மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம்! - ஹம்பி 15

கொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம்! - ஹம்பி  15
பிரீமியம் ஸ்டோரி
News
கொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம்! - ஹம்பி 15

மகுடேசுவரன்

விஜயநகரம் மற்றும் பாமினி அரசுகளுக்கிடையே இருந்த ராய்ச்சூர் கோட்டையானது கைப்பற்றியே ஆகவேண்டிய முதன்மைப் பகுதியாக மாறியது. கிருட்டிணை-துங்கபத்திரை நதிகளுக்கு இடையேயான வளமான நிலப்பரப்பில் அக்கோட்டை அமைந்திருந்தது. பாமினி அரசர் களின் வடமேற்குப் பகுதியானது இப்போதைய மராட்டியத்தின் மேற்குப் பகுதியை உள்ளடக்கியது. அங்கே வெறும் கரிசல் மண்ணாகத்தான் இருக்கும். அதனால் பாமினி அரசர்களுக்குத் தானியக் களஞ்சியமாகத் தக்க நிலம் என்று பார்த்தால் அது கிருட்டிணை ஆற்றுச் சமவெளிதான்.

விஜயநகரப் பேரரசின் தலைநகரம் சிறு குன்றுகள் சூழ்ந்த கல்நிலம் என்பதை அறிவோம். அவர்களுக்கும் கிருட்டிணை ஆற்றுச் சமவெளி தான் அருகிலுள்ள வளப்பமான தானிய விளைநிலம். இவ்வாறு இரண்டு அரசர்களுக்கும் அந்த ஆற்றுச் சமவெளி பொன் விளையும் பூமியாக இருந்ததால் அதற்காக எவ்விலையையும் தர அணியமாக இருந்தனர். பெரும் போர்களை நடத்தி அப்பகுதியை மீட்பதிலும் உறுதி காட்டினர்.

கொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம்! - ஹம்பி  15

இவ்விடத்தில் மொழிச்செய்தி ஒன்றை நாம் அறிய வேண்டும். கிருட்டிணை என்ற அந்த ஆற்றுக்குக் கன்னபெண்ணை, கரும்பெண்ணை ஆகிய பெயர்களும் வழங்கப்பட்டிருக்கின்றன. கரிசல் நிலத்தில் தோன்றிப் பாய்ந்துவரும் அந்நதியின் வெள்ளம் கன்னங்கரேல் என்று இருப்பதை இன்றும் காணலாம். அதனால் அப்பெயர் தோன்றியிருக்க வேண்டும். முதலில் கறுப்பாறு என்னும் பொருள்பட கன்னவேணி என்று அழைத்தனர். வேணி என்பதற்கு ஆறு என்னும் பொருளை வீரமாமுனிவரின் சதுரகராதி சுட்டுகிறது. பிறகு, கறுப்பெனும் பொருள்படும் சொல்லைக்கொண்டு வடமொழி யில் கிருஷ்ணவேணியாக்கினர். கிருஷ்ணர் கறுப்பர்தானே? அந்தச் சுருக்கமே கிருஷ்ணா என்றாயிற்று. வடமொழிப் பெயரைத் தற்பவமாக்கு வதற்குக் ‘கிருட்டிணை’ என்று கூறுகிறோம். இனி, கன்னபெண்ணை, கரும்பெண்ணை ஆகிய பயன்பாடுகள் வந்தால் அது கிருட்டிணை ஆறு என்று அறிந்து நிற்க. 

ராய்ச்சூர் கோட்டையின்மீது கிருஷ்ண தேவராயர் பெரும்படையோடு சென்று முற்றுகையிட்டதற்குத் தனி மனிதர் ஒருவரின் கீழ்மையான செயலும் காரணமாக அமைந்தது. குதிரை வணிகர் ஒருவர் செய்த திருட்டுக்குப் பெரும் படையெடுப்பின் வழியாக விடைகூற முனைந்தார் கிருஷ்ண தேவராயர்.

சையது மரைக்காயர் என்பவர் போர்த்துக்கீசியர் களிடமிருந்து போர்க்குதிரைகளை வாங்கி விற்கும் வணிகத்தைச் செய்து வந்தவர். விஜயநகர, பாமினி அரசுகளைப் பற்றிய பல்வேறு குறிப்புகளை எழுதியவர்களில் இவ்வகையான வணிக நாட்டங்களோடு வந்து சென்றவர்களும் அடக்கம். அவ்வாறு குறிப்பெழுதியவர்கள் பேரரசுக்கு வெளியே வதிந்தமையால்தான் பேரழிவுக்குப் பிறகும் அக்குறிப்புகள் நமக்குக் கிடைத்தன.

சையது மரைக்காயர் ஒரு வணிகர் என்பதை விடவும் தரகர் என்பதே பொருத்தம். தரகர் எனப்படுபவர் இரு தரப்புக்குமான நல்லுறவைத் தொடர்ந்து பேணியவராகவே இருப்பார். பெருந் தரகரான சையது மரைக்காயர் விஜயநகரத்தோடும் பாமினி அரசோடும் போர்த்துக்கீசியர்களோடும் இணக்கமான தொடர்பில் இருந்துள்ளார். துறைமுகத்துக்கு வந்திறங்கிய குதிரைகளைப் பற்றிய அனைத்துச் செய்திகளும் அவருக்கு அத்துபடியாகத் தெரிந்திருந்தன.

இப்போது வந்துள்ளவை `ராஜபரிகளா, போர்ப்பரிகளா, மட்டப் பரிகளா...' என்பன போன்ற மறைவளச் செய்திகள் அவருக்கு நிறையவே கிடைக்கும். துறைமுகத்திலிருந்து இத்தகைய செய்திகளைக் கசியவிடுவதும் வணிக நுட்பங்களில் ஒன்றுதான். அந்தச் செய்திகளின்படி அவர் இரண்டு அரசுகளோடும் பேச்சுவார்த்தை மேற்கொள்வார். தமக்குக் கொள்ளை வரவு தரும் படியான கொள்வனவுக்கு முன்வரும்  அரசோடு வணிகத்தை முடித்துக்கொள்வார். அதனால் சையது மரைக்காயரை நம்பி பேரளவிலான செல்வத்தைக் கொடுப்பது வழக்கம். சையது மரைக்காயர் கிருஷ்ண தேவராயரின் நம்பிக்கைக்கு உரியவராகவும் இருந்துள்ளார்.

கொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம்! - ஹம்பி  15

வலிமையான போர்க்குதிரைகளோடு போர்த்துக்கீசியக் கப்பல்கள் கோவாத் துறைமுகத் தில் வந்து நிற்பதாக கிருஷ்ண தேவராயர்க்குச் செய்தி அனுப்பினார் மரைக்காயர். அடுத்தடுத்த போர் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த ராயருக்கு அக்குதிரைகள் உடனடியாகத் தேவைப்பட்டன. அதனால் மரைக்காயரை விஜய நகரத்துக்கு வரவழைத்த ராயர், நாற்பதாயிரம் தங்கக் காசுகளை அவரிடம் ஒப்படைத்து வணிகத்தை இணக்கமாக முடித்துத்தரும்படி ஏவினார்.

ராயரிடம் நைச்சியமான வாக்குறுதிகளைத் தந்த மரைக்காயார் நாற்பதாயிரம் தங்கக் காசு களோடு கோவாவுக்குச் செல்லாமல் தமக்கெனக் கவர்ந்துகொண்டார். அப்பெரும் செல்வத்துக்கான பாதுகாப்பை அவர் பாமினி அரசரிடம் வேண்டி நிற்க, இஸ்மாயில் அடில்சாவும் மரைக்காயர்க்கு அடைக்கலம் கொடுத்துவிட்டார். நம்பிக்கையைப் பயன்படுத்தி இரண்டகம் செய்துவிட்ட மரைக் காயரைத் தம்மிடம் ஒப்படைக்கும்படி ராயரின் செய்தி அடில்சாவுக்கு அனுப்பப்பட்டது. தம் மதத்தவர் என்ற இரக்கத்தின் அடிப்படையில் மரைக்காயரை விஜயநகரத்திடம் ஒப்படைக்க அடில்சா மறுத்துவிட்டார்.

கொள்ளைத் தங்கத்தில் பாமினி அரசாங்கத் துக்கும் உரிய பங்கு தரப்பட்டிருக்கும் என்பது தெளிவு. மரைக்காயர் வெறும் கருவிதான் என்பதை உணர்ந்த ராயர், இஸ்மாயில் அடில்சாவை முழுமையாக அடக்குவதற்குச் சூளுரைத்தார். அந்தக் குதிரை வணிக நாடகம் பாமினியின் சூழ்ச்சியாகக்கூட இருக்கக்கூடும். ஆனால், வரலாற்றின் இருண்ட பக்கங்களுக்கு ஒளி பாய்ச்சும் விளக்குகள் எங்கும் இல்லை.

கிபி 1520-ம் ஆண்டு பிப்ரவரியில் ராய்ச்சூர் கோட்டையை நோக்கிக் கிருஷ்ண தேவராயரின் படைகள் அணிவகுத்தன. அக்காலத்திய நிலவரத்தின்படி விஜயநகரமானது உலகின் எப்பெரும் நகரங்களைவிடவும் மக்கள் தொகை யில் மிகுந்திருந்தது என்று பார்த்தோம். அப்போது தென்னிந்தியாவின் பெரும்பகுதி கிருஷ்ண தேவராயரின் ஆட்சிக் குடையின் கீழ் வந்திருந்தன. இருநூற்றுக்கும் மிகுதியான ஆளுநர்களால் அவருடைய ஆட்சிப்பரப்பு பிரித்தாளப்பட்டது.

ஒவ்வொருவரிடமும் ஆயிரக்கணக்கான குதிரைப்படையினரும் நூற்றுக்கணக்கான யானைப்படையினரும் பத்தாயிரக்கணக்கான காலாட்படையினரும் ராணுவச் சேவை செய்துவந்தனர். அதனால் பேரரசர் நினைத்த நேரத்தில் பத்து லட்சத்துக்கும் மிகுதியான போர்ப்படை மறவர்களைத் திரட்ட முடியும். ராய்ச்சூர்க் கோட்டையை நோக்கி நகர்ந்த ராயரின் ஒரு படைப்பிரிவு மட்டுமே பதினான்கு கிலோமீட்டர்கள் நீளத்துக்கு இருந்ததாகக் கூறுகின்றனர்.

படைவீரர்களுக்குத் தண்ணீர் தருவதற்கென்றே போர்க்களத்தின் இருமருங்கிலும் எட்டாயிரம் பணியாளர்கள் தண்ணீர்க் குடுவையோடு காத்திருந் தார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். மிகுந்த மக்கள் தொகையோடும் கற்பனைக்கு அப்பாற்பட்ட செல்வ வளத்தோடும் திகழ்ந்த அப்பேரரசைப் பற்றிய தரவுகள் எவையுமே மிகையானவையல்ல என்றே வரலாற்றறிஞர்கள் பலரும் ஒற்றுமையான முடிவுக்குவருகின்றனர்.   

- தொடரும்