Published:Updated:

புதிய புராணம்! - காலம் கைகொடுக்கும்!

புதிய புராணம்! - காலம் கைகொடுக்கும்!
பிரீமியம் ஸ்டோரி
புதிய புராணம்! - காலம் கைகொடுக்கும்!

ஷங்கர்பாபு

புதிய புராணம்! - காலம் கைகொடுக்கும்!

ஷங்கர்பாபு

Published:Updated:
புதிய புராணம்! - காலம் கைகொடுக்கும்!
பிரீமியம் ஸ்டோரி
புதிய புராணம்! - காலம் கைகொடுக்கும்!

‘எல்லை தாண்டிய பயங்கரவாதம்’ பற்றிய நிறையச் செய்திகளைப் பார்க்கிறோம்; படிக்கிறோம். இந்தச் சொற்றொடர் குறிப்பது அண்டை நாடுகளின் அத்துமீறல் குறித்த செய்திகளையே என்றளவில் மட்டும் நாம் கருதிவிடக் கூடாது. ஏனெனில், நமது அன்றாட வாழ்விலும் எல்லை தாண்டிய பயங்கரவாதம் நடக்கின்றனவோ என்று ஐயப்பட வைப்பதான சம்பவங்கள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன!

உதாரணமாக, அலுவலகத்தில் திடீரெனப் புதிய பொறுப்பை ஒப்படைப்பார்கள். நமது சக்திக்கு மீறிய வேலையாக இருக்கும் அது. ஒரு வண்ணத்துப்பூச்சி போன்று மலரைச் சுற்றி மட்டுமே பறக்கத் தெரிந்த உங்களிடம், `கடலைத் தாண்டிப் பறக்கவேண்டும்’ என்றால் எப்படி?!  இப்படி, வாழ்க்கை உங்களுடைய நியாயமான எல்லையைத் தாண்டிப் பணிகளையும் சூழல்களையும் வழங்கும்போது நிலைகுலைந்து விடுவீர்கள்தானே?! இப்படியான சூழல் நம்மில் பெரும்பாலானோருக்கு ஏற்படுவது உண்டு.

இங்ஙனம், உங்களை நீங்களே பலவீனமாக உணர்கிற தருணங்களி லிருந்து எப்படி மீள்வது? இதோ, சில வழிப்பறி கொள்ளையர்கள் உங்களுக்கு உதவப் போகிறார்கள்!

புதிய புராணம்! - காலம் கைகொடுக்கும்!

மகாபாரதத்தில், பகவான் கிருஷ்ணனின் அவதார நோக்கம் முடிந்த பிறகு, அவர் ஆணைப்படி யாதவ குலப் பெண்களை அழைத்துக் கொண்டு துவாரகையிலிருந்து இந்திரப்பிரஸ்தத்துக்குக் கிளம்புகிறான் அர்ஜுனன். வழியில் கொள்ளையர் கூட்டம் ஒன்று அவர்களை மறித்துத் தாக்கத் துவங்கியது.

இப்போது நீங்கள் என்ன நினைப்பீர்கள்... ‘அர்ஜுனன் யாரென்று தெரியாமல் இந்தக் கூட்டம் மோதுகிறது’ என்றுதானே! அப்படித் தான் அர்ஜுனனும் நினைத்தான். அவர்களை எச்சரித்தான்.

‘‘வந்த வழியே திரும்பிச் சென்று விடுங்கள். இல்லையெனில் என்னுடைய அஸ்திரங்களுக்கு இரையாவீர்கள்’’ என்றான்.

ஆனால், அந்தக் கொள்ளையர்களோ அர்ஜுனனின் வார்த்தைக்குச் சிறிதும் செவி சாய்க்கவில்லை. வேறுவழியின்றி அர்ஜுனன் காண்டீபத்தைக் கையில் எடுத்தான்.

அதன் பிறகு நடந்ததுதான் அதிசயம்! அர்ஜுனனால் காண்டீபத்தில் நாணேற்றக் கூட இயலவில்லை. மிகவும் பிரயத்தனப்பட்டே வில்லில் நாண் ஏற்றினான். அதுமட்டுமின்றி, அஸ்திர வித்தைகளும் அவனுக்குச் சுத்தமாக மறந்தே போயின. அப்படியும் அவன் சிரமப் பட்டு எய்த அம்புகளோ இலக்கு தவறின.

இதற்கிடையில் கொள்ளையர் கூட்டம் பெண்களையும் பொருள்களையும் கவர்ந்து சென்றது. அர்ஜுனன் பலத்த போராட்டத்துக்குப் பிறகு தப்பிப்பிழைத்த சில பெண்களோடு இந்திரபிரஸ்தத்தை அடைந்தான்.

யோசித்துப் பாருங்கள்... அர்ஜுனன் எத்தகைய வீரன்! பீஷ்மரையும், துரோணரையும் கர்ணனையும் வீழ்த்தியவன். பாரதப்போரில் பாண்டவர்களுக்கு வெற்றி கிடைத்தது எனில் அதற்குப் பிரதானக் காரணமே அர்ஜுனன்தான் என்று சொல்லும் அளவுக்குக் களத்தில் சாகசங்கள் புரிந்தவன். ஆனால், ஊர் பெயர் தெரியாத சாதாரணக் கொள்ளையரிடம் தோற்றுப் போனான்.

இந்தச் சம்பவம் எதைக் காட்டுகிறது?

எல்லாவற்றையும் காலம்தான் கட்டுப்படுத்து கிறது. ஒருவனுக்குக் கிடைக்கும் புகழ், வெற்றி, செல்வம், பலம், அறிவு எல்லாமே காலத்தை ஒட்டி ஏற்படுபவை; காலத்தால் முடித்து வைக்கப்படுபவை. ஒருவன் செல்வாக்கு உள்ளவனாகத் திகழ்வதும் அவனே அவற்றை இழப்பதும் காலத்தினால்தான்! ஆகவே, எந்தவொரு கட்டத்திலும் ‘நான்’ என்று அகந்தை கொள்ளக் கூடாது.

பீஷ்மர், துரோணர், கர்ணன் போன்றோரை எதிர்த்துப் போராட வேண்டிய சூழலில் அர்ஜுனனுக்குக் காண்டீபத்தையும், வில் வித்தையையும், கிருஷ்ணபரமாத்மாவின் துணையையும் வழங்கியிருந்தது காலம். அப்போது அவனுக்குத் தேவைப்பட்ட அனைத்தும் கிடைத்தன. ஆனால், கொள்ளையர்களுடனான போராட்டத்தின்போது அனைத்தையும் பறித்துவிட்டிருந்தது காலம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

புதிய புராணம்! - காலம் கைகொடுக்கும்!

ஒரு சூழலில் அர்ஜுனனைப் பலப்படுத்திய காலம், மற்றொரு தருணத்தில் பலவீனனாக்கிவிட்டது. அவன் மூலம் பூமியில் சில காரியங்கள் நிகழ்ந்தாக வேண்டும். அதற்கேற்பவே அவனையும் அவனது நகர்வுகளையும் தீர்மானித்தது காலம் என்றே சொல்லவேண்டும்.

நம்மாலும் வாழ்க்கையைக் கட்டாயப்படுத்த முடியாது. நமக்கு நடக்கும் சம்பவங்களும் நம்மைக் கேட்டுக்கொண்டோ, நமது விருப்பப் படியோ நடக்கவேண்டும் என்று எவ்விதக் கட்டாயமும் இல்லை.

‘நமது எல்லை இதுதான்’ என்று நாம் விரும்புகிற ஒன்றை நாமாகவே தீர்மானித்துக்கொள்ளும் போது, நமது வளர்ச்சி அதற்குமேல் இருக்காது. ஆனால், நீங்கள் தீர்மானித்து வைத்திருக்கும் எல்லையையும் தாண்டி  எப்போது நீங்கள் தள்ளப்படுகிறீர்களோ, அப்போது உங்களின் சக்தியும் எல்லையும் விரிவாகப் போகின்றன என்று பொருள்; உங்களுடைய எல்லையை விரிவுபடுத்தும் வேலையைக் காலம் துவங்கிவிட்டது என்று அர்த்தம்.

நீங்கள் பனிக்கட்டி அருகே தள்ளப்பட்டீர்கள் என்றால், அங்கே குளிர்காய்வதற்கான வசதி களும் இருக்கும் என்று நம்புங்கள்; நதியில் இறக்கிவிடப்பட்டால், உங்களுக்கு நீச்சல் கற்றுத் தரும் ஆசான் அங்கு இருந்தே தீருவார் என நம்புங்கள்.

‘தருவார்... நம்புங்கள்’ என்பதைவிடவும் இப்படிச் சொல்லலாம்.  தேவையான நேரத்தில் தேவையான சக்தியைக் கடவுள் தரவே செய் கிறார்; நாம்தான் அதை உணர்ந்துகொள்ளவில்லை எனலாம். ஆக, நம்மைச் சூழந்திருக்கும் இறையின் கொடையை உணர்ந்தால், அடையாளம் கண்டுகொண்டாலே போதும்! உங்களது எதிரி கர்ணனாக இருந்து, அவனை எதிர்கொள்ள ஒரு குருசேத்திரம் காத்திருந்தால்..?கவலைப்படத் தேவையில்லை. அதே வாழ்க்கை உங்கள் கரங்களில் காண்டீபத்தை வழங்கும்; உங்களது தேரை ஓட்டக் கண்ணனும் வந்துசேர்வான்! 

உங்களுக்கு நேரும் துன்பங்கள் எல்லை தாண்டிய பயங்கரவாதம் அல்ல, உங்களின் எல்லையை விரிவு செய்யும் ஆசிர்வாதங்கள் என்பதைப் பரிபூரணமாக ஏற்கப் பழகுங்கள். அப்போது அகிலமே உங்கள் வசமாகும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism