சிறப்பு கட்டுரை
ஆஞ்சநேயா... அனுமந்தேயா..!
தொடர்கள்
Published:Updated:

ஆலயம் தேடுவோம்!

ஆலயம் தேடுவோம்!

ஆலயம் தேடுவோம்!
ஆலயம் தேடுவோம்!
ஆலயம் தேடுவோம்!

கோயில் இல்லாமல் ஊர் இல்லை, ஊரில்லாமல் கோயிலும் இல்லை என்றிருந்த நிலையெல்லாம் எப்போதோ மாறி விட்டது. அந்தக் காலத்தில் ஒரு கோயிலைக் கட்டி, அந்தக் கோயிலைச் சுற்றிலும் தெருக்களை அமைத்து, வீடுகளை எழுப்பி, மக்களைக் குடியமர்த்தினார்கள், மன்னர்கள். இன்னும் சில இடங்களில், ஊர்கள் அமைந்து, ஆனால் அங்கே கோயில்கள் இல்லாத நிலையைக் கண்ட மன்னர்கள், அந்த ஊர்களில் அழகிய கோயிலைக் கட்டி, அதற்கு நிவந்தங்களும் அளித்தனர்.

##~##
சோழ தேசத்தின் தலைநகராக தஞ்சாவூர் விளங்கினாலும், ஆரூர் எனப்படும் திருவாரூர் நகரம், அந்தக் காலத்தில் மிகச் செழிப்புடன் வளர்ந்திருந்தது. அருகில் உள்ள நாகப்பட்டினமும் வேதாரண்யமும் கோடியக்கரையும் கடல் சூழ்ந்த பகுதியாக இருப்பதால், வெளிதேசத்தில் இருந்து அந்நிய சக்திகள் சட்டென்று ஊடுருவி விடுவார்கள் என்பதால், அவர்களைக் கண்காணிக்க, ஆரூருக்கு மிக முக்கியத்துவம் தந்தனர், மன்னர் பெருமக்கள். தேர்ந்த அந்தணர்கள் வேள்வி செய்வதற்காக தஞ்சாவூர், திருவையாறு போன்ற ஊர்களில் இருந்து ஆரூரைச் சுற்றியுள்ள ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். உளவுப் பணி செய்யும் வீரர்கள், ஆரூரைச் சுற்றியுள்ள எல்லா ஊர்களிலும் நான்கைந்து பேர் கொண்ட குழுக்களாக அமர்த்தப்பட்டனர். மெள்ள மெள்ள, மிகப் பெரிய கண்காணிப்புப் படையினரும், எதிரிகளைத் தாக்குகிற போர்ப் படையினருமாகச் சிறந்து விளங்கியது ஆரூரும் அதைச் சுற்றிய கிராமங்களும்!

திருவாரூர் பகுதியில், அருகருகே உள்ள ஐந்து ஊர்களில், ஐந்து சிவாலயங்கள் எழுப்பப்பட்டிருந்தன. இதனை பஞ்ச லிங்கத் தலங்கள் என்பர். சிவனாண்டார்கோவில் எனும் ஊரில் உள்ள ஸ்ரீமூகாம்பிகை சமேத ஸ்ரீநாகநாத ஸ்வாமி கோயில், ஊட்டியாணி எனும் ஊரில் உள்ள கூத்தாண்டார் கோயிலில் அருள்பாலிக்கிற ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீபிட்சாண்டார் ஸ்வாமி கோயில், நட்டுவாண்டார் கோயிலில் எழுந்தருளியுள்ள (தற்போது திருநாட்டியத்தான்குடி எனப்படுகிறது) ஸ்ரீமலர்மங்கை நாயகி சமேத ஸ்ரீரத்தினபுரீஸ்வரர் கோயில், மணக்கரை கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீசோமகுலநாயகி சமேத ஸ்ரீகூனாண்டார் ஸ்வாமி கோயில், கோவில்பத்து கிராமத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீஅமிர்தநாயகி சமேத ஸ்ரீமதுசுந்தரேஸ்வரர் கோயில் என 5 ஆலயங்களை, பஞ்ச லிங்கத் தலங்கள் என்றனர்.

நஞ்சையும் புஞ்சையுமா கப் பசுமை போர்த்தியிருந்த இந்தக் கிராமங்களைச் செழிக்கச் செய்வதும் சிறக்கச் செய்வதும் இங்கே கோயில் கொண்டிருக்கும் இறைத் திருமேனிகள்தான் எனக் கொண்டாடினர் மக்கள். நல்ல நாள், பெரிய நாள் என்றால், மாட்டுவண்டியை கட்டிக்கொண்டு, குடும்ப சகிதமாக அந்தணர்களும் வேளாளர்களும் ஒற்றர் களும் கிளம்பி, ஐந்து சிவாலயங்களையும் தரிசித்தார்கள். அந்த வேளையில்... நாட்டு நிலவரங்களை, எதிரிகளின் ஊடுருவல்களை விலாவரியாக விவரித்து, தஞ்சையில் உள்ள மேலதிகாரிக்குத் தகவல் அனுப்பினார்கள்.  தேசத்தைக் காப்பதற்கு மிகப் பெரிய மனிதக் கூட்டத் துடன் இறை பக்தியும் ஒன்று சேர... சோழ மன்னர்கள் தொட்டதெல்லாம் பொன்னாயிற்று; தொடுத்த போர்கள் அனைத்திலும் வெற்றியே கிடைத்தது.

இந்த ஐந்து சிவாலயங்களையும் ஒருசேர, ஒரே நாளில் மெய்சிலிர்ப்போடு தரிசித்த காலமெல்லாம் இன்றைக்கு மலையேறிவிட்டது. குறிப்பாக, ஐந்து சிவாலயங்களில் ஒன்றான, கோவில்பத்து ஸ்ரீஅமிர்தநாயகி சமேத ஸ்ரீமது சுந்தரேஸ்வரர் கோயிலில் வழிபாடுகளும் கோலாகலங்களும் முற்றிலுமாகக் குறைந்துவிட்டன.

ஆலயம் தேடுவோம்!

''அமிர்தநாயகிக்கு ஒரு வஸ்திரத்தைச் சார்த்தி, விதை நெல்லை வைத்து வணங்கினால், அந்த முறை நெடுநெடுவென நெல்மணிகள் வளர்ந்து, வளம் கொழிக்குமாம்! அதேபோல், ஸ்வாமிக்கும் அம்பாளுக்கும் அபிஷேகம் செய்து, புது வஸ்திரம் சார்த்தி, பொங்கல் நைவேத்தியம் செய்து, சந்நிதியில் ஜாதகத்தை வைத்து வணங்கினால், அத்தனை தோஷங்களும் விலகி, திருமணம், பிள்ளை பாக்கியம், நல்ல உத்தியோகம், வீடு- மனை யோகம் முதலான சகல சௌபாக்கியமும் கிடைக்கப்பெறும் என்பார்கள். அப்பேர்ப்பட்ட கோயில் இன்றைக்கு, இந்த நிலைமை யில் இருப்பது காணச் சகியாத கொடுமை!'' என்கிறார் ஊர்ப்பெரியவர் ஒருவர்.

உண்மைதான். கோபுரமில்லாத வாசல். எந்நேரமும் விழுந்து விடுவதுபோல் இருக்கிற கதவுகள். மிகப் பெரிய பிராகாரம் பச்சைப் பசேல் புல்வெளியாக, மாடுகளின் மேய்ச்சல் மைதானமாகி விட்டது. உள்ளே, இடிந்து கிடக்கிறது மடப்பள்ளி.

'உலகுக்கே படியளக்கும் சிவனாருக்கா இந்த நிலைமை?’ என விக்கித்துப் போகிறது மனம். நவக் கிரக சந்நிதிகள் இருந்ததற்கான எந்தச் சுவடும் இல்லா மல், முற்றிலுமாக தரைமட்டமாகிவிட்டது, அந்தக் கட்டடம்.

ஆலயம் தேடுவோம்!

சில படிகள் ஏறினால், நம் வாழ்க்கையையே உயர்த்தி அருளும் ஸ்ரீஅமிர்தநாயகியையும் ஸ்ரீமது சுந்தரேஸ்வரரையும் தரிசிக்கலாம். ஆங்காங்கே பெயர்ந்தும் விரிசலுற்றும் கிடக்கின்றன சுவர்களும் விமானங்களும்! அந்த விரிசல்களில் இருந்து செடி- கொடிகளும் மரங்களும் முளைத்து வளர்ந்திருப்பதைக் கண்டு, எப்படி மனம் கலங்காமல் இருக்கமுடியும்?!

ஸ்வாமியும் அம்பாளும் தினமும் புதுப்புது வஸ்திரம் அணிந்திருந்த காலம் நினைவுக்கு வர, அந்த அம்பிகையின் சந்நிதியில் நிற்கும்போது, கரகரவென வழிந்தோடுகிறது கண்ணீர். கிழக்கு நோக்கிய ஆலயத்தின் கிழக்குப் பார்த்த சந்நிதியில், ஸ்ரீமதுசுந்தரேஸ்வரர். சுந்தரம் என்றாலே அழகு! ஆனால், மொத்த அழகையும் தொலைத்து விட்டு, களையிழந்த ஆலயத்தில் காட்சி தரும் சிவலிங்கத் திருமேனியைப் பார்க்கப் பார்க்க... 'படியளக்கும் சிவ சந்நிதி, இப்படிப் பாழ்பட்டுக் கிடக்கிறதே...’ என்று பதைபதைக்கிறது உள்ளம்.

கல்விக் கடவுள் ஸ்ரீதட்சிணாமூர்த்தியின் திருப்பாதங்கள் பின்னமுற்று, உடைந்த நிலையில் இருக்க... 'ஞானக் கண் திறந்து, கல்விக்குக் கை கொடுத்தார் ஸ்ரீதட்சிணாமூர்த்தி. இதனால், படித்த படிப்புக்கு, வெளியூரில் வேலை கிடைத்து, பயணித்துச் சென்ற கால்களுக்கு உரியவர்கள், கொஞ்சம் மனசு வைத்தால், ஸ்ரீதட்சிணாமூர்த்தி புதிய திருமேனியில் ஜொலிக்க மாட்டாரா?’ என ஏங்கித் தவிக்கிறது மனசு. ஒரு வீட்டின் இதயமாகத் திகழ்கிற பெண்களின் சகல பிரச்னைகளையும் தீர்ப்பதற்கு, அவர்கள் ராகு கால வழிபாடுகளைச் செய்வதற்கு, கோஷ்டத் தில் குடியிருப்பாளே ஸ்ரீதுர்கை... அவளின் அற்புதத் திருமேனியையே இங்கு காணோம்! முற்றிலுமாக பின்னம் அடைந்து, வெறும் பீடம் மட்டுமே இருக்கிறது.

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அழகிய, சிறிய கிராமம் கோவில்பத்து. ஒருகாலத்தில், இங்கே பத்துக் கோயில்கள் இருந்தனவா, அல்லது 'கோயில் மீது பற்று வை’ என்று வலியுறுத்துவதற்காகச் சொல்லப்பட்டு, பிறகு அதுவே கோவில்பத்து என மருவிவிட்டதா என்பது புரியவில்லை. ஆனால், இப்படிச் சிதிலமுற்று, வழிபாடுகள் ஏதுமின்றி, பரிதாப மாகக் காட்சி தருகிற கோயில்களின்மீது நாம் கொஞ்சம் கூடுதலாகவே பற்று வைக்கலாம்; வைக்கவேண்டும் என்பதுதான் நியாயம்!

விளக்கேற்ற கொஞ்சம் எண்ணெய், நைவேத்தியத்துக்கு கைப்பிடி அரிசி, ஒரு சந்நிதியை அமைப்பதற்கு நம்மால் முடிந்த ஒற்றைச் செங்கல், ஸ்ரீதட்சிணாமூர்த்தி மற்றும் ஸ்ரீதுர்கையின் புதிய திருவிக்கிரகங்கள் அமைக்க சிறிதளவேனும் காணிக்கை, பிராகாரத்தையும் கோயில் நுழைவாயில் கதவையும் சரிப்படுத்தி, சீர்படுத்துவதற்கு நம்மால் முடிந்த சிறு உதவி... இதைத்தான் எதிர்பார்க்கிறார்கள்... நம் அம்மையப்பனான, ஸ்ரீஅமிர்தநாயகியும் ஸ்ரீமது சுந்தரேஸ்வரரும்!

'பெற்றோரைக் கைவிடலாகாது’ என்பதை உணர்ந்தவர்கள்தானே நாம்!

படங்கள்: இ.ராஜவிபீஷிகா