திருத்தலங்கள்
தொடர்கள்
Published:Updated:

‘இது யாக பூமி... யோக பூமி!’ - துங்காநதிக்கரையில் கம்பீரமாக எழும் நரசிம்மர் ஆலயம்!

‘இது யாக பூமி... யோக பூமி!’ - துங்காநதிக்கரையில் கம்பீரமாக எழும் நரசிம்மர் ஆலயம்!
பிரீமியம் ஸ்டோரி
News
‘இது யாக பூமி... யோக பூமி!’ - துங்காநதிக்கரையில் கம்பீரமாக எழும் நரசிம்மர் ஆலயம்!

எஸ்.கண்ணன் கோபாலன் - படங்கள்: தே.அசோக்குமார்

ரிஹரபுரம்- துங்கா நதி தீரத்தில் அமைந்திருக்கும் புனிதத் தலம்; தட்ச பிரஜாபதி யாகம் செய்த யாக பூமி; அகத்தியர் தவமியற்றிய தவபூமி; ஆதிசங்கரர், சனாதன தர்மத்தைச் செழிக்கச் செய்த ஞானபூமி.

ஆம்! இந்தத் தலத்தில்தான் தட்ச பிரஜாபதி யாகம் செய்ததாகவும், அந்த யாகத்திலிருந்து சிவபெருமான் தட்சஹர சோமேஸ்வரராகத் தோன்றி அனைவருக்கும் அருள்புரிந்ததாகவும் விவரிக்கிறது, ஸ்காந்த புராணத்தின் சஹ்யாத்ரி காண்டம்.

மட்டுமன்றி, அகத்திய மகரிஷி தவமியற்றியதன் காரணமாக இந்தத் தலம் சிறந்ததொரு தவபூமியாகவும் திகழ்கிறது. அகத்தியர் பூஜித்த ஸ்ரீலக்ஷ்மி நரசிம்மரின் சாளக்கிராமம் இன்றைக்கும் இங்குள்ள ஸ்ரீமடத்தின் வழிபாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜகத்குரு ஸ்ரீஆதிசங்கரர், இங்கே ஸ்ரீசக்ரம் பிரதிஷ்டை செய்ததுடன், வித்யைக்குத் தேவியான ஸ்ரீசாரதாம்பாளையும் எழுந்தருளச் செய்து வழிபட்டார். மேலும், இந்த க்ஷேத்திரத்தில் ஸ்ரீஆதிசங்கராசார்ய சாரதா லக்ஷ்மிநரசிம்ம பீடத்தை ஏற்படுத்தி, ஸ்ரீஸ்ரீஸ்வயம்பிரகாச கிருஷ்ண யோகேந்திர மஹா ஸ்வாமிக்கு மந்திர தீட்சை கொடுத்து, பீடாதிபதியாக நியமித்தார். அத்துடன், அகத்தியர் பூஜித்த ஸ்ரீலக்ஷ்மிநரசிம்ம சாளக்கிராம வழிபாட்டுக்கும் நியமங்களை வகுத்துத் தந்தார்.

சுமார் 600 வருடங்களுக்கு முன்பு விஜயநகர அரசராக இருந்தவர் ஹரிஹர ராயர். அவர், இந்த க்ஷேத்திரத்தில் வேத சம்ரட்சணத்துக்காக ஓர் அக்ரஹாரம் ஏற்படுத்தியதுடன், பல கிராமங்களை மானியமாகவும் அளித்தாராம். அப்போதிருந்து இந்தத் தலம் `ஹரிஹரபுரம்’ என்ற பெயரில் அழைக்கப்பெறுவதாகச் சொல்கிறார்கள்.

இங்கே, ஸ்ரீலக்ஷ்மிநரசிம்மர் வழிபாடு சிறப்பாக நடைபெறுவதைத் தரிசிக்கும்போது,  ஆதிசங்கரரின் திவ்விய வாழ்க்கையில் நடை பெற்ற ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது.

‘இது யாக பூமி... யோக பூமி!’ - துங்காநதிக்கரையில் கம்பீரமாக எழும் நரசிம்மர் ஆலயம்!

ஆதிசங்கரருக்காக வந்த நரசிம்மம்!

திசங்கரரின் நான்கு சீடர்களில் ஒருவரான சனந்தனர், தீவிரமான நரசிம்ம உபாசகர். மேலும், அதீத குருபக்தியின் காரணமாக, ‘பத்ம பாதர்’ எனும் சிறப்புப் பெயரைப் பெற்றவர்.

ஒருமுறை, காபாலிகன் ஒருவன் பைரவரின் அருள் பெறவேண்டி யாகம் செய்தான். அந்த யாகத் தீயில் யோகி ஒருவரை பலி கொடுக்க நினைத்தவன், அந்தப் பகுதியில் நிஷ்டையில் இருந்த ஆதிசங்கரரை பலியிடத் துணிந்தான். இதைத் தம் ஞானதிருஷ்டியால் அறிந்த சனந்தனர், தம்முடைய உபாசனா மூர்த்தியான நரசிம்மரைப் பிராத்தித்தார். நரசிம்மரும் சனந்த னரின் உடலில் ஆவாஹணமாகி, காபாலிகனைக் கொன்றார்.

‘இது யாக பூமி... யோக பூமி!’ - துங்காநதிக்கரையில் கம்பீரமாக எழும் நரசிம்மர் ஆலயம்!தம் மீது நரசிம்மர் ஆவாஹணமானது, காபாலிகனைக் கொன்றது எதுவுமே சனந்தனருக்குத் தெரியாது. காபாலிகனின் அலறல் சத்தம் கேட்டு, நிஷ்டை கலைந்து கண் விழித்த ஆதிசங்கரர், நடந்த விஷயத்தை ஞானதிருஷ்டியால் அறிந்துகொண்டார். அவரே நடந்த  விஷயத்தை  சனந்தனருக்கு  விளக்கியதுடன்,

‘`சனந்தனா, உன்னுடைய நரசிம்ம உபாசனை ஸித்தியாகிவிட்டது’’ என்றும் கூறினார்.

ஆக, ஹரிஹரபுரத்தில் ஸ்ரீஆதிசங்கராசார்ய ஸ்ரீசாரதா லக்ஷ்மிநரசிம்ம பீடம் தோன்றியதையும், இந்தச் சம்பவத்தையும் பொருத்திப்பார்க்கும் போது, உள்ளம் சிலிர்க்கிறது.

தவ பூமி... யோக பூமி... ஞான பூமி!

வபூமி, யோகபூமி, ஞானபூமி என்றெல்லாம் சிறப்புப் பெற்றுத் திகழும் ஹரிஹரபுரம், இனி நம் கர்மவினைகளை எல்லாம் இல்லாமல் செய்து, அனைத்து யோகங்களையும் அருளும் யோகபூமி என்றும் சிறப்புப் பெறும். காரணம், அங்கே அமையவிருக்கும் ஸ்ரீலக்ஷ்மிநரசிம்மர் திருக்கோயில்!

பல நூறு ஆண்டுகளாகப் பிரசித்திப் பெற்றுத் திகழும் ஹரிஹரபுரம் ஸ்ரீலக்ஷ்மிநரசிம்மர் திருக் கோயிலுக்குத் திருப்பணிகள் செய்து, அந்தக் கோயிலைப் புதுப் பொலிவுடனும், அளவற்ற அருளாற்றலுடனும் திகழச் செய்யவேண்டும் என்று திருவுள்ளம் கொண்டார், பீடத்தின் இன்றைய பீடாதிபதி ஸ்ரீஸ்ரீஸ்வயம்பிரகாச சச்சிதானந்த சரஸ்வதி மகா ஸ்வாமிகள். இந்தக் கோயிலை மிக பிரமாண்டமாக நிர்மாணித்து, ஸ்ரீவஜ்ரஸ்தம்ப லக்ஷ்மிநரசிம்மரைப் பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்ற உன்னத நோக்கத்தில் கடந்த ஏழு ஆண்டுகளுக்கும் மேலாகப் பாடுபட்டு வருகிறார்.

அவரது திருப்பணிகள் குறித்து அறிந்த நாம், ஸ்ரீலக்ஷ்மி நரசிம்மருக்குப் பிரமாண்டமாக அமையவிருக்கும் திருக்கோயிலைத் தரிசிக்கச் சென்றோம்.

‘இது யாக பூமி... யோக பூமி!’ - துங்காநதிக்கரையில் கம்பீரமாக எழும் நரசிம்மர் ஆலயம்!

துங்கபத்ரா நதிக்கரையில் எழிலோவியமாக எழும்பிக்கொண்டிருக்கிறது திருக்கோயில். மேற்குப் பார்த்து அமைந்திருக்கும் ஆலயத்துக்கு மேற்கிலும் கிழக்கிலும் கோபுரங்கள் அமைந்துள்ளன. கோயிலின் கிழக்குப் பகுதியில் துங்கா நதி தெற்கிலிருந்து வடக்காக உத்தரவாகினியாகத் தவழ்ந்து செல்கிறது.

இதன் காரணமாகவே ஹரிஹரபுரம் காசிக்கு நிகரான தலமாகப் போற்றப்படுகிறது. துங்கா நதியில் நீராடிவிட்டு, கிழக்குக் கோபுரம் வழியாக ஆலயத்துக்குள் செல்ல வசதியாக, நதிக் கரையிலிருந்து படிகள் அமைக்கப்பட்டுள்ளன.

காலைக் கதிரொளியில் பொன் போன்ற பிரகாசத் துடன் பாய்ந்து சென்ற நதியின் அழகில் மனம் லயித்தபடி, ஆற்றுத்துறையிலிருந்து நம்மை கரைக்கு இட்டுச் செல்லும் படிக்கட்டுகள் நிறைவடையும் இடத்தில்... மிகக் கம்பீரமாக எழும்பி வரும் கோபுரத்தையும் தரிசித்தோம். மிக அற்புதமான அனுபவம் அது. இயற்கையின் இறையின் பிரமாண்டத்தை நமக்கு உணர்த்திய தருணம் அது!

திருப்பணிகள் நடைபெற்று வருவதால், நாம் சுற்றிக் கொண்டு ஸ்ரீமடத்தை அடைந்தோம்.

ஸ்ரீமடத்துக்கு எதிரில் சிறியதொரு கோயில் அமைந்திருக்கிறது. அங்கேதான் பழைய ஆலயத்தில் வழிபடப்பெற்று வந்த தெய்வ மூர்த்தங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, தினசரி பூஜைகள் நடைபெறுகின்றன.  அந்தக் கோயிலில் பிரதானமாக ஸ்ரீலக்ஷ்மி நரசிம்மர் காட்சி தருகிறார். சிறிய பிராகாரத்தில் ஆஞ்சநேயர், விநாயகர், தட்சிணாமூர்த்தி, சோமேஸ்வரர் ஆகிய மூர்த்தங்களும் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கின்றன.

அந்தச் சிறு கோயிலையொட்டியே நவகிரக சந்நிதியும் அடுத்து யாக சாலையும் அமைந்திருக்கின்றன. யாக சாலையில் பக்தர்களின் விருப்பத்தின்பேரில், யாகங்கள் நடைபெறுகிறதாம். பெரும்பாலும் தினமும் ஒரு யாகமாவது நடைபெறும் என்று நம்முடன் வந்த அன்பர் தெரிவித்தார். யாகசாலையில் தட்ச யாகத்தை நினைவுபடுத்தும் வகையில் ஒரு சிற்பம் காணப்படுகிறது.

அந்த ஆலயத்தைத் தரிசித்து வெளியேறிய நாம், அடுத்து அருகிலேயே புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் கோயிலின் மேற்கு கோபுர வாசல் வழியாக உள்ளே சென்றோம்.

பெருமளவு திருப்பணிகள் நிறைவுபெற்று, இன்னும் சில திருப்பணிகளே நிறைவு பெறவேண்டிய நிலையில் இருக்கின்றன. வைகாசி மாதம் கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றனவாம்.

‘இது யாக பூமி... யோக பூமி!’ - துங்காநதிக்கரையில் கம்பீரமாக எழும் நரசிம்மர் ஆலயம்!

முழுவதும் கற்களைக்கொண்டு கவினுற அமையவிருக்கும் ஆலயம், இரண்டு நிலைகளுடன் அமைந்திருக்கிறது. கீழ்நிலையில் மகாவிஷ்ணுவின் தசாவதாரங்களைச் சித்திரிக்கும் கற்சிலைகள் நேர்த்தியான அழகுடன் காட்சி தருகின்றன.

கோயில் சுவர்களின் மேலாக வரிசையாக கஜலக்ஷ்மி சிற்பங்கள் அழகாக அணிவகுத்துக் காட்சித் தருகின்றன. நாம் கோயில்  முழுவதும் சுற்றிப் பார்த்து முடித்ததும், ஸ்வாமிகளைத் தரிசிக்கச் சென்றோம்.

மகத்தான திருப்பணி!

மன்னர்களாலும்கூட எளிதில் முடிக்க முடியாத மகத்தான திருப்பணியில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டிருக்கும் ஸ்வாமிகளின் முகத்தில், எப்படித் திருப்பணியை முடிக்கப் போகிறோம் என்ற பதற்றமும் இல்லை; மகத்தான திருப்பணியை நாம் செய்துகொண்டிருக்கிறோம் என்ற பெருமிதமும் இல்லை. ‘அனைத்தையும் நடத்துபவன் அந்த நரசிம்மபெருமானே’ என்ற எண்ணமே அவர் முகத்தில் பிரதிபலித்தது.

ஹரிஹரபுரம் ஸ்ரீஆதிசங்கராசார்ய ஸ்ரீசாரதா லக்ஷ்மிநரசிம்ம பீடம் பற்றியும், அங்கே அமைய இருக்கும் ஸ்ரீலக்ஷ்மிநரசிம்மர் கோயில் பற்றியும் பல அரிய விஷயங்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.

‘`மிகவும் தொன்மையும், புனிதமும் வாய்ந்த பூமி இந்த ஹரிஹரபுரம். இங்குள்ள ஸ்ரீசாரதா லக்ஷ்மிநரசிம்ம பீடம் பலநூறு ஆண்டுகள் பாரம்பர்யம் கொண்டது. இந்தப் பீடத்தில், ஸ்ரீசாரதாம்பாளையும், ஸ்ரீலக்ஷ்மிநரசிம்மரையும் வழிபட்டு வருகிறோம்.

‘இது யாக பூமி... யோக பூமி!’ - துங்காநதிக்கரையில் கம்பீரமாக எழும் நரசிம்மர் ஆலயம்!

மேலும், அகத்திய மகரிஷி பூஜித்து வந்த ஸ்ரீலக்ஷ்மிநரசிம்மர் சாளக்கிராமமும் அன்றாடம் பூஜிக்கப்படுகிறது.

ஏற்கெனவே இங்கிருந்த திருக்கோயிலுக்குத் திருப்பணிகளை மேற்கொள்ள வேண்டிய நிலையில் இருந்ததால், கடந்த 2009-ம் வருடம்... இப்போது நீங்கள் முதலில் தரிசித்து வந்தீர்கள் அல்லவா? அந்தக் கோயிலை தற்காலிகமாக நிர்மாணித்து, பழைய கோயிலில் இருந்த விக்கிரகங்களை அங்கே பிரதிஷ்டை செய்துவிட்டு, புதிய கோயில் கட்டும் திருப்பணியில் ஈடுபட்டோம்.

புதிய கோயில் பல வகைகளிலும் தனிச் சிறப்பு கொண்டதாகவும், நம் பாரம்பர்யக் கலைகளை உணர்த்தும் மையமாகவும் இருக்க வேண்டும் என்று விரும்பினோம். முழுக்க முழுக்கக் கற்கோயிலாகக் கட்ட விரும்பி, அதற்கான முயற்சிகளை மேற்கொண்டோம்.

ஆரம்பத்தில், `நாம் நினைத்திருக்கும் அளவுக்கு ஸ்ரீலக்ஷ்மிநரசிம்மருக்குப் பிரமாண்டமான முறையில் சாஸ்திரப்படியும் கலைநயத்துடனும் கோயில் கட்ட முடியுமா?' என்ற பிரமிப்பு ஏற்படவே செய்தது.

ஆனால், கருணாமூர்த்தியான ஸ்ரீலக்ஷ்மிநரசிம்ம பெருமானின் அருளால், பெருமளவு திருப்பணிகள் முடிந்துவிட்டன. கடந்த 7 வருடங்களுக்குள் இத்தனை பெரிய கற்கோயில் உருவாகியிருக்கிறது என்றால், அதற்குக் காரணம் ஸ்ரீலக்ஷ்மிநரசிம்மரின் பரிபூரண அருள்தான் என்பதில் சந்தேகமே இல்லை’’ என்றார். பின்னர் நம்மை கோயிலுக்கு எதிரே சற்றுத் தொலைவிலிருந்த இடத்துக்கு நம்மை அழைத்துச் சென்றார். அங்கே பிரமாண்டமான பீடம் ஒன்று முழுக்க முழுக்கக் கற்களைக் கொண்டு எழுப்பப்பட்டு வருவதை நம்மிடம் காட்டினார்.

‘`இந்தப் பீடத்தினடியில், பக்தர்களால் எழுதி அனுப்பப்படும் ஐந்து கோடி ஸ்ரீலக்ஷ்மிநரசிம்ம மந்திரங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, அதன் மேல் ஸ்ரீஆஞ்சநேயரை பிரதிஷ்டை செய்ய இருக்கிறோம்’’ என்றார். இதுவரை 5,00,000 பக்தர்களுக்கு நாமாவளிப் புத்தகங்கள் தரப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

மொத்தத்தில் மலைக்கவும் மகிழவும் வைத்தன ஸ்வாமிகளின் திருப்பணிகள்.

துங்காநதி தீரத்தின் எழிலும் அமைதியும் சூழ்ந்த பின்னணியில், சுவாதியில் தோன்றிய  ஸ்ரீலக்ஷ்மி நரசிம்மருக்கு அமையவிருக்கும் திருக்கோயிலுக்கான  உன்னதத் திருப்பணி விரைவில் நிறைவு பெற்று, ஸ்வாமிகளின் சித்தப்படியே வைகாசி மாதம் கும்பாபிஷேகம் நடைபெற ஸ்ரீசாரதாம்பிகை மற்றும் ஸ்ரீலக்ஷ்மிநரசிம்மரை பிரார்த்தித்துக்கொண்டு, அந்தப் புனிதமான தவ பூமியிலிருந்து கிளம்பினோம்.

வஜ்ர ஸ்தம்பம்

புதிய திருக்கோயிலின் அடித்தளத்துக்கும் கீழே, பூமியில்  சுமார் 20 அடி ஆழம்தொட்டு நிறுவப்பெற்றிருக்கிறது வஜ்ர ஸ்தம்பம். அந்த ஸ்தம்பத்தின் மேல் பத்மபீடத்தில் காரியஸித்தி கருட யந்த்ரமும், அதன் மேலாக 108 ஸ்ரீலக்ஷ்மிநரசிம்ம சாளக்கிராமங்களும், ஸ்தம்பத்தின் மையமான பிந்து ஸ்தானத்தின் மேலாக ஸ்ரீமரகத லக்ஷ்மிநரசிம்மர் திருவுருவம் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளன. ஸ்ரீலக்ஷ்மிநரசிம்மரின் சந்நிதிக்கு எதிரில் ஸ்ரீஆதிசங்கரர் சந்நிதியும், ஸ்ரீசாரதாம்பாள் சந்நிதியும் அமைந்துள்ளன.

எப்படிச் செல்வது?

கர்நாடக மாநிலம், சிக்மகளூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது ஹரிஹரபுரம். சென்னையிலிருந்து பெங்களூரு சென்று, அங்கிருந்து ஹரிஹரபுரம் வழியாக சிருங்கேரி செல்லும் அரசுப் பேருந்தில் செல்லலாம். பெங்களூர் செல்வதற்கும், அங்கிருந்து ஹரிஹரபுரம் செல்வதற்கும் முன்கூட்டியே ரயில் மற்றும் பேருந்துகளில் முன்பதிவு செய்துகொள்வது அவசியம்.

ஆலயத் தொடர்புக்கு: 091765 10866 

‘இது யாக பூமி... யோக பூமி!’ - துங்காநதிக்கரையில் கம்பீரமாக எழும் நரசிம்மர் ஆலயம்!

நெல்லி மரமும் செல்வ வளமும்!

ஒருமுறை தன்னுடைய செல்வங்களையெல்லாம் இழந்து தவித்த குபேரன், சிவனாரின் திருவருள்படி நெல்லி வனம் உருவாக்கி மகா லட்சுமியை வழிபட்டு, செல்வங்களுக்கெல்லாம் தலைவனாகும் வரம் பெற்றான் என்கின்றன புராணங்கள். இதையொட்டியே, வீட்டில் நெல்லி மரம் வளர்க்க செல்வ வளம் பெருகும் என்று சொல்லி வைத்தார்கள் பெரியோர்கள்.

மேலும், ஜோதிட ரீதியாக பரணி நட்சத்திரக்காரர்களுக்கான விருட்சம் நெல்லி மரம் என்பார்கள். திருவாரூர்- திருத்துறைப்பூண்டி சாலையில், சுமார் 15 கி.மீ. தொலைவில் உள்ளது திரு நெல்லிக்காவல், சிதம்பரம் தாலுகாவில் உள்ள திருநெல்வாயில், கும்பகோணம்- பட்டீஸ்வரத்துக்குக் கிழக்கில், வடதளிக்குத் தெற்கில் உள்ள திருப்பழையாறை ஆகிய தலங்களின் விருட்சமும் நெல்லி மரம்தான். இந்தத் தலங்களுக்குச் செல்லும் அன்பர்கள் நெல்லி விருட்சத்தையும் தரிசித்து வாருங்கள்;  வறுமை நீங்கி வாழ்வில் வளம் பெருகும்.

- மு.ஹரி காமராஜ்