Published:Updated:

ஸ்ரீரங்கப்பட்டணம் - ‘ஆதி அரங்கனின் பாதம்பணிகிறாள் காவிரி!’

ஸ்ரீரங்கப்பட்டணம் - ‘ஆதி அரங்கனின் பாதம்பணிகிறாள் காவிரி!’
பிரீமியம் ஸ்டோரி
ஸ்ரீரங்கப்பட்டணம் - ‘ஆதி அரங்கனின் பாதம்பணிகிறாள் காவிரி!’

எஸ்.கண்ணன் கோபாலன் - படங்கள்: தே.அசோக்குமார்

ஸ்ரீரங்கப்பட்டணம் - ‘ஆதி அரங்கனின் பாதம்பணிகிறாள் காவிரி!’

எஸ்.கண்ணன் கோபாலன் - படங்கள்: தே.அசோக்குமார்

Published:Updated:
ஸ்ரீரங்கப்பட்டணம் - ‘ஆதி அரங்கனின் பாதம்பணிகிறாள் காவிரி!’
பிரீமியம் ஸ்டோரி
ஸ்ரீரங்கப்பட்டணம் - ‘ஆதி அரங்கனின் பாதம்பணிகிறாள் காவிரி!’

திகளிலேயே காவிரிக்கு எப்போதுமே தனிச் சிறப்பு உண்டு. காவிரிதான் மூன்று இடங்களில் இரண்டாகப் பிரிந்து செல்கிறது. தீவு போன்று திகழும் அந்த மூன்று இடங்களுமே வைணவ திருத்தலங்களாக அமைந்திருப்பது, காவிரிக்குக் கிடைத்த தனிப்பெருமை.

அவ்வகையில், காவிரி உற்பத்தியாகும் இடத்திலிருந்து வரிசைப்படுத்திப் பார்த்தால், முதல் தீவு - ஸ்ரீரங்கப்பட்டணம். இதை ஆதிரங்கம் என்பார்கள். அடுத்தது சிவசமுத்திரம். இது மத்திய ரங்கம் ஆகும். மூன்றாவது நமது திருவரங்கம். இதை, பூர்வரங்கம் என்று அழைப்பார்கள்.
மற்றொரு சிறப்பும் காவிரியாளுக்கு உண்டு. அது...

மண்ணுலக மக்களெல்லாம், தாங்கள் செய்த பாவங்களை, கங்கையில் போக்கிப் புனிதம் பெற்றனர். அவர்தம் பாவங் களையெல்லாம் சுமந்து நின்ற கங்கை, ‘தனது பாவம் தீர என்ன வழி?’ என்று பகவானைக் கேட்டாள். பகவான் கங்கையைப் பார்த்து, ‘`ஐப்பசி மாதத்தில் நீ காவிரி நதியில் நீராடினால், மக்களிடமிருந்து நீ பெற்ற பாவங்களெல்லாம் மறைந்து மறுபடியும் புனிதத்துவம் பெற்றவளாகிவிடுவாய்'’ என்று அருளினார். ஆக, கங்கையைவிடவும் புனிதமானவளாகப் போற்றப்படுவது, காவிரிக்குக் கிடைத்த மற்றுமொரு சிறப்பு!

ஸ்ரீரங்கப்பட்டணம் - ‘ஆதி அரங்கனின் பாதம்பணிகிறாள் காவிரி!’

ஆனால் - காவிரிக்கு இத்தகைய புனிதத்துவமும், பெருமையும் எளிதில் கிடைத்துவிட்டதா என்ன?

அது எப்படி கிடைக்கும்?

சுடச்சுடத்தான் ஒளிரும் பொன்போல், இறைவனை எண்ணி தியானமும் ஜபமும் செய்யச் செய்யத்தான் இத்தகைய புனிதத் துவமும் பெருமையும் கிடைக்கப்பெறும். அப்படித்தான் காவிரிக்கு இத்தகைய பெருமை யும் புனிதத்துவமும் கிடைத்தன.

அது - பதினாறு யுகங்களுக்கு முந்தைய காலம். காவிரி அன்னை, தான் புனிதத்துவம் பெற வேண்டி, தான் நதியாகப் பாய்கின்ற ஸ்ரீரங்கப்பட்டணத்தில், ஆதிசேஷனில் சயனம் கொண்டுள்ள மகாவிஷ்ணுவை நோக்கித் தவமிருந்தாள். அவளின் பக்திக்குக் கட்டுண்ட பரந்தாமன், காவிரியின் முன் தோன்றி, அவளுக்கு மூன்று வரங்கள் தந்தார்.

அதன்படி, கங்கையைவிடவும் புனிதமும் பெருமையும் மிகுந்தவளானாள் காவிரி.

அவள் பாய்கின்ற ஸ்ரீரங்கப்பட்டணம் பல மகான்களின் யாத்திரைத் தலமாயிற்று; தமது பக்தர்களுக்கு வரமருள பெருமாளே ஸ்ரீரங்கப் பட்டணத்தில் எழுந்தருளியதால் புண்ணியத் தலமாயிற்று.

இங்ஙனம் அங்கே... எழுந்தருளிய ஸ்ரீரங்க நாதப் பெருமாளை தரிசிக்க விரும்பினாள் மகாலட்சுமி. ஆகவே இந்தத் தலத்துக்கு வந்து காவிரியில் நீராடி பெருமாளை தரிசித்ததுடன், அங்கேயே தாமும் ரங்கநாயகித் தாயாராக எழுந்தருளினார்.

இந்தத் தலத்தின் மகிமையை உணர்ந்த பிரம்மன், சிவன் முதலான மூர்த்திகளும், தேவர்களும் இங்கு வந்து இறைவனை பூஜித் தார்கள். பிரம்மன், ஸ்ரீரங்கநாதப் பெருமாளுக் கும், ரங்கநாயகித் தாயாருக்கும் ஆலயம் கட்டினார். அத்துடன், எம்பெருமானை பூஜித்து வழிபடுவதற்காக நாரதருக்குப் பாஞ்ச ராத்ர வழிபாட்டு முறையையும் உபதேசித்து அருளினார்.

யுகங்கள் கடந்தன. ஒரு  பிரளய காலத்தில் மண்மூடி மறைந்துவிட்டது இந்தத் தலம். இந்நிலை இப்படியே தொடர்ந்தால், காவிரிக் குப் பெருமாள் அளித்த வரம் என்னாவது? காலகாலத்துக்கும் தன் மக்களுக்கு நலனும், வளமும் கிடைக்க வேண்டுமென்பதல்லவா காவிரி புரிந்த மாதவத்தின் லட்சியம்!

அதன்பொருட்டு, மகரிஷி கௌதமரின் மூலமாகத் தம்மை மீண்டும் வெளிப்படுத்திக் கொள்ள முடிவெடுத்தது பரம்பொருள்.

ஸ்ரீரங்கப்பட்டணம் - ‘ஆதி அரங்கனின் பாதம்பணிகிறாள் காவிரி!’

கோதாவரி நதிக்கரையில் ஆசிரமம் அமைத்துத் தம் சீடர்களுடன் அருந்தவம் புரிந்துவந்தார் கௌதம ரிஷி. அக்காலத்தில் கடுமையான பஞ்சம் ஏற்பட்டு, நித்திய கர்மானுஷ்டானங்களைச் செய்யவும் முடியாதவர்களாக வருந்திய ரிஷிகள் பலரும், அதற்குத் தகுந்த வளமான ஓரிடத்தைத் தேடி அலைந்தனர். வழியில், கௌதம ரிஷியின் பர்ண சாலைக்கு வந்து சேர்ந்தனர். மகிழ்ச்சியுடன் அவர்களை வரவேற்றார் கௌதமர். அவரது விருப்பப்படி அந்த ரிஷிகள் அவரது ஆசிரமத் திலேயே சில காலம் தங்கினர்.

அவர்களுக்கு உணவு சமைத்துப் பரிமாற வேண்டியிருந்ததால், கோதாவரி நதிக்குப் போகும் வழியில் தம் சீடர்களைக் கொண்டு நெல் விதை களை விதைத்துச் சென்றார் கௌதம ரிஷி. நதியில் தமது அனுஷ்டானங்களை முடித்துக்கொண்டு அவர் ஆசிரமத்துக்குத் திரும்புவதற்குள்ளாகவே,  அவருடைய தவ வலிமையின் காரணமாக, நெல்விதைகள் பயிராகியிருந்தன. அவற்றைக் கொண்டு ருசி மிகுந்த உணவு சமைத்து, அதிதிகளாக வந்திருந்த ரிஷிகளுக்குப் பரிமாறப்பட்டது.

கெளதமரின் தவ வலிமையைக் கண்டு மற்ற ரிஷிகள் பொறாமை கொண்டார்கள். அத்துடன் வளம் நிறைந்த அந்த பூமியை விட்டுச் செல்லவும் அவர்களுக்கு மனமில்லை. எனவே, அவர்கள் கௌதம ரிஷியை அங்கிருந்து துரத்திவிட முடிவு செய்தார்கள்.

மறுநாளே அவர்கள் தங்களது தவத்தின் வலிமையால் ஒரு பசுவை சிருஷ்டித்து, அங்கிருந்த தானியப் பயிர்களை மேய்வதற்கு ஏவினர். உடனே கௌதம ரிஷியின் சீடர்கள் அந்தப் பசுவை விரட்டச் சென்றனர். அந்தப் பசு வேக மாக வந்து கௌதம ரிஷியின் காலடியில் விழுந்து இறந்துபோனது. உடனே அதிதிகளாக வந்த மற்ற ரிஷிகள், கௌதம ரிஷிதான் பசுவைக் கொன்று விட்டதாகக் கூறினார்கள். ஆனால், தமது தவ வலிமையால், நடந்ததை அறிந்துகொண்ட கௌதமர், “வேத நெறிக்குப் புறம்பான காரியங்களைச் செய்ததற்காக நீங்கள் கெட்டவர்களாகவும், கொடியவர்களாகவும் மாறுவீர்கள்” என்று அந்த ரிஷிகளைச் சபித்தார்.

அத்துடன் அங்கிருந்து நகர்ந்து பெரும் யாத்தி ரையை மேற்கொண்டார். திருச்சிக்கு அருகிலுள்ள பூர்வ ரங்கமான ஸ்ரீரங்கத்தை அடைந்து ஸ்ரீரங்க நாதரை வணங்கி வழிபட்டார். அப்போது, ஸ்ரீரங்க நாதப் பெருமாள் அவர்முன் தோன்றி, விபீஷண ஆழ்வார் தமக்குப் பணிவிடை செய்த இடம் ஸ்ரீரங்கப்பட்டணம் என்றும், தாம் ஆதிரங்கனாய்த் தோன்றியுள்ள அந்தப் புண்ணிய தலத்தை கௌதமர் தரிசிக்க வேண்டுமென்றும் அருளினார்.

ஸ்ரீரங்கப்பட்டணம் - ‘ஆதி அரங்கனின் பாதம்பணிகிறாள் காவிரி!’

அதன்படி கௌதமர் ஸ்ரீரங்கப்பட்டணத்தைத் தேடிச் செல்லும் வழியில், வேறுசில மகரிஷிகள் எதிர்ப்பட்டனர். அவர்களையும் அழைத்துக் கொண்டு, ஸ்ரீரங்கப்பட்டணத்தை வந்தடைந்தார். அங்கே  தங்கிய கெளதமர் மற்றவர்களுக்கு ஸ்ரீரங்க நாதரின் மகிமைகளை எடுத்துரைத்தார். இந்த நிலையில் போதாயனர், அத்திரி, யாக்ஞவல்கியர், கண்வர், சுகர், பராசரர் முதலானோர் வருகை தந்தனர். அவர்களைக் கண்டு மகிழ்ச்சியுடன் வரவேற்றார் கெளதமர். தொடர்ந்து அவர்கள் அனைவரும் சேர்ந்து ரங்கநாதப் பெருமாளை வணங்கி வழிபட்டு யாகமொன்று தொடங் கினார்கள். அதன் விளைவாக பெருமாளின் திவ்ய தரிசனம் வாய்த்தது. மகரிஷிகள் அனைவருக்கும் ஆசியளித்த பெருமாள், பின்னர் கௌதமரைப் பார்த்து, “மகரிஷே! அருகிலுள்ள துளசிச் செடிகளின் நடுவிலுள்ள எறும்புப் புற்றினுள்ளே நான் சிலை வடிவமாக இருக்கிறேன்” என்று அருளி மறைந்தார்.

கௌதமர், தமது தவ வலிமையால் பிரம்மா, சிவன், இந்திரன் முதலான தேவர்களையும், காமதேனுவையும் வேண்டி வரவழைத்தார். அவர்களோடு மற்ற ரிஷிகளையும் அழைத்துக் கொண்டு, பெருமாள் சுட்டிக்காட்டிய துளசிப் புதரின் அருகில் சென்றார். அங்கிருந்த எறும்புப் புற்றைக் கண்டு அனைவரும் வணங்கினார்கள். காமதேனு அந்த எறும்புப் புற்றின்மேல் பாலைப் பொழிந்தது. அதனால் புற்று மண் கரைந்து போக, அந்த அற்புதம் வெளிப்பட்டது. ஆதிசேஷன்மீது யோக சயனம் கொண்ட நிலையில் ஸ்ரீரங்கநாதப் பெருமாளையும், திருவடியில் காவிரி தேவியையும் அனைவரும் தரிசித்து வணங்கிப் போற்றினார்கள்.

அந்தத் திருநாள் சித்திரை மாதம், சுக்கில பட்சம், சப்தமி திதியுடன் கூடிய சனிக்கிழமை. பின்னர் விஷ்வக்சேனர், கருடாழ்வார், சக்கரத் தாழ்வார் முதலிய தேவர்களை வணங்கியதுடன், வாயு மூலையில் தோன்றிய பிராட்டி ரங்கநாயகித் தாயாரையையும் தரிசித்து வணங்கி வலம் வந்தார்கள்.

கௌதம ரிஷி, நாரதரிடம் வழிபாட்டு முறைகள் பற்றிக் கேட்டார்.   நாரத முனிவர் பிரம்மதேவன் தமக்கு உபதேசித்த வழிபாட்டு முறைகளை கெளதமருக்கு உபதேசித்தார். கௌதம ரிஷியுடன் வந்த மகரிஷிகள் அந்தத் தலத்தை விட்டுப் பிரிய மனமில்லாதவர்களாக அங்கேயே தங்கிவிட முடிவு செய்தார்கள். மேலும் ஐப்பசி மாதம் கங்கையானவள் காவிரியில் கலந்திருப்பதாகக் கருதப்படுவதால், அவர்கள் இந்த திவ்வியத் தலத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும்படி பெருமாளை வழிபட்டார்கள்.

பெருமாளும் அவர்களுக்கு தரிசனம் தந்து, அவர்கள் வேண்டியதைப் பூர்த்தி செய்யும் விதத்தில், “ஐப்பசி மாதம், கிருஷ்ண பட்சம், தசமி திதியன்று இப்புண்ணியத் தலத்திலுள்ள அஷ்ட தீர்த்தத்தில் நீராடும் அன்பர்கள், தாங்கள் எண்ணியதை அடைவதுடன், முக்தி நிலையும் கிடைக்கப் பெறுவார்கள்” என்று அருளினார்.

ஸ்ரீரங்கப்பட்டணம் - ‘ஆதி அரங்கனின் பாதம்பணிகிறாள் காவிரி!’

பிரம்மாண்ட புராணத்தில் பச்சிமரங்க மகாத்மியத்தில் விரிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது இந்தத் திருக்கதை. இந்தப் புண்ணியக் கதையை மனதுக்குள் அசைபோட்டபடியும் தேவாதி தேவர்கள் எல்லாம் போற்றி வழிபட்ட பெருமாளை மனதுக்குள் தியானித்தபடியும் கோயிலுக்குள் நுழைந்தோம்.

காவிரியாள் இரண்டாகப் பிரிந்து செல்ல நடுவே தீவாக அமைந்திருக்கிறது  ஸ்ரீரங்கப்பட்டணம்  என்று பார்த்தோம் அல்லவா. மைசூரிலிருந்து வரும்போது சுமார் 3 கி.மீ. தொலைவுக்கு முன்ன தாகவே பாலத்தின் மூலம் காவிரியைக் கடந்து விடுகிறோம். ஊரின் மையத்தில் அமைந்திருக்கிறது ஆலயம். ராஜகோபுரத்தைக் கடந்து கோயிலுக்குள் நுழைந்தால், எழிலார்ந்த பிராகாரமும் சந்நிதிகளின் அமைப்பும் நம்மை பிரமிக்கவைக்கின்றன.

கோயிலுக்குள் மூன்று பிராகாரங்கள். துவஜ ஸ்தம்பம், ஸ்ரீரங்கமஹால் ஆகியவற்றைக் கடந்து, மூன்று பிராகாரங்களையும் முறையே வலம் வரும்போது ஸ்ரீலக்ஷ்மி நரசிம்மர், ஸ்ரீசுதர்சன ஆழ்வார், ஸ்ரீகஜேந்திர வரதராஜப் பெருமாள், நரசிம்மர், ஆஞ்சநேயர் ஆகியோரின் சந்நிதிகளை தரிசித்துவிடுகிறோம். வலம் நிறைவுற்று ஸ்வாமி சந்நிதியை நெருங்கும்போது, துவாரபாலகர் களான ஜய விஜயர் தரிசனம். இந்த இருவருக்கு அருகிலேயே வேறு இருவரின் சிலைகள்  உள்ள னவே... அவர்கள் யார்?

நம்மை ஆலயத்துக்கு அழைத்துச்சென்ற அன்பர், அவர்களின் திருக்கதையை விவரித்தார்.

ன்றைக்கு சுமார் ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்னர், ஸ்ரீரங்கப்பட்டணத்தை, விஜயநகர மன்னனின் பிரதிநிதியாக ஸ்ரீரங்கராயர் என்பவர் நிர்வகித்து வந்தார். அவரின் மனைவி அலர் மேலம்மா தீவிர பக்தையாவாள்.

அவள் பலவிதமான ஆபரணங்களைச் செய்து, செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் ரங்கநாயகித் தாயாருக்கு அணிவித்து, தரிசனம் செய்வது வழக்கம். இந்நிலையில் நோய்வாய்ப்பட்ட ஸ்ரீரங்க ராயர், ஆலய நிர்வாகப் பொறுப்பை மைசூரை ஆண்டவரும், தமது நம்பிக்கைக்கு உரியவராகவும் திகழ்ந்த ராஜ உடையாரிடம் ஒப்படைத்துவிட்டு, தலைக்காடு அருகில் உள்ள மாலங்கி என்ற இடத்துக்குச் சென்று தங்கினார். சில காலத்துக்குப் பின் இறைவனடி சேர்ந்தார். கணவர் இறந்த பின்னரும் அலர்மேலம்மா தனது வழக்கத்தை விடவில்லை.

ஸ்ரீரங்கப்பட்டணம் - ‘ஆதி அரங்கனின் பாதம்பணிகிறாள் காவிரி!’

ஆனால், நகைகளை அலர்மேலம்மாவிடம் திரும்பக் கொடுக்கக்கூடாது என்று உத்தரவிட்ட துடன், ஏற்கெனவே அலர்மேலம்மாவிடம் கொடுக்கப்பட்டிருந்த சில நகைகளையும் திரும்பப் பெறுமாறும் உத்தரவிட்டார் ராஜ உடையார்.

அதைக் கேட்ட அலர்மேலம்மாள், தான் இனியும் இங்கே இருப்பது சரியல்ல என்று தன் குதிரையில் ஏறி, தலைக்காடு என்னுமிடத்துக்குச் சென்றுவிட்டாள். ஆனால், தன்னைத் தொடர்ந்து மைசூர் ராஜாவின் சிப்பாய்கள் துரத்தி வந்ததால், `இனியும் தாம் உயிருடன் இருந்தால் தம் கற்புக்கே களங்கம் நேரிட்டுவிடும்' என்று எண்ணியவளாய் மாலங்கியில் உள்ள காவிரியில் குதித்து உயிர் துறந்தாள். அப்போது, `தலைக்காடு என்னும் இந்த இடம் மணற்காடாக மறையட்டும். மாலங்கியில் காவிரி நதி மிகுந்த ஆழமுடையதாகட்டும். மைசூர் அரச பரம்பரை வம்சமின்றிப் போகட்டும்' என்று சபித்துவிட்டாள்.

நடந்த விஷயங்களை அறிந்து மனம் வருந்திய ராஜ உடையார், துவார பாலகர்களுக்கு அருகில் ஸ்ரீரங்கராயரையும், அலர்மேலம்மாவையும் சிலை வடிவில் பிரதிஷ்டை செய்தார்.

அந்தத் தம்பதியரின் பக்திக்குத் தலைவணங்கி அவர்களைத் தொழுதுவிட்டு, ஸ்ரீரங்கநாதப் பெருமாளின் சந்நிதிக்குள் நுழைந்தோம்.

ஆஹா... அற்புதம்! அரனும் அயனும் தரிசித்து வழிபட்ட பரம்பொருள், காவிரிக்கு வரம் தந்த கற்பகவிருட்சம், கெளதமரால் வெளிப்பட்டு இன்றளவும் நம்மைக் காத்தருளும் தெய்வம்... மிக அற்புதமாக தரிசனம் தந்தது!

ஆதிசேஷனின் மீது, தெற்கே திருமுடியும், வடக்கே திருவடியும் வைத்து, இடது திருக்கரத்தை நீட்டி, வலது திருக்கரத்தைத் திருமுடிக்கு வைத்தபடி யோக சயனத்தில் சேவை சாதிக்கிறார்  ஸ்ரீரங்கநாதப் பெருமாள். அவரின் திருவடியைச் சேவித்துத் திகழ்கிறாள் காவிரியாள்.   கண்ணார தரிசித்து, நெஞ்சார வணங்கிப் பணிந்தோம். அடுத்து தாயாரின் தரிசனம். தனிச் சந்நிதியில் அருள்பாலிக்கிறார் ஸ்ரீரங்கநாயகித் தாயார். பத்மாசனத் திருக்கோலத்தில், வர - அபய ஹஸ்தங் களுடன் காட்சி தரும் தாயாரை நாள்முழுதும் தரிசித்துக்கொண்டே இருக்கலாம். அவ்வளவு காருண்யம் தாயாரின் திருமுகத்தில்! அங்கிருந்து அகல மனமின்றி, தாயாரிடம் வரம்பெற்று நகர்கிறோம். நம்முடன் வந்த அன்பர் துவஜ ஸ்தம்பத்தின் அருகில் இருந்த ஒரு மண்டபத்தைக் காட்டி, அதன் பின்னணியைக் கூறினார்:

‘‘1760-ஆம் ஆண்டில் மைசூரை ஆண்டு வந்தவர் ஸ்ரீஇம்மடி கிருஷ்ண ராஜ உடையார். இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த அவரின் படைத் தளபதி இத்தலத்து அரங்கன்மீது அதீத பக்தியும் பற்றும் கொண்டவராம்.

ஒருமுறை, இத்தலத்தின் பிரசித்திபெற்ற கோதாரோத்ஸவத்தின் எட்டாவது நாளன்று, விழாப் பந்தல் தீப்பிடித்து எரிந்துவிட்டது. அரசர் மிகவும் மனம் வருந்தினார். அதை அறிந்த படைத் தளபதி, உடனே அதே இடத்தில் இரவோடிரவாகக் கருங்கல் மண்டபம் கட்டிவிட்டார். மறுநாள் விழா சிறப்பாக நடைபெற்றது. இன்றளவும் அசை யாத உறுதியுடன் திகழும் அந்த மண்டபத்தில்தான் இப்பொழுதும் கோதாரோத்ஸவம் நடைபெற்று வருகிறது.''

அனைத்துக்கும் காரணம் அரங்கனின் அருளே அன்றி வேறென்னவாக இருக்கமுடியும். அந்தப் பேரருளின் திறம் வியந்து போற்றியபடி, ஆனந்தச் செறிவான பல அனுபவங்களை ஒருங்கே பெற்ற மகிழ்ச்சியுடன் ஆலயத்திலிருந்து கிளம்பினோம்.

ஸ்ரீரங்கப்பட்டணம் - ‘ஆதி அரங்கனின் பாதம்பணிகிறாள் காவிரி!’

தலத்தின் பெயர்: ஸ்ரீரங்கப்பட்டணம்

இருப்பிடம்:
கர்நாடக மாநிலம் மைசூரிலிருந்து சுமார் 12 கி.மீ தொலைவில் அமைந்திருக்கிறது.

பெருமாள்:
ஸ்ரீரங்கநாதப் பெருமாள். திருவடியில் காவிரி தேவி

தாயார்:
ஸ்ரீரங்கநாயகித் தாயார்.

திருவிழாக்கள்: ஸ்ரீரங்கநாதப் பெருமாள் கௌதம ரிஷிக்கு சுயம்பு மூர்த்தமாக தரிசனம் அளித்த சித்திரை மாதம், வளர்பிறை சப்தமி நாளில் விசேஷ ஆராதனைகளுடன், ஸ்ரீரங்கமுடி அலங்காரத்துடன் பெருமாள் திருவுலா, தை மாதம் வளர்பிறை சப்தமி திதியையொட்டி பிரம்மோற்சவம் தொடங்கி, ரத சப்தமி அன்று தேர்த்திருவிழா நடைபெறுகிறது. ஆண்டுதோறும் மார்கழி மாதம் பகல் பத்து மற்றும் இராப்பத்து (கோதாரோத்ஸவம்) விழாக்கள் நடைபெறுகின்றன.

விமானம்: பிரம்மானந்த விமானம்

சயனம்:
யோக சயனம்

பூஜித்தவர்கள்:
பிரம்மா, நாரதர், கௌதமரிஷி

தரிசன நேரம்: காலை 8 மணி முதல் பகல் 1 மணி வரை மற்றும் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை.

எப்படிச் செல்வது? : 
சென்னையிலிருந்து பெங்களூரு அல்லது மைசூரு சென்று தங்கிக்கொள்ளலாம். அந்த ஊர்களிலிருந்து ஸ்ரீரங்கப்பட்டணத்துக்குப் பேருந்து வசதிகள் உண்டு. வேன் முதலான தனியார் வாகனங்களும் ஸ்ரீரங்கப்பட்டணத்துக்கு பக்தர்களை அழைத்துச் செல்கின்றன.