Published:Updated:

சகலமும் சாயி! - சனைச்சரரும் சாயிநாதரும்!

சகலமும் சாயி! - சனைச்சரரும் சாயிநாதரும்!
பிரீமியம் ஸ்டோரி
சகலமும் சாயி! - சனைச்சரரும் சாயிநாதரும்!

சகலமும் சாயி! - சனைச்சரரும் சாயிநாதரும்!

சகலமும் சாயி! - சனைச்சரரும் சாயிநாதரும்!

சகலமும் சாயி! - சனைச்சரரும் சாயிநாதரும்!

Published:Updated:
சகலமும் சாயி! - சனைச்சரரும் சாயிநாதரும்!
பிரீமியம் ஸ்டோரி
சகலமும் சாயி! - சனைச்சரரும் சாயிநாதரும்!

னிப்பெயர்ச்சியையொட்டி டிசம்பர்-24 ஞாயிற்றுக்கிழமை அன்று, உலகம் செழிக்கவும், மக்களின் வாழ்க்கை வளம்பெறவும் வேண்டி, சென்னை-தி.நகர் ஸ்ரீஷீர்டி பாபா தியான மையத்தின் சார்பில் சிறப்புப் பிரார்த்தனை மற்றும் விசேஷ வழிபாட்டு ஆராதனைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து விவரம் அறிய, அந்த மையத்தை நடத்திவரும் அன்பர் திருவள்ளுவன் அவர்களைத் தொலைபேசியில் தொடர்புகொண்டோம். ‘‘சனிப் பெயர்ச்சி சிறப்பு வழிபாடு மட்டுமல்ல, வாரம்தோறும் வரும் சனிக்கிழமைகளிலும்கூட எங்கள் மையத்தில் சனைச்சர வழிபாடு உண்டு. சனீஸ்வரரும் சாயியும்தான் அதற்குக் காரணம்’’ என்று பரவசத்தோடு பகிர்ந்துகொண்டவர், அதுதொடர்பாகத் தனக்கு ஏற்பட்ட அற்புத அனுபவங்களை சக்தி விகடனின் ‘சகலமும் சாயி’ பகுதிக்கும் எழுதி அனுப்பியிருப்பதாகவும் தெரிவித்தார். அந்த அற்புதங்கள் இங்கே உங்களுக்காகவும்.

‘‘2014-ம் ஆண்டு, டிசம்பர் மாதம் இரண்டு நண்பர்களோடு ஷீர்டிக் குச் சென்றிருந்தேன். நாங்கள் சென்றடைந்த நாள் சனிக்கிழமை. என்னுடன் வந்த நண்பர்களில் ஒருவருக்கு அஷ்டமத்துச் சனி. அதையொட்டி, பரிகார வழிபாடுகள் செய்துவருகிறார். அன்று சனிக்கிழமை ஆதலால், ஷீர்டியில் எழுந்தருளியுள்ள சனீஸ்வரருக்கும் பூஜை செய்ய ஏற்பாடு செய்திருந்தார். அதன்படி மூவரும் முதலில் சாயியை தரிசித்துவிட்டு, சனீஸ்வர சந்நிதிக்குச் சென்றோம். மிக திருப்தியாக பூஜை முடிந்தது. தொடர்ந்து ஆஞ்சநேயரை தரிசித்துவிட்டு, ஷீர்டியில் எங்களுக்குப் பழக்கமான அதிகாரி ஒருவரைச் சந்திக்கச் சென்றோம்.

சகலமும் சாயி! - சனைச்சரரும் சாயிநாதரும்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

எங்களை வரவேற்று உபசரித்த அந்த அன்பர், ‘வாங்க புரொஃபசர், மந்திருக்குப் போகலாம்’ என்று அழைத்துச் சென்றார். இது வழக்கமான  நடைமுறையே. நான் எப்போது சென்றாலும் உடன் அழைத்துச் சென்று மந்திரில் தரிசனம் செய்து வைப்பார். அன்றும் எங்களை அழைத்துச் சென்றார். வழக்கம்போல சமாதி மந்திருக்குத்தான் அழைத்துச் செல்கிறார் என்று பார்த்தால், அவர் எங்களைக் கூட்டிப் போய் நிறுத்திய இடம் சனீஸ்வரர் சந்நிதி.

எனக்கு ஆச்சர்யம். ‘பாபா அருளால் இன்று மீண்டும் சனீஸ்வரர் தரிசனம் கிடைக்கிறதே!’ என்று மனதுக்குள் பரபரப்பு. மீண்டும் பூஜை, வழிபாடுகள் முடிந்து பிரசாதங்கள் பெற்றுக்கொண்டோம். அதிகாரி நண்பரும் மாலை சந்திப்பதாகக் கூறி விடைபெற்றுக்கொண்டார்.

மாலை 5 மணி அளவில் மீண்டும் அவரைச் சந்தித்தோம். பணிகள் முடிந்து ஓய்வாக இருந்தவர் மீண்டும் எங்களை மந்திருக்கு அழைத்துச் சென்றார். இப்போதும் சமாதி கோயிலுக்குப் போகவில்லை; சனீஸ்வரர் சந்நிதிக்கே அழைத்துச் சென்றார். அத்துடன், தான் கையோடு கொண்டு வந்திருந்த வெள்ளெருக்கு இலை மாலையை சனீஸ்வரருக்குச் சார்த்தி, பூஜைகளைச் செய்யச் சொன்னார். அதன் பிறகு பிரசாதங் களைப் பெற்றுக்கொண்டபோது, மிகுந்த பரவசம் எனக்குள். ‘எதற்காக இன்று ஒரே நாளில் சனீஸ்வரர் நம்மை மூன்று முறை தன் சந்நிதிக்கு வரவழைத்தார்?’ என்று ஆழ்ந்து யோசித்தேன்.

‘என்னை நாடி வரும் பக்தர்களின் நவகிரக தோஷங்களை, குறிப்பாக சனி தோஷங்களை நீக்கி அருளிச் செய்வேன்’ என்று சாயி சுட்டிக்காட்டியது போல் உணர்ந்ததும், சிலிர்த்துப் போனேன். பஞ்ச பூதங்களையும் நவகிரகங் களையும் அரசாட்சி செய்திடும் சாயியின் ஆசீர்வாதம், இப்பிரபஞ்ச உயிரினங்கள் அனைத்துக்கும், குறிப்பாக சாயி பக்தர்கள் அனைவருக்கும் கிடைத்திட வேண்டும்; அந்தப் பணியையும் தி.நகர் பிரார்த்தனை மையத்தின் மூலமாகவே செய்ய வேண்டும் என்று மனதுக்குள் சங்கல்பித்துக்கொண்டேன்.

இது நிகழ்ந்தது சனிக்கிழமை என்று குறிப்பிட்டேன் அல்லவா? இரண்டு நாள்கள் கழித்து அதாவது செவ்வாய்க் கிழமையன்று சனிப் பெயர்ச்சி. அன்றைக்கும் ஷீர்டியில் அருளும் சனிபகவானுக்கு விசேஷ  பரிகார பூஜைகள் செய்ய வேண்டும் என்று முடிவு செய்தோம். ஆனால், ஓர் இக்கட்டான சூழ்நிலை. ஷீர்டியிலிருந்து திங்களன்றே கிளம்புவதற்கு ஏற்ப ரயில் டிக்கெட்டை ரிசர்வ் செய்திருந்தோம். டிக்கெட்டை கேன்சல் செய்தால் மீண்டும் டிக்கெட் கிடைப்பது கடினம். இப்படியொரு குழப்பமான சூழலில், கோபி என்ற அன்பரின் நினைவு வந்தது. சாயி சந்நிதானத்திலேயே வாழ்ந்துவரும் அவரைச் சந்தித்து, எங்களது நிலையை எடுத்துக்கூறி உதவ வேண்டினோம். அவரும் சம்மதித்தார். அவர் மூலம் உரிய பூஜாரியிடம் பரிகார பூஜைக்குத் தேவையான பொருள்களை வாங்கிக் கொடுத்துவிட்டு, அதற்குரிய சம்பாவனையையும் கொடுத்துவிட்டு மனம் நிறைந்த திருப்தியோடு ஷீர்டியிலிருந்து புறப்பட்டோம்.

சகலமும் சாயி! - சனைச்சரரும் சாயிநாதரும்!


சென்னைக்கு வந்த பிறகு மையத்துக்கு வந்த அன்பர்களிடம் ஷீர்டி அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டதோடு சரி; சனீஸ்வர பூஜையைத் தொடர்ந்து செய்யவில்லை. செய்யவில்லை என்பதைவிட, அதைச் செய்யவேண்டும் என்ற நினைவே இல்லை என்பதுதான் உண்மை.
‘யாருக்கு, எது, எப்போது, எப்படி சாத்தியப்படும்’ என்பதை சாயியே நன்கு அறிவார். அந்தக் காலமும் கனிந்து வந்தது. சாயி எங்களை அடுத்த கட்டத்துக்கு நகர்த்திவைத்தார்.

ஒருமுறை கும்பகோணத்துக்குச் சென்றிருந் தேன். அங்கே ஓர் உணவகத்தில் மகள், மாப்பிள்ளையுடன் சாப்பிட்டுக்கொண்டிருந்த போது, கறுப்பு வண்ண ஆடையுடுத்திய ஒருவர் வந்து பிக்ஷையேற்றுச் சென்றார்.  அந்த விஷயம் அப்போது என்னை உறுத்தவில்லை. ஆனால், அதன்பிறகு சென்னையில் என் வீட்டுக்கு அருகில், அதேபோன்று ஓர் அன்பரும், பெண்மணி யும் அடுத்தடுத்த நாள்களில் பிக்ஷை கேட்டு உணவருந்திச் சென்றனர். தொடர்ந்து, அடுத்து வந்த மாதத்தில் ஒரு நாள், தி.நகர் மையத்தில் மாலையில் தீபம் ஏற்றும் நேரத்தில், கறுத்த உருவத் தோடு ஒருவர் வந்து பிக்ஷை கேட்டு வாங்கிப் போனார்.

அப்போதுதான் என் புத்திக்கு உறைக்க ஆரம்பித்தது. சனீஸ்வரர் கறுப்பு நிறமுடையவர் என்று சாஸ்திரங்கள் சொல்கின்றனவே... என்னுடைய கர்மாக்களை நீக்குவதற்காக அவர்தான் இப்படிப் பல்வேறு சந்தர்ப்பங்களில் அன்பர்களை அனுப்பி பிக்ஷை கேட்கச் செய்து, எனது சங்கல்பத்தை நினைவூட்டுவதாகத் தோன்றியது எனக்கு. ஒருநாள், நமது மையத்தின் அன்பர் சாயிமோகனுடன் அவரது பைக்கில் பயணித்துக்கொண்டிருந்தபோது, எனது அனுபவங்கள் குறித்து அவரிடம் பேசிக்கொண்டு வந்தேன்.

சகலமும் சாயி! - சனைச்சரரும் சாயிநாதரும்!

திடுமென ஓரிடத்தில் பிரேக் போட்டு நிறுத்தியவர், ‘சாயி அங்கே பாருங்க’ என்று கத்தினார். அவர் சுட்டிக்காட்டிய திசையை நோக்கினால்... எங்களுக்கு 50 அடி தூரத்தில் ஒரு ஆட்டோ சென்றுகொண்டிருந்தது. அதன் பின்புறக் கண்ணாடியில் எழுதப்பட்டிருந்தது,   ‘ஸ்ரீ சனீஸ்வராய நமஹ’ என்ற வாசகம்!

எனது ஊர்ஜிதம் உண்மையே என்பதை உணர்ந்தேன். சனீஸ்வர பகவான் ஒரு நீதி தேவன். ஒருவன் தனது வாழ்க்கையில் செழித்து விளங்கும் போது, அகங்காரம் கொள்ளாமலும், வறுமை, நோய், இன்ன பிற கொடுமைகளில் சிக்கித் தவிக்கும் போது நொந்து விபரீத முடிவுகளைத் தேடிக் கொள்ளாமலும் இருக்கவேண்டும். அதற்கான அனுபவப் பாடத்தை அவனுக்குத் தந்து, ஆத்மசுத்தியை அளிக்க முனைபவரே சனீஸ்வரர்.

எத்தகைய நிலையில் இருப்பினும் இறைவனை சதா மனதில் இருத்தி, இறை குணங் களைப் பெற மனிதர்கள் முயற்சி செய்யவேண்டும். அதுவே அவனுக்கு மன நிம்மதியையும் மட்டற்ற மகிழ்ச்சியையும் அளிக்கும்.  இந்த ஞானத் தெளி வினை மனிதனுக்கு தரும்விதம், கொஞ்சம் கசப்பு மருந்து கொடுத்து ஆற்றுப்படுத்தும் ஆசானே சனி பகவான்.

அவ்வகையில் என்னையும் செம்மைப் படுத்தி ஆட்கொள்ள, எல்லாம்வல்ல இறைவனும், சனைச்சரனும், சத்குரு சாயியும் நிகழ்த்தியவையே எனக்கு ஏற்பட்ட அற்புத நிகழ்வுகள் என்று உணர்ந்தேன். அதன் விளைவாகவே, சாயியின் திருவருளால், கடந்த மார்ச் 4 அன்று முதல், சென்னை தி.நகர் சாயி மையத்தில் சனிக் கிழமை தோறும் சிறப்பு வழிபாடுகள் தொடங்கின!’’

தொகுப்பு: பிரேமா நாராயணன்

சனிப்பெயர்ச்சி விழா...

சனிப்பெயர்ச்சியையொட்டி வாசக அன்பர்கள் அனைவரின் நலனுக்காகவும், தேசம் செழிக்கவும், சாயி அன்பர்கள் அத்தனைபேரின் உடல் நலமும், ஆத்ம பலமும் பெருக வேண்டி, சென்னை - தி.நகர் ஸ்ரீஷீர்டி பாபா தியான மையத்தின் சார்பில் சனிப்பெயர்ச்சி சிறப்பு வழிபாட்டு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வேதபாராயணத்துடன் தொடங்கும் விழாவில், ஸ்ரீலலிதா சகஸ்ரநாமம், ஸ்ரீவிஷ்ணு சகஸ்ரநாமம், ஸ்ரீஹனுமன் சாலீசா, ஸ்ரீசனீஸ்வர கவசம் ஆகிய பாராயணங்களுடன், ஸ்ரீசனீஸ்வர பகவானுக்குச் சிறப்பு பூஜை, சனிப்பெயர்ச்சி பலன்கள் குறித்த சிறப்புச் சொற்பொழிவு, கூட்டுப்பிரார்த்தனை - துனி பூஜை ஆகிய வைபவங்கள் நடைபெறவுள்ளன. ஸ்ரீசாயியின் பிரசாதமும் விநியோகிக்கப் படும். இந்த வைபவத்தில் அனைவரும் கலந்துகொண்டு ஸ்ரீசனிபகவான் அருளோடு ஸ்ரீசாயிபகவானின் திருவருளையும் பெற்று வரலாம்.

நாள்: 24.12.17 (ஞாயிறு)
நேரம்: காலை 9 மணி முதல்
இடம்: டாகு மண்டபம் (ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் பள்ளி அருகில்)
தண்டபாணி தெரு, தி.நகர், சென்னை-17

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism