Published:Updated:

கூத்துப் பிரியராம் இந்த ஐயனார்!

கூத்துப் பிரியராம் இந்த ஐயனார்!
பிரீமியம் ஸ்டோரி
கூத்துப் பிரியராம் இந்த ஐயனார்!

மு.ராகவன் - படம்: செ.ராபர்ட்

கூத்துப் பிரியராம் இந்த ஐயனார்!

மு.ராகவன் - படம்: செ.ராபர்ட்

Published:Updated:
கூத்துப் பிரியராம் இந்த ஐயனார்!
பிரீமியம் ஸ்டோரி
கூத்துப் பிரியராம் இந்த ஐயனார்!

தங்கத்தோடு தனது குறையைச் சமர்ப்பிக்கும் அந்த பக்தையின் பேச்சொலியைத் தவிர, வேறு எந்த சத்தமும் எழவில்லை கலிதீர்த்த ஐயனின் சந்நிதியில். பக்திப்பெருக்கோடு உள்ளம் சிலிர்க்க நின்றிருந் தார்கள் மற்ற பக்தர்கள் எல்லாம்!

கூத்துப் பிரியராம் இந்த ஐயனார்!

‘‘கல்யாணமாகி பதினைஞ்சு வருஷமாச்சு சாமி. இதுவரைக்கும் எங்களுக்குப் பிள்ளை பாக்கியம் கிடைக்கல. என்ன மருத்துவம் செஞ்சும் பலனில்லை. ஐயனார்தான் கருணை காட்டணும்!’’

சென்னையிலிருந்து கணவனோடு வந்திருந்த கலைச்செல்வி எனும் அந்த பக்தை கண்ணீரும் கம்பலையுமாகத் தனது பிரார்த்தனையைச் சொல்லிமுடிக்க, சில விநாடிகள் கண்மூடி மெளனித்தார் கலிதீர்த்தன். ஆமாம்! இந்தக் கோயில் பூசாரியின் பெயரும் கலிதீர்த்தன் என்பதுதான். சிறிதுநேரத்தில் மெளனம் கலைத்தவர், உரத்த குரலில் அருள்வாக்கு சொன்னார்.

கூத்துப் பிரியராம் இந்த ஐயனார்!


‘‘கவலைப்படாதே. வரும் பங்குனிக்குள் கருத்தரிக்கும். சனிக்கிழமை மக நட்சத்திரத்தில் பிறக்கும் ஆண் குழந்தைக்கு வேங்கடேசன்னு பேரு வைங்க. அதுவரைக்கும், பித்தளைச் சொம்பில் பச்சரிசி நிரப்பி, குடுமி மேலே இருக்கறமாதிரி தேங்காயை வைத்து, அந்தக் கலசத்துக்கு முன்னாடி பட்டுத்துணியில் சுற்றிய ஐயனாரை வைத்து வழிபடுங்க.  குழந்தை பிறந்ததும் சொம்பையும் தேங்காயையும் இங்கே சந்நிதில சேர்த்துட்டு, ஐயனாருக்குப் படையல் போட்டுக் கூத்து நடத்துங்க... சரியா?!’’

அந்தத் தம்பதிக்கு அவ்வளவு சந்தோஷம்! இருக்காதா பின்னே? குழந்தை வரம் கேட்டு வந்தவர்களுக்கு, அந்த பாக்கியம் உண்டு என்பதைச் சுட்டிக்காட்டியதோடு, இன்ன மாதம் இன்ன கிழமையில் குழந்தை பிறக்கும் என்று துல்லியமாக அருள்வாக்கு சொல்லி ஸ்வாமி வரம் தந்திருக்கிறார் என்றால் சும்மாவா? அற்புதம்தான்!

கூத்துப் பிரியராம் இந்த ஐயனார்!

மகத்துவமான இந்த ஐயனார் குடியிருக்கும் ஊர் எது தெரியுமா?

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ளது ஆயக்காரன் புலம் எனும் ஊர். இந்தப் பகுதியில்தான் அடர்ந்த வனத்தின் நடுவே கோயில் கொண்டிருக்கிறார் அருள்மிகு கலிதீர்த்த ஐயனார்.  சுமார் 300 ஆண்டுகளுக்கு முன் கடல் சூழ்ந்த வேதாரண்யத்தில் எங்கு தோண்டினாலும் உப்புநீர்தான் சுரக்கும். ஆனால், ஆயக்காரன் புலத்தில் மட்டும் நல்ல குடிநீர் கிடைத்தது. ஆகவே, சுமார் 20 அந்தணக் குடும்பங்கள் இங்கு குடியேறி வசித்துவந்தன.

ஒரு பெளர்ணமி தினத்தன்று அந்தச் சம்பவம் நிகழ்ந்தது. வானிலிருந்து ஒளி வடிவமொன்று மண்ணில் இறங்கியதையும், பிறகு அந்த ஒளி மீண்டும் விண்ணேகியதையும் கண்டார். அதுபற்றி மற்றவர்களிடம் பகிர்ந்துகொண்டவர், ஓரிரு நாள்களில் இறந்தும்போனார். அடுத்த பெளர்ணமி யில் வேறோர் அந்தணருக்கும் இந்த அனுபவம் வாய்த்தது; அவரும் இறந்துபோனார்.

மற்றவர்களை பயம் ஆட்கொண்டது. குறிப்பிட்ட இடத்தில் செங்கல்லை நட்டு தொடர்ந்து பதினைந்து நாள்களுக்குப் பரிகார பூஜைகளைச் செய்தனர். அடுத்துவந்த பெளர்ணமியன்று விண்ணிலிருந்து அந்த இடத்தில் இறங்கிய ஒளிவடிவம் மீண்டும் விண்ணுக்குச் செல்லவில்லை. மாறாக வேறோர் அற்புதம் அங்கு நிகழ்ந்தது!

அந்தச் செங்கல் வெடித்துக் கருங்கல்லாய் மாறியது.  தொடர்ந்து ஓர் அசரீரியும் ஒலித்தது. ‘‘நான் ஐயனார் வந்திருக்கேன், என்னை வேண்டுவோருக்கு வேண்டிய வரம் அளிப்பேன்” என்றது அந்த அசரீரி. அங்கிருந்த அன்பர்கள் மகிழ்ந்தார்கள். இனி தங்களுக்குப் பங்கம் இல்லை; ஐயனார் காத்து நிற்பார் என்ற நம்பிக்கை பிறந்தது அவர்களுக்கு. அன்றுமுதல் பக்தர்களின் கலிதீர்க்கும் ஐயனாராக இங்கே அருள்பாலித்து வருகிறார் ஸ்வாமி.

கூத்துப் பிரியராம் இந்த ஐயனார்!

கலிதீர்த்த ஐயனார் மட்டுமன்றி, இந்தக் கோயிலில் தூண்டில்காரன், வீரன், பெத்தாள், பெரியாச்சி, சம்பவராயன் ஆகிய பரிவார தெய்வங் களுக்கும் சந்நிதிகள் உள்ளன. மேலும், கோயிலைச் சுற்றிலும் குதிரைச் சிலை களையும், குழந்தை சிலைகளையும், மண மக்கள் சிலைகளையும் காணமுடிகிறது. குழந்தைப்பேறு, கல்யாண வரம் போன்ற பிரார்த்தனைகள் நிறைவேறியதும், பக்தர்களால் சமர்ப்பிக்கப்பட்ட காணிக்கைகளே அந்தச் சிலைகள்.

அதுசரி! பூசாரி அந்தத் தம்பதியிடம் வேண்டுதல் பலித்ததும் கூத்து நடத்தும்படி சொன்னாரே... எதற்காக?

இந்த ஐயனார் நாடகப் பிரியராம்! வேண்டுதல் பலித்து பலன் பெற்ற அன்பர்கள், ஐயனார் சந்நிதிக்கு வந்து அமுது படையலிட்டு, அன்று இரவு ஏதேனும் புராண நாடகம் நடத்திவைக்க வேண்டுமாம். அதனை ஐயனார் மகிழ்ச்சியோடு கண்டுகளிப்பதாக ஐதீகம். இதற்காகவே இந்தக் கோயிலில் கூத்துக் கலைஞர்கள் நிரந்தரமாகவே தங்கியிருக் கிறார்கள். ரசிகர்கள் பார்க்கிறார்களோ, இல்லையோ ஐயனார் கண்டுகளிப்பார் என்ற நம்பிக்கையோடு, ஆண்டு முழுவ தும் இங்கே நாடகங்கள் நடந்த வண்ணம் உள்ளன!

கல்யாண வரம் வேண்டி இங்கு வரும் அன்பர்களுக்கு, ஐயனாருக்குச் சாற்றிய மாலை தரப்படுகிறது. கல்யாண வரம் வேண்டும் பக்தர், அந்த மாலையைத் தங்களின் கழுத்தில் போட்டுக்கொண்டு, கோயிலை வலம் வந்து வணங்கவேண்டும்.

அத்துடன் வீட்டில் தினமும் ஐயனார் படத்தை வைத்து வழிபடச் சொல் கிறார்கள். இதன்மூலம் மூன்றே மாதத்துக் குள் திருமணம் கைகூடும் என்பது பக்தர் களின் அசைக்க முடியாத நம்பிக்கை.

நடை திறந்திருக்கும் நேரம்:

காலை 6 முதல்

மாலை 6 மணி வரை.

எப்படிச் செல்வது?

வேதாரண்யம் - திருத்துறைப் பூண்டி நெடுஞ்சாலையில், ஆயக்காரன்புலம் கலிதீர்த்த ஐயனார் உண்டியலடி பேருந்து நிறுத்தத்தில் இறங்கியதுமே ஒரு வளைவு இருக்கும். அந்த வளைவிலிருந்து  சுமார் 100 மீட்டர் தொலைவில் ஐயனார் கோயில் உள்ளது. அருள்வாக்கு கேட்க விரும்பும் அன்பர்கள், செவ்வாய், வெள்ளி, ஞாயிறு ஆகிய தினங்களில் (காலை 6 முதல் 3 மணி வரை) ஐயனாரின் சந்நிதிக்கு வரலாம். வேண்டுதல் நிறைவேற்றுபவர்களுக்குத் தேவையான உருவ பொம்மைகள் மற்றும் பூஜைப் பொருள்கள் அனைத்தும் கோயிலுக்கு அருகிலேயே கிடைக்கின்றன.