகத்துக்கு வரலாம். அதற்கு முன்பு நீ செய்யவேண்டிய காரியம் ஒன்று உள்ளது. கடலுக்கு நடுவில் உள்ள தோயமாபுரத்தில் உள்ள அசுரர் களை நீ அழித்து, தர்மத்தை நிலைநாட்ட வேண்டும்’’ என்றார்.

அர்ஜுனனும் இந்திரன் சொன்னபடியே தோயமாபுரத்துக்குச் சென்று அசுரர்களை எதிர்த்துப் போரிட்டான். ஆனால், அவர்களை வெல்வது எளிதாக இல்லை. அசுரர்களை வீழ்த்தினாலும், அவர்கள் மீண்டும் எழுந்து வந்து போரிட்டனர். அர்ஜுனன் செய்வது அறியாமல் திகைத்து நின்றான். அப்போது,  `‘அர்ஜுனா, அசுரர்கள் உன்னை கேலி செய்தால் மட்டுமே அவர்களை நீ வெல்ல முடியும். இது அவர்கள் பெற்றிருக்கும் வரம்' என்று ஓர் அசரீரி ஒலித்தது.

அர்ஜுனனின் மனதில் சட்டென்று ஒரு திட்டம் உதயமானது. போரில் தோற்றுப் புறமுதுகு காட்டி ஓடுவதுபோல ஓடினான். அதைக் கண்டு அசுரர்கள் கேலிசெய்து கைதட்டிச் சிரித்தார்கள். அர்ஜுனனும் இதைத்தானே எதிர்பார்த்தான்! உடனடியாக, தன்னிடமிருந்த பாசுபத அஸ்திரத்தை ஏவி ஒட்டுமொத்தமாக அவர்களைக் கொன்றொழித்தான்.

கங்கையில் கிடைத்த ராஜகோபாலன்!

அர்ஜுனனின் வீரதீரச் செயலை மனதாரப் பாராட்டியதோடு, அதுவரை தான் வணங்கி வழிபட்டு வந்த ஸ்ரீராஜ கோபால ஸ்வாமி விக்கிரகத்தையும் அர்ஜுனனுக்குக் கொடுத்தான் இந்திரன். அந்த ஸ்வாமியை அனுதின மும் பயபக்தியோடு வணங்கி வழிபட்டு வந்தான் அர்ஜுனன். இந்நிலையில், தென்னகத்தில் தாமிரபரணி தீரத்தில் கோயில் கொள்ள திருவுளம் கொண்டார் ஸ்ரீராஜ கோபால ஸ்வாமி.  எனவே, ஒருநாள் அர்ஜுனனின் கனவில் தோன்றினார்.

`‘உனக்கு இந்திரனால் வழங்கப்பட்ட என் விக்கிரகத்தைக் கங்கையில் போட்டு விடு’ என்று கட்டளையிட்டார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கங்கையில் கிடைத்த ராஜகோபாலன்!


அன்போடு அனுதினமும் வழிபட்டு வந்த ஸ்வாமியை கங்கையில் வீச அர்ஜுனனுக்கு மனம் ஒப்பவில்லை. ஆனாலும் கட்டளையிடுவது ஸ்வாமி ஆயிற்றே மறுக்க முடியுமா? ஆகவே, மறுநாள் பொழுது புலர்ந்ததும் விக்கிரகத்தை கங்கையில் சேர்த்தான்.

அதேநாளில், தென்னகத்திலிருந்து புனித நீராட  கங்கை தீரத்துக்கு வந்து சேர்ந்திருந்தான் பாண்டிய மன்னன். காசியம்பதியில் அவன் கங்கையில் மூழ்கி எழுந்தபோது மன்னனின் கைகளில் தவழ்ந் தது ஸ்வாமியின் விக்கிரகம்!

எம்பெருமானின் எழிற்கோலத்தைக் கண்டு பேரானந்தம் அடைந்தான் பாண்டியன். மிகக் கோலாகலமாக விக்கிரகத்தைத் தென்னகத்துக்குக் கொண்டு வந்து, தாமிரபரணிக் கரையில் எழுந் தருளச் செய்தான். ஸ்வாமிக்கு அழகிய ராஜ கோபாலர் என்ற திருப்பெயர் சூட்டி வழிபட்டு வந்தான். நாளடைவில் கோபுரம் மற்றும் விமானங்களுடன் திருக்கோயில் கட்டப்பட்டது.  அதுவே, பாளையங்கோட்டையில் அமைந்துள்ள  அருள்மிகு ராஜகோபால ஸ்வாமி திருக்கோயில்.

கங்கையில் கிடைத்த ராஜகோபாலன்!

வல்லப விண்ணகர்!

திருநெல்வேலியிலிருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ளது பாளையங்கோட்டை.

முற்காலத்தில் பாளையக்காரர்கள் தாங்கள் தங்குவதற்கு உரிய இடமாக இந்தப் பகுதியைத் தேர்ந்தெடுத்ததால், பாளையங்கோட்டை என்ற பெயர் ஏற்பட்டதாகச் சொல்வர். அதற்கேற்ப கோட்டை கொத்தளங்கள் இருந்ததற்கான அடையாளங்களை இன்றைக்கும் இந்தப் பகுதியில் காணமுடிகிறது.

ஒரு காலத்தில் இங்கே செண்பக மரங்கள் அதிகம் சூழ்ந்திருந்த காரணத்தினால் இத்தலத்துக்கு ‘செண்பகாரண்ய க்ஷேத்திரம்’ என்றும் பெயர் உண்டு. அதேபோல், இங்கே அமைந்திருக்கும் திருக்கோயிலுக்கு ‘வல்லப விண்ணகர்’ என்று திருப்பெயர். கி.பி.11-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட தாகச் சொல்லப்படும் இந்தக் கோயிலுக்கு முதலாம் ராஜராஜன் பல திருப்பணிகளைச் செய்துள்ளார்.

அற்புதம் அருளும் தெய்வச் சந்நிதிகள்

கிழக்கு நோக்கி அமைந்துள்ள இந்தக்கோயிலில் கருவறை விமானம் இரண்டு தளங்களாக அமைந் திருக்கிறது. கருவறையில் ஸ்ரீதேவி பூதேவி சமேதராக அமர்ந்த திருக்கோலத்தில் அருள்மிகு வேதநாராயண பெருமாள் சேவை சாதிக்கிறார். மேல்தளத்தில் பிராட்டியருடன் காட்சி தருகிறார் ஸ்ரீஅழகிய மன்னார். அதேபோல் பிராகாரத்தில் தேவியருடன் தனிச் சந்நிதியில் ஸ்ரீபரமபதநாதர் அருள்கிறார். திருக்கோயிலின் உற்சவர் ஸ்ரீராஜ கோபாலர்; ருக்மிணி, சத்யபாமா சமேதராகக் காட்சியளிக்கிறார்.

மேலும், லட்சுமிதேவியை மடியில் அமர்த்திய படி அருள்பாலிக்கும் ஸ்ரீஆதிவராகர்- தசாவதார மூர்த்தியர், ஆஞ்சநேயர், ஆழ்வார் பெருமக்கள் ஆகியோரையும் இங்கே தரிசிக்கலாம். விசாலமான முன் பிராகாரத்தில் ஸ்ரீபூமிவல்லித் தாயாருக்கும், ஸ்ரீதேவி தாயாருக்கும் தனித்தனிச் சந்நிதிகள் உள்ளன. பிராகாரத்தில் வீற்றிருக்கும் செண்பக விநாயகரைச் சிறந்த வரப்பிரசாதி என்கிறார்கள்.

கங்கையில் கிடைத்த ராஜகோபாலன்!

உயர் கல்வியில் வெற்றி பெற...

ந்தக் கோயிலின் மூலவர் அருள்மிகு வேத நாராயணர். வேதங்களைக் காத்து மகரிஷிகளுக்கு அருளிய பகவான், இங்கு வந்து வழிபடும் பக்தர்களுக்கு ஞானம் சித்திக்கவும் அருள்புரிவார்; கல்வியில் இருக்கும் மந்த நிலை மாறி, மாணவர்கள் நல்ல முறையில் தேர்ச்சி பெறுவதற்கு அருள் பாலிப்பார் என்பது நம்பிக்கை.

புதன் அல்லது சனிக்கிழமை ஆகிய தினங்களில் ஒன்றில் தொடர்ந்து 12 வாரங்கள் இந்தக் கோயிலுக்குச் சென்று ஸ்ரீவேதநாராயணருக்கும் பூதேவி தாயாருக்கும் முறையே பச்சை வண்ண வஸ்திரமும் பட்டும், ஸ்ரீதேவி தாயாருக்குச் சிவப்பு நிறப் பட்டும் சார்த்தி வழிபட வேண்டும். அத்துடன், எம்பெருமானுக்குத் துளசி மாலையும்,  தாயார்களுக்குப் பிச்சிப் பூவும் சமர்ப்பித்து, நீராஞ்சன விளக்கேற்றி வணங்க வேண்டும்.

வாழை இலையில் பச்சரிசியைப் பரப்பி, அதன் மீது, உடைத்த இரு தேங்காய் முறிகளில் நெய் விட்டு தீபமேற்றுவதே நீராஞ்சன விளக்காகும். இங்ஙனம் விளக்கேற்றி, கல்கண்டு நைவேத்தியம் செய்து வழிபட்டு வந்தால், பிள்ளைகளுக்கு உயர் கல்வியில் வெற்றி கிடைக்கும் என்பது நம்பிக்கை.

வைகுண்ட ஏகாதசி

பங்குனி பிரம்மோற்சவம், கிருஷ்ண ஜயந்தி, புரட்டாசி கருடசேவை, வைகுண்ட ஏகாதசி ஆகியவை இந்தக் கோயிலில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. இந்த வருடம் மார்கழி 4-ம் தேதி, செவ்வாய்க் கிழமை (19.12.17) முதல், பகல் பத்து உற்சவம் ஆரம்பமாகிறது. மார்கழி -14  வெள்ளிக்கிழமை (29.12.17) அன்று வைகுண்ட ஏகாதசி. அன்றைய தினம் மாலை வேளையில் சொர்க்கவாசல் வைபவம் நடைபெறும்.

நீங்களும் இந்தத் திருநாளில் ஸ்ரீராஜகோபால ஸ்வாமியை தரிசித்து வாருங்கள்; உங்களுக்கு ராஜ யோக வாழ்க்கை அமையும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism