Published:Updated:

‘சொல்லச் சொல்ல இனிக்குதடா...’

‘சொல்லச் சொல்ல இனிக்குதடா...’
பிரீமியம் ஸ்டோரி
‘சொல்லச் சொல்ல இனிக்குதடா...’

பிரேமா நாராயணன் - படங்கள்: எஸ்.விவேகானந்தன்

‘சொல்லச் சொல்ல இனிக்குதடா...’

பிரேமா நாராயணன் - படங்கள்: எஸ்.விவேகானந்தன்

Published:Updated:
‘சொல்லச் சொல்ல இனிக்குதடா...’
பிரீமியம் ஸ்டோரி
‘சொல்லச் சொல்ல இனிக்குதடா...’

‘‘குன்றத்தூர் முருகன் கோயிலில் திருப்புகழ் படி பூஜை... வந்து கலந்துகொள்ள முடியுமா?’’ என்று தோழி ஒருவர் அலைபேசியபோது, ‘‘அதென்ன திருப்புகழ் படி பூஜை’’ என்று எனக்கெழுந்த சந்தேகத்தைக் கேட்க... அவர் சொன்ன விவரங்கள் மலைக்கவைத்தன. ‘இப்படிப்பட்ட ஒரு நிகழ்வைத் தவறவிடவே கூடாது’ என்று எண்ணிய மறுகணம், குன்றத்தூர் கிளம்பிவிட்டேன்.

கடந்த ஞாயிறன்று (7.1.18) காலையிலேயே குன்றத்தூர் கோயிலுக்குச் சென்றுவிட்டோம். ஸ்ரீஅருணகிரிநாதரால் பாடப்பெற்ற பழைமையான திருக்கோயில் கம்பீரமாக நிற்க, கீழே படிக்கட்டுகள் தொடங்கும் மண்டபத்தில் குழுமியிருந்தது ‘திருப்புகழ் அன்பர்கள்’ குழு. 90 சதவிகிதம் பெண்களால் நிரம்பி வழிந்தது அந்த மண்டபம். பெரும்பாலானோரின் கைகளில் திருப்புகழ்ப் புத்தகம். சில அன்பர்கள் புத்தகம் வைத்திருக்கவில்லை. ‘மொபைல் போனில் டவுன்லோடு செய்துவைத்திருப்பார்கள். அதைப் பார்த்துப் படிப்பார்கள் போலும்’ என நினைத்துக்கொண்டேன். ஆனால், அவர்கள் அனைவரும் அனைத்துப் பாடல்களையும் மனப்பாடமாகப் பாடக்கூடியவர்கள் என்பது பின்னர்தான் தெரிந்தது.

‘சொல்லச் சொல்ல இனிக்குதடா...’

‘8 மணிக்குப் படிபூஜை தொடங்கும்’ என்று அறிவிப்பில் குறிப்பிட்டிருந்தது. அதன்படியே மிகச் சரியாக 8 மணிக்கு, கணீரென்ற குரலில் ‘கைத்தல நிறைகணி’ என்று திருப்புகழ் ஒலிக்க ஆரம்பித்தது. இந்த நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கி, திருப்புகழ் பாடியபடியே அன்பர்களை வழிநடத்திப் படியேற்றிச் சென்றவர், டெல்லியிலிருந்து வந்திருந்த -  திருப்புகழின் புகழைப் பரப்பும் களக்காடு என்.எஸ்.மணி.

வெண்கலக் குரலில் அவர் திருப்புகழைப் பாட, உடன் குழுமியிருந்த நூற்றுக்கணக்கான அன்பர்களும் சேர்ந்து பாட, மெள்ள படியேறத் தொடங்கியது அந்தக் குழு. ஒவ்வொரு படிக்கும் ஒவ்வொரு பாடல். எந்தப் பாடல் பாடப்போகிறோம் என்பதை வரிசைக்கிரமமாக அச்சிட்டு அனைத்து அன்பர்களுக்கும் வழங்கியிருந்ததால், அனைவரும் ஒருமித்த குரலில் ராகத்துடன் திருப்புகழைப் பாடினார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘சொல்லச் சொல்ல இனிக்குதடா...’


என்.எஸ்.மணியும் மற்றவர்களும் மைக்கில் பாடிய திருப்புகழ்ப் பாடல்கள், ஒலிபெருக்கி மூலமாக மலையெங்கும் ஒலித்ததை, பனி விலகாத அந்தக் காலைப்பொழுதில் கேட்ட போது, உண்மையிலேயே மெய்சிலிர்த்தது.

‘இதென்ன பிரமாதம்... பாடிக்கிட்டே படி ஏறுவதுதானே!’ என்று மிகச் சாமான்யமாக நினைத்துவிடாதீர்கள். வந்திருந்த அன்பர்களில் பெரும்பாலானவர்கள், 60 வயதைக் கடந்தவர்கள்.  75 வயதைக் கடந்த பெண்மணிகள் எல்லாம், கைத்தடியை ஊன்றியபடி, திருப்புகழ் பாடிக்கொண்டே படியேறியதைப் பார்த்தால், அந்த பக்தியில் உருகி, முருகனே கீழே இறங்கி வந்துவிடுவான் போலிருந்தது. இப்படி, ஒவ்வொருவரும் வேறு எதிலுமே கவனம் செலுத்தாமல், முருகனின் புகழைப் பாடியபடி ஏறியது, கண்கொள்ளாக் காட்சி!

படிகளைக் கடந்து மேலே ஏறிய குழு, பாடியபடியே முருகனின் சந்நிதிக்குச் சென்று சுவாமி தரிசனம் முடித்தபின், பக்கவாட்டில் உள்ள உற்சவர் மண்டபத்துக்கு வந்து சேர்ந்தனர். மிக அற்புதமான மலர் அலங்காரத் தில் அங்கே தயாராகக் கொலுவீற்றிருந்தார் உற்சவ மூர்த்தி. அவர் திருமுன்னே அமர்ந்து, மீதிப் பாடல்களையும் பாடி முடித்த குழுவினர், மேலும் கந்தர் அனுபூதி, வேல் வகுப்புகள், வேல், மயில், சேவல் விருத்தங்கள் ஆகியவற்றையும் ராகத்துடன் அதே உற்சாகத் துடன், தாளம் போட்டுப் பாடி முடிக்கும்போது மணி காலை 11.30. பிறகு உற்சவருக்கு பூஜைகளும் தீபாரா தனையும் நடந்து முடிந்தபின், அனைவருக்கும் மகா பிரசாதம் வழங்கப்பட்டது.

‘சொல்லச் சொல்ல இனிக்குதடா...’

இந்தத் திருப்புகழ் படி பூஜை, இன்று நேற்றல்ல.. ‘திருப்புகழ் அன்பர்கள்’ குழுவினரால் 32 வருடங் களாகத் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது என்ற தகவல் நமக்கு வியப்பை அளித்தது.

மூன்றரை மணி நேரம் தொடர்ந்து பாடியிருந் தாலும், அந்தக் களைப்பு எள்ளளவும் இன்றி அன்பர்களுடன் உரையாடிக் கொண்டிருந்த களக்காடு என்.எஸ்.மணியிடம் பேசினோம்.

‘‘எதற்காக இந்தப் படி பூஜை? இதன் முக்கியத் துவம் என்ன?’’

‘‘படின்னா பூமின்னு அர்த்தம். படி உற்சவத்தின் மகிமையே ஒவ்வொரு படியிலும் முருகன் இருக்கான்னு நினைச்சு, அவன் புகழ் பாடுறதுதான். ஒவ்வொரு படியும் நம்மை பகவானிடம் கொண்டு சேர்க்கும் என்பதுதான் அதன் அர்த்தம். எங்க குருஜியின் வழியில் 1936-ல் இதைச் சென்னையில் ஆரம்பிச்சேன்’’ என்றவர், தொடர்ந்து அதுகுறித்த வரலாற்றை விவரித்தார்.  

‘‘திருப்புகழ் படி பூஜைக்கு 100 வயதுன்னு சொல்லலாம். ஏன்னா, இதை ஆரம்பித்து வைத்தவர் வள்ளிமலை சச்சிதானந்த சுவாமிகள். ‘ஜனவரி 1-ம் தேதி, ஏன் வெள்ளைக்காரத் துரையைப் போய்ப் பார்த்து, அவருக்கு சல்யூட் பண்ணணும்? திருத்தணி மலை மேல இருக்கும் நம்ம துரையைப் போய்ப் பார்த்து ‘குட்மார்னிங்’ சொல்வோமே!’ என்று அவர் வேடிக்கையாகச் சொல்வாராம். அவரோட தலைமையில் 1917-ல் திருத்தணியில்தான் முதன் முதலில் படி உற்சவம் தொடங்கியது. ஒவ்வொரு வருஷமும் டிசம்பர் 31-ம் தேதி ராத்திரி ஆரம்பிச்சு, திருப்புகழ் பாடிக்கிட்டே மலையேறுவாங்க. ஜனவரி 1-ம் தேதி அதிகாலை மலையேறி, சுவாமிக்கு அபிஷேகம், அர்ச்சனை, ஆரத்தி, மகாபிரசாதம்னு எல்லாம் நடக்கும். ரொம்பப் பெரியவா எல்லாம் பாடிப் பாடி, திருப்புகழைப் பரப்பினாங்க. அப்போதிலிருந்து 100 வருஷமாக இது நடக்குது.

‘சொல்லச் சொல்ல இனிக்குதடா...’

எங்களுக்கு இதைக் கத்துக்கொடுத்து, இங்கே குன்றத்தூரில் இதைத் தொடங்கி வெச்சவர் ஏ.எஸ். ராகவன் குருஜிதான். படிச்சு முடிச்சதும் டெல்லி போன குருஜி, அங்கே 1957 முதல் திருப்புகழ் வகுப்புகள் எடுக்க ஆரம்பிச்சார். டெல்லியில் இருக்கிற மலைமந்திர் கோயில் அமைந்திருக்கும் குன்றின் மீது திருப்புகழ் பாடியபடி ஏறிச் சென்று வழிபட்டாராம். அப்போ அங்கே படியெல்லாம் கிடையாது!

50 வருஷங்களுக்கும் மேலாக அவருடன் இருக்கும் பாக்கியம் எனக்குக் கிடைச்சது. நான் அவரது திருப்புகழ் வகுப்பில் சேர்ந்தது ஒரு சுவாரஸ்யமான நிகழ்வு. அப்போ  பாம்பேயில் இருந்தேன். ஒரு விடுமுறையில் டெல்லிக்கு அக்கா வீட்டுக்குப் போயிருந்தேன். அக்கா குருஜியிடம் திருப்புகழ் வகுப்புக்குப் போய்க் கிட்டிருந்தாங்க. அவங்ககூடப் போன நானும், என்னையறியாமல் வகுப்பில் சேர்ந்துட் டேன். வீட்டுக்கு வந்த பிறகுதான், விடுமுறை முடிஞ்சு பாம்பே போயாகணுமே என்பது ஞாபகத்துக்கு வந்தது. அக்காவின் கணவர், ‘இங்கேயே டெல்லியில் ஒரு வேலை பார்த்துக்கோயேன்!’னு சொன்னார். என்ன மாயமோ, மந்திரமோ தெரியல... சொன்னா நம்ப மாட்டீங்க. அடுத்த நாளே எனக்கு டெல்லியில் வேலை கிடைச்சது. அது முருகன் நடத்திய அற்புதம் மட்டுமில்ல; என் வாழ்க்கையில் ஒரு திருப்பு முனையும்கூட! அப்போதிலிருந்து திருப்புகழ் என்னுடன் இரண்டறக் கலந்திருச்சுன்னு சொல்லலாம்!’’ என்று குரல் நெகிழக் கூறினார் மணி.

‘‘திருப்புகழை மட்டும் எடுத்துக்கொள்ள சிறப்பான காரணங்கள் இருக்கா?’’

‘‘திருப்புகழில்  என்ன  இல்லை? அதில் வாழ்வுக்கு உபயோகமான நிறைய விஷயங்கள் உண்டு. முக்கியமாக இப்போது எல்லோருக்கும் மிக அத்தியா வசியமான ‘அன்பு’ குறித்தும் சொல்லப்பட்டிருக்கு. ‘அன்பு, அவிரோதம் (விரோதத்துக்கு எதிரானது) வளரணும்’னு, இது ரெண்டையும்தான் எங்க குருஜி எப்போதும் வலியுறுத்துவார். அதைத்தான் திருப் புகழும் சொல்லுது. அது மட்டுமில்ல, ‘நான்’ என்ற அகந்தை போகணும்! அதுக்குத் திருப்புகழ் உதவும்!’’ என்றபடி முருகனை நோக்கிக் கைகூப்பி வணங்கினார் மணி.

‘சொல்லச் சொல்ல இனிக்குதடா...’

இவரிடம் கற்றுக்கொண்டு, இன்று இந்தியா எங்கும் திருப்புகழ் பாடும் மாணவர்கள் ஏராளம். திருப்புகழ் படி உற்சவம் தவிர, ஆண்டுதோறும் முருகன் திருத்தலங்களில் இவர் நடத்தும் ‘வள்ளி கல்யாணம்’ குறிப்பிடத்தகுந்தது. இவர் நடத்தும் திருப்புகழ் திருமணமும் வேறெங்கும் காண்பதற்கரியது.

அடுத்ததாக நம் கவனத்தை ஈர்த்தவர் அலமேலு சந்தானம். கைத்தடியை ஊன்றிக்கொண்டு, திருப்புகழ் பாடியபடி மேலேறி வந்த இவருக்கு வயது 80. சென்னையின் மிக மூத்த திருப்புகழ் ஆசிரியர். சுமார் 42 வருடங்களாகத் திருப்புகழ் வகுப்புகள் எடுத்து வருகிறார்.

‘‘என் குரு கல்யாணி ராமசாமி. டெல்லியில் குருஜியிடம் படிச்சவர். 1965-ல் இங்கே வந்து வகுப்புகளைத் தொடங்கினார். அதுக்கப்புறம் ஆறு வருஷம், நான் அவர்கிட்ட திருப்புகழையும் சில சம்ஸ்கிருத ஸ்லோகங்களையும் கத்துக்கிட் டேன். 1975 முதல் வகுப்புகள் எடுக்க ஆரம்பிச்சேன்.
இப்போதும் சுமார் 40 மாணவர்கள் என்கிட்ட கத்துக்கிறாங்க. திருப்புகழ் பாடறதுக்கு வயது வித்தியாசம் இல்லை. வயதானவர்கள்தான் கத்துக்க வேண்டும் என்றில்லை. கல்லூரி மாணவி களுக்கும் சொல்லிக்கொடுத்துள்ளேன். அவர்க ளோடு பல முருகன் கோயில்களில் போய்ப் பாடியிருக்கிறேன். இந்தக் குன்றத்தூர்ப் படி பூஜைக்கு 32 வருடங்களாக வந்துகிட்டிருக்கேன்’’ என்றவர் தொடர்ந்து பேசினார்.

‘‘மனசுக்கு ரொம்பக் கஷ்டமாக இருக்கும்போது, திருப்புகழைப் படித்தால் போதும் புதுத் தெம்பு வந்துவிடும். குழப்பங்கள் நீங்கி மனச் சாந்தி கிடைக்கும். இங்கே கூடியிருக்கும் நாங்கள் எல்லோருமே ஒரு கூட்டுக்குடும்பம் போன்றுதான். கந்த சஷ்டி, வைகாசி விசாகம், இதோ இந்தக் குன்றத்தூர்ப் படி விழா மாதிரியான தருணங்களில் சென்னையில் இருக்கிற எல்லா ஆசிரியர்களும் மாணவிகளும் சேர்ந்து பாடறது ஒரு தனி சுகானுபவம்!’’ என்கிறார் அலமேலு சந்தானம்.

‘சொல்லச் சொல்ல இனிக்குதடா...’

அசோக் நகரிலிருந்து வந்திருந்த விமலா ஜெயராம், ‘‘திருப்புகழ், வெறும் பாடல்கள் மட்டு மில்ல; வாழ்வியலுக்கான வழி. எங்களை அன்பால் இணைக்கும் தமிழ்ப் பாலம்’’ என்றார் நெகிழ்வுடன்.

``இதில் கிடைக்கும் நிம்மதி வேறு எதிலும் கிடைக்காது’’ என்றார், ராதா முத்துசாமி. ‘திருப் புகழ் அன்பர்கள்’ அமைப்பின் செயலர் முத்து சாமியின் மனைவி இவர். ‘‘நானும் மும்பையில்தான் கத்துக்கிட்டேன். 1996-ல் கணவர் ரிடயர்டு ஆனபிறகு, சென்னைக்கு வந்தோம். மும்பையில் ரெகுலரா திருப்புகழ் கிளாஸ் போயிட்டிருந்தோம். இங்கே வந்ததும், ‘ஆகா... கிளாஸ் போயிடுச்சே’ன்னு வருத்தமா இருந்துச்சு. யதேச்சையா ஒரு நாள் சிருங்கேரி மடத்துக்குப் போனபோது, அங்கே திருப்புகழ் பாடிட்டிருக்கிறதைப் பார்த்தேன். முருகனே வழிகாட்டியதுபோல் இருந்தது. மீண்டும் வகுப்புகளுக்குப் போக ஆரம்பிச்சேன். 98-ல் குருஜி என்னிடம், ‘‘நீங்களே இனி கத்துக் கொடுக்கலாமே’’ன்னு சொன்னார். அதிலிருந்து வகுப்புகள் எடுக்கிறேன். சுமார் 80 பேர் என்னிடம் கத்துக்கிறாங்க!’’ என்று முகம் மலரச் சொல்கிறார்.

‘‘இது வெறும் பஜனை வழிபாடு மட்டுமில்ல, நம்மை நாமே  தூய்மைப்படுத்திக்கிறதுக்கான ஒரு வாய்ப்பு. திருப்புகழை முறையாகக் கத்துக்கிட்டு, பாடிப்பார்த்தால் புரியும்!’’ என்று புன்னகைக்கிறார் ஸ்வர்ணா கிருஷ்ணமூர்த்தி.

இப்படி, அங்கு வந்திருந்தவர்களிடம், திருப் புகழ், படி பூஜை தொடர்பாக மனதுக்கு நெருக்கமான ஒரு சேதி இருந்தது. கேட்கக் கேட்கச் சலிக்காத இனிமையை இவர்களின் அனுபவமே தருகிறது என்றால், திருப்புகழ் அனுபவம்  எப்பேர்ப்பட்டதாக இருக்கும்?  எண்ணும்போதே இனிக்கிறது, அன்பர்கள் வழங்கிய மகா பிரசாதம் போல!   

அன்பு... அவிரோதம்!

‘திருப்புகழ் அன்பர்கள்’ என்ற இந்த அமைப்பு, குருஜி ஏ.எஸ். ராகவன் என்பவரால் 1958ல் டெல்லியில் தொடங்கப்பட்டு, அங்கேயே பதிவு செய்யப்பெற்றது. அன்பு, அவிரோதம் ஆகிய இரண்டும்தான் இந்த அமைப்பின் கண்கள், கொள்கைகள், அடிப்படை எனலாம். இந்த அமைப்பின் திருப்பணிகள் குறித்து அதன் சென்னை மண்டலச் செயலர் முத்துசாமி பகிர்ந்துகொண்டார்.

‘‘திருப்புகழ் மூலமாக அன்பையும் அவிரோதத்தை யும் பிரசாரம் பண்ற அமைப்பு என்பதால்தான், இதற்கு வேறு பெயர் எதையும் வைக்காமல் ‘அன்பர்கள்’னு பேர் வச்சிருக்கார் எங்க குருஜி. அகில இந்திய அளவில் இயங்கும் எங்கள் அமைப்பின் தலைமைச் செயலகம் டெல்லி. மும்பை, பெங்களூரு, சென்னை என்று மூணு மண்டலங்களாகப் பிரிச்சிருக்கோம். ஆந்திரா, கேரளா, தமிழ்நாடு மூணு மாநிலங்களும் சென்னை மண்டலத்தில் வரும். இதில் மொத்தம் 41 ஆசிரியர்கள், 1000 மாணவர்கள் இணைஞ்சிருக்காங்க.

ஆண்டுதோறும் டெல்லி (மலை மந்திர்), மும்பை (செம்பூர்), சென்னை (குன்றத்தூர்) ஆகிய மூணு இடங்களில் இதுபோல படி உற்சவம் நடத்துறோம். அது தவிர, மாதந்தோறும் கிருத்திகையில் மயிலை கபாலீஸ்வரர் கோயில், வளர்பிறை சஷ்டி தினத்தில் ரமண கேந்திரம், விசாகத்தன்று மருந்தீஸ்வரர் கோயில் ஆகிய இடங்களில் எங்கள் அன்பர்கள் திருப்புகழ் பாடுவாங்க. இவை தவிர, வைகாசி விசாகம், தைப்பூசம், அருணகிரிநாதர் பிறந்த நாள் விழா (ஆனி மூலம்) ஆகிய நாள்களிலும் சென்னையில் முறையே வேளச்சேரி, பெசன்ட் நகர், வடபழநி கோயில்களில் எங்க நிகழ்ச்சி கண்டிப்பாக நடக்கும். கந்த சஷ்டியின்போது, 6 நாள்களும் சென்னையில் 6 இடங்களில் திருப்புகழ் பாடுவோம். எங்கள் அமைப்புக்காக எந்த விளம்பரமும் செய்வதில்லை; வெளியில் யாரிடமும் நன்கொடையோ, ஸ்பான்ஸர்ஷிப்போ பெறுவதில்லை. திருப்புகழைச் சொல்லும் ஆர்வம் இருக்கும் யார் வேண்டுமானாலும் வகுப்பில் சேரலாம். இதற்குக் கட்டணம் எதுவும் இல்லை.’’