மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கேள்வி பதில் - ஆரத்தி எடுப்பது எப்படி?

கேள்வி பதில் - ஆரத்தி எடுப்பது எப்படி?
பிரீமியம் ஸ்டோரி
News
கேள்வி பதில் - ஆரத்தி எடுப்பது எப்படி?

சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

கேள்வி பதில் - ஆரத்தி எடுப்பது எப்படி?

? கோயிலுக்குச் செல்லும்போது முதலில் எந்த தெய்வத்தை வழிபட வேண்டும். மூலவரை வழிபட்டுவிட்டு பரிவார தெய்வங்களை வணங்க வேண்டுமா அல்லது இந்தத் தெய்வங்களை வழிபட்டுவிட்டு மூலவரைத் தரிசிக்கச் செல்ல வேண்டுமா?

- கோபி பாலமுருகன், சென்னை-44

ஒரு கோயிலுக்குச் செல்பவனின் மனம்,  அங்கு உறைந்திருக்கும் இறைவனின் நினைவோடு இருக்கும். அப்போது வேறு இறையுருவத்தைப் பற்றிய சிந்தனை வரக் கூடாது. அப்படி வந்தாலும் அந்த இறையுருவத்திலும், குறிப்பிட்ட ஆலயத்தின் இறைவனையே காணவேண்டும். ஆகமங்களும் கோயில் சட்டதிட்டங்களும் சில சம்பிரதாயங்களைச் சொல்லும்.

பரிவார தேவதையை அலட்சியப்படுத்தாமல் இருக்க, சில நடைமுறைகளைப் பரிந்துரைக்கும். விவரமறிந்த பக்தன், ஆலயத்தில் நுழையும்போது பிரதான இறையுருவத்தின் நினைவோடு செல்ல வேண்டும். அவரை வணங்கி அருள்பெற்று, பரிவார தேவதை களையும் வணங்க வேண்டும். அதுவே சிறப்பு!

கேள்வி பதில் - ஆரத்தி எடுப்பது எப்படி?

? சிலர், தங்களது பக்தியை வெளிப் படுத்தும்விதமாக ஸ்வாமி திருவுருவங்கள் பொறித்த ஆடைகளை அணிகிறார்களே, இது சரியா?

- கே.சிவசுந்தரி, திண்டுக்கல்

இறை உருவங்களைக் கொண்ட வஸ்திரங்களை அணியக் கூடாது. அப்படிப் பயன்படுத்தினால், இறையுருவத்தை இழிவுபடுத்துவது போலாகிவிடும்; தெரிந்தே தவறு செய்தவராகிவிடுவோம்!

அரைக்குக் கீழே இருக்கும் அவயவங்களை மறைக்க இறை உருவத்துடன் கூடிய வஸ்திரத்தைப் பயன்படுத்துவது தவறு. பக்தி என்பது நேர்வழியில் இருக்க வேண்டும். சிலர், பொருள்களில் இருக்கும் அசுத்தத்தை அகற்றும் துணியாகவும் இதுபோன்ற வஸ்திரங்களைப் பயன்படுத்துவர். அதுவும் தவறே! வாய் இறைவனின் புகழ் பாடும்; செயல் மட்டும் அவனை உதாசீனப்படுத்துவது போன்ற நிலை கூடாது.

கேள்வி பதில் - ஆரத்தி எடுப்பது எப்படி?

? மங்கல ஆரத்தி எடுக்கும்போது இடமிருந்து வலமாகச் சுற்றவேண்டுமா, வலமிருந்து இடமாகச் சுற்ற வேண்டுமா?

- எஸ். பிரியா, தேனி

ஆரத்தி எடுப்பது சிறந்த சம்பிரதாயம். அதில், இடது- வலது என்கிற பாகுபாட்டைப் பார்க்க வேண்டிய கட்டாயம் இல்லை.

தாம்பாளத் தட்டில் மஞ்சள்- சுண்ணாம்பு கலந்த நீர், சிவப்பாக மாறிவிடும். அதைக் கையில் ஏந்தி ஆரத்தி எடுக்க வேண்டும் என்பது நடைமுறை. ஒருவர் மட்டுமோ அல்லது இருவர் சேர்ந்தோ ஆரத்தி எடுக்கலாம். கெட்ட பார்வையால் ஏற்பட்ட தோஷம் விலகும் என்ற நம்பிக்கையில் விளைந்த சடங்கு, ஆரத்தி!

கேள்வி பதில் - ஆரத்தி எடுப்பது எப்படி?

? சமீபத்தில் உறவினர் ஒருவரது வீட்டுக்குச் சென்றிருந்தேன். அவர் வீட்டு பூஜையறையில்  உள்ள  திருவிளக்கை  அவர் அணைப்பதே இல்லையாம். அதுகுறித்து கேட்டால், `திருவிளக்கு எப்போதும் சுடர் விட்டுக்கொண்டிருந்தால் குடும்பத்துக்கு நல்லது’ என்கிறார். இப்படி இல்லங்களில் அணையா விளக்கு ஏற்றலாமா?

- எம்.வி.லட்சுமணன், காரைக்குடி

பூஜையறையை மூடும்போது தீபங்களை அணைத்துவிட வேண்டும். அணைத்தால்தான் மறு நாள் காலையில் தீபம் ஏற்ற இயலும். இல்லையெனில், தினம் தினம் காலையில் தீபம் ஏற்றும் சம்பிரதாயம் அற்றுப்போகும்.

கேள்வி பதில் - ஆரத்தி எடுப்பது எப்படி?


அனுதினமும் காலையிலும் மாலையிலும் தீபம் ஏற்ற வேண்டும் என்று இருக்கும்போது, நிரந்தர தீபவொளிக்கு இடமில்லாமல் போவதைத் தெரிந்துகொள்ள வேண்டும். பக்தி மேலீட்டால்... நந்தா தீபம்- அணையா விளக்கு ஏற்றுகிறேன் என்ற தனிப்பட்டவரின் சிந்தனையை விதியாக மாற்றக் கூடாது. விளக்கைச் சுத்தம் செய்து புதுத் திரி போட்டு விளக்கேற்றவது சிறப்பு. அணையா விளக்கு வீட்டுக்கு நல்லது என்பது உங்கள் உறவினரது கணிப்பு. எல்லோரது சிந்தனையும் அப்படித்தான் இருக்க வேண்டும் என்றில்லை. சாஸ்திரத்தை மீறி நமது சிந்தனைக்கு முக்கியத்துவம் கொடுப்பது சரியில்லை.

கோயில்களில்கூட கர்ப்பகிருஹத்தின் கதவைத் திறக்க ஒரு மந்திரம், தீபம் ஏற்ற ஒரு மந்திரம், நிர்மால்யத்தை விலக்க ஒரு மந்திரம், அபிஷேகத்துக்கு ஒரு மந்திரம் என்ற நடைமுறை உண்டு. கர்ப்பகிருஹத்திலும் அணையா விளக்கு இருந்தால் கோயிலுக்கு நல்லதுதானே... என்று சொல்லலாமா?! ஸ்வயம்ப்ரகாசனுக்கு விளக்கு எதற்கு? நாம் அவனை தரிசிக்க விளக்கு வேண்டும். மேலும் அணையாவிளக்கு எதிர்பாராமல் அணைந்துவிட்டால், வீணாக மனநெருடலைச் சந்திக்கவேண்டி வரும். எதிர்பாராமல் விளக்கு தீபம் பற்றிக்கொண்டு பூஜையறையும் பாதிப்புக்குள்ளானால், அதுவும் அபசகுனம். ஆகையால், நமது ஆசையை நிறைவேற்ற எண்ணும்போது, ஆராய்ந்து செயல்பட வேண்டும். சாஸ்திரத்தைக் கடைப்பிடித்தால் அபசாரம் இருக்காது.

கேள்வி பதில் - ஆரத்தி எடுப்பது எப்படி?

? வளைகாப்பு வைபவத்தை முதல் குழந்தைக்காக மட்டும்தான் நடத்த வேண்டுமா. இது பாரபட்சம் இல்லையா எனக் கேட்கிறான் நண்பன் ஒருவன். நீங்கள்தான் விளக்கம் அளிக்க வேண்டும்.

- கே.ராமச்சந்திரன், ஆழ்வார்திருநகரி

இரண்டாவது குழந்தை பெற்றெடுக்கும் வேளையில் வளைகாப்பு, சீமந்தம் நடத்த வேண்டிய அவசியம் இல்லை. சீமந்தம் என்பது முதல் குழந்தைக்காக மட்டுமே நடத்தப்படுவதில்லை. பிற்பாடு உதரத்தில் உருவாகும் அத்தனை குழந்தைகளுக்கும் சேர்த்துத்தான் சீமந்தம் நடை பெறுகிறது. குழந்தை உருவாகும் இடத்தின் தூய்மையை நிலைநாட்டுவதற்கு முன்னுரிமை அளிக்கிறது சீமந்தம்.

ஒருவேளை, சீமந்தம் நடைபெறாமலேயே முதல் குழந்தை பிறந்தாலும், பிறந்த குழந்தையை மடியில் வைத்து சீமந்தத்தை நடைமுறைப்படுத்திய பிறகே, அந்தக் குழந்தைக்கு ஜாதகர்மம் நடக்கும். அப்படியொரு நிபந்தனையை சாஸ்திரம் வகுத்திருக்கிறது.

முதல் குழந்தைக்கு... பிறந்த பிறகும் சீமந்தம் நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கட்டாயம் இருப்பதால், 2-வது குழந்தைக்கு ‘சீமந்தம்’ என்ற கேள்வியே எழும்பாது. வளைகாப்பு ஒரு சம்பிரதாயம். அதை, முதல் குழந்தைக்கு மட்டும் கடைப்பிடித்தால் போதும். அதன் பலன், பிறக்கப்போகும் அத்தனை குழந்தைகளுக்கும் கிடைத்துவிடும்.

? சில ஆலயங்களில் மூல மூர்த்திக்கு தைலக் காப்பு மட்டுமே செய்கிறார்கள். அதற்கான தாத்பரியம் என்ன?

- எல்.சங்கவி, திருநெல்வேலி-2


மண் அல்லது மரம் ஆகியவற்றால் உருவான இறை உருவங்களுக்கு அபிஷேகம் இருக்காது. கல்லால் ஆன விக்கிரகத் திருமேனிகளுக்கு அபிஷேகம் உண்டு. ஆனால், வேறு ஏதோ காரணங்களால் அபிஷேகம் விடுபட்டு, தைலக் காப்புடன் நின்றுபோவதை, சிறப்புப் பெயருடன் நடைமுறைப்படுத்துவதில் ஆகமத்துக்கு உடன்பாடில்லை. ஜபம், ஹோமம், அர்ச்சனை, அபிஷேகம் ஆகியவற்றை சாஸ்திரம் ஏற்கிறது (ஜபஹோமார்ச்சனாபிஷேகவிதிம்...).

அபிஷேகத்தில் தண்ணீருக்குச் சிறப்புண்டு. தைலக்காப்புக்குப் பிறகு தண்ணீர் அபிஷேகம் உண்டு. பஞ்சகவ்யம், பஞ்சாமிர்தம், நெய், பால், தயிர், தேன், கரும்புச்சாறு, எலுமிச்சம் பழச்சாறு, இளநீர், சந்தனம் ஆகிய அபிஷேகங்களில், தண்ணீர் அபிஷேகமும் சேர்ந்து வரும். அதே நேரம்... வழிவழியாக பக்தர்களால் கூறப்படும் கதை, கோயில் வரலாறு ஆகியவற்றையொட்டி, சம்பிரதாயமாக ஏற்றுச் செயல்படுவதாக இருந்தால், தைலக்காப்புடன் நிறுத்திக்கொள்ளலாம். தாங்களும் தைலம் (எண்ணெய்) அளித்து, அதில் பங்கேற்கலாம்.

- பதில்கள் தொடரும்...