Published:Updated:

‘நந்தகோபாலன் மருமகளே நப்பின்னாய்!’

‘நந்தகோபாலன் மருமகளே நப்பின்னாய்!’
பிரீமியம் ஸ்டோரி
‘நந்தகோபாலன் மருமகளே நப்பின்னாய்!’

சடகோபன் ரங்கநாதன்

‘நந்தகோபாலன் மருமகளே நப்பின்னாய்!’

சடகோபன் ரங்கநாதன்

Published:Updated:
‘நந்தகோபாலன் மருமகளே நப்பின்னாய்!’
பிரீமியம் ஸ்டோரி
‘நந்தகோபாலன் மருமகளே நப்பின்னாய்!’

ன்று, தான் அந்தக் காட்சியைக் காண நேரிடும் என்று உடையவர் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை, தன் சீடர்கள் குழாமுடன் அவர் பயணித்துக்கொண்டிருந்தார்.

அது வேனிற்காலம் முடியும் காலம், ஆனாலும் சூரியன் சுட்டெரித்துக்கொண்டிருந்தான்.

உடையவர் பார்வையின் எதிரே திண்தோளன் ஒருவன்...ஆஜானுபாகுவான அந்த மனிதன், பெண்ணொருத்திக்குக் குடை பிடித்தபடி இவர்களைக் கடந்து சென்றான். அது மட்டுமல்லாமல்,   உக்கிரமான வெயிலில் தரையின் வெம்மையால் அந்தப் பெண்ணின் பாதம் நோகாமல் இருக்க, அவ்வப்போது தனது மேல்துண்டைத் தரையில் விரித்தபடியும் சென்றுகொண்டிருந்தான்.

இதைக் கண்டு அதிசயத்த உடையவர், அவனை நிறுத்தி, ``ஐயா தாங்கள் யார்? இவ்வளவு அக்கறையுடன் இந்தப் பெண்ணைக் காக்க யாது காரணம்?'' என்று கேட்டார்.

‘நந்தகோபாலன் மருமகளே நப்பின்னாய்!’

அந்த அன்பன் பதில் சொன்னான், ``ஸ்வாமி, எனது பெயர் தனுர்தாசன். உறையூரைச் சேர்ந்த நான் அரச மல்லனும்கூட. இவள் என் மனைவி பொன்னாச்சி. இவளைவிட ஓர் அழகியை இந்த உலகத்தில் பார்க்க முடியாது. இவளின் கண் அழகுக்கு இணையாக எதுவுமே இல்லை என்று என்னால் நிச்சயமாகக் கூற முடியும். அப்படிப்பட்ட இவளை இந்தக் கடும் சூரியனிடமிருந்து போர்த்திப் பாதுகாக்கவே நான் இப்படிச் செய்கிறேன்.''

அவனைப் பொறுத்தவரையிலும், அவனுக்கு உலகமே அவன் மனைவிதான். அவளே சாசுவதம் என்று எண்ணினான். ஆனால், அரங்கன் அன்று போட்ட கணக்கு வேறு! உடையவர் அதற்குக் கருவியானார்.

அவருக்கு அந்த அன்பனைத் திருத்திப் பணிகொள்ளத் தோன்றியது. எனவே, ``அப்பா, இவளின் கண்களைவிடவும் அழகான கண்களை உனக்குக் காட்டினால் என்ன செய்வாய்?'' எனக் கேட்டார்.

``ஒருவேளை, அப்படி  நீங்கள் காட்டினால், நான் உங்களுக்கு அடிமையாகிவிடுவேன்'' என்று பதில் சொன்னான் அந்த அன்பன். பிற்காலத்தில், `உறங்காவில்லி' என்று பெரும்பேறும் புகழும் அடையப்போகிறோம் என்பதை அப்போது அவன் அறியவில்லை.

அந்த அன்பனை திருவரங்கம் கோயிலுக்கு அழைத்துச் சென்றார் உடையவர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘நந்தகோபாலன் மருமகளே நப்பின்னாய்!’`குடதிசையில் முடியை வைத்து, குணதிசையில் பாதம் நீட்டி, வடதிசை பின்பு காட்டி, தென் திசை இலங்கையை நோக்கி’ சயனித்துக்கொண்டிருக்கும் நம்பெருமாள்முன் அவனை நிறுத்தினார்.

``ஐயனே, இவரை தரிசித்தபின் முடிவைச் சொல்லுங்கள்'' என்றார்.

அமலனாதிபிரானைச் சேவிக்க சேவிக்க, அதுவரையிலும் பெண்ணின் கண்ணழகால் தன்னை இழந்திருந்த அந்த அன்பனுக்குள்,  ஞானக்கண் மூலம் வேறு அழகு தென்பட்டது. அந்தப் பேரழகில் மெய்ம்மறந்தான் அன்பன்.

அமலன், விமலன், நிமலன், நின்மலன்... இத்தனை பெயர் கொண்ட அரங்கன், தன் முன்வந்து மயங்கி நின்ற அந்த மல்லனையும் சுவீகரித்துக்கொண்டான்.

`திருக்கமலபாதம் வந்தென் கண்ணினுள்ளன வொக்கின்றதே' என்ற திருப்பாணாழ்வாரின் பாசுரப்படி, அந்த அன்பன்தன் கண்ணுக்குள் அதுவரையிலும் இருந்த எல்லா நிலைகளும் விடுபட, அரங்கன் கண்ணழகிலே தன்னை மொத்தமாக இழந்தான்.

பின்னர் ஒருவழியாக மீண்டவன், ``ஸ்வாமி, இதுவரை நான் புத்தி பேதலித்து இருந்துவிட்டேன். என்னை அனுக்கிரஹியுங்கள். தங்களின் சீடனாக என்னை ஏற்றுக்கொள்ளுங்கள்'' என்று உடையவரிடம் வேண்டினான்.

ஆம், அவனும் அவன் மனைவி பொன்னாச்சியும் அன்று முதல் ஸ்ரீராமாநுஜரின் சீடர்களானார்கள்!

அரங்கன் கோயில் ராப் பத்து உற்சவத்தின்போது, நம்பெருமாள் வீதி உலா வரும் வேளையில், அவரின் திருமேனி சிறிது அசைந்தாலும், உருவிய கத்தியுடன் பாய்ந்து வந்து, அரங்கனைக் காக்கத் தன் உயிரையே தியாகம் செய்யும் அளவுக்கு, உறங்காமல் விழிப்புடன் அரங்கன் பணி செய்தவர் என்பதால் அவருக்கு  `உறங்காவில்லி தாசர்' என்ற திருப்பெயரும் வாய்த்தது!

‘நந்தகோபாலன் மருமகளே நப்பின்னாய்!’

அரங்க நகரின் மண் துகள்கள் எல்லாமே நிச்சயம் மோட்சம் அடைந்துவிடுமாம்.  உடைய வரின் திருப்பாதம் பட்ட அந்த மண் துகள்கள்,  மகத்தான அந்த மகானின் பாதம் பட்டும் மண்ணாகவே இருக்க சாத்தியம் உண்டா?!

உடையவர் தினமும் தீர்த்தவாரிக்கு ( ஸ்நானம் செய்வதற்கு ) காவேரி நதிக்கரைக்குச் செல்வார். அப்படிச் செல்லும்போது முதலியாண்டானின் தோள்மீது கைவைத்து நடந்து செல்வார். திரும்பும்போது உறங்காவில்லியின் தோள்மீது கைவைத்து நடந்து வருவார். உலகுக்கு வர்ண பேதம் என்பதே கூடாது என்று பல ஆண்டுகள் முன்பே எடுத்துக்காட்டிய பெருந்தகை அவர்.

இப்படி அவர் தீர்த்தவாரி முடித்துவிட்டு, ஊஞ்சவிருத்திக்குச் சென்று தான் உணவு கொண்டு உண்பது வழக்கம். அப்படியான தருணங்களில், இந்த ஸ்ரீவைஷ்ணவ சந்நியாஸி திருப்பாவையை அனுசந்தித்துக்கொண்டும் பாசுரங்களை சேவித்துக்கொண்டும்தான் பிக்ஷை பெறுவார்.  ஆண்டாளின் பாசுரங்களின் மீது அளப்பற்ற பற்று கொண்டவர்.

அன்றும் அப்படித்தான், உஞ்சவிருத்திக்காக பெரிய நம்பியின் வீட்டு வாயிலில் நின்று பாசுரம் சேவித்துக்கொண்டிருந்தார்.

உடையவரின் குரலைக் கேட்டு அவருக்குப் பிக்ஷையிடுவதற்காக பெரிய நம்பியின் பெண் ணான அத்துழாய் கதவைத் திறந்தாள்.

வாசலில் மெய்ம்மறந்த நிலையில்...

`உந்து மதகளிற்றன் ஓடாத தோள்வலியன் நந்த கோபாலன் மருமகளே நப்பின்னாய்...'

என்ற அழகிய ஆண்டாளின் பாசுரத்தைப் பாடிக்கொண்டிருந்தார் உடையவர்.

தாயாரை முன்னிட்டே எம்பெருமானை அடைய முடியும்  என்பதுதான்   ஸ்ரீவைஷ்ணவத்தின் கோட்பாடு. ஆகையால், அந்தக் கண்ணனை அடைய பிராட்டியான நப்பின்னையை ஆண் டாள் துணைக்கு அழைக்கும் அற்புதமான பாசுரம் இது.

இந்தப் பாசுரத்தை அனுபவித்தபடி உடையவர் பாடிக்கொண்டிருக்க, அத்துழாய் கதவைத் திறந் தாள். மிகச் சரியாக அந்தத் தருணத்தில், `செந்தாமரைக் கையால் சீரார் வளையொலிப்ப வந்து திறவாய்' என்ற வரிகளைப் பாடிக் கொண்டிருந்தவர், அத்துழாயைக் கண்டதும் அப்படியே மயங்கி விழுந்தார்!

பதறிப்போன அத்துழாய் ஓடோடிச் சென்று  தந்தையிடம் விஷயத்தை விவரித்தாள். அதைக் கேட்ட பெரியநம்பியோ பெரிதாகச் சிரித்தார்.

`என்ன இது, இவர் இப்படிச் சிரிக்கிறார்? அங்கே எம்பெருமானார் மயங்கிக்கிடக்கிறார் என்று தகவல் சொன்னால், அதைப்பற்றிக் கவலைப்படாமல் சிரிப்பை வெளிப்படுத்துகிறாரே' என்ற கோபத்துடன் தந்தையை நோக்கினாள் அத்துழாய்.

அவளின் உள்ளக்குறிப்பைப் புரிந்துகொண்ட பெரியநம்பிகள், ``மகளே, உடையவர் `உந்து மதகளிற்றன்' பாசுரத்தைச் சேவித்துக்கொண்டிருந்தாரா?'' என்று கேட்டார்.

‘நந்தகோபாலன் மருமகளே நப்பின்னாய்!’

``ஆமாம் தந்தையே'' பதில் தந்தாள் அத்துழாய்.

``அதுதான் காரணம் அவர் மயக்கம் கொள்ள'' என்ற தந்தையைப் புரிந்துகொள்ளாமல் நோக்கினாள் மகள்.

பெரியநம்பிகள் தொடர்ந்தார். “செந்தாமரைக் கையால் சீரார் வளையொலிப்ப என்ற அடிகளை  அவர் சேவிக்கும் தருணம் உன்னைக் கண்டதும், நப்பின்னை பிராட்டியையே சேவித்ததாகத் தோன்றியிருக்கும் அவருக்கு. அதனால்தான் மயங்கி விழுந்திருப்பார். எல்லாம் சரியாகிவிடும்'' என்றார்.

அவர் சொன்னதுதான் சரி. அதனால்தான் திருப்பாவையில் இந்தப் பாசுரத்தை `உடையவர் பாசுரம்' என்றே கூறுவார்கள் ஸ்ரீவைஷ்ணவர்கள்.

பின்னாளில் உடையாவர் `ஆண்டாளுக்கே அண்ணன்' என்றும்,  `நம் கோவில் அண்ணன்' என்றும் சிறப்புப்பெற, அவர் ஆண்டாளின் மீது கொண்ட பெரும்பற்றே காரணம் எனலாம்.

திருமாலிருஞ்சோலை பெருமாளுக்கு நூறு தடாக்கள் (ஒரு வகை பாத்திரம்) வெண்ணெயும் நூறு தடாக்கள் அக்கார அடிசலும் (சர்க்கரைப் பொங்கல்) சமர்ப்பித்ததாகவும், அவற்றை ஏற்றுக் கொண்டால், ஒவ்வொன்றையும் ஆயிரம் தடாக்கள் அளவு சமர்ப்பிப்பதாகவும் சொல்லுகிறாள்.

`நாறுநறும்பொழில் மாலிருஞ்சோலை நம்பிக்கு நான் நூறு தடா...’ என்ற பாசுரத்தில், `இன்னி வந்தித்தனையும் அமுது செய்திடப் பெறின் ஒன்று நூறாயிரமாகச் சொன்னேன்’ என்கிறாள்.

அவளின் உட்கருத்தைப் புரிந்துகொண்ட ராமாநுஜர், அவள் சொன்னபடியே திருமாலிருஞ் சோலை நம்பிக்கு ஆயிரம் தடாக்கள் வெண்ணெயும், அக்கார அடிசிலும் சமர்ப்பித்தாராம். பின்னர் அவர் ஸ்ரீவில்லிபுத்தூருக்குச் சென்றபோது, அவர் கோயிலுக்குள் நுழையும்போதே, `வாரும் என் அண்ணாவே' அழைத்ததாம் ஆண்டாளின் குரல்.

ராமாநுஜர், ஆண்டாளின் காலத்துக்குப் பிற்பட்ட காலத்தவர் என்றாலும், அவரை ஆண்டாளின் அண்ணனாகவே மதித்துப் பெருமைப்படுத்தியது வைணவம். ஆண்டாளின் வாழி திருநாமத்திலும் `பெரும்பூதூர் மாமணிக்கு பின்னானாள்’ என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தனை சிறப்பு வாய்ந்த ஆண்டாளுக்கு உகந்த மாதம் மார்கழி மாதம். இந்த மாதத்தை தேவர்களின் வைகறைப் பொழுது என்கின்றன ஞானநூல்கள். மார்கழித் திங்களின் வானியல் மகத்துவத்தை இன்றைய விஞ்ஞானமும் வியப்புடன் போற்றுகிறது.

அற்புதமான இந்த மாதத்தில், ஆண்டாளைக் கொண்டு நாம் திருப்பாவை சேவித்து, `தாயாரை முன்னிட்டே அரங்கனைச் சேர வேண்டும்' என்று ஆசார்யர்கள் வழிகாட்டிய வண்ணம், மனதை பக்தி நிலைப்படுத்தி, வருங்காலம் சிறக்கவும் நம் சந்ததி சிறக்கவும் அரங்கனை வழிபட்டு வரம் பெறுவோமே!
 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism