Published:Updated:

சித்திர ராமாயணம்

பி.ஸ்ரீ.

பிரீமியம் ஸ்டோரி

சிறகு நிழலிலே

சீதா, ராம-லட்சுமணர் காட்டு வழியில் வந்து கொண்டிருக்கும்போதே ஒரு குன்றின்மேல் சூரியோதயம் ஆவது போன்ற ஒரு காட்சியை முதன்முதலில் கண்ணுற்றார்கள். அதிசயத்துடன் வந்துகொண்டேயிருக்க, அச்சூரிய கிரணங்கள் திரண்டு இரு பெருஞ் சிறகுகளாய்க் காண்கின்றன.
மேலும் மேலும் இவர்கள் வந்துகொண்டேயிருக்க, தாங்கள் முதன்முதலில் கண்ட உதயசூரியன் ஒரு பறவையாய்க் காண்கிறது. அப்படித் தோற்றமளிக்கிறது குன்றின்மீது, பென்னம்பெரிய பொன்னிற மேனியோடு கூடிய கழுகரசு.

அந்தக் கழுகை ‘உருமாறிய ஓர் அரக்கனோ?’ என்று ஐயுற்றுச் சினங்கொண்டு கூர்ந்துநோக்கின்றனர் ராம-லட்சுமணர். ‘தேவரோ, யாவரோ, மூவருள் இருவரோ?’ என்று ஜடாயுவும் இவர்களை ஐயுற்று நோக்குகிறான். இங்ஙனம் ஆலோசனையில் மூழ்கிய ஜடாயுவின் உள் மனதிலிருந்து மின்வெட்டுவதுபோல் ஓர் ஊகம் தோன்றுகிறது. இவர்களது முக ஜாடையில் தன் ஆருயிர் நண்பரான தசரத சக்கரவர்த்தியைப் பார்த்துவிடுகிறான் ஜடாயு. ‘தசரத ராஜ குமாரர் போலும்’ என்று ஒருவாறு யூகித்த ஜடாயுவுக்கு இன்னும் நிச்சய புத்தி ஏற்படவில்லை.

சித்திர ராமாயணம்

இவர்களோ இன்னும் கோபமாகவே இருக்கிறார்கள். ‘பிணந்தின்னும் ஒரு ராட்சஸக் கழுகு - இப்படி ஒரு ராட்சஸன்தான்’ என்று இன்னும் நினைப்பு. ஆனால், ஜடாயுவுக்கோ இவர்களைப் பார்க்கப் பார்க்க இவர்கள் மீது அன்பு பெருகுகிறது. இந்த நிலையில் இவர்களை நோக்கி ‘‘நீங்கள் யார்?’’ என்று கேட்டுவிடுகிறான்.

கழுகு மனித பாஷையில் பேசியதும் ஐயம் தீர்ந்திருக்க முடியுமா? அதிகரித்துத்தான் இருக்கவேண்டும். எனினும் இவர்கள் உண்மையே சொல்லுகிறார்கள், தம்மைத் தெரிவிக்கும்போது. தசரத ராஜகுமாரர்கள் அல்லவா? பொய் சொல்லலாமா? சொல்ல முடியுமா?

வினவிய காலையின் மெய்ம்மை அல்லது
புனைமலர்த் தாரவர் புகல்கிலாமையால்
கனைகடல் நெடுநிலம் காவல் ஆழியான்
வனைகழல் தயரதன் மைந்தர் யாம் என்றார்.

சித்திர ராமாயணம்

உண்மையல்லாததைச் சொல்லவே தெரியாதாம் இவ்வுத்தம ராஜகுமாரர் களுக்கு. ஆகவே, இவர்கள் ஜடாயுவை ‘எதிரியோ பொய் வினையாக்கனோ?’ என்று சந்தேகித்தபோதிலும் மெய்ம்மையையே சொல்லிவிட்டார்கள்.

தனது யூகம் உறுதிப்பட்டதும் ஜடாயுவுக்கு ஒரே ஆனந்தம். உடனே இறங்கி வந்து தன் தோழரான சக்கரவர்த்தியின் க்ஷேமம் வினவினான். அதற்கு ராமன், ‘‘மறந்தும் பொய் கூறாத மன்னவன் உண்மை காக்க உயிர் கொடுத்துச் சுவர்க்கம் புகுந்தார்’’ என்று பதில் சொன்னதுமே மூர்ச்சித்துவிடுகிறான் ஜடாயு.

இவர்கள் அவனைக் கைகளால் தழுவியெடுத்தார்கள். அப்போதே அவர்களுக்குக் கண்ணீர் வந்துவிட்டது. அந்தக் கண்ணீரே தண்ணீர் போன்று ஜடாயுவுக்கும் மூர்த்தைத் தெளிவித்தது என்கிறான் கவிஞன்.  உணர்வு மீண்டதும் உள்ளம் குழைந்து அழியப் புலம்பினான். தசரதரின் உத்தம குணங்களையெல்லாம் நினைத்துப் புலம்பிய ஜடாயு, ‘தசரதர் உயிர் நீங்கிய அப்போதே தனக்கும் உயிர் நீங்கவில்லையே’ என்று வருந்தினான்.

சித்திர ராமாயணம்

தசரதரின் மரணத்துக்கு வருந்திப் புலம்பிய ஜடாயு தன்னுடைய நண்பரின் மக்களைத் தழுவிக்கொண்டு, இந்தத் துயர நெருப்பில் முடிவில்லாமல் வெந்துகொண்டே இருப்பதைக் காட்டிலும் காட்டுத் தீயில் விழுந்து ஒரேயடியாகச் சாகத் துணிந்து, அந்தத் துணிவை ராம லட்சுமணரிடம் தெரிவிக்கிறான்.

மருவினிய குணத்தவரை இருசிறகால்
உறத்தழுவி ‘மக்காள்! நீரே
உரிய கடன் வினையேற்கும் உதவுவீர்
உடல் இரண்டுக்(கு) உயிரொன் றானான்
பிரியவும்தான் பிரியாதே இனிதிருக்கும்
உடற்பொறையாம் பீழை பாரா(து)
எரியதனில் இன்றேபுக்(கு) இறவேனேல்
இனித் துயரம் மறவேன் என்றான்.


இப்படிப் பேசிய ஜடாயுவை நோக்கிய ராமலட்சுமணருக்குத் தந்தைமீதுள்ள பாசம் பெருகுகிறது. ‘‘அவர்தாம் எங்களைக் கைவிட்டார். நீங்களும் கைவிடப் போகிறீர்களா? அப்படியானால் எங்களுக்குக் கதி யார்?’’ என்று கேட்டார்கள். உடன், அவர்கள் சொல்வதும் சரிதானே என்று தீர்மானித்த ஜடாயு ‘`அன்ற தென்னின் அயோத்தியின் ஐயன்மீர் சென்றபின் அவற் சேர்குவென் யான்’’ என்றான். தான் உயிரோடிருப்பது தங்களுக்கு உதவியாக இருக்குமென அவர்கள் கருதுவதால், அவர்களை நோக்கிய ஜடாயு, ‘‘நீங்கள் திரும்பி அயோத்தியை அடையும்வரை நான் உயிர் தரித்திருப்பேன்’’ என்றான்.

சித்திர ராமாயணம்

அத்துடன், தன் அருமைத் தோழனின் மூத்த புதல்வனைத் தியாக சிரேஷ்டனாகவும் தெரிந்துகொண்ட ஜடாயு, அவனைத் தழுவிக்கொண்டான். பின்னர் சீதையை நோக்கியவன், அவளைக் குறித்தும் விசாரித்தான். அதற்கு லட்சுமணன் பதில் சொன்னான். ‘அண்ணனின் மனைவி’ என்று சுருக்கமாகச் சொல்லிவிடாமல், சீதா கலயாணக் கதையை விரிவாகக் கூறுகிறான் ஜடாயுவுக்கு. அதை விரிவாகக் கேட்டறிந்த ஜடாயு, அவர்கள் மூவரையும் அங்கேயே தங்கியிருக்கும்படி சொன்னதோடு, ‘‘நான் உங்களைக் காத்து வருவேன்’’ என்றும் கூறினான். அதற்கு ராமன், ‘‘அகஸ்திய முனிவர் ஆலோசித்துப் பார்த்து எங்களைக் கோதாவரித் துறையில் ஒரு வசதியான இடத்தைக் குறிப்பிட்டு, அங்கே வசிக்கும்படி சொல்லியிருக்கிறார்’’ என்றான்.

அதுகேட்ட ஜடாயு. ‘‘அது மிகவும் நல்லதுதான். புறப்படுங்கள். அந்த இடத்தை நான் காட்டுவேன்’ என்று வானத்தில் பறந்துகொண்டே தன் சிறகு நிழலில் அவர்களை அழைத்துக்கொண்டு போகிறான்.

பெரிதும் நன்(று) அப் பெருந்துறை வைகி, நீர்
புரிதிர் மாதவம் போதுமின் யான்அது
தெரிவு றுத்துவென் என்று அவர் திண்சிறை
விரியும் நீழலில் மேவ விண் சென்றனன்


(9.5.48, 16.5.48, 30.5.48 மற்றும் 13.6.48 ஆனந்த விகடன் இதழ்களிலிருந்து)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு