
தி.ஜெயப்பிரகாஷ் - படம்: அ.சூர்யபாரதி

ஊர்மக்கள் எல்லோரும் வருடத்துக்கு ஒருமுறை வனப்பகுதியில் அமைந்திருக்கும் காவல்தெய்வத்தின் கோயிலுக்குச் சென்று, அங்கேயே உணவு சமைத்து தெய்வத்துக்குப் படையலிட்டு வழிபட்டு, அனைவரும் ஒன்றாக அமர்ந்து உண்பது பண்டைய வழக்கம். ‘வனபோஜனம்’ என்ற அந்த வழக்கம் இன்றைக்கும் ஒரு கோயிலில் கடைப்பிடிக்கப்பட்டு வருவதாகச் சொன்ன அன்பர் திருப்பூர் சண்முகம், அதில் கலந்துகொள்ள நமக்கும் அழைப்பு விடுத்தார். அத்துடன், அந்தக் கோயிலைப் பற்றிய மகிமைகளையும் அவர் பகிர்ந்துகொள்ள, ஆர்வத்துடன் உடனே புறப்பட்டோம் நாம்.
திருப்பூர் மாவட்டம் கோவில்வழியில் இருந்து பெருந்தொழுவு செல்லும் சாலையில் சுமார் 2 கி.மீ தொலைவில் உள்ளது பரமனூத்து கிராமம். இதன் எல்லையில் அமைந்திருக்கிறது ஊர்மக்களின் காவல் தெய்வமான பரமனூத்து கருப்பராயனின் திருக்கோயில். இந்த ஊருக்குப் பரமனூத்து என்ற பெயர் மகாபாரதக் காலத்திலிருந்தே ஏற்பட்டுவிட்டதாக ஒரு செவிவழிச் செய்தி சொல்லப்படுகிறது.

சிவபெருமான் உருவாக்கிய நீரூற்று!
மகாபாரதக் காலத்தில், விராடபுரம் நோக்கி வந்த பஞ்ச பாண்டவர்களின் தாகத்தைத் தீர்க்க, சிவபெருமான் அம்பெய்து இங்கே ஒரு நீரூற்றை உருவாக்கியதாகவும், அதன் காரணமாக இந்த ஊருக்குப் பரமனூற்று என்று பெயர் ஏற்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. பிற்காலத்தில் பரமனூத்து என்று மருவிவிட்டதாகச் சொல்கிறார்கள். ஊற்று உருவான இடத்தில் சுயம்புவாகத் தோன்றி அருள்பாலிக்கிறார் சிவனார். அவரை இப்போதும் நாம் தரிசிக்கலாம்.

சுமார் 200 வருடங்கள் பழைமையான கருப்பராயன் கோயிலில், வனபோஜனம் நிகழ்ந்த அன்றைய தினம், காலையிலிருந்தே ஊர்மக்கள் அனைவரும் திரளாகக் கூடியிருந்தனர். கருப்பராய சுவாமிக்கு அபிஷேக அலங்காரத்துக்கான பொருள்கள் - பூக்கள் - ஆரங்களோடு, உணவு சமைப்பதற்கான பொருள்கள் மற்றும் பாத்திரங்களும் நிறைந்திருக்க, அந்த இடமே திருவிழாக்கோலம் பூண்டிருந்தது! பரபரப்பான பணிகளுக்கிடையே கோயிலின் மகிமையையும், வனபோஜனம் பற்றிய தகவலையும் நம்மிடையே விரிவாக விளக்கினார் அன்பர் சண்முகம்.

``பரமனூத்து கருப்பராயன் சுவாமி காலம்காலமாக இப்பகுதி மக்களின் காவல் தெய்வமாகத் திகழ்கிறார். கோயிலில் உள்ள மூலவருக்கு ஞாயிறு மற்றும் பௌர்ணமி நாள்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெறும். அந்த நாள்களில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபடுவார்கள். திருமணத்தடை, குழந்தை யின்மை, படிப்பில் மந்தம், வேலையில்லாமை போன்ற எந்தப் பிரச்னையாக இருந்தாலும், கருப்பராயசுவாமியை நம்பிக்கையுடன் வேண்டிக்கொண்டால் விரைவில் வேண்டுதல் நிறைவேறும் என்பது நம்பிக்கை. காதுகுத்து போன்ற சுபநிகழ்ச்சியையும் இங்கு நடத்துவதுண்டு'' என்றவர், அடுத்து வனபோஜனம் பற்றி விவரித்தார்.

‘`எங்களுக்கெல்லாம் காவல்தெய்வமாக இருந்து, நோய்நொடிகள் இல்லாமல் பாதுகாக்கும் பரமனூத்து கருப்பராய சுவாமிக்கு நன்றிக்கடன் செலுத்தும்விதமாக, வருடத்துக்கு ஒருமுறை வனபோஜனம் நிகழ்ச்சியை நடத்துவோம். இது எங்கள் முன்னோர் காலத்திலிருந்தே தொடர்கிறது.
முற்காலத்தில் இந்த இடம் அடர்ந்த காட்டுப் பகுதியாக இருந்ததால், உணவு வகைகளை வீட்டிலேயே சமைத்து எடுத்து வந்துவிடுவோம். இப்போது கோயிலிலேயே எல்லா வசதிகளும் செய்யப்பட்டுவிட்டதால், தேவையான பொருள்களை இங்கே கொண்டு வந்து, இங்கே சமைக்கிறோம். தற்போது, அமராவதிபாளையம் பனிரெண்டார் நற்பணி மன்றம் சார்பில் கடந்த 25 வருடங்களாக வனபோஜன நிகழ்ச்சியை நடத்திவருகிறோம்.

வனபோஜனத்தன்று, அமராவதிபாளையம் போன்ற கிராமங்களிலிருந்து அனைவரும் குடும்பத்துடன் வந்துவிடுவார்கள். ஆளாளுக்கு ஒரு வேலையை எடுத்துக்கொண்டு, சுவாமி கதைகளைப் பேசியபடி, ஆர்வத்தோடும் பக்தியோடும் பணி செய்வதில் கிடைக்கும் பரவசம் அலாதியானது. மொத்தத்தில் பக்தியோடு உறவையும் நட்பையும் வளப்படுத்தும் வழிபாடு இது.''
அவர் சொல்வதை மெய்ப்பித்தது அன்றைய வனபோஜன வைபவம். அன்பும் பண்பும் பக்தியும் சங்கமிக்க, நாமும் போஜன அன்னத்தை உண்டு அகமகிழ்வோடு விடைபெற்றோம்.