Published:Updated:

முக்தி தரும் முகுந்தன் திருநாள்!

முக்தி தரும் முகுந்தன் திருநாள்!
பிரீமியம் ஸ்டோரி
முக்தி தரும் முகுந்தன் திருநாள்!

எம்.என்.ஸ்ரீநிவாஸன்

முக்தி தரும் முகுந்தன் திருநாள்!

எம்.என்.ஸ்ரீநிவாஸன்

Published:Updated:
முக்தி தரும் முகுந்தன் திருநாள்!
பிரீமியம் ஸ்டோரி
முக்தி தரும் முகுந்தன் திருநாள்!

ருமுறை பிரளயத்தில் மூழ்கிய உலகத்தை மறுபடியும் உண்டாக்க விரும்பிய திருமால், நான்முகனைப் படைத்தார். அந்த பிரம்மாவை எதிர்த்து அவரை அழிக்க முயன்றார்கள் இரண்டு அசுரர்கள், பிரம்மனைக் காக்கும் பொருட்டு, திருமால் அசுரர்களை வதைக்க வந்தபோது அசுரர்களுக்கு நல்லறிவு வந்தது. அவர்கள் திருமாலிடம் ``உங்களால் நாங்கள் வதைக்கப்பட்டால் அது நாங்கள் செய்த பாக்கியமே. எங்களுக்கு மரணம் ஏற்பட்டவுடன் வைகுண்டத்தில் வாசம் செய்யும்படியான பாக்கியத்தை அருள வேண்டும்'' என வேண்டிக்கொண்டார்கள். திருமாலும், மார்கழி சுக்லபட்ச ஏகாதசியன்று விண்ணகரத்தின் வடக்கு வாயிலைத் திறந்து அதன் வழியாக சத்யலோகத்துக்கு மேலுள்ள பரமபதத்துக்கு அவர்களை அனுப்பினார்.

அந்த அசுரர்கள் வேண்டிக்கொண்டபடி, அந்த நன்னாளில் பூவுலகில் உள்ள திருக்கோயில்களின் சொர்க்க வாசல் வழியாக தான் எழுந்தருள்வதுடன், அன்று அந்த தரிசனத்தைப் பெறும் அன்பர்களுக்கும் சொர்க்கவாசல் வழியாக வருபவர்களுக்கும் மோட்சம் அளிப்பதாகவும் அனுக்கிரகம் செய்தார்.

அந்த நன்னாளே வைகுண்ட ஏகாதசி திருநாளாக அனைத்துத் திருக் கோயில்களிலும் விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது. இந்தத் தினத்தில் கடைப்பிடிக்கப்படும் ஏகாதசி விரதம், மோட்ச சாம்ராஜ்ஜியத்தை அளிப்பதால், இந்த தினம் `மோக்ஷ ஏகாதசி' என்று சிறப்பிக்கப்படுகிறது.

முக்தி தரும் முகுந்தன் திருநாள்!

பீஷ்மரின் உபதேசம்

வைகுண்ட ஏகாதசியின் மகிமையைப் பற்றி பீஷ்ம பிதாமகர், ஆங்கீரஸர், தருமபுத்திரர் முதலானவர்களுக்கு உபதேசித்தார். அவை:

சிறந்த குலத்தில் பிறந்து சீரும் சிறப்புமாக வாழ்வதற்கு, சித்திரை வைகாசி மாதங்களில் வரும் ஏகாதசி விரதங்களை அனுஷ்டிக்க வேண்டும். ஒருபொழுது மட்டுமே உணவருந்தி ஆனி மாத ஏகாதசி தினங்களில் விரதம் அனுஷ்டிப்பவர்கள் சகல சௌபாக்கியங்களையும் அடைவர்.

ஆடி மாத ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பவர்கள் நன்மக்கட்பேற்றினை அடைவர். அழகு, செல்வ வளத்துடன் வாழ்பவர்கள், ஆவணி மாத ஏகாதசி விரதங்களை அனுஷ்டிப்பவர்களாக இருப்பர்.

புரட்டாசி ஏகாதசி விரதம் செல்வச் செழிப்பையும், இக-பர சுகங்களையும் அளிக்கும். சிறந்த புத்திமானாகத் திகழவும், நற்பிறவி அமையவும் ஐப்பசி மாத ஏகாதசி விரதத்தை அனுஷ்டிக்க வேண்டும்.

கார்த்திகை மாத ஏதாதசி விரதம் கடைப் பிடிப்பவர், தைரியமும் வீரமும் உள்ளவராக மறுபிறவி எடுப்பார்.

மார்கழி மாத ஏதாதசி நோன்பு நோற்பவர் மோட்ச சாம்ராஜ்ஜியத்தை அடைவர். பேரும் புகழும் பெற்றுத் திகழ, தை மாதத்தில் ஏகாதசி விரதம் கடைப்பிடிக்க வேண்டும்.

மாசி பங்குனி மாத ஏதாதசி உபவாஸம் அனுஷ்டிப்பவர்கள், கீர்த்தியுடன் விளங்குவர்.

ஏகாதசியில் நிகழ்ந்த அற்புதங்கள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

முக்தி தரும் முகுந்தன் திருநாள்!


வைகுண்ட ஏகாதசியன்றுதான் திருமால் மந்தர மலையைக் கொண்டு திருப்பாற்கடலைக் கடைய கூர்மாவதாரம் எடுத்தார் என்பது ஆன்றோர் வாக்கு.

குருக்ஷேத்திரப் போர்க்களத்தில் அர்ஜுனனுக்குக் கண்ணன் கீதோபதேசம் செய்ததும் இந்த நன்னாளில்தான் என்ற தகவலும் உண்டு.

அதேபோல திருப்பாற்கடலில் ஆலகால விஷம் தோன்றியபோது, பரமசிவன் அந்த விஷத்தை உண்டு திருநீலகண்டனாக அருளியதும் இந்தத் திருநாளில்தான் என்பது ஐதீகம்.

நம்மாழ்வாருக்காக சொர்க்கவாசல்!


கலி யுகத்தில் நம்மாழ்வாருக்கு முன்பாக வைகுண்டம் செல்வார் எவரும் இல்லை என்பதால்தான் அது மூடப்பட்டிருந்ததாம்.

ஆழ்வார் வைகுண்டப் பிராப்தியடைந்த நாளில்தான் அது அவருக்காகத் திறக்கப்பட்ட தாம். இந்தத் தத்துவத்தின் அடிப்படையிலேயே திருமால் திருத்தலங்களில் வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்க வாசல் திறப்பு வைபவம் நடைபெறுகிறது.

திருமொழித் திருவிழாவும் திருவாய் மொழித் திருவிழாவும்

வைகுண்ட ஏகாதசி வைபவமானது திருமால் திருத்தலங்களில் மிகப் பிரசித்தி பெற்ற விழாவாகும். இந்த 20 நாள்களில் ஆழ்வார்களின் பாசுரங்கள் நான்காயிரமும் ஓதப்படும்.

வைகுண்ட ஏகாதசிக்கு முன்பாக நடைபெறும் `பகல் பத்து’ தினங்களில் நம்மாழ்வாரின் பாசுரங்கள் மட்டுமன்றி, திருமங்கையாழ்வாரின் திருமொழிப் பாசுரங்களும் ஓதப்படும். அதனால் பகல்பத்துத் திருவிழா திருமொழித் திருவிழா என்று அழைக்கப்படும். 

வைகுண்ட ஏகாதசியை அடுத்த ‘இராப் பத்து’ திருவிழாக் காலங்களில் நம்மாழ்வாரின் திருவாய் மொழிப் பாசுரங்கள் ஓதப்படுவதால், அது `திருவாய் மொழித் திருவிழா’ என்று பெயர் பெற்றது.

முக்தி தரும் முகுந்தன் திருநாள்!

நம்மாழ்வார் திருநாள்

பகல்பத்து - இராப்பத்து உற்சவத்துக்குத் திரு அத்யயன உற்சவம் என்று பெயர். திருமங்கை ஆழ்வார், நாத முனிகள், ராமாநுஜர் ஆகியோரால் ஆகம விதிப்படி அமைக்கப்பட்டது இந்தத் திருவிழா.

20-ம் நாள் விழாவில் நம்மாழ்வார் மோக்ஷம் அடைவதாகவும், பின்னர் நமது வேண்டுகோளை ஏற்று நம்மாழ்வாரை திருமால் நமக்கே தந்தருள் கிறாராம். இந்த அடிப்படையில் 20-ம் நாள் உற்சவம், `நம்மாழ்வார் திருவடி தொழல் திருநாள்’ என்றழைக்கப்படுகிறது.

பகல் பத்து இராப்பத்து விழாக்காலங்களில், ஆழ்வார்களின் பாசுரங் களில் குறிப்பிட்டுள்ளபடி பெருமாளுக்கு... அவருடைய வித விதமான வைபவங்களின் அடிப்படையில் அலங்காரம் சமர்ப்பிக்கப்படும். அதேபோல் திவ்யதேச பெருமாள்களைப் போலவும் அலங்கரிப்பார்கள். சில தசாவதார அலங்காரங்களும் நிகழும்.

நாச்சியார் திருக்கோலம்!

இந்த 20 நாள்களிலும் திருக்கோயிலின் பிரதான பெருமான் நடுவில் எழுந்தருளியிருக்க இருபுறமும் ஆழ்வார்களும் ஆசார்ய புருஷர்களும் வரிசையாக எழுந்தருளியிருப்பார்கள்.

வைகுண்ட ஏகாதசிக்கு முதல் நாள் (அதாவது பகல் பத்தின் முடிவு நாள்) பெருமாளுக்கு `நாச்சியார் திருக்கோலம்’ (மோகினி அலங்காரம்) அலங்காரம் செய்யப்படும். நம்மாழ்வார் `நாயிகா' பாவத்தில் பெருமாளைப் பாடியுள்ளதைக் கருத்தில்கொண்டு, ராப்பத்து நாள்களில் அவருக்கும் நாச்சியார் திருக்கோல அலங்காரம் அமையும்.

பூலோக விண்ணகரங்கள்

பரமபதத்தை விண்ணகரம் என்று கூறுவர். அதுபோல நில உலகில் சில திருத்தலங்களை விண்ணகரத்துக்கு இணையான தலங்கள் என்று ஆழ்வார்களும் ஆசாரிய பெருமக்களும் குறிப்பிட்டுள்ளார்கள். அவை:

திருவிண்ணகர் (ஒப்பிலா அப்பன் கோயில்- கும்பகோணம் அருகில்)
காழிச் சீராம விண்ணகரம் (சீர்காழி தாடாளன் சந்நிதி)
அரிமேய விண்ணகரம் (திருநாங்கூர் திவ்ய தேசங்கள்)
வைகுந்த விண்ணகரம் (திருநாங்கூர் திவ்ய தேசங்கள்)
நந்திபுர விண்ணகரம் (நாதன் கோயில்)
பரமேஸ்வர விண்ணகரம் (காஞ்சி வைகுண்டப் பெருமாள் திருக்கோயில்)


வைகுண்ட ஏகாதசி தினத்தன்று, திருவரங்கத் துக்குச் செல்ல இயலாத அன்பர்கள், இந்தத் தலங்களுக்குச் சென்று தரிசித்து, பெருமாளின் திருவருளைப் பெற்று வரலாம்.
 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism