Published:Updated:

கண்ணன் நாமம் சொல்லும் கதைகள்!

கண்ணன் நாமம் சொல்லும் கதைகள்!

கண்ணன் நாமம் சொல்லும் கதைகள்!

கண்ணன் நாமம் சொல்லும் கதைகள்!

Published:Updated:
கண்ணன் நாமம் சொல்லும் கதைகள்!
கண்ணன் நாமம் சொல்லும் கதைகள்!

கோயிலுக்குச் செல்கின்றீர்கள். அங்கே அந்த ஆலயம், குப்பையும் கூளமுமாகக் காட்சி தருகிறது. மதில் மற்றும் சந்நிதி விமானங்களில் சின்ன விரிசல்களும், அந்த விரிசல்களில் வேர்விட்டு வளர்கிற மரங்களும் கிளை பரப்பி நிற்கின்றன. கோயில் குளத்தின் படிக்கட்டுகளில் பாசி படர்ந்து, கற்கள் பெயர்ந்து காணப்படுகின்றன. இதையெல்லாம் பார்த்துவிட்டு, நம்மில் பலர் என்ன செய்வோம்?

##~##
கோயிலின் நிர்வாக அலுவலகத்துக்குச் சென்று, அங்கேயுள்ள அதிகாரியிடம், 'இந்தக் கோயிலுக்கு ஏதாவது செய்ய நினைக்கிறேன்’ என்று சொல்லி, ஒரு ஐந்நூறோ ஆயிரமோ... நம்மால் முடிந்ததைத் தருவோம். ரசீதை வாங்கிக்கொண்டு, நன்கொடை தந்த நிறைவுடன், கிளம்புவோம். ஆனால், அந்தக் குப்பையை சட்டென்று எடுத்து அகற்ற முனைவதே இல்லை நாம்.

பிராகாரத்தில் குப்பையும் மண்ணுமாகக் கிடக்கிறதே என்று, குளத்தில் இருந்து தண்ணீரை எடுத்து வந்து பிராகாரத்தில் தெளித்துச் சுத்தப்படுத்த நினைப்பவர்களும் செயல்படுபவர்களும் மிக மிகக் குறைவு. ஆலயப் பணிக்கு நம்மால் இயன்ற தொகையைக் கொடுத்து ரசீதைப் பெற்றுக் கொள்வதும் ஒருவகைப் புண்ணியம்தான். ஆனால், நாமே நம் கைககளால் செய்யும் ஆலயப் பணிக்கு நிகரில்லை; இப்படிச் செய்வதன் மூலம் கிடைக்கிற மனநிறைவுக்கு எல்லையும் இல்லை.

ஆக, கோயிலின் உடனடித் தேவை சுத்தம், தூய்மை. அடுத்தடுத்த தேவைகள்... கோயிலின் சீரமைப்புப் பணிகள்! அதேபோல்தான் பகவானும். அதாவது, தனக்கு ஏதேனும் ஒன்றென்றால்கூடப் பொறுத்துக் கொள்வான்; தன் அடியவர்களுக்கு ஏதேனும் சங்கடம், ஆபத்து என்றால், சட்டென்று கோபம் கொள்வான், ஸ்ரீகிருஷ்ணன். 'கோவிந்தா’ எனும் திருநாமத்தைச் சொன்னதும், சரசரவென புடவைகளை விட்டு, திரௌபதியின் மானம் காத்தான், கண்ண பரமாத்மா. அதனால்தான், ஸ்ரீஆண்டாள்கூட, 'கோவிந்தா என்று உச்சரித்தால், உடுத்திக் கொள்ள ஆடைகள் தருவான் அழகுக் கண்ணன்’ எனப் பாடினாள்.

இத்தனைப் பெருமைகள் கிடைத்தாலும்கூட, 'இப்படிப்பட்ட நேரத்தில் அருகில் இல்லாமல் போய்விட்டேனே...’ என வருந்துகிறவன் கண்ணன் என்று பார்த்தோம். அதாவது, 'காலத்தே உதவி செய்வது’ என்பதைத்தான் ஸ்ரீகிருஷ்ணன் உணர்த்துகிறான்.

கண்ணன் நாமம் சொல்லும் கதைகள்!

இறைவனிடம் நாம் என்ன கேட்கிறோம்? 'எனக்கு அதைக் கொடு; இதைக் கொடு’ என்று மளிகைக் கடைப் பட்டியல் போன்று, நீளமாகக் கோரிக்கைகளை வைக்கிறோம். 'அவனுக்குச் செய்திருக்கிறாய். எனக்குச் செய்யவில்லையே..?’ என்று அவனிடம் கோபித்துக்கொள்கிறோம். உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா? இதோ... இந்தப் புழுவாகவும் விலங்காகவும் படைக்காமல், செடியாகவும் மரமாகவும் உருவாக்காமல், இந்த மானிடப் பிறவியை நமக்குக் கொடுத்திருக்கிறானே, பரம்பொருள். இறைவனை வணங்குவதற்கும், அவனை நமஸ்கரித்துத் தொழுவதற்குமான இந்தத் தேகத்தைத் தந்திருக்கிறானே, அவன்! இதைவிட, வேறென்ன வேண்டும் உங்களுக்கு?!

நாம் கேட்டதை மட்டுமின்றி கேட்காததையும் கொடுத்து, வாழ வைத்துக் கொண்டிருக்கிற பெரும் வள்ளல், பகவான் ஸ்ரீகிருஷ்ணர். உண்மையில், இனி கொடுப்பதற்கு அவனிடம் ஏதும் இருக்கிறதோ இல்லையோ... தெரியாது. ஆனால், இறைவனுக்கு நாம் கொடுக்க வேண்டியதுதான் ஏராளமாக இருக்கின்றன.

இந்த உலகில், மனிதராகப் பிறந்திருக்கிற நாம் எல்லோரும் எதற்காகவேனும் அழுதுகொண்டே இருக்கிறோம். பரீட்சையில் பெயிலானால் அழுகிறோம்; நல்ல வேலை கிடைக்கவில்லை என்றால் அழுகிறோம்; வீடு- வாசல் என்று வசதியாக வாழமுடியாவிட்டாலும் கதறிக் கண்ணீர் விடுகிறோம்; 'எல்லாம் என் விதி...’ என்று அழுது அரற்றுகிறோம்.

அழுதுகொண்டே பிறந்தாலும், உண்மையில் நாம் அழப் பிறந்தவர்கள் இல்லை. அப்படியெனில், நாம் அழவே தேவையில்லையா?

'ஸ்ரீகிருஷ்ண சரிதத்தைக் கேட்டு அல்லது படித்து, எவனொருவனுக்கு கண்களில் இருந்து கரகரவெனக் கண்ணீர் வழிகிறதோ, உடலின் ரோமங்கள் அனைத்தும் விதிர்த்து, ஆச்சரியத்து மயிர்க்கூச்செறிந்தபடி நிற்கின்றனவோ, சரிதத்தைக் கேட்ட தாக்கத்தால், நிற்க முடியாதபடி எவரின் உடல் துவண்டு போகிறதோ... அவனே உண்மையான பாகவதன்; அவனே, சத்தியமான அடியவன்’ என்று அடியவர்களைப் போற்றுகிறார் குலசேகர ஆழ்வார். அத்தனை உணர்ச்சிகளையும் ஒருங்கே கொண்டது, ஸ்ரீகிருஷ்ண சரிதம்.

இந்த உலகையும், உலகத்து மனிதர்களையும் படைத்ததுடன் தமது கடமை முடிந்துவிட்டது என்று கருதாமல், ஆபத்பாந்தவனாக நம்மைக் காக்கிற பரம்பொருளை நினைத்து, அவனது சரிதத்தைக் கேட்டுக் கண்ணீருடன் 'பல்லாண்டு பல்லாண்டு...’ என அவனை நீடுழி வாழப் பாடுவதைத் தவிர, நாம் என்ன கைம்மாறு செய்துவிடமுடியும், சொல்லுங்கள்!

கண்ணன் நாமம் சொல்லும் கதைகள்!

தனக்கொரு அபசாரம் என்றால் பொறுத்துக் கொள்கிறவன், அடியார்க்கு அபசாரம் என்றால் பொறுக்கமாட்டான் என்று சொன்னேனே... ஹிரண்ய கசிபு திடுதிப்பென்று பகவானை வெறுத்து ஏசினானா என்ன? ஆரம்பத்தில் இருந்தே அவன் இறைவனை தூஷிக்கத்தானே செய்தான்! ஆனால், அதுவரை பொறுத்துக்கொண்டிருந்த பகவான், தன் அடியவரை அபசாரம் செய்து பேசியபோது, களங்கப்படுத்தி ஏளனம் செய்த தருணத்தில், தாங்கமுடியாமல் சட்டென்று ஆவேசமாகி, உக்கிரத்தைக்

காட்டினான் அல்லவா?!

இதனால்தான் அவனுக்கு 'அனலஹா’ எனும் திருநாமம். அதேபோல், 'தர்ப்பஹா’ என்றும் 'தர்ப்பதஹா’ என்றும் திருநாமங்கள் உண்டு. தர்ப்பஹா என்றால்... மதம், ஆசை, கர்வம், மமதை என்று அர்த்தம். தேவதைகளின் அபிலாஷைகளை, மதத்தை, கர்வத்தை, மமதையைக் கொன்றான் இறைவன் என்பதே இந்தத் திருநாமத்தின் பொருள்!

திருமாலின் க்ஷேத்திரத்தில், திருப்பாவாடை சார்த்துதல் எனும் வைபவம் நடைபெறும். குறிப்பாக, காவிரிக்கரையில் பள்ளிகொண்டிருக்கிற அரங்கனின் ஆலயத்தில் இந்த விழா பிரமாண்டமாக நடைபெறும். ஸ்ரீரங்கம் என்றாலே பிரமாண்டம்தான்! கோயில்- பெரியகோயில்; தாயர்- பெரியபிராட்டி;

திருமஞ்சனம்- பெரிய திருமஞ்சனம்; திருப்பாவாடை- பெரிய திருப்பாவாடை... என எல்லாமே பெரிதுதான்; பிரமாண்டம்தான்!

சந்நிதிக்கு முன்னே, அன்னம் பரப்பிக் கொண்டாடுகிற அற்புத விழாவை, இந்திர வழிபாடு என்பார்கள். குழந்தைகள், திருப்பாவாடை சார்த்தி வழிபட்டபோது, ஸ்ரீகிருஷ்ணன் அவர்களிடம் 'என்ன செய்கிறீர்கள்?’ என்று கேட்க... 'மழையைத் தரும் இந்திரனுக்கு விழா எடுத்து மரியாதை செய்கிறோம்’ என்றார்கள். உடனே குறும்புக் கண்ணன் குழந்தைகளைப் பார்த்து, 'இந்திரனா மழையைத் தருகிறான்? கோவர்த்தன மலை அல்லவா, மழையைத் தருகிறது. அதுமட்டுமா? அந்த மலை, மழையைத் தருவதுடன், அங்கிருந்து அருவியென அதைப் பொழியச் செய்கிறது. அத்துடன், மரங்களையும் தருகிறது. பூக்களையும் காய்- கனிகளையும் வழங்குகிறது. எனவே, கோவர்த்தன மலைக்கு, பூஜை செய்யுங்கள்’ என்றான் கண்ணபிரான்.

உடனே கோவர்த்தன மலைக்குப் பூஜை செய்ய ஆயத்தமானார்கள், அந்தக் குழந்தைகள். ஏன், எதற்கு என்றெல்லாம் அவர்கள் கேட்கவே இல்லை. அவர்களைப் பொறுத்தவரை, 'நம் கண்ணன் சொல்லிவிட்டான். சரியாகத்தான் இருக்கும்’ என்கிற அசைக்கமுடியாத நம்பிக்கை.

இன்னொரு விஷயம்... 'கண்ணனை அன்றி நமக்கு வேறு தெய்வம் இல்லை!’ என்பதில் உறுதியுடன் இருந்தனர் அவர்கள்.

அந்த உறுதியும் நம்பிக்கையும் உங்களுக்கு இருந்தால், அந்தக் கோவர்த்தன மலையை இன்னொரு முறை, உங்களுக்காகவும் தூக்கி வருவான் செல்லக்கண்ணன்!

- இன்னும் கேட்போம்