Published:Updated:

‘சிவ சித்தத்தை சிரமேற்கொள்வோம்’

‘சிவ சித்தத்தை சிரமேற்கொள்வோம்’
பிரீமியம் ஸ்டோரி
‘சிவ சித்தத்தை சிரமேற்கொள்வோம்’

நவாஸ்பேட்டை ஸ்ரீநவநிதீஸ்வரர் ஆலயம்எஸ்.கண்ணன்கோபாலன் - படங்கள்: எஸ்.விவேகானந்தன்

‘சிவ சித்தத்தை சிரமேற்கொள்வோம்’

நவாஸ்பேட்டை ஸ்ரீநவநிதீஸ்வரர் ஆலயம்எஸ்.கண்ணன்கோபாலன் - படங்கள்: எஸ்.விவேகானந்தன்

Published:Updated:
‘சிவ சித்தத்தை சிரமேற்கொள்வோம்’
பிரீமியம் ஸ்டோரி
‘சிவ சித்தத்தை சிரமேற்கொள்வோம்’

‘சான்றோருடைத்து’ எனும் சிறப்புக்குரிய தொண்டை மண்டலத்தின் தலைநகராகத் திகழ்ந்த காஞ்சியை ‘கோயில் நகரம்’ என்று சிறப்பிப்பார்கள் பெரியோர்கள். அந்த அளவுக்குக் கோயில்கள் நிறைந்த நகரம் அது. காஞ்சியில் மட்டுமன்று, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் ஏராளமான திருக்கோயில்கள் உண்டு.

ஒரு காலத்தில் மகோன்னதமான நிலையில் திகழ்ந்த அந்த ஆலயங் களில் பலவும் சிதிலமடைய, நித்திய பூஜைகளும் நின்றுபோயின. அதுமட்டுமா? அவற்றில் சில ஆலயங்களில் அருளோச்சிக்கொண்டிருந்த தெய்வ மூர்த்தங்களும் காணாமல்போயின என்பது கவலைக்குரிய செய்தி. காணாமல்தான் போனதோ, களவுதான் போனதோ அந்தக் கடவுளுக்கே வெளிச்சம். அப்படியான ஆலயங்களில் ஒரு சிவாலயத்தைப் பற்றி  வேலுப்பிள்ளை என்ற அன்பர் நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

‘சிவ சித்தத்தை சிரமேற்கொள்வோம்’

செங்கல்பட்டு - காஞ்சிபுரம் சாலையில் வாலாஜாபாத்திலிருந்து சுமார் 5 கி.மீ தொலைவில் ஏகனாம்பேட்டைக்கும் கருக்குப்பேட்டைக்கும் இடையில் அமைந்திருக்கிறது நவாஸ்பேட்டை எனும் கிராமம். அன்பர் குறிப்பிட்ட ஆலயம் இந்த ஊரில்தான் அமைந்திருக்கிறது. அந்தச் சிவாலயத்தை தரிசிக்கச் சென்றோம் நாம்.

தரிசிக்கும் கணத்திலேயே ஆலயத்தின் பிரமாண்டம் நம்மை வியக்கவைக்கிறது. சுமார் 20 சென்ட் பரப்பளவில் அமைந்திருந்ததாம் ஆலயம். தற்போது எஞ்சியிருக்கும் பகுதிகளில் தென்பட்ட சிற்பங்களின் கலைநுட்பத்தைக் காணும்போது, ஆலயத்தின் தொன்மைச் சிறப்பை நன்கு அறியமுடிகிறது. கோயிலின் இடிபாடு களையும், சிதிலமுற்றுக் கிடக்கும் சந்நிதிகளையும் கண்டபோது, ‘இப்படியொரு நிலையில் உமது கோயிலைக் காணவும், நாங்கள் செய்த பாவம்தான் என்னவோ’ என்று உள்ளம் துடிக்க, கண்ணீர் பெருக்கி நின்றோம். அப்படி, ஆற்றாது அழுது நின்ற நமக்கு ஆறுதல் தருவதுபோல், திருக் கோயிலில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டி ருப்பதாகக் கூறினார் தட்சிணாமூர்த்தி என்ற அன்பர்.

‘`இந்தக் கோயில் பல வருஷமாவே சிதிலமடைஞ்சு கிடந்தது. புதர் மண்டி, விஷப் பூச்சிகளின் நடமாட்டத்துடன் திகழ்ந்ததால், உள்ளே நுழையவே எல்லோரும் பயந்துகிட்டிருந்தோம். மண்டிக்கிடக்கும் புதர்களை எப்படியாவது அகற்றி, கோயிலுக்குள் சென்று இறைவனை தரிசித்துவிட மாட்டோமா என்று எல்லோரும் ஏங்கிக்கிடந்தோம். அப்பதான், சென்னையில் இருக்கற அண்ணாமலையார் உழவாரப்பணி அமைப்பினர் இங்கு வந்து உழவாரப் பணி செய்தார்கள். அந்த அமைப்பைச் சேர்ந்த ராமச்சந்திரன் மூலமாத்தான் எங்களுக்கு இந்தக் கோயிலோட பெருமையும், சுவாமி, அம்பாளோட பெயர்களும் தெரிந்தன’’ என்று கூறினார் அவர்.

‘சிவ சித்தத்தை சிரமேற்கொள்வோம்’

அங்கிருந்தபடியே ராமச்சந்திரனை போனில் தொடர்பு கொண்டு பேசினோம். இவரும், அண்ணாமலையார் உழவாரப்பணி அமைப்பும்  ஏற்கெனவே சக்தி விகடன் வாசகர்களுக்குப் பரிச்சயமானவர்கள்தாம்.  நயப்பாக்கம் மாசிலாமணீஸ்வரர் கோயில் மற்றும் செய்யாற்று வாக்புரீஸ்வரர் கோயிலில் இந்த அமைப்பினரின் திருப்பணிகள் குறித்து நாமறிவோம்.

‘சிவ சித்தத்தை சிரமேற்கொள்வோம்’


‘‘குரோம்பேட்டை சங்கரமடத்தில் இருக்கும் கண்ணன் என்பவர்தான் நவாஸ்பேட்டையில் உள்ள திருக்கோயிலைப் பற்றி எங்களிடம் கூறினார். நாங்கள் பல கோயில்களில் உழவாரப் பணி செய்திருந்தாலும், இந்தக் கோயில் உழவாரப் பணி சற்று கடினமாகவே இருந்தது. அந்த அளவுக்கு முட்செடிகள் புதர்போல் மண்டியிருந் தன. ஊர்மக்களின் ஒத்துழைப்பு இருந்ததால்தான் எங்களால் உழவாரப்பணி செய்ய முடிந்தது. இன்னும் சொல்லப்போனால், நாங்கள் எப்போதும் எடுத்துச்செல்லும் முதலுதவிப் பெட்டி அதிக அளவில் பயன்பட்டது இந்தக் கோயில் உழவாரப் பணியின்போதுதான் என்றே சொல்லலாம்.

ஒருவழியாகப் புதர்களை அகற்றிவிட்டு உள்ளே சென்று பார்த்தால், தெய்வ மூர்த்தங்கள் எதுவும் கோயிலில் இல்லை. பிறகு, தேவ பிரச்னம் பார்த்தபோதுதான், சுவாமியின் பெயர் நவநிதீஸ்வரர், அம்பாளின் பெயர் ஐஸ்வர்யாம் பிகை எனும் செல்வநாயகி அம்பிகை, கோயிலின் தீர்த்தம் ஐஸ்வர்ய தீர்த்தம், தலவிருட்சம் வில்வம் போன்ற விவரங்கள் எங்களுக்குத் தெரியவந்தன’’ என்றார்.

எனினும், நாம் சென்றபோது அங்கே சுவாமி, அம்பாள், விநாயகர், முருகர் ஆகியோரின் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தன. அதுபற்றி தட்சிணாமூர்த்தியிடம் கேட்டோம்.

‘சிவ சித்தத்தை சிரமேற்கொள்வோம்’

‘`உண்மைதான். முதல்ல கோயில்ல சிலைகள் எதுவுமே இல்லை. பிறகு, இங்கே சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யவேண்டும் என்ற எங்களது விருப்பத்தை ராமச்சந்திரனிடம் தெரிவித்தோம். அவரும், குரோம்பேட்டை சங்கரமடத்தைச் சேர்ந்த கண்ணனும் உதவிசெய்ய, காஞ்சி சங்கர மடத்திலிருந்து பெரியவாளோட அனுக்கிரகத் தோட ஒரு சிவலிங்கத்தை அனுப்பி வைத்தார்கள்.

அந்தச் சிவலிங்கம் நர்மதை ஆற்றுல கிடைத்த பாணலிங்கம் என்பது சிறப்பு. பிரதிஷ்டை செய்த அன்றே பூஜைகளையும் ஆரம்பிச்சுட்டோம். பிறகு ஊர்மக்கள் ஒத்துழைப்போட ஒவ்வொரு சிலையா பிரதிஷ்டை செய்தோம்.

குபேரன் வழிபட்ட கோயில் என்பதோடு, மற்றொரு சிறப்பும் இந்தக் கோயிலுக்கு உண்டு. சுவாமி சந்நிதிக்குப் பின்னாடி நவஜித் சித்தர் என்பவரின் சமாதி இருக்கு. புதர் மண்டிக்கிடந்த அந்தச் சமாதியையும் சுத்தம் செய்து தினமும் தீபம் ஏற்றி வருகிறோம். சீக்கிரமே திருப்பணிகளை முடித்து, கும்பாபிஷேகம் செய்யவேண்டும் என்பதே எங்களது விருப்பம். சுவாமிதான் அருள் புரிய வேண்டும்’’ என்றார்.

சுவாமி அருள்பாலித்துவிட்டார்; புதுப்பொலிவு பெறப்போகும் இந்தக் கோயிலில் கோலாகலமாக அருள்பாலிக்க அந்தச் சிவனார் சித்தம் கொண்டு விட்டார் என்றே சொல்லவேண்டும். அதற்கான அவரின் முன்னெடுப்புதான் இறையன்பர்கள் மேற்கொண்ட உழவாரப்பணி தொடங்கி நடை பெற்று வரும் திருப்பணிகள் என்றே கருதவேண்டும்.

‘சிவ சித்தத்தை சிரமேற்கொள்வோம்’

சிவசித்தத்தைச் சிரமேற்கொள்வோம். குபேரனுக்கு நவநிதிகளையும் அருளிய நாதனின் ஆலயம், நவஜித் சித்தரால் வழிபடப்பட்ட ஈசனின் திருக்கோயில் மீண்டும் பொலிவுபெற நம்மாலான அனைத்து முயற்சிகளையும் முன்னெடுப்போம். சிறுதுளி பெருவெள்ளம் என்பார்கள். நவநிதீஸ்வரரின் திருக்கோயில் திருப்பணிக்கு நாம் ஒவ்வொருவரும் அளிக்கும் சிறு காணிக்கையும் அவரருளால் பல்கிப் பெருகும்; அகிலம் சிறக்க ஆலயம் எழும்பும். இயன்றோர் பொருள் வழங்கலாம், பொருளுதவி செய்ய இயலாத அன்பர்கள், இந்தச் சிவாலயத்தின் அருள்மகிமை திக்கெட்டும் பரவச் செய்யலாம்.

‘போக்கும் வரவும் இல்லா புண்ணியனும், காக்கும் நம் காவலனும், காண்பரிய பேரொளி’யு மான ஐயனின் பேரருள், இந்த ஆலயம் தொடங்கி அகிலமெங்கும் நிறைந்து, உயிர்கள் செழிக்க வரமருளட்டும்!

எங்கிருக்கிறது... எப்படிச் செல்வது..?

சென்னை - வாலாஜாபாத் வழியாக காஞ்சிபுரம் செல்லும் சாலையில் வாலாஜாபாத்திலிருந்து சுமார் 5 கி.மீ தொலைவில் உள்ளது கருக்குப்பேட்டை. அங்கிருந்து நடந்துசெல்லும் தொலைவிலேயே அமைந்திருக்கிறது அருள்மிகு நவநிதீஸ்வரர் ஆலயம்.

வங்கிக் கணக்கு விவரம்:


Name: DHAKSHANAMOORTHY P S.SUKUMAR
A/C NO: 0253104000168625
BANK NAME: IDBI BANK
IFSC NO: IBKL0000253

தொடர்புக்கு:
பி.தட்சிணாமூர்த்தி, செல்: 07010534389