மற்ற எபிசோடுகள்
Published:Updated:

குறை தீர்க்கும் கோயில்கள் - 16 - பேச வைப்பாள் ஓசை கொடுத்த நாயகி!

குறை தீர்க்கும் கோயில்கள் - 16 - பேச வைப்பாள் ஓசை கொடுத்த நாயகி!
பிரீமியம் ஸ்டோரி
News
குறை தீர்க்கும் கோயில்கள் - 16 - பேச வைப்பாள் ஓசை கொடுத்த நாயகி!

டாக்டர் ஜெயம் கண்ணன் - படம்: செ. ராபர்ட்

பிறவிலேயே பேச்சு இல்லாமல் போனவர்களும், தட்டுத்தடுமாறிப் பேசுபவர்களும், விபத்து மற்றும் வியாதிகளால் இடையில் பேச்சை இழந்தவர்களும் படும் வேதனையும் வலியும் சொல்லில் விளக்க முடியாதவை. குரலை வரவழைப்பதற்கான சிறப்பு மருத்துவ முறைகளும் பேச்சுப்பயிற்சியும் இருந்தபோதிலும், நம்மைப் படைத்த இறைவன், நம்மைப் பேசவைத்திட மாட்டாரா என்ற நம்பிக்கையோடு கோயில்களுக்குச் சென்று வழிபடும் பக்தர்கள் ஏராளம் உண்டு.

அப்படி வேண்டுவோரின் வேண்டுதலுக்குச் செவிசாய்த்து, அவர்களைப் பேசவைக்கும் சக்தி படைத்த திருத்தலம்தான் திருக்கோலக்கா. சீர்காழிக்கு மேற்கே சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ளது திருக்கோலக்கா. மகாலட்சுமி தாயார் தவமிருந்து வழிபட்டு பெருமாளுடன் இணைந்த தலம் இது. அவர்கள் திருமணக் கோலத்தைக் காட்டிய இடமாதலால், ‘திருக்கோலக்கா’ என்று பெயர் வந்ததாம். இங்கே, ஸ்ரீஓசைகொடுத்த நாயகியுடன் ஸ்ரீதாளமுடையார் அருளும் கோயி லுக்கு ராஜகோபுரம் கிழக்கு நோக்கி இல்லை. முகப்பு வாயிலுக்கு எதிரே ஆனந்ததீர்த்தம் எனும் திருக்குளம் உள்ளது.

குறை தீர்க்கும் கோயில்கள் - 16 - பேச வைப்பாள் ஓசை கொடுத்த நாயகி!

முகப்பு வாயிலின் மேற்புறத்தில் வண்ணச் சுதையில் ரிஷபாரூடர் தரிசனம் தருகிறார். கிழக்கு நோக்கி இரண்டு நுழைவுவாயில்கள் உள்ளன. முதல் நுழைவு வாயிலில் நுழைந்தால் திறந்தவெளி முற்றத்தை அடையலாம். இரண்டாவது நுழைவு வாயிலில் நுழைந்தால் நேர் எதிரே பலிபீடத்தையும், நந்தியையும் தரிசிக்க முடியும். இவற்றைக் கடந்தால் இறைவனின் சந்நிதி.

குறை தீர்க்கும் கோயில்கள் - 16 - பேச வைப்பாள் ஓசை கொடுத்த நாயகி!


கோஷ்டத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, பிரம்மா, லிங்கோத்பவர், துர்கை ஆகிய தெய்வங்கள் அருள்கின்றனர். பிராகாரத்தில் கணபதி, முருகன், மகாலட்சுமி, சோமாஸ்கந்தர், சனீஸ்வரர், பைரவர் மற்றும் நவகிரகங்களும் அமைந்துள்ளனர். கையில் தாளத்துடன் அருளும் ஞானசம்பந்தரின் திருமூர்த்தத்தையும் இங்கே தரிசிக்கலாம். இறைவி ஓசைகொடுத்த நாயகியின் சந்நிதி, தனிக்கோயிலாக இறைவன் சந்நிதிக்கு இடதுபுறம் அமைந்துள்ளது. கோயிலின் தலவிருட்சமான கொன்றை, ஒரே வேரில் மூன்று மரங்களாக வளர்ந்திருப்பது ஓர் இயற்கை அதிசயம்; மும்மூர்த்தியரின் அம்சம் என்கிறார்கள் பக்தர்கள்!

தாளம் தந்தார் ஈசன்; ஓசை தந்தாள் அம்பிகை

‘‘2000 ஆண்டுகள் பழைமையான இந்தக் கோயில், சம்பந்தரால் முதன்முதலில் பாடப் பெற்றது. காவிரியின் வடகரையில் அமைந்துள்ள, தேவாரப் பாடல்பெற்ற 15-வது தலம். சம்பந்தருக்குத் தாளங்களையும் அந்தத் தாளத்துக்கு சத்தத்தையும் கொடுத்த தலம் இது’’ என்று கூறி, தல புராணத்தை விவரிக்கிறார் அர்ச்சகர் கார்த்திகேய சிவாசார்யர்.

``தன் மூன்று வயதிலேயே உமையவள் தந்த ஞானப்பாலை அருந்தி, பதிகம் பாடத்தொடங்கிய சம்பந்தர், முதலில் சென்ற ஊர் திருக்கோலக்கா. இங்கு வந்து கையால் தட்டித் தாளமிட்டுப் பாடிக் கொண்டிருந்தார். அதனால் அவரின் பிஞ்சுக் கைகள் வலிக்குமே என்று நினைத்த ஈசன், அவருக்குப் பொன்னால் ஆன தாளங்களை வழங்கி  அருளினார். அதை சம்பந்தர் தட்டியபோது ஓசை வரவில்லையாம். குழந்தையின் குறை தீர்க்க ஓடி வந்த இறைவி, அந்தத் தங்கத் தாளத்துக்கு ஓசை கொடுக்க, அதிலிருந்து இசை பிறந்தது. எனவே இத்தலத்தின் இறைவன் ‘தாளமுடையார்’ அல்லது ‘சப்தபுரீசுவரர்’ என்றும், இறைவி ‘த்வனிப் பிரதாம்பிகை’ அல்லது ‘ஓசை கொடுத்த நாயகி’ என்றும் அழைக்கப்படுகின்றனர்'' என்றார்.

குறை தீர்க்கும் கோயில்கள் - 16 - பேச வைப்பாள் ஓசை கொடுத்த நாயகி!

பேச்சு வன்மை தரும் அபிஷேகத் தேன்!

பேச்சு சரியாக வராதவர்கள் மற்றும் இனிய குரல் வேண்டும் பாடகர்கள் இந்தக் கோயிலுக்கு வந்து, ஆனந்த தீர்த்தத்தில் நீராடி, அம்பிகைக்குத் தேன் அபிஷேகம் செய்து வழிபடுகிறார்கள். பின்னர் அந்த அபிஷேகத் தேனை நாவில் தடவி னால் வேண்டியது நிறைவேறும் என்கிறார்கள்.

‘இத்தலத்துக்கு வந்து, ஓசை கொடுத்த நாயகியை வணங்கித் தொழுத பின்னர்தான், தன் குரல் சரியாகி, தன்னால் நன்கு பாடமுடிந்தது’ என்று பிரபல கர்னாடக இசைக்கலைஞர் அருணா சாய்ராம் ஏற்கெனவே சக்தி விகடன் இதழில் பேட்டி ஒன்றில் கூறியிருப்பது, இக்கோயிலின் மகிமைக்குச் சான்று.

அதுமட்டுமன்று; இலக்கியப் பேச்சாளர் சரஸ்வதி ராமநாதன், திருக்கோலக்கா பற்றிய உண்மை

குறை தீர்க்கும் கோயில்கள் - 16 - பேச வைப்பாள் ஓசை கொடுத்த நாயகி!

நிகழ்ச்சியைப் பற்றி, தன் மேடைப் பேச்சுகளில் குறிப்பிட்டுள்ளார். அவர் மகனுடன் பணியாற்றிய இஸ்லாமிய அன்பர் ஒருவரின் பேச்சுத் திறனற்ற மகள், இந்தக் கோயிலுக்கு வந்து பிரார்த்தனை செய்தபின் நன்கு பேசுவதாக அவர் தெரிவித்துள்ளது பலர் அறிந்த உண்மை.

தன் 10 வயது மகனுக்குப் பேச்சு வர வேண்டும் என்று இங்கே பிரார்த்தனை செய்த தாய் ஒருவர், வேண்டுதல் பலித்து, பிள்ளை பேசிய மகிழ்ச்சியில்,  கோயிலுக்குத் தங்கத் தாளங்கள் (பொற்றாளம்)  செய்து அளித்தாராம். இதுவரை 227 பக்தர்கள் இங்கு வந்து செவித்திறனையும் பேச்சுத் திறனையும் பெற்றதற்கு ஆவணங்கள் உள்ளன. அதேபோல, 2015-ம் ஆண்டில் பக்தர் ஒருவர் தன் இடது காதில் கேட்கும் திறனை இழந்தார். திருக்கோலக்கா வந்து பிரார்த்தித்த 72 மணி நேரத்தில் இழந்த செவித் திறனைப் பெற்றார் என்கின்றனர் ஊர் மக்கள்.

நீங்களும் ஒருமுறை திருக்கோலக்காவுக்குச் சென்று வாருங்கள், பிறர் மனம் கோணாமல் இன்சொல் பேசவும்,  இனிய வாழ்வைப் பெறவும் வரம்பெற்று வாருங்களேன்.

- தரிசிப்போம்...

தொகுப்பு: பிரேமா நாராயணன்