மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சிவமகுடம் - பாகம் 2 - 4

சிவமகுடம் - பாகம் 2 - 4
பிரீமியம் ஸ்டோரி
News
சிவமகுடம் - பாகம் 2 - 4

ஆலவாய் ஆதிரையான் - ஓவியங்கள்: ஸ்யாம்

அற்புதம் காட்டிய சிவ துர்கம்!

பவமின்மை, பற்றின்மை, இறவின்மை, பெயரின்மை, உவமை யின்மை, வினையின்மை, கோத்திரமின்மை, குறைவிலா அறிவுடைமை ஆகிய எண்குணங்களும் நிறைந்ததாம் சிவம்.

இந்தப் பிரபஞ்சமும் அப்படித்தானே?

எல்லையில்லாதது, சொல்லிலடங்காதது, ஆதிஅந்தம் இல்லாததாகிய பிரபஞ்சத்தை - பிரமாண்டத்தை சிவமாகவே கொள்வர் பெரியோர்கள். அந்தச் சிவத்தின் அடையாளம் லிங்கமூர்த்தம்.

லிங்கம் என்றால் குறியீடு அல்லது சித்திரித்தல் என்று பொருள். அதிலும், `லிங்' என்றால் லயம்; `கம்'  என்றால் தோற்றம். அதாவது, உலகு தோன்றி ஒடுங்கும் இடம் சிவம் - அதன் அடையாளம் லிங்க மூர்த்தம் என்பார்கள். உலக முடிவில் அண்டசராசரங்கள் எல்லாம் லயிப்பதற்கு உரிய இடம்; அவ்வாறு லயித்த உயிர்கள் மீண்டும் தளைக்கும் இடம்  சிவப் பரம்பொருள். அந்தச் சிவத்தின் அடையாளம் லிங்கமூர்த்தம் என்றும் சொல்லலாம்.

சிவமகுடம் - பாகம் 2 - 4

இலிங்கம தாவது யாரும் அறியார்
இலிங்கம தாவது எண்திசை எல்லாம்
இலிங்கம தாவது எண்ணென் கலையும்
இலிங்கம தாவது எடுத்தது உலகே


அம்மையப்பனின் அடையாளமாகிய சிவலிங்கமே எண்திசை களும், எல்லாக் கலைகளும், எல்லா உலகமும் ஆகும். இந்த உண்மையை நுண்ணுணர்வினரே அறிவர் என்கிறார் திருமூலர்.

அப்படியான நுண்ணுணர்வினை -  உண்மையை - ஒப்பற்ற அற்புதத்தை நம் இளங்குமரனுக்கு அளித்தது, அந்தக் குகையின் மேற்புறச் சுவரிலிருந்து விழுந்து, அவன் மேல் பட்டுத் தெறித்த சிறுதுளி நீர்!

ஏற்கெனவே முந்தையநாள் இரவில் ஒரு குகை, குலச்சிறையார் மூலம் அவனக்குப் பேராச்சர்யத்தை வழங்கியது என்றால், இங்கே  இந்த `சிவதுர்க' குகை அவனுக்குப் பேரானந்தத்தை வழங்கியது என்றே சொல்லலாம். ஆம்! நேற்றிரவு குகைவாயிலில் குலச்சிறையாரைச் சந்தித்தது முதற்கொண்டு இப்போது வரையிலும் நடப்பவை எல்லாம், பெரும் விசித்திரமாகவே இருந்தன இளங்குமரனுக்கு.

சிவமகுடம் - பாகம் 2 - 4


அவன் தேடிவந்தது ஒன்றை. `அது மிகப் பத்திரமாக உள்ளது; அதைப்பற்றிக் கவலைப்பட வேண்டாம்’ என்கிறார் குலச்சிறையார். முன்னதாக, `அனைத்துக்கும் தென்னவன் தேவியாரே காரணம்’  எனப் பேசிக்கொண்டார்கள் வீரர்கள். அதை மெய்ப்பிப்பதுபோல் பாண்டிமாதேவியாரின் கட்டளை எனச் சொல்லி ஓர் ஓலைநறுக்கை நீட்டுகிறார் குலச்சிறையார்.

பாண்டிமாதேவியாரின் தனிப்பட்ட முத்திரைக் குறியோடு திகழ்ந்த அந்த ஓலைநறுக்கில் தென்பட்டவை இரண்டே வரிகள்தாம்.

‘பேரமைச்சரின் ஆணைப்படி நடக்கவும்.
அற்புதத்தைத் தேடி சிவதுர்கத்துக்குப் புறப்படு’


- என்றிருந்த அந்த வரிகளை வாசித்தவன், அதற்கான விளக்கத்தை வேண்டி குலச்சிறையாரை நோக்கினான். ஆனால் அவரோ, ‘‘ஓலை நறுக்கு சுட்டிக்காட்டும் இடத்துக்குச் செல். அனைத்துக் கேள்விகளுக்கும் பதில் கிடைக்கும்’’ என்று பொத்தாம்பொதுவாக ஒரு பதிலையே தந்தார். அதில், `மேற்கொண்டு என்னிடம் எதுவும் கேட்கத் தேவையில்லை’ என்ற கண்டிப்பு தொனித்ததையும் இளங்குமரன் உணராமல் இல்லை. மேலும், ‘பேரமைச்சரின் ஆணைப்படி நட’ என்று தென்னவன் தேவியாரின் உத்தரவும் திட்டமாக இருந்ததால், வேறு எதுவும் கேட்பதற்கு வழியில்லாமல் புறப்பட்டுவிட்டான்.

அந்தத் தருணத்தில்... புதுவித உற்சாகம் தன்னிடம் தொற்றிக்கொண்டுவிட்டதையும் அவன் உணரவே செய்தான். எப்போதுமே புதிய பொறுப்பு, சவாலான காரியங்கள் அவனுக்குச் சர்க்கரையாக இனிக்கும்; அவற்றின் பொருட்டு அவனுள் உற்சாகம் பொங்கும்தான் என்றாலும், இந்த உற்சாகத்துக்குப் புதிய வேலை மட்டும் காரணமன்று!

சிவமகுடம் - பாகம் 2 - 4

`அனைத்துக்கும் கர்த்தா தென்னவன்தேவியார்’ என்பதை அறிந்த அந்தக் கணத்தில் ஏற்பட்ட அதிர்ச்சியும் குழப்பமும் குகையிலிருந்து புறப்பட யத்தனித்தபோது அவனிடம் முற்றிலும் காணாமல் போயிருந்தன. குலச்சிறையாரின் பேச்சும் செய்கைகளும், தென்னவன்தேவியாரின் கட்டளையும்... பெரியதொரு நற்காரியத்துக்காகவே அனைத்தும் நடக்கின்றன என்பதை அவனுக்குத் தெளிவுபடுத்தின. அதனால் அவன் மனதிலிருந்த குழப்பங்கள் அகல, அங்கே புது உற்சாகம் புகுந்து கொண்டது!

அதனாலேயே, சிவதுர்கத்துக்குச் செல்லும் வழி பற்றிய விவரத்தைக்கூட குலச்சிறையாரிடம் கேட்கத்தோன்றாமல் புறப்பட்டுவிட்டான். இல்லையில்லை... அவன் புறப்பட்டு வந்தான் என்பதைவிடவும், அந்தப் பொல்லாத புரவியே அவனை அழைத்து வந்தது என்றே சொல்ல வேண்டும். ஆம், புரவியில் ஏறும்வரையிலும் அதைத் தன்னுடையது என்றே எண்ணியிருந்தான் இளங்குமரன். அடுத்த சில கணங்களில் தெரிந்து கொண்டான், அது தன்னுடையதன்று என்ற உண்மையை.

ஏறி அமர்ந்ததும் அவன் கட்டளைக்குக் காத்திருக்காமல் பாயத் தொடங்கிவிட்ட அந்தப் புரவி, இதோ இந்தப் புதிய குகைக்கு அதாவது சிவதுர்கத்துக்கு அவனைக் கொண்டுவந்து சேர்க்கும் வரையிலும்கூட அவனுடைய ஆணை களைக் கண்டுகொள்ளவில்லை. இளங்குமரனுக்கு நன்கு புரிந்தது, சிவதுர்கத்துக்கான ரகசியப் பாதையை நன்கு பழகிவிட்டிருந்த அந்தப் பொல்லாத புரவியை அவனுக்காகவே குலச் சிறையார் ஏற்பாடு செய்திருக்கிறார் என்பது!

இப்படி, அடுத்தடுத்து தொடர்ந்த விநோதங்கள் அவனை வியப்பில் ஆழ்த்தியிருக்க, அந்த வியப்பைப் பன்மடங்காகப் பெருகச் செய்து, இளங்குமரனை மலைக்கவும் மயங்கவும் வைத்தன, இதோ இந்த சிவதுர்கமும் அதனுள்ளிருந்த அற்புதமும்!

பெரும் மலைப்பாறைகளோடு பின்னிப் பிணைந்து கல்லாய்ச் சமைந்துபோன மலைநாகம் ஒன்று வாயைப் பிளந்து வைத்தது போன்று  திகழ்ந்தது சிவதுர்கத்தின் நுழைவாயில். எவ்விதத் தயக்கமுமின்றி உள்ளே நுழைந்துவிட்டான், எதற்கும் துணிந்தவனான இளங்குமரன். நாகத்தின்  விஷப்பற்களைப் போன்று, உள்ளே நுழைபவரின் தலையைப் பதம்பார்த்துவிடும் அளவுக்கு ஆங்காங்கே குகையின் மேற்புறத்திலிருந்து நீண்டு திகழ்ந்தன கல்நீட்சிகள். அந்தக் குகைக்கு மேலே மலைச்சரிவில் இருந்த மரங்களின் திரட்சியான வேர் நீட்சிகளும் வெவ்வேறுவிதமாக  வளைந்து நெளிந்து தெரிந்த காட்சி, அந்தக் குகையை அதிபயங்கரமானதாகக் காட்டியது அவனுக்கு.

அந்நேரம் அருணோதயம் கழிந்து ஆதவன் எழுந்துவிட்டிருந்தபடியால், ஆங்காங்கே தென்பட்ட இடுக்குகளின் வழியே குகைக்குள் தலை காட்டிய ஒளிக்கீற்றுகள் ஓரளவு வெளிச்சத் தைத் தந்ததால், மெள்ள மெள்ள முன்னேறிச் சென்றான் இளங்குமரன். பள்ளமாகத் தெரிந்த ஓரிடத்தில் கவனத்துடன் கால்பதித்து இறங்கிய வனை, அந்தப் பள்ளத்தைத் தொடர்ந்து கிடந்த பாறையிடுக்குப் பாதை, குகையின் மையப்பகுதிக்கு இட்டுச்சென்றது. மையத்தை அடைந்தவன் அங்கிருந்த அற்புதத்தைக் கண்டு மலைத்துப் போனான்; அப்படியே மதிமயங்கிச் சிலையாக நின்றுவிட்டான்.

அப்படி, தான் அடைந்த பிரமிப்பின் காரண மாக, சிந்தை சிலிர்க்க வெகுநேரம் மெய்ம்மறந்து நின்றுவிட்டவனை நீர்த்துளி ஒன்று உசுப்பியது. அவன் தலைக்கு மேலாக குகைச்சுவரின் நீர்க்கசிவு திரண்டு ஒரு துளியாகி அவன் மேல் விழ, உணர்வு பெற்றான் இளங்குமரன். பிரமாண்டத்தின் பிரமாண்டம் அவன் முன் மிகப்பிரமாண்டமாகக் காட்சி தந்தது. அளவில் பெரிய அந்தச் சிவலிங்க தரிசனத்தால் சிலிர்த் துப்போனான் இளங்குமரன். மீண்டுமொரு நீர்த்துளியால் சிவக் கருணை அவனை மீண்டும் உசுப்ப, சிரம் மேல் கரம்குவித்து வணங்கினான்.

சிவமகுடம் - பாகம் 2 - 4

இப்படியான பரம்பொருளைத் தரிசிக்கக் கண்ணிரண்டு போதுமா என்ன?!

புறக்கண்களை அகல விரித்துப் பரம் பொருளை உள்வாங்கிக் கொண்டவன், பிறகு இமைகளை மூடி அகக்கண்ணால் ஆசைதீர தரிசித்தான் சில நொடிகள். மூன்றாவதாக விழுந்தது ஒரு துளி. அது, இளங்குமரனை இன்னும் தூண்டி, வந்த காரியத்தை நினைவூட்டியிருக்கவேண்டும். கண் களைத் திறந்தவன் மீண்டும் லிங்கத்தைக் கண்டான். ஆவுடை பாகத்தில் ஒரு பேழை இருந்தது. இப்போது அவனுக்குள் மீண்டும் குழப்பம் தலைதூக்கியது. தென்னவன் தேவியார் தமது ஆணையில் `அற்புதம்’ என்று குறிப்பிட்டது எதை? இப்படியான சிவதரிசனத்தையா அல்லது அவர் மடியில் வைத்துக்கொண்டிருக்கும் பேழையையா?! இந்தக் கேள்விக்கு அவன் மனமே பதில் சொல்லிக்கொண்டது. 

நிச்சயமாக பேழையைத்தான் சொல்லியிருப் பார். ஏனெனில், அவரைப்  பொறுத்தவரையிலும் அற்புதத்திலும் அற்புதம் சிவப்பரம்பொருளும் அவரின் தாள்களுமே என்பதில் எவ்வித சந்தேக மும் இல்லை. அதேநேரம், சிவப்பணிக்கான காரியம் இது, இதற்கான கருவி அந்தப் பேழை. ஆகவே அதுவும் அற்புதம்தான்!

‘அதை அணுகவேண்டும்; திறந்துபார்க்க வேண்டும். அப்போதுதான் என் கேள்விகளுக்கான பதில் கிடைக்கும்’ என்று மனதுக்குள் எண்ணிக் கொண்டவன் நகர முற்பட்டபோதுதான் கவனித்தான்... பேழை அருகிலும், லிங்கத் திருமேனி யின் மீதும், குகைச் சுவர்களிலும், பாறைகளிலுமாக வளைந்துநெளிந்து கிடக்கும் சர்ப்பங்களை. அத்தனையும் சேர்ந்து அந்த அற்புதப் பேழையைப் பாதுகாப்பதாகவே பட்டது அவனுக்கு. அதிலும் அந்த மகா சர்ப்பம்... அப்பப்பா என்ன பயங்கரம்!

புராணங்களில் படித்திருக்கிறான்... 120 வருடங்கள் வரை வாழும் சில நாகங்கள் அளவில் சிறுத்து, படம் இறக்கையாக மாறிவிட அதன் மூலம் பறக்கவும் செய்யுமாம். அபூர்வத்திலும் அபூர்வமான அந்த மகாநாகத்தை `குக்குட சர்ப்பம்’ என்பார்களாம். இளங்குமரன், இதெல் லாம் கற்பனை என்று எண்ணியது உண்டு.ஆனால்,  இங்கே இப்போது இந்த நாகங்களைக் காணும்போது, இனி அப்படியான புராணத் தகவல்களை அவனால் புறந்தள்ள முடியாது என்றே தோன்றியது!

இப்போது இங்கே சர்ப்பங்களால் ஏற்பட்ட தயக்கத்தைப் புறந்தள்ளினான். தான் மேற்கொண் டிருப்பது சிவப்பணி என்பதை அவனால் அனுமானிக்க முடிந்ததால், அந்தச் சர்ப்பங்களால் ஆபத்து ஏதும் நிகழாது என்று தனக்குள் தீர்மானித்துக்கொண்டவன், தன் வாளைகூடக் கையிலெடுக்கத் தோன்றாமல், சிவலிங்கத் திருமேனியை நோக்கி முன்னேறினான்.

என்ன ஆச்சர்யம்! இவன் நெருங்க நெருங்க சர்ப்பங்கள் ஒவ்வொன்றாய் விலகின. லிங்கத் திருமேனியை அணுகியவன், மீண்டும் பணிந்தான். திருமேனியில் பாதம் பதித்து ஏறவேண்டியிருக்கும் என்பதால், அதற்கு பக்தியோடு அனுமதி வேண்டி னான். பின்னர், பக்கவாட்டில் இருந்த குகைச் சுவரில் இருந்த பாறை நீட்சிகளைப் பிடிமானமாகப் பற்றி ஏறி, ஆவுடைப் பாகத்தை அடைந்தான்.

சிவனாரிடம் அனுமதி வேண்டிக்கொண்டான் என்றாலும், அவரின் திருமேனியில் பாதம் பதிக்க விரும்பாமல் தவழ்ந்தபடியே சென்றடைந்தான் பேழையின் அருகில். அதை நெருங்கியதும் ஒருவிதப் பதற்றம் தொற்றிக்கொண்டது. மேலே அண்ணாந்து பார்த்து மீண்டும் ஒருமுறை தென்னாடுடைய சிவனாரை வணங்கிவிட்டு, பேழையை அவன் திறக்க யத்தனித்த வேளையில், பேரரவம் கேட்டது குகைக்கு வெளியே!

முன்னிரவில் இவன் புறப்பட்ட அதேவேளை யில் ஆலவாய் நகரின் எல்லையில் சந்தித்துக் கொண்ட இருவர் மூலம் பேராபத்து தேடி வந்திருந்தது இளங்குமரனை!

- மகுடம் சூடுவோம்...