மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சனங்களின் சாமிகள் - 16

சனங்களின் சாமிகள் - 16
பிரீமியம் ஸ்டோரி
News
சனங்களின் சாமிகள் - 16

அ.கா.பெருமாள் - ஓவியங்கள்: ரமணன்

உச்சிமாகாளி

ருமுறை தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் பெரிய யுத்தம் நடந்தது. இரண்டு பக்கமும் பலத்த சேதம். ஒருகட்டத்தில், தேவர்களின் தரப்பில் மாண்டவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டே போனது. இந்திரன் துக்கத்தில் ஆழ்ந்தான். நிலைமை இப்படியே போனால், இந்திர பதவியையே இழக்கவேண்டியிருக்கும். என்ன செய்யலாம் என யோசித்தவனுக்கு, காக்கும் கடவுள் பரந்தாமனைத் தவிர வேறு மார்க்கம் தெரியவில்லை. மகாவிஷ்ணுவைப் பணிந்தான், உருகி வேண்டினான்...

``நாராயணா, எப்படியாவது எங்களைக் காப்பாற்றுங்கள். நாங்கள் மாண்டுபோகாமல் இருக்க வழி சொல்லுங்கள்...’’ என்று பிரார்த்தித்தான்.

விஷ்ணு மனமிரங்கினார். அரக்கர் தொல்லையிலிருந்து மீள வேண்டுமென்றால், தேவர்களுக்குத் தேவை இறவா வரம். அதற்கு ஓர் உபாயம் சொன்னார். ``பாற்கடலைக் கடைந்தால் அமுதம் கிடைக்கும். அதைக் குடித்தால் தேவர்களுக்கு மரணமே கிடையாது’’ என்றார். அதோடு, ``பாற்கடலைத் தேவர்களால் மட்டும் கடைய முடியாது’’ என்று எச்சரிக்கவும் செய்தார்.  அசுரர்களின் உதவி கிடைத்தால் பாற்கடலைக் கடைந்துவிடலாம் என்பதும் அவனுக்குப் புரிந்தது. தந்திரம் செய்தான். அரக்கர்களுக்கு ஆசை வார்த்தை காட்டினான். பாற்கடலைக் கடைந்தால் கிடைப்பவற்றில் அவர்களுக்கும் பங்குண்டு என்றெல்லாம் நயந்து கூறினான். அசுரர்களும் சம்மதித்தார்கள். மந்திர மலையை மத்தாக்கி, வாசுகிப் பாம்பைக் கயிறாக்கி, பாற்கடலைக் கடைய ஆரம்பித்தார்கள். பாற்கடலிலிருந்து வஜ்ராயுதம், கற்பக விருட்சம், நஞ்சு என ஒவ்வொன்றாகக் கிடைத்தன. ஆலகால விஷம் உலகையே அழித்துவிடும் என்பதால், ஈசன் நஞ்சை விழுங்கினார். அவருக்கு ஏதாவது ஆகிவிடுமோ என பயந்துபோன பார்வதி, சிவனின் கண்டத்தைப் பிடித்துத் தலையில் (உச்சியில்) அடித்தாள். அப்போது பிறந்தவள்தான் உஜ்ஜயினி மாகாளி. நம் தமிழர் வழக்கில் பல பகுதிகளில் `உச்சினி மாகாளி’ என்று அந்த அன்னையை அழைக்கிறார்கள்.  

சனங்களின் சாமிகள் - 16

பார்வதி, உச்சினி மாகாளிக்குத் துணையாக பச்சை வேதாளம், கறுப்பன், மோகினி... எனப் பல பூதக் கூட்டங்களைப் படைத்தாள். வெப்பு நோய்களிலிருந்து மக்களைப் பாதுகாக்கும் சக்தியை வரமாகக் கொடுத்தார். உச்சினி மாகாளி, பூலோகத்தில் விக்கிரமாதித்த மகாராஜாவின் நாட்டில் குடியேற பார்வதியிடம் வரம் கேட்டாள். பார்வதியும், ``விக்கிர மாதித்தனின் நாட்டில் விந்தியமலையில் உச்சியில் இருப்பாய். விக்கிர மாதித்தன் உனக்குக் கோயில் கட்டுவான்’’ என்று வரமருளினாள்.

உச்சினி மாகாளி விந்தியமலைக்கு வந்தாள்... குடிகொண்டாள். ஒருநாள் விக்கிரமாதித்தனும், அவன் மந்திரி பட்டியும் விந்தியமலைக்கு வந்தார்கள். நேடுந்தூரம் பயணம் செய்த களைப்பு. ஒரு பெரிய ஆல மரத்தின் கீழ் ஓய்வெடுத்தார்கள். சிறிது நேரம் கழித்து அரசன், ``பட்டி, மிகவும் தாகமாக இருக்கிறது. எங்கேயாவது தண்ணீர் கிடைக்கிறதா என்று பார்’’ என்றான்.  பட்டி, மரத்தின் மேலே ஏறிப் பார்த்தான். தூரத்தில் ஒரு சுனை தெரிந்தது. நீர்க் குடுவையை எடுத்துக்கொண்டு சுனையை நோக்கிச் சென்றான். சுனையின் அருகே தெய்வமணம் கமழ்வதை உணர்ந்தான். ஆனால், எங்கிருந்து மணம் வருகிறது என்று அவனால் கண்டுபிடிக்க முடியவில்லை. நீர்க் குடுவையில் தண்ணீர் எடுத்துக்கொண்டு திரும்பினான்.

சனங்களின் சாமிகள் - 16

விக்கிரமாதித்தன் பட்டி கொண்டு வந்த தண்ணீரை அருந்தினான். பின்னர், மரத்தடியில் பட்டி பரப்பிவைத்திருந்த பசும்புல்லின் மீது படுத்து உறங்கிப்போனான். பட்டி காவலிருந்தான். விக்கிரமாதித்தனுக்கு ஒரு கனவு வந்தது. கனவில் வந்தவள் உஜ்ஜயினி மாகாளி. ``விக்கிரமாதித்தா! இந்த மலையில் நான் குடிகொள்ளப் போகிறேன். எனக்கு ஒரு கோயில் கட்டு. உன் தலைநகரத்துக்கு உஜ்ஜயினி என என் பெயரைச் சூட்டு. அது, `உஜ்ஜயினி மாநகரம்’ எனப் பெயர் பெறட்டும். கூடவே இருந்து உன்னை நான் பாதுகாப்பேன்’’ என்றாள் காளி.

அரசன் கண்விழித்தான். தான் கண்ட கனவைப் பட்டியிடம் சொன்னான். மந்திரி பட்டி, அந்த மலையின் அடிவாரத்தில் ஓர் இடத்தைத் தேர்ந்தெடுத்தான். அந்த இடத்தில் உஜ்ஜயினி காளிக்கு ஒரு கோயில் கட்டினான் விக்கிரமாதித்தன். கோயிலுக்குள் மறைவான ஓரிடத்தில் நிலவறை ஒன்றை அமைத்தான். அங்கே வைர  வைடூரியங்கள், தங்கப்பாளங்களைச் சேமித்துவைத்தான். வருடங்கள் கழிந்தன. விக்கிரமாதித்தன் ஆட்சிக்குப் பிறகு கோயிலும் பராமரிப்பில்லாமல் பாழடைந்தது. பூசை நடப்பதும் நின்றுபோனது.

அது ஆங்கிலேயர் நம் நாட்டை ஆண்ட காலம். அயோத்தி என்ற ஊரில் பூசகன் (அந்தணர்) ஒருவர் இருந்தார். அவருக்கு ஏழு பெண் குழந்தைகள். வீட்டில் வறுமை தாண்டவமாடியது. `இனியும் இங்கிருந்தால் பிழைக்க முடியாது’ என்ற நிலை. பூசகன், அயோத்தியிலிருந்து இடம்பெயர முடிவு செய்தார். போக வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டாரே தவிர, எங்கு போவது என்பதில் தெளிவில்லை. மனைவி மக்களை அழைத்துக்கொண்டு ஏதோ ஒரு திசையில் நடந்தார்.

சனங்களின் சாமிகள் - 16

நடந்து நடந்து அவர்கள் களைத்துப்போனார் கள். தூரத்தில் ஒரு கோயில் தெரிந்தது. அதை நோக்கி நடந்தார்கள். கோயில் பாழடைந்திருந்தது. அது, விக்கிரமாதித்தன் உஜ்ஜயினி மாகாளிக்காகக் கட்டியிருந்த கோயில். பூசகனும் அவன் குடும்பத்தினரும் கையோடு கொண்டு வந்திருந்த கட்டுச்சாதத்தைப் பிரித்தார்கள், சாப்பாட்டைச் சாப்பிட்டார்கள். பயண அலுப்பில் எல்லோரும் கோயில் மண்டபத்தில் சுருண்டு படுத்தார்கள். பூசகன் மட்டும் கோயிலுக்கு வெளியே போய் அமர்ந்துகொண்டான்.  சிறிது நேரம் கழித்து ஓர் ஆள் வந்தான். ``ஐயா, நீங்கள்தான் அயோத்தி யிலிருந்து வந்தவரா?’’ என்று கேட்டான்.

பூசகனுக்கு ஆச்சர்யமாயிருந்தது. ``ஆமாம். உங்களுக்கு எப்படித் தெரியும்?’’

``ஐயா, நான் இந்த ஊர்த்தலைவன். நேற்றிரவு என் கனவில் மாகாளி வந்தாள். `நாளை இங்கே அயோத்தியிலிருந்து ஒரு பூசகன் வருவான். அவனை எனக்குப் பூசைசெய்ய நியமித்துவிடு’ என்று உத்தரவு போட்டுவிட்டு மறைந்தாள். அதனால்தான் உங்களைத் தேடி வந்தேன்.’’

பூசகனும் உஜ்ஜயினி மாகாளி கோயிலுக்கு அர்ச்சகராக இருக்க ஒப்புக்கொண்டார். கோயில் வேலைகள் மளமளவென நடந்தன. கோயில் செப்பனிடப்பட்டது. மிகச் சிறப்பாகக் குடமுழுக்கும் நடத்தப்பட்டது. அயோத்தி பூசகன் கோயில் அர்ச்சகரானார். கோயிலுக்கு அருகிலேயே இருந்த ஒரு வீட்டில் குடும்பத்தோடு தங்கிக்கொண்டார்.

சனங்களின் சாமிகள் - 16


நாள்கள் நகர்ந்தன. இப்போது, பூசகனின் குடும்பத்துக்கு சாப்பாட்டுப் பிரச்னையில்லை. ஆனால், இன்னொரு கவலை அவரை வாட்டி யெடுத்தது. `ஏழு பெண் பிள்ளைகளுக்குத் திருமணம் செய்து, கரையேற்ற வேண்டுமே...’ என்கிற கவலை மனதை அரிக்கத் தொடங்கி யிருந்தது. வீட்டில் குண்டுமணித் தங்கம் இல்லை. கணவரின் மன வாட்டத்தைப் பார்த்த அவர் மனைவி ஒரு யோசனை சொன்னாள். ``நமக்கு அந்த மாகாளியை விட்டால் வேறு யார் துணை? அவளிடமே முறையிடுங்கள்.’’

அதுதான் சரி என்று பூசகனுக்குப்பட்டது. தினமும் பூஜையின்போது, உஜ்ஜயினி மாகாளியை மனமுருக வேண்டினான்.  அவன் பிரார்த்தனை வீண் போகவில்லை. மனமுருகி வேண்டினால், தெய்வமும் மனமிரங்கும்தானே. ஒருநாள் பூசகனின் கனவில் வந்தாள் காளி. ``கோயிலின் கிழக்கே நடுப்பகுதியில் நிலவறை ஒன்று இருக்கிறது. அங்கே நிறைய தங்கக்கட்டிகள் இருக்கின்றன. உனக்கு வேண்டியதை எடுத்துக்கொள். அதை விற்று, உன் மக்களுக்குத் திருமணத்தை நடத்து’’ என்று சொன்னாள் அன்னை.

மறுநாள் பூசகன், காளி அடையாளம் காட்டிய இடத்துக்குப் போனார். அங்கே காளி சொன்ன படியே ஒரு நிலவறை இருந்தது. உள்ளே இறங்கிப் பார்த்தால், நிறைய தங்கப் பாளங்கள். பூசகன், தனக்கு வேண்டியதை எடுத்துக்கொண்டார். தங்கமாக இருந்தால் எப்படி? அதை விற்க வேண்டுமே... விற்றால்தானே பெண்களுக்குத் திருமணம் முடிக்க முடியும்? தங்கக் கட்டிகளை ஒரு பையில் போட்டுக்கொண்டு, பக்கத்திலுள்ள நகரத்துக்குச் சென்றார் பூசகன்.

பூசகன் நடந்துபோய்க்கொண்டிருக்க, எதிரே வந்தான் ஓர் ஆங்கிலேய அதிகாரி. அவனுக்குப் பூசகனைப் பார்த்ததுமே சந்தேகம் வந்தது. `இந்த ஆள் பார்க்க எளிமையாகத்தான் இருக்கிறான். ஆனால், கையில் ஒரு பையை இறுக்கிப் பிடித்திருக்கிறானே... அதில் என்ன இருக்கும்?’ இப்படித் தோன்றியதும், ``ஏய், இப்படி வா!’’ என்று அதிகாரத் தொனியில் மிரட்டினான்.

அதிகாரியைப் பார்த்ததும் பூசகன் தயங்கினார். ஆனால், அழைத்தது வெள்ளைக்காரன் ஆயிற்றே. மெள்ள அருகே போனார். அந்த அதிகாரி குதிரையிலிருந்தபடியே பூசகனின் பையைத் திறந்து காட்டச் சொன்னான். உள்ளேயிருந்த தங்கக்கட்டிகளைப் பார்த்ததும் அவன் விழிகள் விரிந்தன.

சனங்களின் சாமிகள் - 16

``இவ்வளவு தங்கக்கட்டிகள் ஏது உனக்கு?’’

``அன்னை மாகாளி கொடுத்தாள்.’’

அதிகாரி, நம்பத் தயாராக இல்லை. பூசகனைத் தனது அலுவலகத்துக்கு இழுத்துச் சென்றான். அவரை அடித்துத் துன்புறுத்தினான். ``எப்படித் தங்கம் கிடைத்தது? உண்மையைச் சொல்!’’ திரும்பத் திரும்பக் கேட்டான். கடைசியில் பூசகன் நடந்ததைச் சொன்னார்.

அந்த ஆங்கிலேய அதிகாரி, சில வீரர்களை அழைத்துக்கொண்டு உஜ்ஜயினி மாகாளி கோயி லுக்குக் கிளம்பினான். பூசகனையும் கையைக் கட்டி இழுத்துச் சென்றான். கோயிலுக்குள் இருந்த நிலவறையை அடையாளம் காட்டினார் பூசகன்.

அதிகாரி, கோயிலைச் சுற்றித் தன் காவலர் களைப் பாதுகாப்புக்கு நிறுத்தினான். ஒரு காவலனைக்கொண்டு நிலவறையைத் திறக்கச் சொன்னான். உள்ளே இருந்தது தங்கக்கட்டிகள் மட்டுமல்ல. பெரும் புதையல். அதிகாரிக்கு ஆசை கட்டுக்கடங்காமல் போனது. எல்லாவற்றையும் தானே அடைய வேண்டும் எனப் பேராசைப் பட்டான். நடந்ததையெல்லாம் பார்த்துக்கொண் டிருந்த பூசகன், மாகாளியை மனமாரப் பிரார்த் தனை செய்தார். ``அன்னையே... நீதான் உன் பொக்கிஷங்களை இந்த அரக்கனிடமிருந்து காக்க வேண்டும்.’’

அவ்வளவுதான்... காளியின் பேய் கணங்கள் வானத்திலிருந்து குதித்தன.  கோயிலைச் சுற்றி நின்ற காவலர்கள் அனைவரையும் அழித்தன. ஆங்கிலேய அதிகாரியின் தலையை வாங்கியது ஒரு பேய். பூசகனைக் தவிர, ஆங்கிலேயனின் குதிரை உட்பட அனைவரும் அழிந்துபோனார்கள்.பூசகனின் கைக்கட்டுகள் தானாக அறுந்து விழுந்தன. பிறகு, பூசகன் மறுபடியும் நகரத்துக்குச் சென்றார். தங்கத்தை விற்று, தன் ஏழு பெண் களுக்கும் விமரிசையாகத் திருமணத்தை நடத் தினார். உஜ்ஜயினி கோயில் பூசையை முறையாகச் செய்துவந்தார்.

உச்சினி மாகாளிக்குத் தென் மாவட்டங்களில் பரவலாக வழிபாடு உள்ளது. இந்தக் காளி, முக்கிய தெய்வமாகவும் துணை தெய்வமாகவும் அருள்பாலிக்கிறாள். காளியைப் போன்றே வடிவம். இரண்டு முதல் எட்டுக் கைகள் எனப் பலவித உருவங்கள்... நின்ற அல்லது அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறாள்.  சில கோயில்களில் மாகாளிக்கு வேதாளம் வாகனமாக இருக்கிறது. வெப்பு நோயை நீக்குபவள், கர்ப்பிணிகளைப் பாதுகாப்பவள், சுகப்பிரசவம் நடக்க அருள்பவள் என்ற நம்பிக்கை இவளை வழிபடும் மக்களுக்கு உண்டு.

- தரிசிப்போம்...

தொகுப்பு: பாலு சத்யா

உங்களுக்குத் தெரியுமா?

காய்ச்சிய பாலை அபிஷேகத் துக்கு பயன்படுத்தக் கூடாது. அக்கினி தீண்டிய எதுவும் அபிஷேகத்துக்கு உரியது இல்லை. அக்னியால் சமைக்கப்பட்டவை யாவும் நைவேத்தியமாக படைக்கலாமே தவிர அபிஷேகத்துக்கு பயன்படுத்துவது அபசாரமானது. நாதத்தின் வடிவாக உள்ள இறைவனைப் பூஜையின்போது மணியடித்து வணங்குகிறோம். தீய அதிர்வுகளை விலக்கவும், நல்ல அதிர்வுகளைக் கொண்டுவரவும், உலோக மணிகளின் சத்தம் உதவும்.

பூஜா காலத்தை தவிர, மற்ற நேரங்களில் மணி அடிக்கக் கூடாது. அதேபோல் மணியைத் தரையில் வைப்பதும் தவறு.

- மீனாள், தேனி