Published:Updated:

கோலங்கள்... தெய்வங்கள்!

கோலங்கள்... தெய்வங்கள்!
பிரீமியம் ஸ்டோரி
கோலங்கள்... தெய்வங்கள்!

சி.ய.ஆனந்தகுமார் - படங்கள்: என்.ஜி.மணிகண்டன்

கோலங்கள்... தெய்வங்கள்!

சி.ய.ஆனந்தகுமார் - படங்கள்: என்.ஜி.மணிகண்டன்

Published:Updated:
கோலங்கள்... தெய்வங்கள்!
பிரீமியம் ஸ்டோரி
கோலங்கள்... தெய்வங்கள்!

மார்கழி மாதம் பிறந்தால், மங்களம் ஸ்ரீநிவாசனின் வீட்டு வாசலில் தினம் தினம் திருவிழாதான். விநாயகர், முருகன், கண்ணன், அம்பாள் எனக் கடவுள்களின் உருவங்களை இவர் கோல மாவில் ரம்மியமாக வார்த்துவைக்க, ஸ்ரீரங்கம், மேல அடை வளஞ்சான் வீதியில் உள்ள அவரின் வீட்டு வாசலில் அதைப் பார்த்து ரசிப்பதற்காகவே குவிகிறார்கள் மக்கள். வாசல் தாண்டி உள்ளே சென்றோம்.

வீடு முழுக்க திருப்பதி ஏழுமலையான், ரங்கநாதர், விநாயகர், காஞ்சி மகா பெரியவர்... என நம்மை வரவேற்கின்றன தஞ்சாவூர் ஓவியங்கள். அறிமுகம், உபசரிப்புக்குப் பின், ‘`இன்னிக்கு எங்க குழு, ரங்கநாதர் கோயிலில் ஆண்டாள் - கிருஷ்ணன், ராதா - கிருஷ்ணன் ஓவியங்களை வரையறோம், அங்க போய் பேசலாமா?’’ என்று நம்மையும் அழைத்துச் சென்றார் மங்களம் ஸ்ரீநிவாசன்.

கோலங்கள்... தெய்வங்கள்!

சில பெண்கள், அவர்களின் பல மணி நேர உழைப்பு என ஆலயத்தில் உருப்பெற்றுக்கொண்டிருந்தன அழகு ஓவியங்கள். இடையிடையே நம்மிடம் பேசினார் மங்களம் ஸ்ரீநிவாசன். “எங்களுக்குச் சொந்த ஊர் புதுக்கோட்டை மாவட்டம், கீழ மூணாம் வீதி. எங்கம்மா சரோஜா கிருஷ்ணமூர்த்தி, இரட்டை இழை விட்டுக் கோலம் போடும் அழகைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம்! எனக்கு இதில் ஆர்வம் வருவதற்கும் அவர்தான் காரணம். எங்கப்பா கிருஷ்ணமூர்த்தி நெய்வேலியில் கணக்காளரா வேலைபார்த்தப்போ, எங்க குடும்பம் அங்க வசித்த நாள்களில் கோல மாவுக்குப் பதிலா நெய்வேலி சுரங்கத்தின் வெள்ளை மண்ணில்தான் கோலம் போடுவோம். எங்க வீட்டில் நான்கு பெண் குழந்தைகள் என்பதால, எல்லோருமா சேர்ந்து 40 புள்ளி, 50 புள்ளினு கோலம்போட்ட காலமெல்லாம் கனாக் காலம்’’ என்று ரசித்துப் பேசியவர், தனது ஓவியத் திறமை பற்றிச் சொன்னார்.

‘`எனக்கு 10 வயசிருக்கும். என் மாமா வாசுதேவன் வாங்கிக்கொடுத்த, கலர் பென்சில் பாக்ஸ் அந்த வயசில் எனக்குப் பெரிய சந்தோஷம். எனக்கு மிகவும் பிடிச்ச முருகனை ஓவியமா வரைந்து வண்ணம் தீட்டினேன். எல்லோரும் பாராட்டி னாங்க. அந்த உற்சாகத்தில் கைப்பழக்கமா நிறைய ஓவியங்கள் வரைந்து பழகினேன்’’ என்பவருக்கு அவர் மாமாவின் மகன் ஸ்ரீநிவாசனுடன் திருமணம் முடிந்திருக்கிறது.

கோலங்கள்... தெய்வங்கள்!

‘`கல்யாணத்துக்குப் பிறகு ஸ்ரீரங்கம் வாசம். அவர் பெல் நிறுவனத்தில் ஜெனரல் மேனேஜர் என்பதால் வேலை விஷயமா அடிக்கடி வெளியூர் போயிடுவார். என் மகள்கள் ஐஸ்வர்யா, பார்கவி கொஞ்சம் வளர்ந்த பிறகு, மீண்டும் ஓவியங்கள், வாசல் நிறைக்கிற கோலம்னு ஆர்வம் காட்ட ஆரம்பிச்சேன். திருச்சியில் எங்கே கோலப்போட்டி நடந்தாலும் கலந்துக்குவேன். அப்படி ஒரு போட்டியில் நான் சித்ரவீதி, ஆண்டாள் வீதி, பிராகாரம்னு ஸ்ரீரங்கத்தை அப்படியே வார்க்க, முதல் பரிசு கிடைச்சது.

ஒரு கட்டத்தில், கலந்துகொள்ளும் போட்டி களில் எல்லாம் நிச்சயமா பரிசு வாங்குற அளவுக்கு நான் கோல எக்ஸ்பெர்ட் ஆகியிருந்தேன்! அந்தப் பரிசு எவ்வளவு தொகையாக இருந்தாலும் அதை அப்படியே கோயில் உண்டியல்ல காணிக்கையாகச் செலுத்திடுவேன்’’ என்றவர், ஓவிய ராதையின் கண்களுக்கு மைதீட்டிவிட்டுத் தொடர்கிறார்.

கோலங்கள்... தெய்வங்கள்!

‘`கடந்த பொங்கலுக்கு சூரிய பகவான் வரைந்தேன். அதேபோல் மார்கழியில் நான் வரைந்த ஆண்டாள் கோலத்தைப் பாராட்டாத வர்களே இல்லை. குந்தவை நாச்சியார், தஞ்சை கோபுரம், ராஜராஜ சோழன் என ஒவ்வொரு நாளும் என் வாசலில் ஒரு சர்ப்ரைஸ் இருக்கும். கந்த சஷ்டிக்காக திருச்சி அம்மா மண்டபத்தில், முருகன் ஆறு தாமரை மலர்களில் இருப்பது போலவும், அம்பாள் முருகனுக்கு வேல் கொடுப்பது போலவும், தேவர்கள் முருகனிடம் `சூரசம்ஹாரம் செய்யுங்கள்’ என முறையிடுவதுபோலவும் என்று ஆறு நாள்களும் ஆறு விதமான காட்சிகள் வரைந்தேன். இதேபோல், நவராத்திரி விழாவின் போது காவிரி அம்மன், லலிதாம்பிகை கர்ப்பரட்சாம்பிகை, ஐஸ்வர்ய லட்சுமி என ஆறு நாள்கள் விதவிதமான கோலங்களை உருவாக் கினேன்’’ என்று பரவசத்துடன் கூறுபவர், 2013-ம் ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உத்தரவின் பேரில், ஸ்ரீரங்கத்தில் நடைபெற்ற பெண்களுக்கான ஓராண்டு தஞ்சை ஓவியப் பயிற்சியை முடித்திருக்கிறார்.

கோலங்கள்... தெய்வங்கள்!

‘`அதில் நான் கற்றுக்கொண்டவற்றை ஓவியங்களாகத் தீட்டி மகிழ்ந்தேன். என் மகள்கள் ‘மை மாம்ஸ் ஆர்ட் கேலரி (My Mom’s Art Gallery)’ என்ற பெயரில் முகநூல் பக்கம் உருவாக்கி, என் கோலங்கள், தஞ்சை ஓவியங்களைப் புகைப்படங் களாக போஸ்ட் செய்ய, அதற்கு நல்ல வரவேற்பு!

கோலங்கள்... தெய்வங்கள்!


நான் வரைந்த ராஜராஜேஸ்வரி, புவனேஸ்வரி, சிவன், கிருஷ்ணர், சூரியபகவான், ஆண்டாள் மற்றும் ரவிவர்மா பாணி ஓவியங்களுக்கு, இப்போது உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக் கிறார்கள். ஆர்டர்களும் அதிகமாக வரத்தொடங்க, என்னுடன் `தஞ்சை ஓவியம்' வரைவதில் பயிற்சி பெற்ற தோழிகளுடன் இணைந்து தஞ்சை ஓவியங்களைத் தயாரித்து விற்பனை செய்கிறோம். எங்கள் ஓவியங்கள் இப்போது சிங்கப்பூர், இங்கிலாந்து, அமெரிக்கா, ஜெர்மனி போன்ற வெளிநாடுகளிலும் விற்பனையாகின்றன. எல்லாம் அந்த அகிலாண்டீஸ்வரி தந்த பாக்கியம்தான்’’ என்ற மங்களம் ஸ்ரீநிவாசன், தன் பேரக் குழந்தைகளான ஸ்ரீவத்சா மற்றும் அஸ்மிதாவை அணைத்துக்கொள்ள, அவருடைய ஓவியங்களைப் போன்றே அழகு மிளிரச் சிரித்தபடி, நமக்கு விடை கொடுத்தார்கள் அந்தக் குழந்தைகள்.

மோகினி தரிசனம்!

சிவனாரின் வீரச் செயல்கள் நிகழ்ந்த திருத்தலங்களை அட்டவீரட்ட தலங்கள் என்பர். அவற்றில் ஒன்று வழுவூர். சிவனார், யானைத் தோலுரித்த தலம் இது.

சிவபெருமான் தாருகாவனத்து முனிவர்களின் கர்வத்தை அடக்க வந்தபோது அவரோடு திருமால் மோகினியாய் உருவெடுத்து வந்தார்  அல்லவா? இந்தத் தலத்தில் மோகினியின் திருவடிவைக் காணலாம். தலைமுடியைக் கொண்டையிட்டு முடிந்து, இடையைச் சாய்த்து, நீண்ட ஊன்றுகோலின் மீது சாய்ந்தபடி காட்சியளிக்கிறாள் மோகினி. கையில் கிளியும் உண்டு. பக்தர்கள் அவசியம் தரிசிக்கவேண்டிய திருவடிவம்!

- பாலா. முருகேஸ்வரி, கடம்பூர்