Published:Updated:

தாமிரபரணி புஷ்கரம்... நீராடுவதற்கான இடங்கள், வழிமுறைகள்!

தாமிரபரணி புஷ்கரம்... நீராடுவதற்கான இடங்கள், வழிமுறைகள்!
தாமிரபரணி புஷ்கரம்... நீராடுவதற்கான இடங்கள், வழிமுறைகள்!

ருமுறை திருநெல்வேலிக்குச் சென்றிருந்தபோது, அங்கே நாம் சந்தித்த வாசகி ஒருவர், ``இந்தியாவின் உண்மையான ஜீவநதி எது தெரியுமா?" என்று கேட்டார். அவர் கேள்வியில் ஏதோ சூட்சுமம் இருப்பதாகத் தெரியவே, ``நீங்களே சொல்லுங்களேன்'' என்று கூறினோம். 

``இந்தியாவில் கங்கை, யமுனை போன்ற வட இந்திய நதிகள் ஜீவநதிகள் என்று போற்றப்படுகின்றன. அது உண்மைதான். அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால், அந்த நதிகள் ஜீவநதிகளாக இருப்பதில் ஆச்சர்யம் எதுவுமில்லை. காரணம், மழைக் காலத்தில் மழையின் காரணமாகவும், கோடையில் இமயத்தில் உருகும் பனியின் காரணமாகவும் அந்த நதிகளில் எப்போதும் தண்ணீர் இருந்துகொண்டே இருக்கும். ஆனால், கோடையில் உருகக்கூடிய பனிமலைகள் எதுவும் இல்லாத திருநெல்வேலி மாவட்டத்தில், பொதிகை மலையில் தோன்றும் தாமிரபரணி நதி கோடையிலும் வற்றாத ஜீவநதியாகத் திகழ்கிறது. இதிலிருந்தே தாமிரபரணியின் சிறப்பை நீங்கள் புரிந்துகொள்ளலாம்'' என்று பெருமிதத்துடன் கூறினார்.

கருநிற மேகம் என்னும் கச்சு அணி சிகரக் கொங்கை
அருவியாந் தீம்பால் சோர அகன்சுனை என்னும் கொப்பூழ்ப்
பொருவில் வேயென்னும் மென்றோள் பொதியமாம் சைலப்பாவை
பெருகுதண் பொருநை என்னும் பெண்மகப் பெற்றாள் அன்றே.

கொப்பூழ் போன்ற அகன்ற சுனையையும், மூங்கில் போன்ற மெல்லிய தோளையும் உடைய பொதிகை மலையின் சிகரங்களிலிருந்து பிறந்த செல்வத் திருமகள்தான் தண்பொருநை என்று திருவிளையாடல் புராணம் தாமிரபரணியைப் போற்றுகிறது. பொதிகையின் மகளாகிய தண்பொருநை என்னும் தாமிரபரணி நமக்குத் தாயாக இருந்து அனைத்து வளங்களையும் அருள்கிறாள்.

தாமிரபரணியின் புனிதம் பற்றியும், தன்னில் நீராடுபவர்களின் பாவங்களைப் போக்கும் ஆற்றல் பற்றியும் புராணங்களில் பலவிதமாக விவரிக்கப்பட்டிருக்கிறது. 

ஒருமுறை, வியாசர் இமயத்திலிருந்து தென் திசை நோக்கிப் புறப்பட்டபோது, வியாதிகளால் துன்பப்பட்டுக்கொண்டிருந்த சில பெண்களைக் கண்டு, அவர்களிடம் இரக்கம் கொண்டவராக, ``நீங்கள் யார்? உங்களுக்கு வந்த துன்பம்தான் என்ன?'' என்று கேட்டார். அதற்கு அந்தப் பெண்கள், ``நாங்கள் கங்கை, யமுனை, சரஸ்வதி போன்ற நதிகள் ஆவோம். மக்கள் தங்களுடைய பாவங்களை எல்லாம் எங்களில் சேர்த்துவிடுவதால்தான், எங்களுக்கு இந்த நிலை ஏற்பட்டது'' என்றனர்.

``அதற்கான உபாயம் எதுவும் உங்களுக்குத் தெரிந்ததா?'' என்று கேட்டார் வியாசர்.

``உபாயம் தேடி மகாவிஷ்ணுவைப் பிரார்த்தித்தோம். அவருடைய உத்தரவின்படி, புண்ணியமே உருவான தாமிரபரணி நதியில், மார்கழி மாதத்தில் வரும் வியாதிபாத தினத்தில் நீராடி, அதன் மூலம் எங்களுடைய பாவங்களைப் போக்கிக்கொள்கிறோம்'' என்றனர்.

ஒருமுறை, பூமியில் உள்ள புனித நதிகள் பற்றி மகரிஷிகள் விவாதித்துக்கொண்டு இருந்தனர். அந்த இடத்துக்கு வந்த சூத மகரிஷி, ``ஏன் வீணாக விவாதம் செய்துகொண்டு இருக்கிறீர்கள்? இந்த பூமியில் மிகச் சிறந்த புண்ணிய நதி தாமிரபரணிதான்!'' என்று அவர்களுக்குத் தெளிவுபடுத்தினார்.

இதிகாச புராணங்களில் பலவாறாகப் போற்றப்படும் ஜீவநதியான தாமிரபரணியில், விருச்சிக ராசியில் குரு பிரவேசிக்கும் காலத்தில் புஷ்கர விழா கொண்டாடப்படுவது மரபு.

அந்த வகையில் இந்த வருடம் அக்டோபர் மாதம் 11-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை, 'தாமிரபரணி மகா புஷ்கர விழா' நடைபெறவிருக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை பல்வேறு ஆன்மிக அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் செய்து வருகின்றனர்.
தாமிரபரணி மகா புஷ்கரத்தில் புனித நீராடுவதற்காக, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் சில புனிதத் தலங்களில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. 

அந்தத் தலங்கள்:

திருநெல்வேலி 

பாபநாசம்,  அம்பாசமுத்திரம்,  கல்லிடைக்குறிச்சி , திருப்புடைமருதூர்,  சேரன்மகாதேவி, கோடகநல்லூர், கோபாலசமுத்திரம், கருப்பூந்துறை, குறுக்குத்துறை, மணிமூர்த்தீஸ்வரம், செப்பரை, சீவலப்பேரி.

தூத்துக்குடி

முறப்பநாடு, ஸ்ரீவைகுண்டம்,  ஆழ்வார்திருநகரி, தென் திருப்பேரை, ஆத்தூர், ஏரல், சேர்ந்தபூ மங்கலம்.
புராதனச் சிறப்பும், இறையருள் பூரணமாக நிறைந்திருப்பதுமான இந்தத் தலங்கள் ஒன்றில், புனித நீராடி வழிபாடு செய்யலாம்.
தாமிரபரணியில் நீராடுவதற்கு முன்பு,

புண்யாயை புண்யபூதாயை  புத்ர்யை மலய பூப்ருத:
ஸர்வதீர்த்த ஸ்வரூபாயை தாம்ரபர்ண்யை நமோ நம:

தாமிரபரணியின் சிறப்பைக் கூறும் இந்த ஸ்லோகத்தைச் சொல்லிய பிறகுதான் தாமிரபரணியில் ஸ்நானம் செய்யவும், தாமிரபரணி தேவியை பூஜிக்கவும் வேண்டும்.