Published:Updated:

ஆலயத்தை மட்டுமல்ல அகத்தையும் தூய்மை செய்தது சக்தி விகடன் முன்னெடுத்த உழவாரப் பணி!

நேற்று மாலை உழவாரப்பணி நிறைவடைந்த பிறகு கோயிலைப் பார்த்தபோது, `நாம் காலையில் பார்த்த கோயில்தானா இது?' என்ற கேள்வியை நமக்குள் எழுப்பியது கோயிலின் புதுப் பொலிவு.

ஆலயத்தை மட்டுமல்ல அகத்தையும் தூய்மை செய்தது சக்தி விகடன் முன்னெடுத்த உழவாரப் பணி!
ஆலயத்தை மட்டுமல்ல அகத்தையும் தூய்மை செய்தது சக்தி விகடன் முன்னெடுத்த உழவாரப் பணி!

முதல் முயற்சியே அபார வெற்றி!... 

பிரசித்தி பெற்ற ஆலயங்களைப் பற்றியும், நற்பலன்கள் தரும் பூஜைகளைப் பற்றியும் எழுதுவதோடு மட்டுமல்லாமல், வாசகர்களை நேரடியாக அந்த நிகழ்ச்சிகளில் ஈடுபடுத்தி, அவர்களுக்கு சிலிர்ப்பூட்டும் அனுபவங்களைத் தருவது, `சக்தி விகட'னின் தனிச் சிறப்பு. அந்த வகையில் திருவிளக்கு பூஜை, சுவாஸினி பூஜை, வேல்மாறல் பாராயணம் வழிபாடு, சிதிலமடைந்த ஆலயங்களின் புனர்நிர்மாணத்தில் வாசகர்களைப் பங்கேற்கச் செய்வது, ஆலயம் தேடுவோம், திருக்கோயில்களில் தீப மேடை சமர்ப்பணம் எனத் தொடர்ந்து பல்வேறு முன்னெடுப்புகளைச் செய்துவருகிறோம். அந்த வரிசையில், பழைமையான திருக்கோயில்களில் உழவாரப் பணிகளை முன்னெடுக்கலாமே என்கிற எண்ணம் தோன்றியது.

முதல் முயற்சியாக  இலம்பையங்கோட்டூர் - அருள்மிகு தெய்வநாயகேஸ்வரர் திருக்கோயிலைத் தேர்வு செய்து, செப்டம்பர் 16 - ம் தேதி ஞாயிற்றுக் கிழமை நன்னாளில் உழவாரப் பணி செய்யலாம் எனத் திட்டமிட்டோம். அது தொடர்பாக, கடந்த சக்தி விகடன் இதழில் வாசகர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தோம். இதழ் வெளியான நாளிலிருந்து ஏராளமான வாசகர்கள் வாட்ஸ் அப் மூலமாகவும், போன் செய்தும், தாங்களும் சக்தி விகடன் மேற்கொள்ளும் உன்னதப் பணியில் பங்கேற்பதற்கு ஆர்வமாக இருப்பதாகத் தெரிவித்து பெயர்களைப் பதிவு செய்துகொண்டார்கள். அவர்களோடு, கோயில் உழவாரப் பணிகளில் தன்னார்வத்துடன் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் பசுமை  சரவணன் தலைமையிலான குழுவினரும் தங்களை இணைத்துக்கொள்ள விரும்பினார்கள். அனைவரும் இணைந்து உழவாரப் பணி செய்யலாம் என முடிவெடுத்தோம்.

சென்னை, பூந்தமல்லியிலிருந்து சரியாக 30 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது இலம்பையங்கோட்டூர் என்னும் சிற்றூர். தேவலோக மங்கைகளான ரம்பை, ஊர்வசி, மேனகை ஆகிய மூவரும் தாங்கள் பெற்ற சாபத்தின் காரணமாகத் தங்களின் அழகையும், பொலிவையும் இழந்து, இந்தத் தலத்துக்கு வந்து வழிபட்டு மீண்டதாக புராணங்கள் சொல்கின்றன. `அரம்பையங் கோட்டூர்' என்னும் பெயர்தான் மருவி `இலம்பையங்கோட்டூர்' என்றானதாக தல வரலாறு.

விகடன் குழுவினர், காலை 7 மணிக்கெல்லாம் ஆலயத்துக்குப் போய்விட்டோம். `பூஜைகள் என்றால் ஆர்வமாகக் கலந்துகொள்ளும் வாசகர்கள், உழவாரப் பணிக்கு வருவார்களா, அதுவும் சென்னையிலிருந்து இவ்வளவு தொலைவில் இருக்கிறதே, அடிக்கடி பேருந்து வசதிகூட இல்லையே' என்னும் தவிப்புடனே காத்திருந்தோம். நேரம் ஆக ஆக வாசகர்கள் ஒவ்வொருவராக வரத் தொடங்கினர். சரியாக 7.30 க்குள் 20க்கும் மேற்பட்ட வாசகர்களும், பசுமை சரவணன் தலைமையில் 60 க்கு மேற்பட்டோரும்  வந்து சேர்ந்தார்கள்.

ஈசனைப் போற்றி உழவாரப் பணிகள் தொடங்கப்பட்டன. கோயிலைச் சுற்றியிருந்த புல், புதர்கள் எல்லாம் மிகச் சிறப்பாகச் சுத்தம் செய்யப்பட்டன. பணிகளுக்கு இடையில் இளைப்பாற பானகம் பரிமாறப்பட்டது. வெளியில் மட்டுமல்லாமல் கோயிலுக்குள்ளும்  தூய்மைப்பணி நடந்தது. மதிய உணவு அங்கேயே தயாரித்து அனைவருக்கும் பரிமாறப்பட்டது. இறுதியாக தெய்வநாகேஸ்வரருக்கும், கனககுசாம்பிகைக்கும் அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டன. தேவாரம், திருவாசகம் பாடி ஈசனை வழிபட்டு, உழவாரப் பணிகள் நிறைவு செய்யப்பட்டன.

இந்தப் பணியில் பல காட்சிகள் நம்மை வியப்பில் ஆழ்த்தின. பசுமை சரவணன் தலையிலான குழுவில் மாமண்டூர், சங்கரம்பாடி, முசரவாக்கம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 60 க்கும் மேற்பட்டோர் வந்திருந்தார்கள். பள்ளி, கல்லூரி மாணவர்கள் முதல் வயதான முதியவர்கள் வரை அனைவரும் ஒரே மாதிரியாக வெள்ளைச் சீருடை அணிந்திருந்தார்கள். ஆரம்பம் முதல் கடைசி வரை சோர்வு என்பதே தெரியாமல் சுறுசுறுப்பாகவும், விறுவிறுப்பாகவும் தங்களை உழவாரப்பணிகளில் ஈடுபடுத்திக்கொண்டனர்.

சிறுவர்கள் அதிகமாக இடம்பெற்றிருந்தார்கள். ஒருவருக்கொருவர்  'ஐயா' என்று பணிவோடு அழைத்துக்கொண்டார்கள். வேலைகளுக்கு இடையே தேவாரம், திருவாசகப் பாடல்களை உற்சாகத்தோடு பாடினார்கள். பூஜைக்கான மாலைகளை வந்திருந்த சிறுமிகளே ஆர்வமாகத் தொடுத்தார்கள். இவ்வளவு சின்னஞ்சிறு வயதிலேயே ஆன்மிகப் பணிகளில் தங்களை ஐக்கியப்படுத்திக்கொண்டு மிகவும் பணிவாகவும், பொறுமையாகவும் நடந்து கொண்டது மிகவும் ஆச்சர்யப்படத்தக்க வகையில் இருந்தது. 

உழவாரப் பணியில் மிகவும் ஆர்வமாக வேலை செய்துகொண்டிருந்த, விவசாயப் பொறியியல் இறுதியாண்டு படித்துவரும் கல்லூரி மாணவி சர்மினியிடம் பேசினோம். 

"சிறுவயதில் இருந்தே சைவ சித்தாந்த வகுப்புகளில் கலந்துகொண்டு வருகிறேன். இதுவரை 30 க்கும் மேற்பட்ட கோயில்களில் உழவாரப் பணிகள் செய்திருக்கிறேன். படிக்கின்ற நேரம் தவிர்த்து பிற நேரங்களில் முழுமையாக இறைப்பணியில் ஈடுபடவே  விருப்பம்'' என்றதோடு நமக்காக ஒரு தேவாரப் பாடலையும், அவரின் சகோதரி சக்தியுடன் இணைந்து பாடினார்.

இந்தக் குழுவை ஒருங்கிணைத்து வரும் பசுமை சரவணனிடம் பேசினோம்,

"எங்கள் குழுவில் 400 க்கும் மேற்பட்டோர் இருக்கிறோம். கடந்த 4 வருடங்களாக இது போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகிறோம். ராணிப்பேட்டை, திருத்தணி, வாலாஜா, களத்தூர், ஏகம்பநல்லூர் எனப் பல பகுதிகளில் எங்கள் குழுவினர் செயல்பட்டு வருகிறோம். ஏரி, குளம் தூர்வாருதல், ஏரிக்கரைகள், மலைகளில் மரம் நடுதல், விதைகள் சேகரித்தல் போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகிறோம். தேர்த்திருவிழா போன்ற விழாக்காலங்களில் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கும்,விழா குழுவினருக்கும் தேவையான உதவிகளைச் செய்துவருகிறோம். விகடனுடன் இணைந்து செயல்பட்டதில் மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது. `சக்தி விகடன்' மேற்கொள்ளும் இதுபோன்ற பணிகளில் தொடர்ந்து ஈடுபட விரும்புகிறோம்" என்றார். 

நேற்று மாலை உழவாரப்பணி நிறைவடைந்த பிறகு கோயிலைப் பார்த்தபோது, `நாம் காலையில் பார்த்த கோயில்தானா இது?' என்ற கேள்வியை நமக்குள் எழுப்பியது கோயிலின் புதுப் பொலிவு. அந்த அளவுக்கு மிகச் சிறப்பாக, மிகத் திருத்தமாக நடைபெற்றிருந்தது உழவாரப் பணி.

மாலை அனைவரும் பிரிய மனமின்றி விடைபெற்றுச் சென்றுவிட்டாலும், ஆலயத்தில் நடைபெற்ற உழவாரத் திருப்பணிக் காட்சிகளும், இறைவனுக்கு நடைபெற்ற சிறப்பு பூஜைகளும் நம் மனதில் அப்படியே பதிந்துவிட்டன. ஆலயத்தை மட்டுமல்ல, நம் அகத்தையும் தூய்மை செய்துகொண்ட அற்புத நாளாக நேற்று அமைந்தது.