Published:Updated:

இது கின்னஸ் பொங்கல்!

'பொங்கலா' திருவிழா!

இது கின்னஸ் பொங்கல்!

'பொங்கலா' திருவிழா!

Published:Updated:
இது கின்னஸ் பொங்கல்!
##~##
கு

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மரி மாவட்டம், நாகர்கோவிலில் இருந்து சுமார் 2 மணி நேர பஸ் பயணத்தில் உள்ளது கேரளாவின் திருவனந்தபுரம். இங்கிருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில்  உள்ளது ஆற்றுகால் (ஆட்டுகால் என்றும் சிலர் அழைக்கின்றனர்). இந்த ஊரில் கோயில்கொண்டு அருள்பாலிக்கும் ஸ்ரீபகவதியம்மன் கோயிலும், அங்கே அம்மனுக்கு நடத்தப்படும் 'பொங்கலா’ திருவிழாவும் உலகப் பிரசித்தம்!

ஆம், இரண்டு முறை கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள ஆலயம் இது! அந்த அளவுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள், அதிலும் பெண்கள் திரண்டு வருவார்கள் இந்தக் கோயிலுக்கு!

சரி... 'பொங்கலா’ என்றால் என்ன விழா என்கிறீர்களா? வேறென்ன... நம்மூரைப் போலவே கொண்டாடப்படும் பொங்கல் திருவிழாதான்!

கோயிலைச் சுற்றி சுமார் 8 கி.மீ. சுற்றளவில் ரயில்வே ஸ்டேஷன், பேருந்து நிலையம், கடைகள், சாலைகள், அலுவலகங்களின் காலியிடங்கள், தோப்புத் துரவுகள் என அனைத்து இடங்களிலும், விழா நடைபெறும் சில நாட்களுக்கு முன்பே வந்து, பொங்கல் வைப்பதற்காக இடம் பிடித்துவிடுவார்களாம், பக்தர்கள்.

இது கின்னஸ் பொங்கல்!
இது கின்னஸ் பொங்கல்!

கேரளா, அருகில் உள்ள தமிழகத்திலிருந்து மட்டுமின்றி, உலகெங்கிலும் இருந்து லட்சக்கணக்கான பெண்கள், இந்த விழாவுக்கு வந்து கலந்துகொண்டு, பொங்கல் படையலிட்டு, பகவதி அம்மனைத் தரிசித்துச் செல்வார்கள். 97-ஆம் வருடம் நடைபெற்ற விழாவில் சுமார் 15 லட்சம் பேரும், 2009-ஆம் வருடத்தில், சுமார் 25 லட்சம் பேரும் பொங்கல் படையலிட்டுள்ளனர் என்பது, கின்னஸ் புத்தகத்தில் பதிவாகியுள்ளது! அனைவரும் பெண்கள்; இந்த நாளில் ஆற்றுகாலில் எங்கு பார்த்தாலும் பெண்கள், பெண்கள், பெண்கள்! இதனால், பெண்களின் சபரிமலை எனப் போற்றப்படுகிறது, ஆற்றுகால் ஸ்ரீபகவதியம்மன் ஆலயம்!

சரி... லட்சக்கணக்கில் வரும் பெண்கள் எங்கே தங்குவார்கள்? குளிப்பதற்கு என்ன செய்வார்கள்?

இந்த நாளின்போது பொங்கல் படையலிட யார் வந்தாலும், அவர்களுக்குத் திருவனந்தபுரத்தில் உள்ள வீடுகளின் வாசல் திறந்தே இருக்கும்! அப்படி, வீட்டில் தங்குவதற்கு இடமும், குளிப்பதற்கு வசதிகளும் செய்துதரும் முக்கால்வாசிப் பேர் இந்துக்கள் அல்லாதவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது!  

'திருவனந்தபுரம் கோட்டைக்குள் இருக்கிற ஸ்ரீஅனந்த பத்மநாப ஸ்வாமி கோயிலுக்குச் சென்றுவிட்டு, ஆற்றுகால் அம்மாவையும் தரிசித்தால்தான், அந்தப் பயணம் இனிதாக அமைந்ததாக அர்த்தம்!’ என்பது பக்தர்களின் நம்பிக்கை. ஆற்றுகால் பகவதி, சாட்சாத் தமிழகத்தின் கண்ணகிதான் என்றும் சொல்வர்!

இது கின்னஸ் பொங்கல்!

அரசியின் சிலம்பைக் கோவலன் திருடிவிட்டதாக வீண் பழி சுமத்திக் கைது செய்து, தீர விசாரிக்காமல், கோவலனுக்கு மரண தண்டனை வழங்கினான் மன்னன் எனும் கதையை நாடறியும். இதில் ஆவேசமான கண்ணகி, தன் கணவன் கோவலன் கள்வன் அல்லன் என்று நிரூபித்ததுடன், மதுரையம்பதியையே எரித்துச் சாம்பலாக்கினாள் என்பதையும் தமிழ்கூறும் நல்லுலகம் அறியும். அப்படி மதுரையை எரித்த கண்ணகி, கன்யாகுமரி வழியே சேர தேசமான கொடுங்கலூருக்குப் பயணித்தாள். வழியில், ஆற்றுகாலில் தங்கினாள். பிறகு, சினம் தணிந்து, சாந்த சொரூபினியாக அங்கேயே கோயில் கொண்டாள் என்கிறது ஸ்தல வரலாறு.

கோயில் கோபுரத்தில் உள்ள சிற்பங்களில், அழகிய முறையில் சிலப்பதிகாரக் காட்சிகள் சிறப்புற வடிக்கப்பட்டுள்ளன. காலடி எனும் ஊரில் அவதரித்த ஸ்ரீஆதிசங்கரருக்குப் பிறகு, கேரள மண்ணில் அவதரித்தவர்களில் ஸ்ரீவித்யாதி ராஜ சட்டம்பி சுவாமியும் ஒருவர். ஆற்றுகால் பகவதி கோயில் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் இவர் வாழ்ந்துள்ளார் என்பதே இந்த ஆலயத்தின் மகிமைக்கு மேலும் வலு சேர்க்கிறது.

இந்தக் கோயில் குறித்துச் சிலிர்ப்பான கதை ஒன்று உண்டு.

இது கின்னஸ் பொங்கல்!

ஆற்றுகால் பகுதியில், பிரபலமான முள்ளுவீடு குடும்பத்தைச் சேர்ந்த முதியவர் ஒருவர், ஸ்ரீபார்வதிதேவியின் தீவிர பக்தராம்! ஒருநாள் மாலை, அவர் கிள்ளியாற்றில் நீராடிக் கொண்டிருந்தார். அப்போது சிறுமி ஒருத்தி, நிறைய ஆபரணங்களைச் சூடி, அழகுடன் ஜொலித்தபடி அவர் எதிரே வந்தாள். 'என்னை அக்கரைக்குக் கொண்டுபோய் விடுகிறீர்களா?’ என்று கேட்டாள். உடனே முதியவரும், அவளைத் தனது தோள் மீது தூக்கிக்கொண்டு, ஆற்றைக் கடந்தார். அக்கரையில் இறங்கி, தன் வீட்டுக்கு அழைத்துச் சென்று, அவளுக்கு உணவு பரிமாறினார். சாப்பிட்டு முடித்துப் பார்த்தால், சிறுமியைக் காணோம்!

அன்றிரவு, முதியவரின் கனவில் தோன்றிய சிறுமி, 'நான்தான் பகவதி; பார்வதியின் அம்சம். அருகில் உள்ள தோப்பில், மூன்று கோடுகள் தென்படும் இடத்தில், எனக்கு ஒரு கோயில் கட்டு’ என அருளினாள். அதன்படி, விடிந்ததும் தோப்புக்குச் சென்ற முதியவர், அங்கே மூன்று கோடுகள் தெரிந்ததைக் கண்டு சிலிர்த்தார்; அவளுக்கு அங்கே ஒரு கோயில் கட்டினார். பிறகு, ஊர்மக்களின் முயற்சியால், கோயில் புதுப்பிக்கப்பட்டது.

இது கின்னஸ் பொங்கல்!

வாள், சூலாயுதம், கங்காளம் (எலும்புக்கூடு), கேடயம் ஆகியவற்றைத் திருக்கரங்களில் ஏந்தியிருக்கும் அமைப்பில் பகவதியின் திரு விக்கிரகத்தைச் செய்து, பத்ரிநாத்தில் இருந்து பிரதம புரோகிதரை வரவழைத்து, பிரதிஷ்டை செய்ததாகச் சொல்வர்.

இன்னொரு கதையும் சொல்கின்றனர்.

கிள்ளி நதிக்கரையில் உள்ள வயலில் வேலை செய்து கொண்டிருந்த விவசாயப் பெண்கள், அங்கே அழகிய பெண்ணொருத்தி, ஆற்று நீரில் கால் நனைத்தபடி கரையில் அமர்ந்திருப்பதைக் கண்டார்கள். அவள் அந்தப் பெண்களிடம், 'பசிக்குது; சாப்பிட ஏதாவது கொடுங்க’ என்று கேட்டாள். உடனே அந்தப் பெண்கள், வெட்டவெளியில் கற்களை அடுக்கி அடுப்பு போலாக்கி, தீ மூட்டி, பானையில் அரிசி, வெல்லம் ஆகியவற்றை இட்டுச் சர்க்கரைப் பொங்கல் தயாரித்துக் கொடுத்தார்களாம்! ஆசையுடன் வாங்கிச் சாப்பிட்ட அந்தப் பெண், சட்டென்று மறைந்தாள். அவளே கண்ணகிதேவி என்றும், அன்று அவளுக்கு வழங்கிய சர்க்கரைப் பொங்கலை நினைவுபடுத்தும் விதமாகத் தோன்றியதே, 'பொங்கலா திருவிழா’ என்றும் சொல் கின்றனர். ஆற்றில் கால் நனைத்தபடி இருந்தாள், அல்லவா?! இதனால், ஆற்றுகால் என இந்தத் தலத்துக்குப் பெயர் அமைந்ததாம்! இதுவே பின்னாளில் மருவி, ஆட்டுகால் ஆனதாம்!

இது கின்னஸ் பொங்கல்!

இங்கே, பத்துநாள் விழாவாக பிரமாண்டமாக நடை பெறுகிறது, பொங்கல் திருவிழா! ஒவ்வொரு நாளும் கண்ணகியின் கதையைப் பாடிப் பரவசமாவார்கள், பெண்கள். 9-ஆம் நாளில், பொங்கல் படையலிடும் வழிபாடு!  மேல்சாந்தி எனப்படும் தலைமை அர்ச்சகரால், பகவதி கோயிலின் முன் அடுப்பு வைக்கப்பட்டுத் தீ மூட்டப்படும். பின்னர், அடுப்பில் உள்ள தீ, ஒவ்வொரு கையாக மாறும்; ஒவ்வொரு அடுப்பாக எரியும்; இப்படியாக, சுமார் 8 கி.மீ. பரப்பளவில் உள்ள பெண்களும் அடுப்பு மூட்டிப் பொங்கல் படையலைத் துவக்குவார்கள்!  

தமிழக மற்றும் கேரள பாணிச் சிற்பங்களால், பேரழகுடன் காட்சி தருகிறது ஆலயம். கோபுரத்தின் முகப்பில் ஸ்ரீமகிஷாசுரமர்த்தினி, முகமண்டபத்தின் மேல் வேதாளத்தின்மீது வீற்றிருக்கும் தேவி, ராஜகோபுர உட்சுவர்களில் ஸ்ரீகாளியின் திருவுருவங்கள், சுற்றுப் பிராகாரத்தின் முன்னே ஸ்ரீராஜேஸ்வரி, ஸ்ரீபார்வதி- ஸ்ரீபரமேஸ்வரின் சிற்பத் திருமேனிகள், அடுத்து ஸ்ரீவிக்னேஸ்வரர், ஸ்ரீமுருகப்பெருமான், திருமாலின் தசாவதாரத் திருக்கோலங்கள் எனக் கலைநயத்துடன் செதுக்கப்பட்டுள்ளன சிற்பங்கள்! ராஜ கோபுரத்தின் இருபக்கங்களிலும் கண்ணகியின் வாழ்வியலைச் சிற்ப பொம்மைகளாக வடித்துள்ள விதம் நேர்த்தி!

கர்ப்பக் கிரகத்தின் முன்னே, ஸ்ரீபகவதியின் இரண்டு விக்கிரகத் திருமேனிகள் உள்ளன. புராதனமான மூல விக்கிரகம், ரத்தினங்கள் பரப்பிய தங்கத்தாலான அங்கியால் போர்த்தப்பட்டிருக்கிறது. மூல விக்கிரகத் துக்குக் கீழே, பகவதியின் அபிஷேகத் திருவிக்கிரகத்தைத் தரிசிக்கலாம்.

கேரளப் பாரம்பரியத்தைப் பறைசாற்றும் செண்டை வாத்தியங்களின் பேரொலியுடன், ஸ்ரீபகவதி அம்மையைத் தரிசிக்கும்போது, நம் உடம்பு முழுவதும் ஒரு சிலிர்ப்பு ரேகை ஓடுவது நிஜம்!

படங்கள்: கே.கார்த்திகேயன்

கரகாட்டம்  காவடியாட்டம்!

இது கின்னஸ் பொங்கல்!
இது கின்னஸ் பொங்கல்!

''பகவதி அம்மை கருணைக் கடல். திருமணத் தடையால் கலங்கித் தவிப்பவர்கள், தீராத வியாதியால் அவதிப்படுபவர்கள் என எவர் வந்து சந்நிதியின் முன் நின்று வேண்டினாலும், அம்மையின் கடாட்சத்தால் விரைவில் குணம் பெறுவர்; மாங்கல்ய பாக்கியம் கிடைக்கும்; நினைத்தது ஈடேறும். செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துவிடுவர், இங்கே! அவ்வளவு ஏன்... வெளிநாடுகளில் இருந்தும்கூட, எண்ணற்ற பக்தர்கள் பகவதியின் பேரருளை அறிந்து, தினமும் வந்து தரிசித்துச் செல்கின்றனர்'' என மேல்சாந்தி பாலமுரளி, பெருமிதத்துடன் பேசத் துவங்கினார்...

''வருடந்தோறும் பிப்ரவரி மாதம் காப்புக் கட்டி விழா துவங்கும். கொடுங்கலூர் தேவியை இங்கு அழைத்து வருவதில் இருந்து, பாண்டிய மன்னனை வதம் செய்வது என ஒன்பது நாட்களும் கதைகள் சொல்லப்படும். மறுநாள், பொங்கலா விழா!  

அன்றைய இரவில், சுமார் ஒன்றரை கி.மீ. தொலைவில் உள்ள மணக்காடு சாஸ்தா கோயிலுக்கு யானை மீது திரு வீதியுலா வருவாள் அம்மன். அப்போது அலங்கார ஊர்திகள், கண்ணகி கதையின் காட்சிகள், கரகாட்டம், காவடியாட்டம் என ஊரே திமிலோகப்படும். மேலும், 13 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் 'குத்தியோட்ட வழிபாடு’ எனும் சடங்கினைச் செய்வார்கள். மகிஷாசுரமர்த்தினியின் காயமடைந்த போர்வீரர்களாக இவர்களைக் கருதுகின்றனர்! ஏழு நாள் விரதமிருந்து, ஈர உடையுடன் 1008 முறை நமஸ்காரம் செய்வார்கள். பிறகு, அவர்கள் குணம் அடைவதாக ஐதீகம்! வீதியுலாவில் இவர்கள் அணிவகுத்து வருகிறபோது, சூரல் எனும் உலோகக் கம்பியை விலா எலும்புகளில் குத்திக்கொண்டு, புத்தாடை அணிந்து, கழுத்தில் மாலையும் தலையில் கிரீடமும் சூடிக்கொண்டு, கையில் பூச்செண்டுகளுடன் ராஜகுமாரர்களைப்போல் அணிவகுத்து வருவது கண் கொள்ளாக் காட்சி! இதில் பங்கேற்கிற சிறுவர்களுக்கு, அதன்பின் நோய் எதுவும் தாக்காது என்பது நம்பிக்கை! மறுநாள் பூஜை முடிந்ததும், சாஸ்தா கோயிலிலிருந்து ஆற்றுகாலுக்குப் பகவதி அம்மன் வந்துசேர்வதுடன் நிறைவுறுகிறது விழா!'' எனச் சிலிர்ப்புடன் தெரிவித்தார் மேல்சாந்தி பாலமுரளி.

'2030க்கு இப்பவே புக்கிங்!’

இது கின்னஸ் பொங்கல்!

''ஆற்றுகால் பகவதி கோயிலில், ஞாயிற்றுக்கிழமை தோறும் சுமார் 5000 பேருக்கு அன்னதானம் நடைபெறுகிறது. பக்தர்கள் பணம் செலுத்தி, பகவதி அம்மைக்கு முழு சந்தனக் காப்பு பூஜை செய்வது இங்கு விசேஷம். 2030-ஆம் வருடம் வரை இந்தப் பூஜைக்கு புக் செய்திருக் கிறார்கள் என்றால், பார்த்துக்கொள்ளுங்கள்! அதேபோல், 2021-ஆம் ஆண்டு வரை சந்தன அபிஷேகத்துக்கும் புக்கிங் முடிந்து விட்டது'' என்கிறார் அறங்காவலர் குழுத் தலைவர் ஆர்.கோபிநாதன் நாயர்.

''2009-ஆம் வருடம் நடைபெற்ற பொங்கலா விழாவில்,  சுமார் 25 லட்சம் பெண்கள் வந்து பொங்கல் வைத்தனர். இந்த வருடம் பிப்ரவரி 19-ஆம் தேதி நடைபெறுகிற பொங்கலா விழாவுக்குச் சுமார் 30 லட்சம் பெண்கள் வருவார்கள் என எதிர்பார்க்கிறோம்'' என்றவர், தொடர்ந்து... ''ஏழைப் பெண்களுக்குத் திருமணம், ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவித் தொகை, குறைந்த கட்டணத்தில் ஆம்புலன்ஸ் சேவை, ஏழை நோயாளிகளுக்கு சிகிச்சைக் கான பண உதவி ஆகியவற்றைச் செய்து வருகிறது ஆலய நிர்வாகம்'' எனத் தெரிவித்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism