மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கேள்வி பதில் - ரிது ஜாதகம் பயன்படுமா?

கேள்வி பதில் - ரிது ஜாதகம் பயன்படுமா?
பிரீமியம் ஸ்டோரி
News
கேள்வி பதில் - ரிது ஜாதகம் பயன்படுமா?

சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

? சனிப்பெயர்ச்சி நிகழ்ந்திருக்கிறது. சனிபகவான் எந்தெந்த இடங்களில் இருந்தால் என்னென்ன பலன்கள் தருவர். சனி பகவான் துயரத்தை மட்டும்தான் வழங்குவாரா?

-பி.ராமமூர்த்தி, கிணத்துக்கடவு

தர்மகர்மாதிபதி, லக்னாதிபதி, ஷட்பலம் பெற்றவன், யோக காரகனோடு இணைந்தவன், சுப கிரகங்களுடன் சேர்க்கை அல்லது பார்வை பெற்றவன், பிறக்கும்போது அஷ்டமத்தில் இருப்பவன், உபசயஸ்தானங்களில் இருப்பவன், சுபனான தசாநாதனோடும், புக்திநாதனோடும், அந்தரநாதனோடும், கேந்திரத்ரிகோண சம்பந்தம் பெற்றவன். இந்தநிலையில் இருக்கும் சனி, தனது கொடும் செயலை முடக்கிவைத்து, நல்ல பலன்களை வெளியிடுவான்.

கேள்வி பதில் - ரிது ஜாதகம் பயன்படுமா?

தசை, புக்தி, அந்தரம் - இவை அசுபனாக இருக்கும் பட்சத்தில், அவனது தொடர்பு கெடுதலை இரட்டிப் பாக்கிவிடும். 3, 6, 11-ல் சனி வீற்றிருக்கும்வேளையில், அதிகத் துயரத்தைச் சந்தித்த ஜாதகங்கள் ஏராளம்.

பல்வேறு காரணங்களால் ஏற்படும் துயரம், சனி விரும்பாத இடத்தில் இருக்கும்வேளையில் நிகழும்போது, சனியைக் காரணம்காட்டி சிந்தனைக்கு முற்றுப்புள்ளி வைப்பது தவறு. எதையும் ஆராயாமல், கிரகத்தை ஒரு வீட்டில் பார்த்ததும், நொடிப்பொழுதில் பலன் சொன்னால்... அந்தப் பலனின் நம்பகத்தன்மை குறைந்து காணப்படும். கண்ணுக்குப் புலப்படாத கர்மவினையை, ஒட்டுமொத்தமான கிரகங் களின் ஒத்துழைப்பை ஆராய்ந்து - அனுமானம் செய்து, பலன் சொல்லவேண்டும். காரணம் நிச்சயமாக இருந்தால்தான், அனுமானத்தில் நம்பகத்தன்மை இருக்கும். பொதுப்பலன் எல்லோருக்கும் பொருந்தாது. கர்மவினையின் தரம், மனிதனுக்கு மனிதன் மாறுபட்டு இருப்ப தால், மாறுபட்ட பலனே தென்படும்.

சூரியனின் கிரணங்கள் விழும் போது... எந்தப் பொருளின் மீது விழுகிறதோ, அந்தப் பொருளின் தன்மைக்கேற்ப மாறுபாடு விளையுமே தவிர, எல்லா பொருள்களிலும் ஒரேவிதமான மாறுபாடு தென்படாது. சூரியனின் ஒளியால் தண்ணீரில் இருக்கும் தாமரை மலரும்; சேறு கட்டியாகும்; உதிர்ந்த பூக்கள் வாடும்; தண்ணீர் ஆவியாகும்; பனிக்கட்டி கரைந்துபோகும். இங்கு தாக்கம் ஒன்றுதான்; மாறுபாடு வேறு. ஆகவே, பொறுமையோடு ஆராய்ந்து பலனை அறிந்துகொள்ள வேண்டும்.

? பிறப்பு ஜாதகம் கணிக்க இயலாத நிலையில், என் மகளுக்கு ரிது ஜாதகத்தை வைத்துத் திருமணப் பொருத்தம் பார்க்கலாமா?

கேள்வி பதில் - ரிது ஜாதகம் பயன்படுமா?


- கே.எம்.மூர்த்தி, சென்னை-47

இன்றைய சூழலில், கணிப் பொறியில் ஜாதகம் கணிக்கும் முறை அறிமுகமான பிறகு, இப்படியொரு நிலைமை தலைதூக்காது. கணிப்பொறி வருவதற்குமுன், பிறந்த தேதியே தெரியாதவர்களுக்கான ஜாதகம் கணிக்கும் முறையை, ‘நஷ்ட ஜாதகம்’ என்கிற தலைப்பில் விளக்கியிருக்கிறார் வராஹமிஹிரர். படிப்பறிவு இல்லாத பாமரர்கள், குழந்தை பிறந்த தேதியை மறந்துவிடுவது உண்டு. அன்றாடம் வயிற்றுப் பிழைப்புக்கே அல்லல் படும்போது, தேதி நினைவில் இருந்து அகன்றுவிடும். இதுபோன்ற தருணங்களில், ரிதுவான நேரத்தைப் (வயதுக்கு வந்த பொழுதை) பிறந்த வேளையாகப் பாவித்து ஜாதகத்தை உருவாக்கினார்கள். காலம் மாறிவிட்டது. மருத்துவமனையில் இருந்து வெளிவரும்போது, ஜாதகத்துடன் வரும் முறை வந்துவிட்டது. ஆகையால், ரிது ஜாதகத்தைப் பற்றிய தத்துவங்களை ஆராய்வதில் முனைய வேண்டாம். இன்றைய நாளேடுகளில் ஜோதிடத் தகவல்கள் நிரம்பி வழியும் சூழலில், பிறந்த தேதியை மறக்க வாய்ப்பே இல்லை. அப்படியே மறந்தாலும் ஜாதகம் கணிக்கக் காத்திருக்கிறது நஷ்ட ஜாதகம். ரிது ஜாதக ஆராய்ச்சியில் குழப்பம்தான் வரும்; தெளிவு ஏற்படாது.

கேள்வி பதில் - ரிது ஜாதகம் பயன்படுமா?

? இரவு வேளையில் பந்தி பரிமாற வாழை இலை போட்டால், நீர் தெளிக்கக் கூடாது என்கிறார்களே, ஏன்?

- மீனாட்சி சுந்தரம், திருநெல்வேலி-2

இலையைச் சுத்தம் செய்த பிறகே, உணவு பரிமாற வேண்டும். அதற்கும் நேரம் காலத்துக்கும் சம்பந்தம் இல்லை. இலையில் தூசு படிந்திருந்தால், அது உணவைப் பாதிக்கும். அதை அகற்ற இலையைத் தண்ணீரால் சுத்தம் செய்ய வேண்டும். மாற்றுத் தகவல்களை மறந்து விடுங்கள்.

? சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம் போன்ற வைபவங்களைப் பெற்றோருக்குப் பிள்ளைகள்தான் செய்துவைக்க வேண்டுமா? பிள்ளை இல்லாதவர்கள் இந்த வைபவங்களை அனுஷ்டிக்கலாமா?

- பி.சண்முக சிவம், திருப்பூர்

கேள்வி பதில் - ரிது ஜாதகம் பயன்படுமா?பிள்ளைகளை வைத்து சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம் போன்றவை எழவில்லை. அவை மனிதனாகப் பிறக்கும் ஒவ்வொருவரது உரிமை. அன்றைய தினம் தனது மகிழ்ச்சிக்கும், சுகாதாரத்துக்கும், நீடித்த ஆயுளுக்கும் பல இறையுருவங்களை வேண்டி வழிபாடு செய்கிறான். பண்டிகையோடும் கொண்டாட் டத்தோடும் இணைந்த வழிபாடுகளில், பலரும் கலந்துகொள்ள ஏதுவாகப் பல நிகழ்வுகள் கலந்திருக்கும்.

சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம் ஆகியன பிள்ளைகள் இருப்பவர்களுக்கும் இல்லாதவர் களுக்கும் பொருந்தும். இவை, பிள்ளைகளை எதிர்பார்த்து நடத்தும் நிகழ்வுகள் அல்ல. ஆடம்பரம் இல்லாமலேயே இந்த வழிபாடுகளை நடத்தலாம். 60 வயது நிரம்பியவர்களுக்கும் 80 வயது 10 மாதம் நிரம்பியவர்களுக்கும் இவை இரண்டும் உண்டு. பிள்ளைகள் செய்யவில்லை என்றால், தாங்களாகவே இந்த வைபவங்களை நடத்திக்கொள்ளலாம். ஏழ்மை இடையூறாக இருந்தால், அந்தத் தினத்தில் கடவுளை வணங்கி, இயலாமையை வெளிப்படுத்தி, அதன் நிறைவை அருளும்படி வேண்டிக்கொள்ளலாம்.

கேள்வி பதில் - ரிது ஜாதகம் பயன்படுமா?

? ஜாதகக் கட்டங்களை ஆய்வுசெய்யும்போது ராசியிலிருந்து கணக்கிட வேண்டுமா, லக்னத்தி லிருந்து கணக்கிட வேண்டுமா?

- எல்.கே.சங்கரகோவிந்தன், சங்கரன்கோவில்

லக்னத்திலிருந்து கணக்கிடுவது சிறப்பு என்கிறது ஜோதிடம். ஒருவன் பிறக்கும்போது பூமியோடும் காலத்தோடும் இணைந்த அவனது தோற்றம், லக்னம். கருவறையில் இருந்து வெளிவரும்போது, உலகத்தின் இணைப்பை ஏற்படுத்திய வேளையே லக்னம். அவனுடன் இணைந்த தேசமும் காலமும்தான் அவனது வளர்ச்சியில் தென்படும் மாறுதலுக்குத் தடயமாக இருக்கும் தகுதியைப் பெற்றிருக்கின்றன.

ராசி என்பதில் மூன்று நட்சத்திரங்களின் பங்கு உண்டு. பிறந்தவனின் நட்சத்திரத்துக்கு மட்டுமே அந்தப் பலன் பொருந்தாது. தவிர, அவன் பிறந்த நட்சத்திரத்தின் வேளை, ஏற்கெனவே லக்னத்தில் ஒட்டிக்கொண்டிருக்கிறது. இரண்டேகால் நாள் வரைக்கும் அவனது பிறந்த வேளையை விரிவாக்கிக் காட்டுகிறது ராசி.

ஆனால், லக்னமோ, அவன் தோன்றிய வேளையை மிகச்சரியாக- துல்லியமாகக் காட்டும். ராசியில் 3 நட்சத்திரக்காரர்களின் பலன் சேர்த்துச் சொல்லப்படும். அது, நடைமுறைக்கும் பொருந்தாது. தவிர, பிறந்த நட்சத்திரம் இரண்டு ராசிகளில் தென்பட்டால், பலன் சொல்லுவது சிக்கலாகிவிடும்.

உதாரணத்துக்கு, மிருகசீரிஷ நட்சத்திரம் சரிபாதியாக இரண்டு ராசிகளில் தென்படும். ஒரே நட்சத்திரத்துக்கு மாறுபட்ட இரண்டு பலன்களைச் சொல்ல வேண்டியது வரும். கிருத்திகை, ரோகிணி, மிருகசீரிஷம் ஆகிய மூன்றில் தோன்றியவர்களது பலன்களை ஒன்றாகச் சொல்லவேண்டியதுவரும்.

பிறந்த வேளையை ஒட்டு மொத்தமாக ஒதுக்கி விட்டு, ராசியை வைத்துப் பலன் சொல்லும் சம்பிரதாயம் வலுப்பெற்றுவிட்டது. அதிசயம் என்னவென்றால், ஜோதிடத்தை நன்கு கற்றுணர்ந்த முதல் அறிஞனும் அதை ஏற்கிறான். பாமரர்கள் மனதை எளிதில் ஈர்க்கச் செய்யலாம் என்பதற்கு
உதாரணமாகத் திகழ்கிறது, ராசியை வைத்து எண்ணும் முறை. பிறந்த வேளைதான் ஒருவனின் அடையாளம். அந்த வேளையுடன் தேசம், காலம், காலத்தின் அளவுகளான நட்சத்திரம், கிரகங்கள் அத்தனையும் ஒட்டிக்கொண்டிருக்கும் உண்மையைச் சொல்வதானால், காலம் என்பது கற்பனை. இவையெல்லாம் சேர்ந்து ஒட்டிக்கொண்டிருக்கும் வேளையையே காலம் எனக் குறிப்பிடுகிறோம். அதற்கு ஆதாரமாக, காலத்தைத் தவிர வேறொன்றும் இல்லாமல் இருப்பதால், வேளையைச் சுட்டிக்காட்டக் காலத்தைக் கையாளுகிறோம் என்று சொல்வது தான் பொருத்தமாக இருக்கும்.

ஒருவன் மிருகசீரிஷ நட்சத்திரத்தில் பிறந்தான். அவனுக்கு ராசியைக் கணக்கிட, ரிஷபத்தைக் கையாண்டால்... அவன் தோன்றாத வேளையான கிருத்திகை மற்றும் ரோகிணி நட்சத்திரங்களின் பலனையும் ராசியை வைத்து அவனில் ஒட்டவைப்பது சிந்தனைக்குப் பொருந்தாத ஒன்று. ஆகவே, ராசியைவிட லக்னத்தை நம்புவது சிறப்பு.

சந்திரன் மனதுக்குக் காரகன். அவனை வைத்து மனநிலையை அளப்பது இன்னும் பொருத்தமாக இருக்கும் எனச் சொல்பவர்களும் உண்டு. சந்திரனின் பங்கு, லக்ன வேளையில் ஒட்டிக்கொண்டிருப்பதால், லக்னமே மன இயல்பையும் சேர்த்துச்சொல்லிவிடுகிறபோது, அதை ஒதுக்கிவிட்டு, ராசியை எண்ணி நடை முறைப்படுத்துவதில் தெளிவு ஏற்படவில்லை.

ஜோதிடம் சிந்தனைக்கு அப்பாற்பட்டது. எனினும், பிறப்பில் கிடைத்த சிந்தனையை முடக்கிவைத்து, ஜோதிடத்தை ஏற்க வேண்டும் என்று சனாதனம் சொல்லாது. ஜோதிடம், ஆராய்ந்து தெரிந்துகொள்ள உபதேசம் செய்கிறது. அதன் தகவல்களை நாம் ஆராய்ந்து தெரிந்து, தெளிவுபெற்று, ஏற்றுக்கொள்ள வேண்டும். ஜோதிடத்தில் ஆராய்ச்சிகுறைதான் இப்படிப்பட்ட இரு வகை விளக்கங்களுக்கு இடமளித்துள்ளது. இன்றைய சூழலில், முழுமையான ஜோதிட அறிஞர்களுக்குப் பஞ்சமில்லை. பாமரர்களுக்கும் சந்தேகம் இல்லாமல் விளக்கும் எண்ணம் பெருகவேண்டும். அதன் வளர்ச்சி அவர்களிடம் இருப்பதை எண்ணிப்பார்க்க வேண்டும். பண்டிதன் சாஸ்திரத்தை வளர்க்கவில்லை; சமுதாயம் அதை வளர்க்கிறது. அறிஞர்கள் நினைத்தால் எல்லாம் நடக்கும். நாமும் அதை ஏற்று மகிழ்வோம்.

- பதில்கள் தொடரும்...