Published:Updated:

``தமிழகத்தின் அரிய கற்கள் குவாரிகளால் அழிகின்றன..!" - சிற்பி ஆர்.ரவீந்திரன் வேதனை

உலகத்தில் அமைக்கப்படும் எந்தக் கோயிலுக்குச் சென்றாலும் மாமல்லபுரத்தில் உருவான சிற்பங்களைக் காணலாம்...

``தமிழகத்தின் அரிய கற்கள் குவாரிகளால் அழிகின்றன..!" -  சிற்பி ஆர்.ரவீந்திரன் வேதனை
``தமிழகத்தின் அரிய கற்கள் குவாரிகளால் அழிகின்றன..!" - சிற்பி ஆர்.ரவீந்திரன் வேதனை

ல்லவன் சிற்பிகள் அன்று,

பண்ணிய சிற்பத்தில் ஒன்று,

பெண்ணென வந்தது இன்று, சிலையே...

உந்தன் அழகுக்கில்லை ஈடு...

பல்லவ நாட்டுச் சிற்பங்களைப் பற்றியும், அவற்றின் பேரெழில் பற்றியும் கவிஞர் வாலியின் மிகைப்படுத்தப்படாத, அதி அற்புதமான வரிகள் இவை.

அர்ஜுனன் தபசிலிருந்து பஞ்ச ரதம் நோக்கிச் செல்கையில், நீண்ட நெடுங்காலமாகச் சிற்ப அங்காடியில் நின்றுகொண்டிருக்கும் அந்த அழகிய காரிகையை, நீங்கள் பார்த்திருப்பீர்களா என்று தெரியவில்லை. பார்க்கவில்லை என்றால் அடுத்த முறை செல்லும்போது மறக்காமல் பார்த்து விடுங்கள். ஒற்றைக் கல்லினால் செதுக்கப்பட்ட ஆபரணம் அணிந்திராத ஏந்திழை அவள். சுமார் ஆறடி இருப்பாள். பார்த்ததுமே கல்கியின் சிவகாமியை நினைவுபடுத்திவிடும் பேரழகுடன் காட்சி தருகிறாள். கவிஞர் வாலியின் அழகிய வரிகளையே மிஞ்சும்படியான கவித்துவம் நிறைந்தவள் அவள். ஒற்றைத் தாவணியை மட்டும் தோளில் போட்டுக்கொண்டு ஒற்றைக் காலைச் சற்றே தூக்கி மடித்த நிலையில், இடது கையில் அராளம் முத்திரை, வலது கையில் சூசி முத்திரையுடன் மலர்ச் செண்டைத் தாங்கியபடி இருக்கும் அவள், அன்னப்பறவையின் மீது ஒயிலாக வளைந்து, நெளிந்து நின்றுகொண்டிருப்பாள். பல்லவர்கள் விட்டுச் சென்ற தெய்விகக் கலையை இன்றும் மாமல்லபுரத்தில் தொடர்ந்துகொண்டிருக்கிறார்கள் சிற்பிகள்.

சிற்பக் கலையின் தலைநகரமாகவே விளங்கிக்கொண்டிருக்கிறது மாமல்லபுரம். மாமல்லபுரத்தில் உருவாகாத சிற்பங்களே இல்லை என்று கூறலாம். உலகத்தில் அமைக்கப்படும் எந்தக் கோயிலுக்குச் சென்றாலும் மாமல்லபுரத்தில் உருவான சிற்பங்களைக் காணலாம். வள்ளுவர் கோட்டம், கன்னியாகுமரி 133 அடி உயரத் திருவள்ளுவர் சிலை ஆகியவை மாமல்லபுர சிற்பிகள் தமிழகத்துக்குக் கொடுத்த கொடை.

எம்.ஜி.ஆர் சமாதியிலிருக்கும் 4 டன் எடையுள்ள பறக்கும் உலோகக் குதிரை, திருவனந்தபுரம் விவேகானந்தர் சிலை, கன்னியாகுமரியில் இந்தியப் பிரதமர் மோடி திறந்து வைத்த பாரத மாதா சிலை ஆகியவற்றைச் செய்தவர் சிற்ப வல்லுநரான ஆர். ரவீந்திரன் ஸ்தபதி. மாமல்லபுரத்தில் `நவஜீவன் உலோகச் சிற்பக் கூடம்' அமைத்து 29 வருடங்களாகப் பல்வேறு சிற்பிகளுக்குப் பயிற்சியளித்து வருகிறார். இந்தச் சிற்பக் கூடத்திலிருந்துதான் 3500 - க்கும் மேற்பட்ட தெய்வ விக்கிரகங்கள் உலகமெங்கும் அனுப்பி, கோயில்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டு, வணங்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. பாரம்பர்யமாக சிற்ப வேலை செய்யும் குடும்பத்தில் பிறந்தவர் ஆர். ரவீந்திரன். 13 வயதிலிருந்தே சிற்பக் கலையில் மிகுந்த ஆர்வத்துடன் செயல்பட்டுக்கொண்டிருக்கும் இவர், 1998-ல் மாநில விருது, 2013-ல் தேசிய விருது, 2017-ம் ஆண்டுக்கான தமிழக அரசு, கலைப் பண்பாட்டுத் துறையின் மாநில விருதையும் பெற்றிருக்கிறார்.

இந்த நிலையில், 2016-ம் ஆண்டுக்கான தலைமைச் சிற்ப வல்லுநர்களுக்கான அகில இந்திய தேசிய விருது வழங்கும் விழா சத்தீஸ்கர் மாநிலத்தின் தலைநகரான ராய்ப்பூரில் செப்டம்பர் 14 - ம் தேதி நடைபெற்றது. இந்த விழாவில் தமிழகத்தைச் சேர்ந்த ஆர். ரவீந்திரன் உலோகச் சிற்பத்துக்கான தேசிய விருது பெற்று தமிழகத்துக்குப் பெருமை சேர்த்திருக்கிறார்.

``இந்திய அளவிலும், உலக அளவிலும் பல்லவர்கள் அளித்துச் சென்ற சிற்பக் கலைக்குக் கிடைத்த கௌரவமாகவே இதைக் கருதுகிறேன்" என்று மகிழ்ச்சியுடன் பேசத் தொடங்கிய ரவீந்திர ஸ்தபதியிடம் சிற்பக் கலையைப் பற்றி மேலும் பேசினோம்...

``மாமல்லபுரத்தில் செய்யப்படும் சிற்பங்களைப் பற்றியும் அதன் பாரம்பர்யத்தைப் பற்றியும் கூறுங்களேன்..."

``மாமல்லபுரத்தில் புகழ்பெற்று விளங்கும் பல்லவர்களின் சிற்பக் கலை மறைந்துவிடக் கூடாதென்று பக்தவத்சலம் காலத்தில் சிற்பக் கல்லூரி அமைக்கப்பட்டது. இங்கு, கற்சிற்பம், மரச்சிற்பம், சுதைச் சிற்பம், உலோகச் சிற்பம், வண்ண ஓவியம், கட்டடக் கலை ஆகியவை கற்றுத் தரப்படுகின்றன. கல், மரம், சுதை, உலோகம், ஓவியம் என்று ஐந்து நிலைகளிலும் வாடிக்கையாளர்கள் எப்படி விரும்புகிறார்களோ அப்படி தெய்வ விக்கிரகங்கள், அலங்காரச் சிற்பங்கள், வாகனங்கள், தூண்கள் என்று அனைத்தும் செய்யப்படுகின்றன. உலகில் எங்கெல்லாம் இந்துக் கோயில்கள் இருக்கிறதோ அங்கெல்லாம் மாமல்லபுரத்தில் செய்யப்பட்ட சிற்பங்களைப் பார்க்கலாம்."

``சிற்பங்கள் செய்வதற்குப் பயன்படும் கற்களை எப்படித் தேர்ந்தெடுக்கிறீர்கள்?"

``சிற்பங்கள் செய்வதற்கு மொத்தம் 7 நிறங்களில் 49 வகையான பாறைகள் வகைப்படுத்தப்பட்டிருக்கின்றன. இவற்றில், நாதத்தின் மூலம்தான் சிற்பங்களைச் செய்வதற்கு ஏற்ற கற்களைத் தேர்ந்தெடுக்கிறோம். பாறைகளைத் தட்டும்போது அவற்றிலிருந்து வெளிப்படும் ஒலியைக் கொண்டே பாறைகளை ஆண் கல், பெண் கல், அலி கல் என்று மூன்றாகப் பிரிக்கிறோம். இவற்றுள் ஆண் கல் வலிமையானது. இதில் எந்த மாதிரியான நுட்பமான சிற்பங்களையும் வடிக்கலாம். கோயில் விக்கிரகங்களை ஆண் கல் மூலம்தான் செய்ய முடியும். பெண் கற்களைக் கொண்டு குடைந்து செய்யப்படும் சிலைகளைச் செய்யலாம். குறிப்பாக, சிவலிங்கத்தின் ஆவுடையார் பாகம் பெண் கல் மூலம்தான் செய்யப்படும். அலி கல்லில் கண்ணுக்குத் தெரியாத கீறல்களும், காற்றுக் குமிழ்களும் இருக்கும். சிற்பம் செய்யும்போது உடைந்துகொண்டே இருக்கும். ஆதலால் இந்தக் கற்கள் படிக்கட்டுகள் செய்வதற்கும், தூண்கள் செய்வதற்கும் பயன்படுத்தப்படுகின்றன. ஆண் கற்களிலும்கூட குறிப்பாக கருநீல வண்ண ஆண் கற்களில்தான் மூல விக்கிரகங்கள் செய்யப்படுகின்றன. வெள்ளை நிறக் கல்லில் சாய் பாபாவின் திருவுருவம் செய்யப்படுகிறது. தேவைக்கு ஏற்ப கற்களைத் தேர்ந்தெடுத்து செயல்படுவதே சிற்பியின் திறமையாகும்."

``சிற்பங்கள் செய்வதற்கு ஏற்ற கற்கள் எங்கிருந்து தருவிக்கப்படுகின்றன?"

``கோயில் விக்கிரகங்கள் செய்யப் பயன்படும் கருநீல நிற கிரானைட் கற்கள் ஒரு சில இடங்களில்தான் கிடைக்கின்றன. காஞ்சிபுரம் - செங்கல்பட்டுக்கு இடைப்பட்ட பகுதி, ஆந்திராவில் சில இடங்கள், கோயம்புத்தூரில் அவினாசி, மயிலாடு மற்றும் ஹரித்வார் போன்ற ஒரு சில இடங்களில்தான் சிற்பங்கள் செய்வதற்கு ஏற்ற பாறைகள் கிடைக்கின்றன. இவையும் இப்போது குவாரிகளாக மாற்றப்பட்டு வெட்டி விற்கப்பட்டு வருகிறது. மற்றபடி, தேவைக்கு ஏற்ப கற்கள் வெளி மாநிலத்திலிருந்து தருவிக்கப்படுகிறது. உதாரணமாக சாய் பாபா சிலைகள் செய்வதற்கு வெண்மை நிறப் பாறைகள் தேவை. இவை ராஜஸ்தானில் மட்டும்தான் கிடைக்கின்றன."

``கோயில் சிற்பங்கள் செய்வதற்கு முன்பு கவனிக்கவேண்டிய அம்சங்கள் பற்றி...? விரதம் எதுவும் கடைப்பிடிக்கவேண்டுமா?"

``சிற்பக் கலையைப் பொறுத்தவரை நுண்ணிய அளவீடுகள்தான் முக்கியம். சிற்ப சாஸ்திரம் என்னென்ன அளவீடுகளைக் கொண்டிருக்கிறதோ அதை மீறாமல் செய்தால் அனைத்துச் சிற்பங்களையும் மிகச் சிறப்பாகவும் துல்லியமாகவும் செதுக்க முடியும். சிற்ப சாஸ்திர நுண்ணிய அளவீடுகள் பற்றி எந்தவித அடிப்படை அறிவும் இல்லாமல் சிற்பங்களைச் செதுக்கிவிட முடியாது. எனவே சிற்ப சாஸ்திர அறிவு இருக்கிறதா என்பதுதான் முக்கியமான அம்சம். மற்றபடி விரதமிருப்பது என்பதெல்லாம் அவரவர் விருப்பம்" என்கிறார்.

``ஒரு தலைமைச் சிற்பியாக இதுவரை செய்திருக்கும் பணிகளில் எது சிறந்த பணி என்று கருதுகிறீர்கள்?"

``மத்திய அரசின் குரு -சிஷ்யா திட்டத்தின் கீழ் நான் 10 பெண்களுக்குச் சிற்பப் பயிற்சி அளித்து சிற்பிகளாக்கியிருக்கிறேன். இதுவரை ஆண்கள் மட்டுமே பயிற்சி பெற்று சிற்பங்களைச் செதுக்கிக்கொண்டிருந்தார்கள். ஆனால், வரலாற்றில் பெண்கள் சிற்பிகளானது இதுதான் முதல் முறை. என் வாழ்வில் நான் செய்த பணிகளில் மிகச் சிறந்த பணி சிற்பங்களைச் செதுக்கியதை விடப் பெண் சிற்பிகளை உருவாக்கியதுதான்" என்று பெருமிதத்துடன் கூறுகிறார் ரவீந்திரன்.

இந்திய அளவில், ரவீந்திரன் ஸ்தபதி தமிழகத்துக்குப் பெருமை சேர்த்திருக்கிறார். பாரம்பர்யக் கலைகள் அழியாமல் இருப்பதற்கு இவர்களைப் போன்ற ஸ்தபதிகள்தான் முக்கியக் காரணம். ரவீந்திரனுக்கு வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவிப்போம்...