Published:Updated:

தண்ணீர், உணவு, கழிவறை வசதிகள்... சிரமம்! சபரிமலை செல்பவர்கள் கவனத்துக்கு #Sabarimala

பெருமழையால் நிலைகுலைந்த சபரிமலை... இப்போது எப்படியிருக்கிறது?

தண்ணீர், உணவு, கழிவறை வசதிகள்... சிரமம்!  சபரிமலை செல்பவர்கள் கவனத்துக்கு #Sabarimala
தண்ணீர், உணவு, கழிவறை வசதிகள்... சிரமம்! சபரிமலை செல்பவர்கள் கவனத்துக்கு #Sabarimala

முன்னெப்போதும் இல்லாத அளவுக்குச் சமீபத்தில் பெய்த பெருமழை கேரளாவை நிலைகுலையச் செய்துவிட்டது. அந்த மாநிலத்தை வெள்ளக் காடாக்கிய மழை வெள்ளம் சபரிமலைப் பகுதியையும் விட்டுவைக்கவில்லை. பம்பை ஆற்றில் கரைபுரண்டு ஓடிய வெள்ளம்  ஐயப்பன் கோயிலையும் சூழ்ந்தது. பம்பை நதியில் அமைந்துள்ள பாலத்துக்கு மேலே 30 அடி உயரத்துக்குத் தண்ணீர் பாய்ந்தது என்றால் வெள்ளத்தின் பாதிப்பு எப்படி இருக்கும் என்று நினைத்துப் பாருங்கள்.

பம்பை நதி

வருடாவருடம் சிறப்பாகக் கொண்டாடப்படும் நிறை புத்தரிசிப் பூஜை, ஓணம் திருவிழாவுக்குக் கூட, `யாரும் ஐயப்பனைத் தரிசனம் செய்ய வரவேண்டாம். அப்படி வந்தால் திருப்பி அனுப்பப்படுவார்கள்' என்று தேவசம்போர்டு அறிவித்திருந்தது. நிலைமை சற்று சீராக, 16-ம் தேதி நடை திறக்கப்பட்டு பக்தர்கள் வழிபட்டுக்கொண்டிருக்கிறார்கள். 

மதுரையில் வசிக்கும் போஸ் குருசுவாமி, ஐயப்பனின் தீவிர பக்தர். 52 வருடங்களாக சபரிமலைக்குச் சென்று ஐயப்பனைத் தவறாமல் தரிசித்து வருகிறார். கடந்த 8 வருடங்களாக மாதா மாதம் அங்கு சென்று வந்துகொண்டிருக்கிறார். மழை வெள்ளத்துக்குப் பிறகு ஐயப்ப தரிசனம் செய்தது பற்றியும், பம்பையின் தற்போதைய நிலை பற்றியும் அவர் நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

``1950-ம் ஆண்டில் சபரிமலை ஐயப்பன் கோயிலில் தீ விபத்து ஏற்பட்டபோது கூட இந்த அளவுக்கு மோசமான நிலை ஏற்படவில்லை. இப்போது ஏற்பட்டிருக்கும் வெள்ளம், பம்பையை மட்டுமல்லாமல் சபரிமலையையே புரட்டிப் போட்டுவிட்டது. எனது 52 வருட கால பயண அனுபவத்தில் இப்படியொரு கோரத்தாண்டவத்தை சபரிமலையில் நான் கண்டதில்லை. பம்பை நதியின் அகலம் ஐந்து, ஆறு மடங்கு பெரிதாகிவிட்டது. 

நதியைக் கடப்பதற்காக அமைக்கப்பட்டிருந்த பாலம் ஆற்றோடு அடித்துச்செல்லப்பட்டுவிட்டது. நதிக் கரையோரம் இருந்த சாலைகள், வீடுகள் அனைத்தும் அழிந்துவிட்டன. அங்கு பக்தர்கள் தங்குவதற்காக அமைக்கப்பட்டிருந்த மண்டபம், கழிப்பறை, நடைபாதை, மேம்பாலம், கான்கிரீட் பாலம் ஆகியவை இருந்த சுவடு தெரியாமல் அழிந்துவிட்டன.

மொத்தத்தில்  மழை வெள்ளம் பம்பையையே புரட்டிப்போட்டுவிட்டது என்று கூறினால்தான் சரியாக இருக்கும். இந்த வெள்ளத்தில் திரிவேணி சங்கமத்தில் கனரக வாகனங்கள் செல்வதற்காக அமைக்கப்பட்டிருந்த பாலம் மட்டும்தான் தப்பியிருக்கிறது. இந்தப் பாலமும் இப்போது பயன்படுத்த முடியாத அளவுக்கு மழை வெள்ளம் மண்ணைக் கொண்டு மூடிச் சென்றுவிட்டது. பழைய பாதைகள் எதுவும் இப்போது இல்லை. அனைத்தும் மழையில் காணாமல் போய்விட்டன.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் சாலை

சபரிமலை கோயிலிலிருந்து 28 கி.மீ க்கு முன்பே நிலக்கல்லில் வாகனங்களை நிறுத்தி விடுகிறார்கள். அதற்கு அப்பால் எந்த வாகனங்களும் செல்வதற்கு கேரள அரசு அனுமதிக்கவில்லை. இங்கிருந்து அரசுப் பேருந்தில் அழைத்துச்சென்று பம்பையில் இறக்கிவிடுகிறார்கள். அங்கு அமைதியாக ஓடிக்கொண்டிருக்கும் நதியைத் தவிர வேறு எதுவும் இல்லை. ஒருசில இடங்களில் மட்டும் இப்போது 'பயோ டாய்லெட்'டுகள் தற்காலிகமாக வைக்கப்பட்டுள்ளன. அங்கு குடிப்பதற்கு தண்ணீர், உணவு என்று எதுவும் இல்லை. பிளாஸ்டிக் தடை இருப்பதால் குடிப்பதற்குத் தண்ணீர் கூட கொண்டுசெல்ல முடியாது. பம்பையில் பழைய, புதிய பாதைகள் அனைத்தும் அழிந்துவிட்டன. அங்கிருந்து கன்னிமூல கணபதி கோயில் வரை சிரமப்பட்டுத்தான் சென்றோம். அங்கிருந்து அப்பாச்சிமேடு சென்றால் ஜூஸ் மட்டும் குடிக்கக் கிடைக்கிறது. ஆனால், அங்கும் தண்ணீரோ, உணவோ அல்லது வேறு அடிப்படை வசதிகளோ இல்லை. கன்னிமூல கணபதி கோயிலிலிருந்து சன்னிதானம் செல்லும்வரை சாலைகள் நன்றாக இருக்கின்றன. ஆனால், வேறு வசதிகள் எதுவும் இல்லை. சன்னிதானத்தில் மட்டும்தான் உணவு, தண்ணீர் போன்ற வசதிகள் கிடைக்கின்றன. 

ஐயப்பன் கோயில் இப்போது இயல்பு நிலைக்குத் திரும்பிவிட்டது. வழக்கமாக நடைபெறும் பூஜைகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ஆனால், பல்வேறு சிரமங்களுக்குப் பின்னர்தான் ஐயப்பனைத் தரிசிக்க முடிகிறது. ஒவ்வொரு மாதமும் சன்னிதானம் வந்து அவரது பாதத்தில் சரணடைந்து செல்வதற்கு ஸ்ரீசபரிமலை சாஸ்தா ஐயப்பன் அருள்புரிய வேண்டும். இனியும் மக்களை அவர் சோதிக்கக் கூடாது. சுவாமி சரணம்...!" என்று தனது அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார் போஸ் குருசுவாமி.

சபரிமலை செல்பவர்களுக்கு சில ஆலோசனைகள் :

1. குமுளி / முண்டகாயத்திலேயே சாப்பிட்டுவிட்டு, இரண்டு மூன்று வேளைக்குச் சாப்பாடு 

எடுத்துச் செல்வது நல்லது. 

2. தனியார் வாகனங்கள் அனைத்தும் நிலக்கல்லுக்கு அப்பால் அனுமதிக்கப்படுவதில்லை. எனவே, இங்கேயே தண்ணீர் வாங்கிக்கொள்ள வேண்டும். இதைவிட்டால் சபரிமலை சன்னிதானத்தில்தான் தண்ணீர் கிடைக்கும்.

3. நிலக்கல்லிலிருந்து பம்பை வரை கேரள அரசுப் பேருந்தில் மட்டுமே செல்லமுடியும். அதுவும் இந்தப் பேருந்துகளில் நடத்துநர்கள் இருக்கமாட்டார்கள். நிலக்கல்லில் கூப்பன் பெற்று மட்டுமே பேருந்தில் சென்று,  திரும்ப முடியும்.  

4. பம்பை சென்றபிறகு திரிவேணி பாலம் வழியாகத்தான் கன்னிமூல கணபதி கோயிலுக்குச் செல்ல முடியும். 

5. பம்பை பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால் அந்தப் பாதை மூடப்பட்டிருக்கிறது.

6. திரிவேணி சங்கமத்திலிருந்து அரட்டுக்கடவு வரை பெரும்பாலான இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டிருக்கிறது. ஆதலால் எச்சரிக்கையுடன் செல்வது நல்லது.

7. பம்பையில் ஒரு சில இடங்களில் மட்டுமே தற்காலிக 'பயோ கழிப்பறை' வசதிகள்  அமைக்கப்பட்டிருக்கின்றன. அதைவிட்டால் சன்னிதானம்தான். இடையில் சொட்டு தண்ணீர் கூட கிடைக்காது.