Published:Updated:

காடன் மயிந்தன் விளக்கேற்றிய கோயிலில் கார்த்திகை தீபம்!

காடன் மயிந்தன் விளக்கேற்றிய கோயிலில் கார்த்திகை தீபம்!
பிரீமியம் ஸ்டோரி
காடன் மயிந்தன் விளக்கேற்றிய கோயிலில் கார்த்திகை தீபம்!

சசிதரன் - படங்கள் ஹரிஷ்குமார், தியாகராஜன் கார்த்திக்செல்வன்

காடன் மயிந்தன் விளக்கேற்றிய கோயிலில் கார்த்திகை தீபம்!

சசிதரன் - படங்கள் ஹரிஷ்குமார், தியாகராஜன் கார்த்திக்செல்வன்

Published:Updated:
காடன் மயிந்தன் விளக்கேற்றிய கோயிலில் கார்த்திகை தீபம்!
பிரீமியம் ஸ்டோரி
காடன் மயிந்தன் விளக்கேற்றிய கோயிலில் கார்த்திகை தீபம்!

வீட்டில் நடைபெற்ற விசேஷம் ஒன்றுக்காக, கடந்த வாரம் ஊருக்குச் சென்றிருந்தேன். விசேஷம் முடிந்ததும் வெறுமனே வீட்டில் உட்கார்ந்து டிவி பார்க்க மனமொப்பவில்லை. அண்ணனுடன் வண்டியை எடுத்துக் கொண்டு வெளியில் புறப்பட்டேன். டாக்டர் கலைக்கோவன் தனது புத்தகத் தில் களக்காட்டூர் என்ற ஊரைப் பற்றியும், அங்கிருந்த ஒரு கோயில் பற்றியும் எழுதியிருந்த தகவலை விசாரித்து அறியலாம் என்பது திட்டம்.

சுமார் 25 கி.மீ. தூரம் பயணம் செய்து, களக்காட்டூர் என்ற ஊரை அடைந்தோம். வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு, அங்கிருந்த ஒரு டீக்கடையில்,  ஈஸ்வரன் கோயில் குறித்து விசாரித்தோம். கடைக்காரர், ‘`பைக்ல வந்தீங்களா,  கார்ல வந்தீங்களா?’’ என்று எதிர்க்கேள்வி கேட்டார். ``பைக்லதான் வந்தோம்'' என்றதும், ‘`இப்படியே மேற்கால ஊருக்குள்ள போங்க தம்பி. ஊரைத் தாண்டினதும் ஏரி ஒண்ணு வரும். அந்த ஏரிக்கரை மேல ஒரு மைல் தூரம் போனா, அந்த வழி எங்க முடியுதோ அங்கதான் இருக்கு நீங்க தேடி வந்த கோயில்’’ என்றார்.

காடன் மயிந்தன் விளக்கேற்றிய கோயிலில் கார்த்திகை தீபம்!

வண்டியை எடுத்துக்கொண்டு மீண்டும் பயணப்பட்டோம். ஊர் எல்லையைத் தாண்டியதும் அவர் சொன்ன அந்த ஏரி கண்ணில் தென்பட்டது, அங்கு வந்த பெரியவர் ஒருவரிடம் மேற்கொண்டு வழியை விசாரித்துத் தெரிந்து கொண்டோம். அங்கிருந்து அவர் கைகாட்டிய பாதையில் நடந்து செல்லலாம் அல்லது டூவிலரில் பயணிக்கலாம். கார் போன்ற வாகனங்கள் செல்ல முடியாது. பாதையை மறைத்தவாறு இருபக்கமும் கருவேல மரங்கள். வண்டியில் பயணிக்கும்போது அதன் முட்கள் முகத்தைப் பதம்பார்த்தன. கொஞ்சம் கவனம் பிசகினால் வண்டியோடு ஏரிக்குள் விழவேண்டியதுதான். ஒருவழியாக அந்தப் பாதை முடிவடைந்தபோது, இறங்க யத்தனித்து இடப்பக்கமாகத் திரும்பியபோது...

ஹா..! நான் தேடி வந்த செல்வம்... கைவிடப்பட்ட குழந்தையைப் போன்று, தன்னந்தனியாய் முட்புதர்களுக்கு மத்தியில்!

‘இதோ வந்துவிட்டேன்’ என்று மனதுக்குள் சொல்லியபடி, வண்டியை ஏரிக் கரையில் விட்டுவிட்டுக் கோயிலை நோக்கி ஓடினேன். அண்ணனும் என் பின்னாலேயே ஓடி வந்தார். ஆம்! நான் தேடி வந்த செல்வம் அந்தக் கோயில்தான்!  சுமார் 1100 வருடங்கள் கடந்த கோயில். விரிசல் விட்ட சுவர், விமானம் இடிந்து சிதிலம் அடைந்த கருவறை, கல்வெட்டுகளை மறைத்து சுவர் முழுக்க சுண்ணம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

காடன் மயிந்தன் விளக்கேற்றிய கோயிலில் கார்த்திகை தீபம்!


‘யாரும் வராத இடத்துக்கு இவங்க யார் புதுசா வந்திருக்காங்க?’ என்பதைப் போல், அங்கு ஆடு மேய்க்கும் பெண்மணி ஒருவர் வந்து எட்டிப்பார்த்தார். அவரிடம் கோயில் எப்போது திறப்பார்கள் என்று விசாரித்தபோது, அர்ச்சகர் காலையில் மட்டும்தான் வருவார் என்று தெரிந்தது. ‘வேண்டுமென்றால் ஊருக்குள் போய் கூட்டிண்டு வாங்க’ என்று அவர் சொன்னதைக் காதில் வாங்கிக்கொண்டு, கோயிலைச் சுற்றி வந்தேன்.

சுவர்களைத் தடவிக்கொண்டே கல்வெட்டுகளில் நான் தேடி வந்த பெயர் தென்படுகிறதா என்று தேடத் தொடங்கினேன். தேடும்போதே என் மனம் சுமார் ஆயிரம் வருடங்களுக்கு முற்பட்ட காலத் துக்கு என்னை இட்டுச் சென்றது.

ஆயிரம் வருடங்களுக்கு முன் இந்தக் கிராமத்திலிருந்து ஒருவர் தஞ்சை செல்ல விரும்பினார். அவர் இந்தக் கிராமத்தின் அதிகாரி; பெயர் ‘காடன்மயிந்தன்’. தன் ஊரில் இருக்கும் கோயிலில் தன் மன்னரின் பெயரால், அவர் நலமுடன் இருக்கவேண்டும் என்பதற்காக, விளக்கு ஏற்ற ஆசை. மன்னரை நேரில் சந்தித்து, தனது விருப்பத்தைக் கூறி அனுமதி பெற விரும்பினார். அதற்காக, காஞ்சிபுரம் அருகில் இருக்கும் களக்காட்டூர் என்ற இவ்வூரிலிருந்து தஞ்சைக்குப் பயணப்பட்டார்.

யார் அந்த அரசர்? வேறு யார் நம் ராஜராஜன்தான்!

அரண்மனையில் அரசரைச் சந்தித்த அதிகாரி அவரிடம் தனது விருப்பத்தை முன்வைத்தார். மாமன்னர் ராஜராஜனோ, “ஓர் அரசனான எனக்கு, பொதுமக்களாகிய உங்கள் நலம்தான் முக்கியம். எனவே, என் ஒருவன் நலனுக்காக விளக்கேற்றுவதைக் காட்டிலும் இந்த தேசத்தின் உலக மக்களின் நலனுக்காக விளக்கு ஏற்றுவதே சிறந்தது” என்று அவரை சமாதானப்படுத்தி ஊருக்கு அனுப்பியிருக்கிறார்.

அன்றைக்கு ஒரு சாதாரண கிராம அதிகாரியால், தென்னகம் முழுவதையும் ஒரு குடையின் கீழ் ஆட்சி செய்துவந்த பேரரசரை நேரில் சந்தித்துப் பேச முடிந்திருக்கிறது! அதுமட்டுமன்று, தன் நலனை இரண்டாம் பட்சமாக நினைத்து, தன்னைக் காண வந்த கிராம அதிகாரியின் நலனுக்காகவும், நாட்டு மக்களின் நலனுக் காகவும், உலக மக்களின் நலனுக்காகவும் விளக்கு வைக்கவேண்டும் என்று கூறிய ஒரு பேரரசரின் உயர்ந்த பண்பும் நமக்குத் தெரியவருகிறது.

ஊருக்குத் திரும்பிய அந்த அதிகாரி என்ன செய்தார் தெரியுமா? இறைவன் திருமுன், தன் மன்னரின் விருப்பப்படி தேச மக்களுக்காக ஒன்றும், தனது விருப்பப்படி மாமன்னனின் நலனுக்காக ஒன்றுமாக இரண்டு விளக்குகளை ஏற்ற வசதியாகக் கொடை அளித்தார். மன்னர் மக்களை விட்டுக்கொடுக்கவில்லை; மக்கள் மன்னரை விட்டுக்கொடுக்கவில்லை.

காடன் மயிந்தன் விளக்கேற்றிய கோயிலில் கார்த்திகை தீபம்!

அது அல்லவா பொற்காலம்..!

கோயில் சுவரைப் பார்த்தபடி வந்த நான், சுண்ணாம்புப் பூச்சுகளுக்கு இடையில் இருந்த கல்வெட்டைப் பார்த்ததும், மக்களின் அஜாக்கிரதையால் பழைமைக்குச் சான்றான கல்வெட்டு மறைக்கப்பட்டிருப் பதை எண்ணி மனம் கனத்தது. அந்தக் கல்வெட்டில் ராஜராஜ னின் இயற்பெயர் ‘அருமொழி’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

தொடர்ந்து, அண்ணனிடம் சொல்லிவிட்டு வண்டியில் நான் மட்டும் புறப்பட்டு ஊருக்குள் சென்று விளக்கு வைக்க எண்ணெய், திரி ஆகியவற்றை வாங்கிக் கொண்டேன். அர்ச்சகர் வீட்டை விசாரித்து அவரையும் அழைத்து வந்தேன்.

கோயில் திறக்கப்பட்டது. கருவறையில் அருள்பாலித்த இறை வனைக் கண்ணார தரிசித்தோம். அர்ச்சகர் வரலாற்று ஆர்வலரும் கூட. கல்வெட்டில் சுண்ணாம்பு பூசப்பட்டது குறித்துப்  பெரிதும் வருந்தினார். மேலும், ‘`ஐம்பது ரூபாய் மதிப்புள்ள தட்டு, விளக்கைக்கூட விட்டு வைக்க மாட்டேங்கறாங்க சார். அதனால், இந்தப் பூஜைப் பொருள்களையெல்லாம் தினமும் கையோடு கொண்டு போயிடுவேன்'' அவர் கூறும்போதே, அழுகையை அடக்கிக்கொண்டு பேசுவதுபோல் தோன்றியது.

மிக நல்ல மனிதர். வெகுநேரம் பேசிக் கொண்டிருந்தேன். அவர் பெயரைச் சொன்ன போது சிலிர்த்துப்போனேன்.

ஆம், அவரது பெயர் ராஜேந்திரன்!

நாங்கள் கோயிலுக்குள் பேசிக்கொண்டிருந்த போது, வெளியில் விளையாடிக்கொண்டிருந்த நான்கு சிறுவர்கள் கோயிலுக்குள் ஓடி வந்தார்கள். அந்தச் சிறுவர்கள் மட்டும்தான் கோயிலுக்குத் தொடர்ந்து வருபவர்கள் என்று அர்ச்சகர் சொன் னதைக் கேட்டு, அந்தச் சிறுவர்களை நினைத்து மகிழ்வதா, பொறுப்பற்ற மற்றவர்களை எண்ணி வருந்துவதா என்று தெரியவில்லை.

கல்வெட்டில், ‘ஊருணி ஆழ்வார்’ என்று குறிப்பிடப்பட்டிருந்த அந்த இறைவனுக்கு விளக்கு வைக்கும்படி சொல்லி, நான் வாங்கி வந்த எண்ணெய் மற்றும் திரியைக் கொடுத்தேன். மூன்று அகல் விளக்குகளை எடுத்த ஐயர் மூன்றையும் ஏற்றினார்.

ஒரு விளக்கை என்னிடம் கொடுத்து, ‘`வெளியில் இருக்கும் துர்கைக்கு விளக்கேற்றிட்டு வாங்க'' என்றார்.

காடன் மயிந்தன் விளக்கேற்றிய கோயிலில் கார்த்திகை தீபம்!

அப்படியே துர்கைக்கு விளக்கு வைத்துவிட்டு உள்ளே வந்தேன். மீதம் இருந்த இரண்டு விளக்குகள் கருவறைக்குள் கொண்டு சென்று இறைவன் திருமுன் வைக்கப்பெற்றன. தொடர்ந்து, சுவாமிக்கு தீபாராதனை காட்டப்பெற்றது. கள்ளம்கபடம் இல்லாத அந்த நான்கு சிறுவர்களும், ‘ஓம் நமசிவாய, ஓம் நமசிவாய’ என்று தொடர்ந்து உச்சரித்தனர்.

அவர்களின் அந்த மந்திர உச்சரிப்பின் அதிர் வலைகள் கருவறைக்குள்ளேயே வட்டமிட்டபடி, காதுகளில் எதிரொலித்து, மனதுக்குள் பரவச அனுபவத்தை ஏற்படுத்தின. அந்தக் கோயிலை தரிசிக்க வாய்ப்பு கொடுத்ததற்காக இறைவனுக்கு நன்றி செலுத்தினேன்.

‘`ஐயனே, நீ உகந்தேற்ற நின் திருக்கோயில் மறுபடியும் புதுப்பொலிவு பெறவேண்டும். நின் திருக்கோயிலில் இரண்டு தீபங்கள் ஏற்றப் பெற்றுள்ளன. ஒன்று, மக்களின் நலனில் அன்பும் அக்கறையும் கொண்ட பேரரசர் ராஜராஜனின் புகழ் சந்திர சூரியர் உள்ளவரை நிலைத்திருக்கச் செய்யட்டும். மற்றொன்று, ராஜராஜன் விரும்பியபடியே இந்த உலக மக்களின் நலனுக்காக இருக்கட்டும்’’ என்று வேண்டிக்கொண்டேன். அத்தனை நேரம் என் நெஞ்சை பாரமாக அழுத்தியிருந்த துக்கம், என்னையும் மீறிக் கண்ணீ ராக வெளிப்பட்டது.

இந்தச் சம்பவம் நடந்து மூன்று வருடங்கள் ஆகின்றன. அவ்வப்போது நண்பர்களுடன் ஏரிக் கரையில் இரண்டு கிலோமீட்டர் நடந்து சென்று,  திருக்கோயிலைச் சுத்தப்படுத்தியும், எங்களால் ஆன உதவிகளையும் செய்துவருகிறோம்.

கார்த்திகை மாதத்தின் சிறப்பே தீபம்தான்.  இந்த மாதத்தில் இந்தத் திருக்கோயிலில்  விளக் கேற்றினால் காடன் மயிந்தனின் ஆத்மாவுக்குத் திருப்தி ஏற்படுவதுடன், ராஜராஜன் உலக மக்களிடம் கொண்டிருந்த மகத்தான அன்புக்கு நன்றிக்கடன் செலுத்தியது போலும் இருக்குமே என்று நினைத்தோம்.

காடன் மயிந்தன் விளக்கேற்றிய கோயிலில் கார்த்திகை தீபம்!

எனவே, முகநூலில் கோயிலின் வரலாற்றுத் தகவல்களோடு, அங்கே விளக்கு ஏற்றப்போகும் தகவலையும் பதிவிட்டோம். அதன் விளைவு, திருக்கார்த்திகை தீபத்தன்று சுமார் 40 பேர் அந்தத் திருக்கோயிலில் கூடிவிட்டனர்.

ஆயிரம் வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த காடன் மயிந்தன் என்ற ஒருவருக்காக, தீபத்திருநாளைத் தங்கள் வீட்டில் குடும்பத்துடன் கொண்டாடுவதை விடுத்து, திருக்கோயிலுக்கு வந்துவிட்டார்கள்.

காஞ்சி - உத்திரமேரூர் சாலையில், பாலாற்றை அடுத்து சற்றே உள்ளடங்கி ஏரியின் கீழ் அமைந் திருக்கிறது களக்காட்டூர் சிவாலயம். தீபத்திரு நாளன்று அந்தக் கோயில் தீபங்களின் ஒளியால் ஜொலித்தது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.

ஆமாம், வந்திருந்த பக்த அன்பர்கள் அனை வரும் திருக்கோயிலைத் தூய்மைப்படுத்தி, மாலையில் கோயில் முழுவதும் விளக்கேற்றி ஒளி வெள்ளமாக்கி வழிபட்டதுடன்,  சொக்கப்பனை வைபவத்தையும் நிகழ்த்திக் கொண்டாடி மகிழ்ந்தனர். இதற்குப் பூஜைப் பொருள்கள் கொடுத்து உதவிய எழுத்துச் சித்தருக்கும், உணவு கொடுத்து உதவிய நண்பருக்கும் எங்கள் நன்றி உரித்தாகட்டும்.

எங்களின் இந்தத் திருப்பணி, மன்னரின் நலனை விரும்பிய காடன் மயிந்தனுக்கும், மக்களின் நலனையே பெரிதாகக் கருதிய பேரரசர் ராஜராஜனுக்கும் ஏதோ எங்களால் இயன்ற சிறிய நன்றிக்கடனே ஆகும்.
 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism