
மகுடேசுவரன்
ரெய்ச்சூர்க்கோட்டை முற்றுகைக்காக கி.பி. 1520-ம் ஆண்டு பிப்ரவரித் திங்களன்று ராயரின் படையணிகள் புறப்பட்டன. கோட்டை முற்றுகைகளை மழைத் தண்ணீர் வற்றத் தொடங்கும் கோடையின் தொடக்கத்தில் தொடங்குவதுதான் சிறப்பு. ஏனென்றால், திங்கள்கணக் கில் ஆண்டுக்கணக்கில் அந்த முற்றுகைக் காலம் நீடிக்கலாம். மொகலாயப் படைகள் செஞ்சிக்கோட்டையைக் கைப்பற்ற முனைந்த போது அந்த முற்றுகைப் போர் ஒன்றோ இரண்டோ அல்ல, ஏழாண்டு களுக்கு நீடித்தது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். அதனால் ராயரின் பெருந்திரளான படைகள் கோடையின் தொடக்கத்தில் அந்த முற்றுகையைத் தொடங்கின.
ரெய்ச்சூர்க் கோட்டையானது கைப்பற்றுதற்கு எளிதாய் இருக்கப்போவதில்லை என்பது ராயர்க்குத் தெரியும். அது பிற கோட்டைகளைப் போன்று தரைக்கோட்டையும் இல்லை. ஏறுதற்குக் கடினமான மலைக்கோட்டை. மூன்று பெரு மதில்கள் அசைக்க முடியாதபடி அரண்செய்யும் கற்கோட்டை.
ஒரு கோட்டையானது முற்றுகைக்கு ஆளா னால் அதன் உள்ளேயும் வெளியேயும் நிகழும் போக்குவரத்து முற்றாகத் துண்டிக்கப்படும். மதிலடுக்குகளின் நுழைவாயிற்கதவுகள் இறுக்கி மூடப்படும். உள்ளிருப்பவர்கள் உள்ளேயே இருக்க வேண்டும். கோட்டைக்கு வெளியே இருப்பவர்கள் எவ்வகையினும் உள்ளே நுழைய முடியாது.

இதைப்போன்ற கொடுஞ்சோதனைக் காலங் களில்தாம் கோட்டைக்கும் வெளிப்புறத்தே ஓரிடத்துக்கும் இணைப்பு வழியாக நிலத்தடிச் சுரங்கப் பாதைகளை அமைத்திருப்பார்கள். அப்பாதைகள் அரச ரகசியங்கள். அவை தொடங்குமிடமும் சேருமிடமும் அரசர்க்கும் அவரின் மெய்க்காவலர்களுக்கும் மட்டுமே தெரியும். கோட்டைக்குள் இருப்பவர்க்கும் வெளியே இருப்பவர்க்கும் இடையே புறாக்காலில் செய்திச்சுருள் கட்டி அனுப்புவதுதான் ஒரே செய்தித் தொடர்பு.
ரெய்ச்சூர்க் கோட்டைக்குள் பெரும்படையினர் நிலைகொண்டிருந்தனர். உள்ளே நூற்றுக் கணக்கான குதிரைப்படையினரும் வில்லாளிகளும் இருந்தனர். இருபதுக்கும் மேற்பட்ட யானைகளும் இருந்தன. முற்றுகையினால் உணவோ நீரோ இல்லாமல் சில கோட்டைகள் வீழ்ந்துவிடும். ஆனால், ரெய்ச்சூர்க்கோட்டைக்குள் அடுத்த சில ஆண்டுகளுக்குத் தேவையான உணவு தானியங்கள் இருப்பில் இருந்தன. ஐந்துக்கும் மேற்பட்ட வற்றாத கிணறுகளும் குளங்களும் தண்ணீர்த் தேவையை நிறைவேற்றின.
கோட்டைக்குள் போதிய படைக் கருவிகளும் குவிக்கப்பட்டிருந்தன. ஆனால், முற்றுகையிட் டிருப்பது ராயரின் படைகள். பத்து லட்சத்துக்கு அருகிலானவர்கள் அந்தப் படையில் பங்கு பெற்றி ருக்கிறார்கள். அதனால் கோட்டையை மூடி அடைத்துக்கொண்டு உள்ளேயே இருப்பதே ஒரே வழி. அவர்களையும் கோட்டையையும் காப்பதற்கு பீஜப்பூரிலிருந்து இஸ்மாயில் அடில்சாவின் படைகள்தாம் வந்தாக வேண்டும். கோட்டையை முன்வைத்து இருதரப்பும் பெரும்போர் நிகழ்த்தி வெற்றி தோல்வியை முடிவு செய்ய வேண்டும்.
கிருஷ்ண தேவராயரின் படையணிகள் பல்வேறு பிரிவுகளாகப் பிரிந்து அணிவகுத்தன. ஒவ்வொரு படைப்பிரிவுக்கும் ஒரு தளபதி பொறுப்பாகியிருந்தார். அவர்கள் `நாயக்கர்' எனப் பட்டனர். பெம்மசானி ராமலிங்க ராஜா (கம்ம நாயக்கர்), திரும்பிக்கரா, திம்மப்ப நாயக்கன், அடப்ப நாயக்கன், கந்தராஜா, குமார வீரையன் ஆகியோர் கிருஷ்ண தேவராயரின் படைப்பிரிவு களுக்குத் தலைமையேற்றிருந்த தளபதிகள். இவர்கள் ஒவ்வொருவரின் கீழும் பத்தாயிரத்தி லிருந்து ஒரு லட்சத்து இருபதினாயிரம் வரை யிலான காலாட்படை வீரர்கள் அணிவகுத்தனர். ஆட்படையினர் மட்டுமன்றி ஒவ்வொரு படைப்பிரிவிலும் ஆயிரம் முதல் ஆறாயிரம் வரையிலான குதிரைப்படையினரும் இருந்தனர். அவற்றோடு ஒவ்வொரு படைப்பிரிவும் நூற்றுக் கணக்கான யானைகளைக் கொண்டிருந்தன.
இம்மண்ணில் நிகழ்ந்த மாபெரும் கோட்டை முற்றுகைப்போரில் அடுத்த நிலைத் தளபதிகளாகப் பொறுப்பேற்றிருந்தவர்களின் பெரும்பட்டியலும் கிடைக்கிறது. ராணா ஜெகதேவர், ராயச்சூரி ராமிநாயுடு, ஹண்டே மல்லராயர், போய ராமப்பர், சாளுவ நாயுடு, திப்பராசு ஐயப்ப நாயுடு, கோடிக்கம் விசுவநாத நாயுடு, செவ்வப்ப நாயுடு, அக்கப்ப நாயுடு, கிருஷ்ணப்ப நாயுடு, வெளுகோட்டி எச்சம்ம நாயுடு, கன்னட பசவப்ப நாயுடு, சாளுவ மேகராஜா, மத்தள ஆனந்த ராஜா, பொம்மிரெட்டி, நாகரெட்டி, பசவரெட்டி, வித்தலப்ப நாயுடு, வீரம்ம ராஜா ஆகியோரே அவர்கள்.

படையணிகள் நிலைகொண்டிருக்கும் இடத் துக்கு நேர் பின்னே அவர்களுக்கான சேவைகளைச் செய்பவர்களும் குழுமியிருந்தனர். ஆடல் மங்கையர், துணி துவைப்பவர்கள், நீர்க் குடுவை யர்கள், வணிகர்கள் என்று பலரும் அவர்களில் அடங்குவர். முற்றுகைப் படைக்குப் பல கிலோ மீட்டர்கள் தள்ளி கூடாரம் அமைத்துத் தங்கியிருக் கும் அவர்களுடைய தற்காலிகத் தங்கல்பகுதியே செல்வ வளமிக்க நகரத்தைப்போல் விளங்கியதாம். கோட்டைப் பகுதிக்குக் கிழக்கே மல்லியாபாத் என்கின்ற பகுதியில் ராயரின் பெரும்படைகள் தம் முதல் நிலையை அமைத்துத் தங்கின.
இஸ்மாயில் அடில்சாவுக்கு உளவுச் செய்தி சென்று சேர்ந்தது. ராயரின் படையணிகள் ரெய்ச்சூர்க் கோட்டையை முற்றுகையிட்டு விட்டன. தென்னிந்தியா மொத்தத்தையும் ஆண்ட விஜயநகரப் பேரரசர் பத்து லட்சத்தினர் அடங்கிய படையணியைத் திரட்டி நிற்கின்றார். பாமினி அரசர்களின் அடில்சாகிப் பிரிவினரான இஸ்மாயில் அடில்சாவுக்கு அவ்வளவு படையைத் திரட்டும் வலிமையில்லைதான். பாமினி அரசர்கள் ஐவரும் ஒன்றாகச் சேர்ந்தால்கூட ராயரின் படையளவுக்குத் திரட்டுவது கடினம்தான். அடில்சாவிடமிருந்த படையினரின் எண்ணிக்கை ஒரு லட்சத்து நாற்பதாயிரத்தினர் மட்டும்தான். பத்து இலட்சம் எங்கே ? ஒன்றரை இலட்சம் எங்கே ? எண்ணிக்கையளவில் இந்த ஒப்பீடு எங்கேயும் பொருந்தவில்லை. ஆனால், அடில்ஷா விடம் இருந்த குதிரைப் படையணி அக்காலத்து அரசர்களிலேயே மிகவும் வலிமை பெற்றது.
அது மட்டுமன்றி அடில்சாவின் வில்லாட் படையினர் தனித்திறமை பெற்றவர்கள். ஒவ்வொரு வில்லாளரும் தொள்ளாயிரம் அம்பு களைக் கையிருப்பாகக் கொண்டிருந்தனர். அடில்சாவின் துப்பாக்கி, பீரங்கிப் படைப்பிரிவும் மூர்க்கத்தாக்குதலுக்குப் பெயர் பெற்றிருந்தது. அக்காலத்தில் ஒரு மணிநேரத்துக்கு எட்டு முதல் பன்னிரண்டு முறைகள்தாம் துப்பாக்கியால் சுடமுடியும். இடைப்பட்ட நேரத்தில் வில்லாளிகள் தாம் தாக்குதல் நிகழ்த்த வேண்டும். தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட இந்த விகித முறையும் அடில்சாவின் படைக்குப் பக்கபலமாய் விளங்கிற்று.
தென்னிந்தியாவின் இரண்டு மாபெரும் படைகள் கரும்பெண்ணை ஆற்றங்கரையில் வான் பிளந்தன்ன பேரோசையோடு முனை முகத்து நின்று ஒருவரையொருவர் வெட்டிச் சாய்த்துகொண்ட கொடிய போர். அந்தப் போரில்தான் கிருஷ்ண தேவராயர் சாவின் விளிம்பை எட்டிப் பார்த்தார். அடில்சா தம்முடைய தளபதிகள் பலரையும் பலிகொடுத்துத் தானும் மண்ணில் விழுந்து புரண்டு தப்பியோடி னார். அப்போர் எப்படி நிகழ்த்தப்பட்டது என்பதை அடுத்ததாய்ப் பார்க்கப்போகிறோம்.
- தொடரும்