திருத்தலங்கள்
தொடர்கள்
Published:Updated:

முதல் அழைப்பு அம்மனுக்கு!

முதல் அழைப்பு அம்மனுக்கு!
பிரீமியம் ஸ்டோரி
News
முதல் அழைப்பு அம்மனுக்கு!

எம். திலீபன்

ரியலூரிலிருந்து சுமார் ஒரு கி.மீ தொலைவில் அமைந்திருக் கிறது ஒப்பில்லாத அம்மன் கோயில். இரண்டு சிற்றரசர்களின் கனவில் தோன்றிய கிராம தேவதைகளின் உத்தரவின்படி ஏற்பட்டதுதான் ஒப்பில்லாத அம்மன் கோயில் என்கிறார்கள். இதன் ஸ்தல வரலாற்றை சிலிர்ப்போடு நம்மிடம் விவரித்தார், இந்தத் திருக்கோயிலை நிர்வகித்து வரும் அரியலூர் ஜமீன்தார் ஸ்ரீமத் கே.ஆர்.துரை.

‘`முற்காலத்தில் விஜயநகரப் பேரரசை விரிவுபடுத்து வதற்காக ராமநயினார், பூமநயினார் ஆகிய இரண்டு சிற்றரசர்கள் தெற்கு நோக்கிப் படையெடுத்து வந்தனர். அவர்கள், இந்தப் பகுதியிலிருந்த அடர்ந்த வனத்தை அடைந்தபோது, சிறு முயல் ஒன்று வேட்டை நாயைத் துரத்திச் செல்வதைக் கண்டனர்; அந்த இடத்தின் உன்னதத்தை உணர்ந்து வியந்தனர்.

முதல் அழைப்பு அம்மனுக்கு!

அன்றிரவு அங்கேயே படுத்து உறங்கியவர்களுக்கு ஒரு  கனவு வந்தது. கனவில் கிராம தேவதைகள் தோன்றி, ‘மன்னர்களே, நீங்கள் இந்தக் காட்டை நகரமாக உருவாக்கினால், சப்த கன்னியர்களான நாங்கள் உங்களின் குலதெய்வமாக இருந்து உங்களையும் உங்கள் வம்சத்தை யும் காத்தருள்வோம். உங்கள் வம்சத்தில் பிறக்கும் முதல் குழந்தைக்கு, ‘ஒப்பிலியம்மா’ என்றே பெயர் வைக்கவேண்டும்’ என்று சொல்லி மறைந்தனர்.  மன்னர் களும் அப்படியே காட்டை நகரமாக்கி, ஒப்பில்லாத அம்மனுக்கு ஒரு கோயில் எழுப்பினர். மேலும், தங்கள் வம்சத்தில் பிறந்த முதல் குழந்தைக்கு ஒப்பிலியம்மா என்ற பெயரும் சூட்டினர்’’ என்றவர், தொடர்ந்து வளையல் வியாபாரிக்கு அம்மன் அருளிய சம்பவத்தை விவரித்தார்.

முதல் அழைப்பு அம்மனுக்கு!


‘`முற்காலத்தில், வியாபாரத்துக்காக இங்கு வந்த வளையல் வியாபாரிக்கு எதிரே தோன்றிய சிறுமி ஒருத்தி, தனக்கு வளையல் தரும்படி அவரிடம் கேட்டாள். வியாபாரிக்கோ, அவளுக்கு வளையல் தந்தால் காசு வருமோ வராதோ என்று தயக்கம். ஆனால், அந்தச் சிறுமி விடவில்லை. அவள் அந்த ஊரிலிருந்த பெரிய மாளிகை ஒன்றைக் காட்டி, அந்த வீடு தன்னுடைய அண்ணன் வீடு என்றும், அங்கே சென்று ஒப்பில்லாதவளுக்கு வளையல் கொடுத்ததாகச் சொல்லிப் பணம் வாங்கிக்கொள்ளும்படியும் கூறினாள். சிறுமியின் மழலைக் கொஞ்சலை மீறமுடியாமல் அந்த வியாபாரி, சிறுமியின் கைகள் நிறைய வளையல்களைப் போட்டுவிட்டார். சிறுமியும் ‘கலகல’வென்று சிரித்தபடி ஓடிவிட்டாள்.

சிறுமி சுட்டிக்காட்டியது, அந்த ஊர் ராஜா ஒப்பில்லாத மழவராயரின் மாளிகை. அங்கே சென்று வளையல் வியாபாரி நடந்ததைக் கூறிப் பணம் கேட்டபோது, அங்கிருந்த காவலர்கள் அதை நம்பாமல், வளையல் வியாபாரியை அடித்து விரட்டினர். அப்போது, ‘ஒப்பில்லாதவள்னு பேர் சொன்ன சிறுமி என்னை ஏமாற்றிவிட்டாளே’ என்று வளையல் வியாபாரி போட்ட சத்தம், ராஜாவின் காதில் விழுந்தது. வளையல்காரரிடம் வளையல் வாங்கியது தங்களின் குலதெய்வமான ஒப்பில்லாத அம்மனே என்பதைப் புரிந்துகொண்டு, வியாபாரியை வரவழைத்து அவருக்குப் பொன்னும் பொருளும் கொடுத்தனுப்பினார்.

முதல் அழைப்பு அம்மனுக்கு!

மேலும், ஏற்கெனவே சப்த கன்னியர்களின் உத்தரவின்படி கட்டப் பட்ட கோயிலில் ஒப்பில்லாத அம்மனுக்கு விக்கிரகம் பிரதிஷ்டை  செய்து வழிபடத் தொடங்கினார். தொடர்ந்து அவருடைய வம்சாவளியில் வந்த நாங்களும் வழிபட்டுவருகிறோம்’’ என்று சிலிர்ப்புடன் கூறி முடித்தார்.
கோயிலில் ஒப்பில்லாத அம்மன் சிவப்பு நிறத் திருமேனியுடன் தனிச் சந்நிதியில் காட்சி தருகிறாள். மூலவராக சப்த கன்னியர்கள் அருள்பாலிக்கின்றனர். ஒப்பில்லாத அம்மன் சப்த கன்னியரின் அம்சம் என்பதால், ஒப்பில்லாத அம்மனின் ஓருருவமே ஏழு உருவங்களாக ஆனதாகவும் சொல்கிறார்கள். கோயிலுக்கு வெளியில் காவல் தெய்வமாக அரச மரத்தடியில் கருப்பர் காட்சி தருகிறார். ஆளுயரக் குதிரைச்சிலைகளும் இருக்கின்றன.

சித்திரை மாதப் பௌர்ணமிதான் இந்தக் கோயிலில் விசேஷம். அன்று பக்தர்கள் கரகம், பால்குடம், தீச்சட்டி எடுத்து வந்து வழிபடுகின்றனர். இன்னும் சிலர் அங்கப்பிரதட்சிணம் செய்தும், மாவிளக்கு ஏற்றியும் வழிபடுகின்றனர்.

தொடர்ந்து சப்த கன்னியர்க்கு சந்தனக் காப்பு அலங்காரத்துடன் சிறப்பு பூஜைகளும் நடைபெறும். விழாவையொட்டி ஒப்பில்லாத அம்மன் பூச்சப்பரத்தில் வீதியுலா வருவது கண்கொள்ளாக் காட்சியாகும். காலை முதல் தொடர்ந்து அன்னதானம் வழங்கப்படும்.

பெயருக்கேற்ப தன் பக்தர்களுக்கு வரத்தை வாரி வழங்குவதில் ஒப்பில்லாதவளாகத் திகழ்கிறாள் இந்த அம்பிகை. செவ்வாய், வெள்ளி மற்றும் பௌர்ணமி நாள்களில் அம்மனுக்குச் சிவப்புப் பட்டும், செவ்வரளி மாலையும் சாத்தி, மஞ்சள், குங்குமம், வளையல்களைக் காணிக்கை செலுத்தி, எலுமிச்சை தீபம் ஏற்றி வழிபட்டால், வேண்டுதல்கள் உடனே நிறைவேறிவிடுவதாக நம்பிக்கையுடன் தெரிவிக்கிறார்கள் பக்தர்கள்.

இந்தக் கோயிலில் வேண்டிக்கொண்டு திருமணம் கூடிவரும் பக்தர்கள், முதல் பத்திரிகையை ஒப்பில்லாத அம்மனிடம் வைத்து வழிபட்ட பிறகே, அவரவர் குலதெய்வத்துக்கு வைத்து வழிபடுகிறார்கள். இப்படிச் செய்வதால் ஒப்பில்லாத அம்மனே தலைமையேற்று திருமணத்தைச் சீரும் சிறப்புமாக நடத்தி வைப்பாள் என்பது பக்தர்களின் நம்பிக்கை!

முதல் அழைப்பு அம்மனுக்கு!

எப்படிச் செல்வது ?

அரியலூர் பேருந்து நிலையத்திலிருந்து ஒரு கி.மீ தொலைவில் உள்ளது ஒப்பில்லாத அம்மன் கோயில்.

நடைதிறக்கும் நேரம் : காலை : 7 முதல் 12.30 மணி வரை மாலை : 5.30 முதல் 8.30 மணி வரை