மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சிவமகுடம் - பாகம் 2 - 3

சிவமகுடம் - பாகம் 2 - 3
பிரீமியம் ஸ்டோரி
News
சிவமகுடம் - பாகம் 2 - 3

ஆலவாய் ஆதிரையான் - ஓவியங்கள்: ஸ்யாம்

காத்திருந்த அற்புதம்!

வாயுவேகம் மனோ வேகத்தில் அந்த இடத்தை அடைந்திருந்தான் பரமேசுவரப்பட்டரின் மைந்தனாகிய இளங்குமரன். ஆம்! இதுவரையிலும் வீர இளைஞனென்று நாம் விளித்து வந்தது இந்த இளங்குமரனையே. பாண்டிமாதேவியாரின் அரசவைப் பிரவேசத்துக்கான விழாக்கோலாகலத்தில் தான் கொண்டு வந்திருந்த பரிசிலை - மிக முக்கியமான அந்த வஸ்துவைப் பறிகொடுத்தவன், மலையடிவாரத்துக் கிராமத்தில் குலச்சிறையாரிடம் அது கையளிக்கப்பட்டதையும், அவரிடமிருந்து அது வேறொரு வீரனிடம் கைமாற்றப்பட்டதையும் நேரில் கண்டவன் கொதித்துதான் போனான்.

எவரைத் தன் குருநாதராக மனதில் வரித்திருந்தானோ, அவரே தனக்கு இப்படியொரு துரோகம் இழைப்பார் என்பதை அவன் கிஞ்சித்தும் எதிர்பார்க்கவில்லை. ஆதலால் அவன் மனதில் ஆற்றாமை பொங்கியது. அத்துடன், அவனுள் எழுந்த கேள்விகளும் அதனால் உண்டான சிந்தனைகளும் அவனைக் குழப்பத்திலும் ஆழ்த்தின.

சிவமகுடம் - பாகம் 2 - 3

மாமதுரையின் அரண்மனை வெளிச் சதுக்கத்தில், விழாக் கோலாகலத்துக்கு இடையே பரிசிலைப் பறிகொடுத்து அவன் பரிதவித்து நின்ற நிலையில், எவரோ ஒருவரது கரம் அவன் இடைக்கச்சையைத் துழாவியதை உணர்ந்தான். சட்டென்று சுதாரித்த இளங்குமரனின் கை அனிச்சையாக இடைக்கச்சையை வருட... ஒலை நறுக்கொன்று தட்டுப்பட்டது.

ஆம்! வந்தவன், கூட்டநெரிசலைப் பயன் படுத்திக்கொண்டு சடுதியில் அந்த ஓலை நறுக்கை இளங்குமரனின் இடைக்கச்சையில் செருகிச் சென்றிருந்தான். இதே யுக்தியைக் கையாண்டுதான் பரிசிலையும் அபகரித்திருப்பார்கள் என  யூகித்த இளங்குமரன், அவசர அவசரமாக ஓலை நறுக்கை வாசித்தான். எவ்வித முத்திரையோ, இலச்சினையோ பொறிக்கப்பட்டாத அந்த ஓலை நறுக்கின் தகவல் வழிகாட்டியபடியே... வேறு எதையும் சிந்திக்கத் தலைப்படாதவனாக, `என்னதான் நடக்கும் என்று பார்த்துவிடுவோம்’ எனும் முடிவோடுதான் மலையடிவாரத்துக் கிராமத்துக்கு வந்தான் இளங்குமரன்.

அப்படி வந்தவனுக்கு, குலச்சிறையாரின் செய்கை பெரும் அதிர்ச்சியை அளிக்க, ஏற்கெனவே அவனுக்குள் இருந்த கேள்விச் சிந்தனைகள் மீண்டும் எழுந்து அவனைப் பெரும் குழப்பத்தில் ஆழ்த்தின.

ஆம்! `ஓலை நறுக்கு யுக்திக்கு சூத்திரதாரி யார், அவர்கள்தான் பரிசிலைக் கவர்ந்திருப்பார்கள் எனில், தன்னைக் கிராமத்துக்கு வரவழைத்ததற்கான காரணம் என்ன, ஒருவேளை இவை அனைத்துக்கும் குலச்சிறையாரே காரணகர்த்தா எனில், அவர் என்னிடம் இந்த மறைமுக நாடகத்தை நடத்த அவசியம் என்ன...’ இப்படியாக தனக்குள் எழுந்த கேள்விக் கணைகளுக்குப் பதிலறியமுடியாத குழப்பத்தில் ஆழ்ந்திருந்தபோதுதான், குலச்சிறை யாரிடமிருந்து அந்த வஸ்துவைப் பெற்றுக் கொண்ட வீரன், சடுதியில் அங்கிருந்து அகன்று புரவியில் ஏறிப் பாய்ந்து செல்வதைக் கண்டான்.

அதன் பிறகு இளங்குமரன் தாமதிக்கவில்லை. தானும் கிராமத்தின் எல்லைக்கு விரைந்து வந்து புரவியின் மீது ஏறி அமர்ந்தவன், வீரன் சென்ற திசை நோக்கி அதை முடுக்கினான், முன்னால் சென்ற புரவி வீரனைப் பின்தொடர்ந்து சென்று  மடக்கும் உத்தேசத்துடன். எஜமானனின் அவசரத்தைப் புரிந்துகொண்டதுபோல் புயல் வேகத்தில் பாய்ந்த இளங்குமரனின் புரவி, சில நாழிகைப் பொழுதுக்குள் இதோ இந்த இடத்துக்குக் கொண்டு வந்து சேர்த்திருந்தது அவனை.

சிவமகுடம் - பாகம் 2 - 3

இதுவும் மலையடிவாரம்தான். ஆனால், அடர்ந்த வனமாகத் திகழ்ந்தது. மேற்கொண்டு பாதை ஏதும் புலப்படாததால், அங்கேயே தனது புரவி தேங்கிவிட்டதை உணர்ந்தான். இன்னொரு விஷயமும் அப்போதுதான் புலப்பட்டது அவனுக்கு.

ஆம்! கிராமத்திலிருந்து புரவி வீரன் சென்ற திசை நோக்கித் தனது புரவியை முடுக்கிவிட்டா னேயொழிய, செல்லவேண்டிய பாதையை அவன் தேர்ந்தெடுக்கவில்லை; அதற்கு வாய்ப்பும் ஏற்படவில்லை. காரணம், எல்லையிலிருந்து அவன் பாய்ந்த திசையில் தென்பட்டது ஒரே பாதைதான். ஆக, அதன் வழியாகத்தான் பயணித் தாக வேண்டும் எனும் நிர்ப்பந்தம் தன்னையறி யாமலேயே தன் மீது திணிக்கப்பட்டிருக்கிறது என்பதையும் இப்போதுதான் அவனால் உணர்ந்து கொள்ளமுடிந்தது. ‘எனில், வீரனை நான் துரத்தி வரவில்லை; அவன்தான் என்னை இங்கு இழுத்து வந்திருக்கிறான்’ என்று தனக்குள் சொல்லிக் கொண்டான்.

சிவமகுடம் - பாகம் 2 - 3சுற்றுமுற்றும் பார்த்தான். அருகிலிருந்த விருட்சத்தில் புரவியைப் பிணைத்தவன், மேற்கொண்டு செல்வதற்கு மார்க்கம் ஏதும் இருக்கிறதா என்று தேடத் துவங்கினான். அந்திப் பொழுதில் கிராமத்திலிருந்து புறப்பட்டவன் இங்கு வந்து சேர்வதற்குள், இருள் கவியத் துவங்கி யிருந்தது. ஆனாலும் அது வளர்பிறை காலம் - முழுநிலவுக்கு இன்னும் மூன்றே நாள்கள்தான் என்றபடியால், பால் நிலவின் தண்ணொளி விருட்சக் கிளைகளின் ஊடே பாய்ந்துவந்து அவனுக்கு உதவி செய்தது. யதேச்சையாகப் புதரொன்றை விலக்கியவனுக்கு அதன் மறுபுறத்தில் ஒற்றையடிப் பாதையொன்று மலைக்குமேல் செல்வது தெரிந்தது.

மெள்ள அதன் வழியே நடக்கத் துவங்கினான். அன்றைய காலைப் பொழுதுக்குப் பிறகு உணவருந்தத் தருணம் வாய்க்காததால், கடும் பசி வேறு வருத்தியது. ஆனாலும் ரகசியத்தை அறிந்தாக வேண்டும் எனும் உத்வேகம் அவனை உந்தித்தள்ளியது. கரடுமுரடான அந்தப் பாதையும்   ஒரு பெரும் பாறையின் முகப்போடு முற்றுப்பெற, இடப்புறத்தில் இருந்த ஒளி தன்னை நோக்கி வரும்படி அவனைத் தூண்டியது. ஒளி வீசுவது, தீவத்தியின் சுடர் என்பதையும், அந்தத் தீவத்தி இருக்குமிடம் ஒரு குகையின் முகப்பு என்பதையும் அறிவதற்கு கணப்பொழுது பிடிக்கவில்லை மதியூகியான அந்த இளைஞனுக்கு. ஒளி திசையை நோக்கி நகர்ந்தான். குகையின் முகப்பை அடைந் தவனுக்கு உள்ளிருந்து பேச்சரவம் கேட்டது.

‘‘எப்படிக் கிடைத்ததாம்?’’

‘‘நம்மில் ஒருவர்தான் கைப்பற்றி வந்தார்’’

‘‘அவனிடமிருந்து கைப்பற்றுவது எளிதான விஷயமில்லையே?’’

‘‘அப்படியல்ல... குழந்தை விழாவை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த தருணத்தில் நம்மவன் விஷயத்தை சாதித்துக்கொண்டானாம்.’’

சிவமகுடம் - பாகம் 2 - 3

இந்தப் பதிலைத் தொடர்ந்து ஒன்றுக்கு மேற்பட்டோர் சிரிப்பதையும் செவிமடுத்த இளங்குமரன் கடும் கோபாவேசத்துக்கு ஆளானான். வஸ்துவை அபகரித்த செயலைக் காட்டிலும் தன்னைக் குழந்தை என்று அவர்கள் வர்ணித்ததை அவனால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.  சட்டென்று வாளை உறுவியவன் குகைக்குள் பிரவேசிக்க யத்தனித்தபோதுதான், உரையாடலுக்கிடையே அந்தத் திருப்பெயரை உச்சரித்தான் ஒருவன்.

‘‘எல்லாம் சரி! இந்த விஷயத்தில் அமைச்சர் பெருமான் இவ்வளவு தீவிரம் காட்டுவதற்குக் காரணம் என்னவோ?’’

‘‘காரணம்... தென்னவன் தேவியாரின் தீர்க்கமான கட்டளை!’’

இந்தப் பெயரை உள்ளிருக்கும் ஒருவன் உச்சரிக்கக் கேட்டானோ இல்லையோ, நடுநடுங்கிப் போனான் இளங்குமரன். தலைசுற்றியது அவனுக்கு; அவன் பாதங்களிலிருந்து தரை நழுவிச் செல்வதுபோன்று தள்ளாடத் துவங்கின அவன் கால்கள்.

இத்தனையும் பயத்தால் அல்ல; தன்மீது தாயினும் சாலப்பரிந்து அன்பு செலுத்தும் பாண்டிமாதேவியார்தான் அத்தனைக்கும் கர்த்தா என்பதை அறிந்ததால் உண்டான கலக்கத்தால்!

மேற்கொண்டு செய்வதறியாது அவன் மதிமயங்கி நிற்க, அவனையும் அறியாமல் அவன் பற்றியிருந்த வீரவாள் கைநழுவி, ‘டணால்’ எனும் சத்தத்தோடு தரையில் விழுந்தது. அதனால் உசுப்பப்பட்ட குகை வீரர்கள் வாயிலை நோக்கிய அதே தருணம், தள்ளாட்டத்துடன் நின்றிருந்த இளங்குமரனின் தோளைப் பற்றியது இரும்புக்கரம் ஒன்று. அந்தக் கலக்கத்திலும் சற்றே சீற்றம் வெளிப்பட, தனது தோளைத் தொடும் தைரியசாலி யாரென்று  திரும்பிப்பார்த்த இளங்குமரன், மேலும் பேரதிர்ச்சிக்கு ஆளானான்.

சாட்சாத் குலைச்சிறையார்தான் அங்கு நின்றிருந்தார். அவன் நிலையைக் கண்டு குகைச் சுவர்கள் அதிரச் சிரித்தவர், பேசவும் தலைப் பட்டார். ‘‘இங்குவரை வந்துவிட்டவனுக்கு குகைக்குள் செல்ல என்ன தயக்கமோ?’’ என்று கேட்டுவிட்டு மேலும் சிரிக்க ஆரம்பித்தார்.

அவரைக் கண்களால் எரித்துவிடுவதுபோல் பார்த்தான் இளங்குமரன். இப்படி நடந்துகொள்வது வேறு எவராயினும் இருந்திருந்தால், இந்நேரம் அவரின் தலை தரையில் உருண்டிருக்கும். ஆனால், தன்னை ஏகடியம் செய்வது தன் மானசீக குருவும், தந்தையின் நண்பருமான குலச்சிறையார் அல்லவா? ஆகவே, சிறு சீற்றத்தோடு நிறுத்திக்கொண்டான்; ஆனாலும் அவன் ஆற்றாமை அடங்கியபாடில்லை. அதைப் புரிந்துகொண்ட குலச்சிறையார் அவனைத் தோளோடு சேர்த்து அணைத்துக்கொண்டார். பிறகு மெள்ள அவனை உள்ளே அழைத்தும் சென்றார்.

குகைவீரர்கள் சிரம் பணிந்ததைக் கண்டும் காணாதவராக, அங்கே பீடம் போன்று திகழ்ந்த பாறையில் அமர்ந்து சற்றே தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டார். பின்னர், தனது இயல்புப்படி வலது புறங்கையால் மீசையை முறுக்கிவிட்டுக் கொண்டவர், பரிவோடு இளங்குமரனை நோக்கினார்.
‘‘இளங்குமரா! முதலில் ஒரு வேண்டுகோள். இவர்கள் உன்னைக் குழந்தை என்றழைத்ததைப் பொருட்படுத்த வேண்டாம். உனது வீர பராக்கிரமங்கள் இவர்களுக்குத் தெரியாது...’’ என்று சற்று நிறுத்தியவர், சில கணங்கள் ஏதோ சிந்தனைவயப்பட்டவர், பிறகு தொண்டையைச் செருமிக்கொண்டு மீண்டும் பேசினார்.

‘‘நீ தேடி வந்த பொக்கிஷத்துக்கு எவ்வித பங்கமும் இல்லை. ஆகவே, அதைப் பற்றி நீ கவலைப்படத் தேவையில்லை. அதைவிடவும் வேறொரு முக்கியப் பணி ஒன்று உனக்குக் காத்திருக்கிறது’’ என்றவர், தமது இடைக் கச்சையிலிருந்து நறுக்கோலை ஒன்றை எடுத்து அவனிடம் கொடுத்தார்.

‘‘பாண்டிமாதேவியார் அளித்திருக்கும் உனக்கான கட்டளை இது. அதில் குறிப்பிட்டுள்ள இடத்துக்குச் செல். அங்கே சென்றதும், என்னிடம் நீ கேட்க நினைக்கும் அனைத் துக் கேள்விகளுக்கும் பதில் கிடைக்கும்!’’ என்றார் திடமாக.

பயபக்தியுடன் பெற்றுக்கொண்டான் பாண்டிமா தேவியாரின் கட்டளையைத் தாங்கிய அந்த ஓலைநறுக்கை. குலச்சிறையார் அவனுடன் உரையாடிய மிகச்சிறிய நேர இடைவெளிக்குள், தனது ஒட்டுமொத்தக் கோபமும் ஆவேசமும் தணிந்தது கண்டு அவனுக்கே வியப்பாக இருந்தது. இடைப்பட்ட நேரத்தில், குகைவீரர்கள் அளித்த கனியமுது அவனது பசியை அறவே ஆற்றியிருந்தது. குலச்சிறையாரிடம் விடைபெற்றுக்கொண்டு புதிய உற்சாகத்துடன் புரவி இருக்குமிடத்துக்கு வந்தவன், விருட்சத்துடன் பிணைத்திருந்த கட்டை அவிழ்த்து அதன்மீது தாவி ஏறினான். அவனது உத்தரவுக்குக் காத்திருக்காமலேயே தனது பாய்ச்சலைத் துவங்கியது, அந்தப் பொல்லாத புரவி!

மறுநாள் அருணோதய வேளையில் குறிப்பிட்ட இடத்தை அடைந்தவன், அதுவரையிலும் கண்டிராத அற்புதத்தைக் கண்டான். சர்ப்பங்கள் சூழ, சடாதரனின் திருவடியில் அவனுக்காகவே காத்திருந்தது அந்த அற்புதம்!

அதேவேளையில், வைகையைக் கடந்து ஆலவாயின் எல்லையில் காத்திருந்தான் ஒருவன். சற்றுநேரத்தில் அவன் நண்பனும் வந்துசேர, அதிபயங்கர சதித்திட்டம் உருவானது; அந்த அற்புதத்தைக் கவர்ந்து வர!

- மகுடம் சூடுவோம்...