மற்ற எபிசோடுகள்
Published:Updated:

குறை தீர்க்கும் கோயில்கள் - 15 - வாழையடி வாழையாய் வாழவைக்கும் ஈஸ்வரன்!

குறை தீர்க்கும் கோயில்கள் - 15 - வாழையடி வாழையாய் வாழவைக்கும் ஈஸ்வரன்!
பிரீமியம் ஸ்டோரி
News
குறை தீர்க்கும் கோயில்கள் - 15 - வாழையடி வாழையாய் வாழவைக்கும் ஈஸ்வரன்!

டாக்டர் ஜெயம் கண்ணன்

க்களின் குறைகளைத் தீர்க்க மகேசன் குடிகொண்டுள்ள ஆலயங்களில் திருச்சி மற்றும் தஞ்சையைச் சுற்றியுள்ள பாடல்பெற்ற தலங்களையும் வைப்புத் தலங்களையும் இதுவரை நாம் பார்த்து வந்தோம். இந்த இதழில் நாம் காணப்போவது புதுக்கோட்டை மாவட்டத்தில், திருக்களம்பூர் எனும் சிற்றூரில் அமைந்துள்ள அருள்மிகு கதலிவனேஸ்வரர் ஆலயம்.

‘கதலி’ என்றால் வாழை என்று பொருள். வாழை மரங்கள் சூழ்ந்த வனத்தில் குடிகொண்ட இறைவன் என்பதால் இவர் ‘ஸ்ரீகதலிவனேஸ் வரர்' (கதலி வன ஈஸ்வரர்) என்று அழைக்கப்படுகிறார்.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதிக்கு அருகே அமைந்துள்ள திருக்களம்பூர், வரலாற்றுச் சிறப்பும் ஆன்மிகச் சிறப்பும் ஒருங்கே கொண்டது. சுமார் 800 ஆண்டுகளுக்கு முற்பட்ட இக்கோயிலில் குடி கொண்டிருக்கும் மூலவர்,  தீராத நோய்களையும் தீர்த்துவைப்பவர் என்பதால், ஸ்ரீவைத்தியநாத சுவாமி என்றும் அழைக்கப்படுகிறார்.

குறை தீர்க்கும் கோயில்கள் - 15 - வாழையடி வாழையாய் வாழவைக்கும் ஈஸ்வரன்!

திருக்களம்பூருக்கு அருகில் இருக்கும் வேந்தன்பட்டி நகரத்தார் மற்றும் ஊர் பொதுமக்களால் முறையாகப் பராமரிக்கப்படும் இக்கோயிலின் பொறுப்பாளர் சண்முகம், கோயிலின் சிறப்புகளைப் பகிர்ந்துகொண்டார்.

‘‘இங்கு வீற்றிருக்கும் மூலவர், சுயம்புலிங்கம். அவரைச் சுற்றிலும் பிராகாரத்தில் உள்ள வாழை மரங்களும் சுயம்புதான். இந்த வாழை மரங்களுக்கு யாரும் தண்ணீர் பாய்ச்சுவது இல்லை. மழை நீரை மட்டுமே உறிஞ்சி வளரும் வாழைமரங்கள் இவை. இங்கு தோன்றும் வாழைக் கன்றுகளை வெளியே வேறு எங்கு கொண்டு போய் வைத்தாலும் வளராது. அதேபோல், வெளியிடங்களிலிருந்து வாழைக் கன்றுகளைக் கொண்டுவந்து கோயிலுக்குள் வைத்தாலும் வளராது. அது மட்டுமன்று; இந்த வாழைமரத்தின் காய், பூ, தண்டு, பழம் எதையும் மனிதர்கள் சாப்பிடக் கூடாது. வாழைப்பழம் பழுத்த பின்னர், அதைப் பஞ்சாமிர்தம் செய்து சுவாமிக்கு அபிஷேகம் செய்த பின்னரே சாப்பிடலாம். இதனால் உடலில் உள்ள வியாதிகள் குணமாகும் என்பது நம்பிக்கை.

குறை தீர்க்கும் கோயில்கள் - 15 - வாழையடி வாழையாய் வாழவைக்கும் ஈஸ்வரன்!



இங்குள்ள வாழைகளில் இன்னோர் அதிசயம்... இவற்றின் பழங்கள் பார்க்க மலைப்பழம் போல இருக்கும். ஆனால், உரித்தால் ரஸ்தாளிப் பழம் போல இருக்கும். அதேபோல, மரத்தை வெட்டினால் ரத்தம் போல சிவப்பு நிறத் திரவம் வெளிவரும். ஆனால், இவை செவ்வாழைகளும் அல்ல. இந்தப் பழங்களிலிருந்து செய்யப்படும் அபிஷேக பஞ்சாமிர்தத்தை, ஒரு கையளவு சாப்பிட்டோமென்றால், ஒரு நாள் முழுவதும் பசியே எடுக்காது. இப்படி வாழையடி வாழையாக அதிசயங் களைச் சுமந்து வரும் அந்த வாழைத் தோப்பில், முற்காலத்தில் வால்மீகி முனிவர் தபோவனம் அமைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது. அவர் இறைவனைத் தம்முடைய இதயத்தில் ஆட்கொண்டதால், `திருப்புரம் ஆண்ட நாயனார்' என்ற திருப்பெயரும் இத்தலத்து இறைவனுக்கு உண்டு’’ என்று சிலிர்ப்புடன் விவரித்தார் சண்முகம்.

குறை தீர்க்கும் கோயில்கள் - 15 - வாழையடி வாழையாய் வாழவைக்கும் ஈஸ்வரன்!

இங்கே மூலவராக எழுந்தருளியுள்ள லிங்கத் திருமேனியின் மேலே வடுக்கள் இருக்கும். அதற்கு ஒரு தலபுராணம் சொல்லப்படுகிறது.

மதுரையை ஆண்ட பாண்டிய மன்னர், சோழர்கள்மீது படையெடுத்துச் சென்றபோது, வழியில் வாழைத் தோப்புக்கு நடுவே பயணித்தார். வெகுவேகமாகச் சென்ற அவரது குதிரையின் கால் குளம்பு சிவலிங்கத்தின் மேல் பட்டதால்,   லிங்கம் மூன்று பிளவுகள் ஆகி, அதிலிருந்து குருதி கொட்டத் தொடங்கியது. தெய்வக் குற்றத்தால் மன்னரின் பார்வை பறிபோனது. பரிதவித்த மன்னன், இறைவனிடம் மண்டியிட்டு, ‘‘இறைவா நான் அறியாமல் செய்த பிழையை மன்னித்துப் பொறுத்தருள வேண்டும். பறிபோன பார்வை மீண்டும் கிடைக்கவேண்டும்’’ என்று வேண்டினார். அதற்கு இரங்கிய இறைவன், ‘‘எனக்கு இங்கே ஓர் ஆலயம் எழுப்பு.  உனக்குப் பார்வை மீண்டும் கிடைக்கும்’’ என்று அருளினார். மன்னனும் ஆலயம் எழுப்புவதாக உறுதி கூற, அவரின் பார்வை திரும்பியது. இதையொட்டி கதலிவனநாதருக்கு, ஸ்ரீ வைத்தியநாதசுவாமி என்ற பெயரும் உண்டு. இன்றும் மூலவரின் மேல் குதிரையின் குளம்படிபட்ட வடுக்களைக் காணலாம். அதனால்தான் இவ்வூர் ‘திருக் குளம்பூர்’ என்று அழைக்கப்பெற்று, பின்னாளில் திருக்களம்பூர் என்று மருவியதாகவும் சொல்லப்படுகிறது. பாண்டிய மன்னர்கள் எங்கே கோயில் கட்டினாலும், ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரர் இல்லாமல் கட்டுவது இல்லை. இங்கேயும், பிராகாரத்தில் ஸ்ரீமீனாட்சியும் ஸ்ரீசொக்கநாதரும் தனிக்கோயிலில் அருள் பாலிக்கிறார்கள்.

குறை தீர்க்கும் கோயில்கள் - 15 - வாழையடி வாழையாய் வாழவைக்கும் ஈஸ்வரன்!

‘‘திருமணம் ஆகாத ஆண்களோ அல்லது பெண்களோ, வியாழக் கிழமைகளில் இந்தக் கோயிலுக்கு வந்து சுவாமிக்கும் அம்பாளுக்கும் பாயசம் நிவேதனம் செய்து வழிபட்டுவிட்டு, அந்தப் பாயசத்தைப் பள்ளிக் குழந்தைகளுக்குக் கொடுத்தால்,  விரைவில் திருமணம் நடக்கும். அதேபோல் கருத்து வேற்றுமையால் பிரிந்துபோன தம்பதி, மீண்டும் வாழ்க்கைத் துணைவருடன் இணையவேண்டி, இந்த ஆலயத்தை 108 முறை வலம் வந்து, நம்பிக்கையுடன் இறைவனைப் பிரார்த்தித்து, குழந்தைகளுக்கு மிட்டாய் வழங்கினால், மிக விரைவில் அவர்கள் ஒன்று சேர்வார்கள்.

குறை தீர்க்கும் கோயில்கள் - 15 - வாழையடி வாழையாய் வாழவைக்கும் ஈஸ்வரன்!

பிணிகளால் அவதிப்படுவோர், வைத்தியநாத சுவாமிக்கு நல்லெண்ணெய், பஞ்சாமிர்தம், விபூதி, பால் ஆகிய பொருள்களை அபிஷேகம் செய்து, பின்னர் அந்தப் பிரசாதங்களைச் சாப்பிட, நோய் கள் தீரும்’’ என்கிறார் சண்முகம்.

மட்டுமின்றி, குழந்தை வரம் வேண்டுவோர் தம்பதி சமேதராக இங்கு வந்து வாழைக்காய்களைப்  பலியாகச் சமர்ப்பித்து வழிபட் டால், விரைவில் குழந்தை பாக்கி யம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

திருக்களம்பூர் ஸ்ரீகதலிவனேஸ் வரர் ஆலயத்துக்கு வந்தால், மதுரை மீனாட்சி - சொக்கநாதர், காசி விஸ்வநாதர்- விசாலாட்சி, காஞ்சி காம கோடீஸ்வரி ஆகிய அனைத்து தெய்வங்களையும் ஒரே இடத்தில் தரிசனம் செய்த பலன் உண்டு. 10,008 சிவாலயங் களை தரிசித்த பலனும் கிட்டும்.
நீங்களும் ஒருமுறை திருக் களம்பூருக்குச் சென்று கதலிவன நாதரை வணங்கி வாருங்கள்;  வாழையடி வாழையாய் உங்கள் குடும்பம் செழிக்கும்!

- தரிசிப்போம்...

தொகுப்பு:  பிரேமா நாராயணன்
படங்கள்: சாய்தர்மராஜ்

குறை தீர்க்கும் கோயில்கள் - 15 - வாழையடி வாழையாய் வாழவைக்கும் ஈஸ்வரன்!

ஸ்ரீராமன் வழிபட்ட கன்னிமூல கணபதி!

ஸ்ரீராமரின் குழந்தைகள் அவதரித்த தலம் இதுதான்  எனவும்,  சீதாதேவி கர்ப்பிணியாக இருந்தபோது, ராமனின் ஆணைப்படி  லட்சுமணன் சீதையைக் கொண்டுவந்து விட்ட இடம் இதுதான் என்றும் தகவல்கள் உண்டு. சீதா பிராட்டியார், வால்மீகி முனிவர் மற்றும் ரிஷிபத்தினிகள் அனைவரும் இந்த வாழைப்பழங்களைச் சாப்பிட்டுப் பசியாறினார்களாம். லவனும் குசனும் பிறந்து, குழந்தைகள் இருவரும் இளமைப் பருவம் அடைந்தபோது, அவர்களுக்கு இளவரசுப் பட்டம் கட்டவேண்டும் என்று ஸ்ரீசீதாதேவி இறைவனிடம் வேண்ட, இறைவனும் அசரீரியாக ‘எல்லா ஏற்பாடுகளையும் செய்து தருகிறேன்’ என்று அருளினாராம். பிராட்டியாருக்கு மட்டற்ற மகிழ்ச்சி. அந்தத் தருணத்தில்தான் ஸ்ரீராமரின் அசுவமேத குதிரை இவ்வழியாக வந்தது. அதை மடக்கி வாழைமரத்தில் கட்டிப்போட்டார்கள் லவனும் குசனும். மீட்க வந்த லட்சுமணன் தோல்வியடைந்தான். நிறைவாக ராமனே போரிட வந்தார். இரு தரப்புக்கும் வெற்றி தோல்வியின்றி நீடித்தது போர். பின்னர் வால்மீகி மூலம் லவனும் குசனும் தன் மைந்தர்கள் என்பதை அறிந்தார் ராமன். குடும்பம் இணைந்ததற்கு அடையாளமாக, அந்த இடத்தில் மகாகணபதியை பிரதிஷ்டை செய்தார்கள். உளியால் செதுக்காமல், பெரியதொரு கல்லை மற்றொரு கல்லால் தட்டித் தட்டி அவர்கள் உருவாக்கிய கன்னிமூல கணபதியை  இன்றைக்கும் நாம் தரிசிக்கலாம்.

ஆதிசங்கரர் வழிபட்ட அம்பிகை!

ஆதிசங்கரரும் திருக்களம்பூர் திருத்தலத்துக்கு வந்து வழிபட்டுள்ளார். இங்கே அம்பாள் சந்நிதி இல்லை என்பதை அறிந்தவர்,  ஸ்வாமியே ஸ்வாமியைப் பார்ப்பது போன்று இந்தக் கோயிலுக்கு எதிரில், ஸ்ரீதிருவளர் ஒளி ஈஸ்வரர், ஸ்ரீசௌந்தரநாயகி திருக்கோயிலை எழுப்பினாராம். தொடர்ந்து  ஸ்ரீகதலிவனேஸ்வரர் ஆலயத்தில் அம்பாளை பிரதிஷ்டை செய்ததாகச் சொல்கிறார்கள். அதனால் இந்த அம்பாளுக்கு ஸ்ரீகாமகோடீஸ்வரி என்ற திருப்பெயரும் உண்டு.

ஸ்ரீஆதிசங்கரர் காசிக்குச் சென்றபோது, காசி மன்னரைச் சந்தித்து, ‘‘உமக்கு பூர்வஜென்ம பாவம் உள்ளது. அதை நீக்க வேண்டும் என்றால் தமிழ்நாட்டில், திருக்களம்பூரில் வீற்றிருக்கும் ஸ்ரீகாமகோடீஸ்வரி சமேத ஸ்ரீகதலிவனேஸ்வரர் என்ற வைத்தியநாதசுவாமியை வணங்கிவர வேண்டும்’’ என்றாராம். அதற்கு காசி மன்னர், ‘‘பாவங்களைப் போக்க மக்கள் எல்லாம் இந்தக் காசியை நாடி வருகிறார்கள். ஆனால், நீங்கள் திருக்களம்பூருக்குச் செல்லச் சொல்கிறீர்களே!’’ என்று கேட்டாராம். அதற்கு ஆதிசங்கரர், ‘‘காசி பாவம் தீர்க்கக் கூடியதுதான். திருக்களம்பூரில் தரிசனம் செய்தால் பாவங்கள் தீர்வதுடன், நோய்கள் நீங்கி, வாழையடி வாழையாக வளர்ச்சி அடையலாம். குடும்பம், வாரிசு என சகல செளபாக்கியமும் கிடைக்கும்’’ என்றாராம். அவரது அறிவுரைப்படியே காசி மன்னனும் இவ்வூருக்கு வந்தான். அது இரவு நேரமானதால், காலையில் சாமி தரிசனம் செய்யலாம் என்று அங்கே தங்கினான். மன்னரின் கனவில் வயோதிகர் உருவில் இறைவன் தோன்றி, ‘‘சகலருக்கும் காசிக்குச் சென்ற புண்ணியம் கிடைக்கும் வகையில், நீ கொண்டு வந்திருக்கும் காசி விஸ்வநாதரையும் விசாலாட்சியையும் இங்கேயே பிரதிஷ்டை செய்!’’ என்று அருளினார். அதன்படியே, காலையில் உதயாதி நாழிகையில் காசி விஸ்வநாதரையும் விசாலாட்சியையும்  பிரதிஷ்டை செய்து வழிபட்டு அருள்பெற்றுச் சென்றானாம் காசி மன்னன்.