Published:Updated:

சனங்களின் சாமிகள் - 17

சனங்களின் சாமிகள் - 17
பிரீமியம் ஸ்டோரி
சனங்களின் சாமிகள் - 17

அ.கா.பெருமாள் - ஓவியங்கள்: ரமணன்

சனங்களின் சாமிகள் - 17

அ.கா.பெருமாள் - ஓவியங்கள்: ரமணன்

Published:Updated:
சனங்களின் சாமிகள் - 17
பிரீமியம் ஸ்டோரி
சனங்களின் சாமிகள் - 17

மூத்த தங்கா...  ஆறு தங்காக்கள் கதை!

அவர் காமாட்சி அம்மன் கோயில் பூசகர். ஏழ்மை நிலையிலிருப்பவர். ஊர்க்காரர்கள் மாதமொருமுறை கொடுக்கும் சில படி அரிசி நெல், பூஜைக்கு வரும் பக்தர்கள் தரும் சன்மானம் எனச் சொற்ப வருமானம்.

அவருக்கு 16 வயதில் மகள். தெய்வீகக்களை வீசும் முகம் அவளுக்கு. பார்க்கும்போது, சாட்சாத் காமாட்சி அம்மனே கருவறையிலிருந்து வெளியே வந்துவிட்டாளோ என்று தோன்றும்படியான அழகு!

பூசகரின் மகள் கோயிலுக்கு அடிக்கடி வருவாள். அவளுக்கு ஆறு தோழிகள். அவர்கள் எல்லோருமே அந்த ஊரிலுள்ள ஒரு குறிப்பிட்ட சாதியைச் சார்ந்தவர்கள். ஏழு தோழிகளும் பூசகருக்கு உதவுவதாக வீட்டில் சொல்லிவிட்டுக் கோயிலுக்கு வருவார்கள். வந்ததிலிருந்து, திரும்பிப் போகும்வரை பிராகாரத்தில் விளையாடுவதுதான் அவர்களின் வேலையாக இருக்கும். வரும் பக்தர்களும் இவர்களைக் கண்டுகொள்ள மாட்டார்கள். ஊராரைப் பொறுத்தவரை அந்த ஏழு பெண்களும் செல்லப் பிள்ளைகள். அதனால் அவர்களை யாரும் எதுவும் சொல்ல மாட்டார்கள். மாறாக, அவர்களின் ஆட்டத்தை ரசித்துவிட்டுப் போவார்கள்.

சனங்களின் சாமிகள் - 17

அந்தக் காமாட்சி அம்மன் கோயில் `கச்சகட்டி’ கிராமத் தில் இருந்தது.  அது வயல், தோட்டங்களால் நிறைந்த வளமான ஊர். அந்த ஊருக்கே குறுந்தலைவரைப் போல் ஒரு ஜமீன்தாரர் இருந்தார். அது பாளையப்பட்டு ஆட்சி நடந்துகொண்டிருந்த காலம். ஜமீன்தாரருக்கு அந்த வட்டாரத்தில் வரி பிரிக்கும் பொறுப்பு. வரி வசூலிக்கும் பொறுப்பிலிருந்த நிலச்சுவான்தாரர்கள் குறுநில மன்னர்களைப்போல மிதப்பில் இருந்த நேரம் அது. அவர்களை யாராலும் எதுவும் செய்ய முடியாது.

கச்சகட்டி ஜமீன்தாரருக்கு ஒரு மகன் இருந்தான். யாருக்கும் கட்டுப்படாதவன். இளமை முறுக்கும் பணச்செருக்கும் அவனைத் தறிகெட்டு நடமாடச் செய்திருந்தது. அவனுக்குக் கடவுள் நம்பிக்கையெல்லாம் இல்லை. கோயிலுக்குப் போகிற பழக்கம் இல்லவே இல்லை. அப்படிப்பட்டவன் ஒருநாள் காமாட்சி கோயிலுக்கு வரவேண்டிய சூழல் ஏற்பட்டது. அந்தச் சூழல் பூசகரின் மகள் வாழ்க்கையையே புரட்டிப்போட்டது.

ஒருநாள் இளைய ஜமீன்தாரரின் குதிரை தறிகெட்டு ஓடியது. அவன் அதை விரட்டிப் பிடித்தான். அதில் ஏறி அடக்கப் பார்த்தான். அவனுக்குப் போக்குக் காட்டியபடி ஓடிய குதிரை, ஒரு கட்டத்தில் களைத்துப்போய், காமாட்சி அம்மன் கோயிலுக்குள் நுழைந்துவிட்டது.

உள்ளே நுழைந்தவன் கண்களில் பிராகாரத்தில் விளையாடிக் கொண்டிருந்த ஏழு பெண்களும் பட்டார்கள். பூசகரின் மகள் அவர்களில் தனியாகத் தெரிந்தாள். அவளைப் பார்த்தவுட னேயே கிறங்கிப்போனான் இளைய ஜமீன்தாரர். உடனே குதிரையிலிருந்து இறங்கிப்போய் அவளைத் தாவி அணைத்துக்கொள்ள வேண்டும்போல வேட்கை, நெருப்பாக அவனுக்குள் பற்றிக்கொண்டது. `இந்த ஊரில்தான் இருக்கிறாள். இத்தனை நாள்களாக நம் கண்ணில்படவில்லையே...’ என்று நினைத்தான்.

அருகே நின்றுகொண்டிருந்த உள்ளூர் ஆள் ஒருவனை அழைத்தான். அவனிடம் அந்தப் பெண்ணைச் சுட்டிக்காட்டி, ``அவள் யார் என்று தெரியுமா?’’ என்று கேட்டான்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சனங்களின் சாமிகள் - 17

``நம்ம பூசகரோட மகள் ஐயா...’’

இளைய ஜமீனுக்கு அவளை அடைய வேண்டுமென்கிற ஆசை வைக்கோல்போரில் பற்றிய நெருப்புபோல பற்றியெரிந்தது. அவனுக்கு அந்த இடத்தைவிட்டு நகரவே மனமில்லை. குதிரையை ஓர் ஓரமாக நிறுத்தினான். பெண்கள் விளையாடும் இடத்திலேயே அவன் பார்வை நிலைகொண்டிருந்தது. பெண்களுக்கு ஓர் ஆணின் விரசப் பார்வையைக் கண்டுகொள்ளும் ஆற்றல் உண்டு. ஓர் இளைஞன் தங்களையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருப்பதை அவர்கள் உணர்ந்தார்கள். பெண்கள் ஒருவருக்கொருவர் காதோடு ஏதோ பேசினார்கள். அடுத்து ஒருகணம்கூடத் தாமதிக்காமல் கோயிலுக்குள் ஓடினார்கள். பக்தர்களுடன் சேர்ந்துகொண்டார்கள். வெளியே நெடுநேரம் காத்திருந்து பார்த்து, பெண்கள் வெளியே வராததால் இளைய ஜமீன் கிளம்பிப் போனான்.

அவனுக்கு அந்தப் பெண் யாரென்று இப்போது தெரிந்துவிட்டது. ஆனால், `பூசகரின் மகளை முறைப்படி பெண் கேட்கவோ, திருமணம் செய்து கொள்ளவோ முடியாது. சாதி ஒரு பெரும் மலை யாகக் குறுக்கே நிற்கிறது. ஊர் மக்கள் சம்மதிக்க மாட்டார்கள். தந்தையும் இணங்க மாட்டார். ஆனால், அவள் எனக்கு வேண்டுமே...’ அவன் உடல் காமத்தில் துடிதுடித்தது. பலவந்தமாக அவளைக் கவர்ந்து வருவதைத் தவிர வேறு வழியில்லை என்பதை உணர்ந்தான். அதற்கு என்ன செய்யலாம் என யோசித்தான்.

அவன் இட்ட வேலைகளைச் செய்ய, அடிதடிக் குப் போக, பணியாதவர்களைக் கட்டி இழுத்துவர எனச் சில அடியாட்கள் இருந்தார்கள். அவர்களுக்கு ஒரு தலைவனும் இருந்தான். இளைய ஜமீன், அந்தத் தலைவனை அழைத்தான். விஷயத்தைச் சொன்னான். இளைய ஜமீனுக்காக பூசகரின் மகளைத் தூக்கிவருவது என வேலையாட்கள் முடிவு செய்தார்கள்.

பாவக்காரியங்களைச் செய்வதற்கான திட்டம், சில நல்லவர்களின் பொருட்டு எப்படியாவது வெளியே கசிந்துவிடுவது உண்டு. அது ஓர் எச்சரிக்கை. `உனக்கு ஆபத்து வருகிறது, தற்காத்துக்கொள்’ என தெய்வம் சூசகமாக உணர்த்தும் செய்தி. இளைய ஜமீன்தார் போட்ட சதித்திட்டம் பூசகரின் காதுக்குப் போனது. ஆனால், அவரால் என்ன செய்ய முடியும்? எதிரி செல்வாக் குள்ளவன். ஊரே அவனைக் கண்டு நடுங்குகிறது. தனியாக ஜமீனை எதிர்க்க முடியாது. ஊரில் நம்பிக்கைக் குரிய, அவர் குடும்பத்தின்மேல் அக்கறையுள்ள சில இளைஞர்களும் இருக்கத்தான் செய்தார்கள். அவர்களைத் தேடிப் போனார்.

தன் மகளையும், அவளின் தோழி களையும் எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று மன்றாடினார். இளைஞர்கள் கூடிப் பேசினர்.  உள்ளூரில் அவர்களை நெடுநாள் பாதுகாக்க முடியாது. பூசகரும் ஏழு பெண்களும் ஊரை விட்டுச் செல்வதுதான் சரி என்று அவர்களுக்குப்பட்டது. ஆனால், இளைய ஜமீன் ஆட்களின் கண்ணில் படாமல் தப்ப வேண்டுமே! அதற்கான ஒரு திட்டத்தையும் தீட்டினார்கள். அந்த ஏழு பெண்களுக்கு உதவ வேறு சில இளைஞர்களும், கூலி விவசாயி களும் பூசகரின் உறவினர்களும் வந்தார்கள்.

சனங்களின் சாமிகள் - 17

அந்த நாள் வந்தது. இரவு நேரம். பூசகரும், ஏழு பெண்களும் ஊரை விட்டுக் கிளம்பினார்கள். அவர்களுக் குப் பாதுகாப்புக்காக வாளேந்திய இளைஞர்கள் சிலரும், எரிபந்தம் ஏந்திய ஐந்து பேரும் உடன் சென் றார்கள். விடிவதற்குள் நெடுந்தூரம் போய்விட வேண்டும் என்பது அவர்கள் திட்டம். வேகவேகமாக நடந்துகொண்டிருந்தார்கள். அதற்குள் அவர்கள் கிளம்பிப் போகும் செய்தி எப்படியோ இளைய ஜமீனுக்குக் கிடைத்துவிட்டது. ஆவேசத்தில் அவன் உதடுகள் துடித்தன. அடியாட்களை அழைத்தான்.

``அவங்க ஊர் எல்லையைத் தாண்டுறதுக்குள்ள பிடிச்சு இழுத்துட்டு வாங்கடா...’’ என்று ஆணையிட்டான். அடியாட்கள் குதிரைகளில் ஏறிப் பறந்தார்கள். கொஞ்ச நேரத்தில் பூசகரும் பெண்களும் சென்றுகொண்டிருந்த இடத்தை அடைந்துவிட்டார்கள். பாதுகாப்புக்கு வந்திருந்த இளைஞர்களுக்கும் அடியாட்களுக்கும் இடையில் கடும் சண்டை நடந்தது.

பூசகரும் ஏழு பெண்களும் இன்னும் சிலரும் அங்கிருந்து நழுவி, வேகமாக நடந்து மாவூத்து என்ற ஆற்றின் கரைக்கு வந்து விட்டார்கள். சிறிய ஆறுதான். ஆனால், ஆற்றில் நீர் கரைபுரண்டு ஓடிக்கொண்டிருந்தது. இரவு நேரம். பெண் பிள்ளைகளை எப்படி ஆற்றில் இறங்கச் சொல்வது? பூசகர் கண்மூடிப் பிரார்த்தித்தார்.

``தாயே காமாட்சி நீயே துணை. எங்களைக் காப்பாற்று...’’ என்று கைகூப்பி வேண்டினார். அப்போது ஓர் அதிசயம் நிகழ்ந்தது. மாவூத்தின் மறுகரையில் ஒரு புங்கமரம் இருந்தது. அது மெதுவாக இக்கரையை நோக்கிச் சாய்ந்தது. இந்தக் கரையிலிருந்த பூசகரும் ஏழு பெண்களும் அவரோடு வந்திருந்த வேறு சிலரும் அந்த மரத்தில் ஏறிக்கொண்டனர். அன்னையின் மகிமையை என்னவென்று சொல்வது? அந்தச் சாதாரண புங்க மரம் அத்தனை பேரையும் ஏற்று தாங்கிக்கொண்டது. அப்படியே நிமிர்ந்து மறு கரையில் போய் நின்றது. மரத்திலிருந் தவர்கள் கரையில் இறங்கிக்கொண்டார்கள்.

ஆனால், இளைய ஜமீன்தாரின் அடியாட்கள் அவர்களைத் துரத்துவதை நிறுத்தவில்லை. குதிரையுடன் ஆற்றில் இறங்கினார்கள். பழக்கப்பட்ட குதிரைகள், சாதுரியமாக நீந்தி மறுகரையை அடைந்தன. பூசகரையும் பெண்களையும் தேடும் பணி இன்னும் தீவிரமானது. பெண்களும் பூசகரும் ஆற்றின் கரையிலிருந்த ஒரு புதருக்குள் சென்று ஒளிந்துகொண்டார்கள். ஜமீன் ஆட்கள் எரிபந்தங்களைக் கொளுத்திக்கொண்டார்கள். குதிரைகளில் ஏறித் தேட ஆரம்பித்தார்கள். கச்சகட்டி இளைஞர்கள் சும்மாயிருக்கவில்லை. ஜமீன் ஆட்களுடன் போராடினார்கள். அவர்களில் துள்ளு வெட்டி, சப்பாணி, லாடசன்யாசி, அக்கினி வீரபத்திரர், பதினெட்டாம் படி வீரர்கள் ஆகியோர் முக்கியமானவர்கள். அவர்களில் அரசமகன் என்பவன் ஜமீன் வீரர்களுடன் சண்டையிட்டு அவர்களை துவம்சம் செய்துகொண்டிருந்தான். தேடுதல் வேட்டையிலிருந்த ஜமீன் வீரர்கள் சிலர், ஒரு புதருக்குள் ஏழு பெண்களும் பூசகரும் மறைந்திருப்பதைக் கண்டுபிடித்துவிட்டார்கள். புதரைச் சுற்றி வளைத்தார்கள். அடியாட்களின் தலைவன் குரல் கொடுத்தான்... `` எல்லாரும் உயிர் பிழைக்கணும்னா ஒழுங்கா வெளியே வந்திருங்க. இல்லன்னா ஒரு உசுரு தங்காது...’’

சனங்களின் சாமிகள் - 17

பூசகருக்கு இப்போதும் அன்னை காமாட்சியை விட்டால் வேறு கதியில்லை. ``காமாட்சி... நாங்கள் இந்தக் கொடியவர்களிடம் மாட்டிக்கொண்டால் அவ்வளவுதான். இந்தப் பெண்களின் கற்பு பறிபோய்விடும். எங்கள் மானத்தை நீதான் காப்பாற்ற வேண்டும்...’’ என வேண்டினார். அவ்வளவுதான். எங்கிருந்து வந்தது என்று தெரியவில்லை. அந்தப் புதரில் நெருப்பு பற்றிக் கொண்டது. கண் இமைக்கும் நேரத்தில் புதர் முழுக்கக் கிடுகிடுவெனப் பரவியது.  ஏழு பெண்களும் அந்த நெருப்பில் எரிந்து கருகிப் போனார்கள். பூசகரும் உயிரிழந்தார்.

ஜமீனின் ஆட்கள் புதருக்குள் பெண்கள் கருகிப்போய் இறந்து கிடந்ததைப் பார்த்தார்கள். `இனிச் சண்டையிடுவதில் பலனில்லை’ என்பதை உணர்ந்துகொண்டார்கள். குதிரையில் ஏறித் திரும்பிப் போனார்கள். அரசமகன் கலங்கி நின்றான். `இவ்வளவு போராடியும் அந்தப் பெண் களைக் காப்பாற்ற முடியவில்லையே’ என்கிற ஆதங்கம் அவனுக்கு. அந்த வேதனை பொறுக்க மாட்டாமல் குறுவாளைத் தன் மேல் பாய்ச்சிக் கொண்டு உயிரைவிட்டான். மற்றவர்களில் சிலர் சண்டையில் மாய்ந்துபோனார்கள். சிலர் தாமாகவே உயிரை விட்டார்கள். உயிர் பிழைத்த சிலர் வேறு ஊருக்குக் குடிபெயர்ந்தார்கள்.

மாவூத்து ஆற்றங்கரையில் நெருப்பில் கருகிய ஏழு பெண்கள், அரசன் மகன், அக்கினி வீரபத்திரன், சப்பாணி, லாடசன்யாசி, வேட்டைக் கருப்பன் எல்லோரும் சிவனிடம் வரம்பெற்றுத் தெய்வமானார்கள். அவர்களுக்குக் கோயில் எடுக்கப்பட்டு, வழிபாடு நடந்தது.

`மாவூத்து ஐயனார் கோயில்’, மதுரை மாவட்டம் நிலக்கோட்டை வட்டம், பள்ளப்பட்டி கிராமத்தில் ஓர் ஆற்றின் கரையில் உள்ளது. இங்கு சாஸ்தாதான் முக்கிய தெய்வம். பரிவார தெய்வங்கள் மூத்த தங்கா (பூசகரின் மகள்), ஆறுதங்காக்கள் (பிற தோழிகள்), அரசன் மகன், துள்ளு வெட்டி, சப்பாணி, அக்கினி வீரபத்திரர், லாடசன்யாசி, வேட்டைக்கருப்பன் ஆகியோருக்கு இங்கு மாசி மாத சிவராத்திரியிலும் வைகாசி விசாகத்திலும் சிறப்பு விழாக்கள் நடைபெறுகின்றன.

பொதுவாகச் சிறப்பு விழாக்களில் பொங்கல், பயறு, பழவகைகள் படைக்கிறார்கள். வைகாசி விசாகத்தன்று, சூளையில் சுடப்படாத மண்பானை யில் ஊரிலுள்ள நீர்நிலையிலிருந்து தண்ணீர் எடுத்துக்கொண்டு வந்து கோயிலில் வைக்கின்றனர். அதற்கு இரண்டு நாள் பூசை நடக்கிறது. சிறப்பு விழாவில் பரிவார தெய்வங்களுக்குப் பலி உண்டு. கறுப்பு ஆடு பலி கொடுக்கப்படும். இந்த விழா முடிவில் மழை பொழியும் என்ற நம்பிக்கை மக்கள் மத்தியில் உண்டு. கணவன்-மனைவி உறவு, உறவினர்கள் உறவு சீர்பட, செய்வினை செய்பவரின் சூனியம் அழிந்துபோக இந்தக் கோயிலில் நேர்ச்சை செய்கிறார்கள்.

- தரிசிப்போம்...

தொகுப்பு: பாலுசத்யா