சிறப்பு கட்டுரை
ஆஞ்சநேயா... அனுமந்தேயா..!
தொடர்கள்
Published:Updated:

பொங்கு சனீஸ்வரருக்கு சிறப்பு பூஜை!

பொங்கு சனீஸ்வரருக்கு சிறப்பு பூஜை!

பொங்கு சனீஸ்வரருக்கு சிறப்பு பூஜை!
பொங்கு சனீஸ்வரருக்கு சிறப்பு பூஜை!
##~##
ருகிற 21.12.11 புதன்கிழமை அன்று, கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்குப் பெயர்ச்சியாகிறார், சனி பகவான். எந்தந்த ராசிக்கு என்னென்ன பலன்கள், எந்த நட்சத்திரக்காரர்கள் எந்த ஆலயங்களுக்குச் சென்று, பரிகாரம் செய்து வழிபடவேண்டும்... என சனிப்பெயர்ச்சி பலன்களை சக்தி விகடன் தன் வாசகர்களுக்கு வழங்கியது. பலன்களையும் பரிகாரங்களையும் சொல்லிவிட்டால் போதுமா... வாசகர்களின் நலனுக்காக, அவர்களது குடும்பம் செழிப்பதற்காக, ஒரு பூஜை செய்தால் என்ன...? இந்த எண்ணம் தோன்றியதுமே, அதற்கான ஏற்பாடுகள் மளமளவென்று நடந்தன.மிகப் பிரமாண்டமாகவும் பிரமாதமாகவும் நடந்தேறின, சிறப்பு ஹோமங்களும் பூஜைகளும்!

அந்தத் திருத்தலம், திருக்கொள்ளிக்காடு ஸ்ரீஅக்னீஸ்வரர் ஆலயம். அக்னிபுரி, அக்னி க்ஷேத்திரம் என்றெல்லாம் போற்றப்படும் இந்தத் தலத்தில், ஸ்ரீசனீஸ்வரர், தனிச்சந்நிதியில் அருள்கிறார். அதுமட்டுமா? இங்கு லட்சுமி கடாட்சத்தை அள்ளித் தருபவராக, பொங்கு சனீஸ்வரராகக் காட்சி தருகிறார். எல்லாக் கோயில்களிலும், ஸ்ரீமகாலட்சுமிக்கு சந்நிதி இருக்கும். இங்கே... இந்தத் தலத்தில், லட்சுமி சந்நிதி இருக்கவேண்டிய இடத்தில், சக்தி அம்சமாக, சகல ஐஸ்வரியங்களையும் வாரி வழங்கும் வள்ளலாக, காட்சி தந்து அருள்புரிகிறார் சனி பகவான்! அருகிலேயே திருமகளும் சந்நிதி கொண்டிருப்பது விசேஷம்!

பொங்கு சனீஸ்வரருக்கு சிறப்பு பூஜை!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ளது திருக்கொள்ளிக்காடு. திருவாரூரில் இருந்து சுமார் 25 கி.மீ. தொலைவில் உள்ள இந்த ஆலயம், பொங்கு சனீஸ்வர க்ஷேத்திரம் எனப் போற்றப்படுகிறது. சனி பகவான் தன் சாபம் நீங்குவதற்காக, இந்தத் தலத்துக்கு வந்து, இங்கேயுள்ள அக்னி தீர்த்தத்தில் நீராடி, சிவ பூஜை செய்தார். அவரின் தவத்தில் மகிழ்ந்த சிவனார், தேவியுடன் அவருக்குத் திருக்காட்சி தந்தார். அப்போது, 'தனம் மற்றும் தானியங்களுக்கு அதிபதியாக இருந்து அனைவருக்கும் அடியேன் அருளவேண்டும். குபேர சம்பத்துகளைத் தருபவனாக, ஆயுளுக்கும் ஆரோக்கியத்துக்கும் அதிபதியாக இருந்து, உயிர்களுக்கு வரமளிக்கவேண்டும்’ என சிவனாரிடம் வரம் கேட்டார் சனி பகவான். 'அப்படியே ஆகட்டும்’ என வரத்தைத் தந்தருளினார் சிவனார்.

அன்று முதல், திருக்கொள்ளிக்காடு தலத்துக்கு வந்து, தன்னைத் தரிசிக்கிற பக்தர்களுக்கு, சகல செல்வங்களையும் நோய் நொடியில்லாத, நீண்ட ஆரோக்கியத்தையும் வாரி வழங்கி வருகிறார், ஸ்ரீசனீஸ்வரர்.  இந்தத் தலத்து இறைவனின் திருநாமம் - ஸ்ரீஅக்னீஸ்வரர். அம்பாளின் திருநாமம் - ஸ்ரீமிருதுபாத நாயகி. அதாவது, பஞ்சின் மெல்லடியாள் என்று பொருள்!

பொங்கு சனீஸ்வரருக்கு சிறப்பு பூஜை!

மங்கு சனி, பொங்கு சனி, மரணச் சனி, அந்திமச் சனி என்பார்கள், சனி பகவானின் நிலைகளை. இந்தத் தலத்தில் பொங்கு சனீஸ்வரராக, கையில் கலப்பையுடன் திருக்காட்சி தந்தருள்கிறார். எனவே, இவரை வணங்கிவிட்டு, விதைப்பது அனைத்துமே பொன்னென விளைந்து, செல்வத்தைத் தரும். வீட்டில், சகல சௌபாக்கியங்களும் ஐஸ்வரியங்களும் சேரும் என்பது ஐதீகம். ஸ்ரீமகாலட்சுமி அமர்ந்திருக்கும் இடத்தில் சந்நிதி கொண்டிருப்பதால், பக்தர்களுக்கு குபேர சம்பத்துக்களையும் யோகத்தையும் அருள்கிறார் சனி பகவான்.

இங்கேயுள்ள அக்னி தீர்த்தத்தில் நீராடி, ஸ்ரீபஞ்சினும் மெல்லடியாள் சமேத ஸ்ரீஅக்னீஸ்வரரையும் ஸ்ரீசனி பகவானையும் வழிபட, இந்த சனிப்பெயர்ச்சி காலம் என்றில்லை. இந்த ஜென்மம் முழுக்கவே சீரும் சிறப்புமாக, சகல செல்வங்களும் பெற்று, பெருவாழ்வு வாழலாம்!

பொங்கு சனீஸ்வரருக்கு சிறப்பு பூஜை!

இந்த ஆலயத்தின் இன்னொரு சிறப்பம்சம்... ஸ்ரீபைரவரும் ஸ்ரீசனீஸ்வரரும் எதிரெதிர் சந்நிதியில் இருந்தபடி, பரஸ்பரம் பார்த்துக் கொள்கின்றனர். சிறப்பான அமைப்பு இது என்கிறார்கள் பக்தர்கள். ஸ்ரீகால பைரவரும் எதிரிகள் தொல்லை முதலான அனைத்துப் பிரச்னைகளையும் தீர்த்து, மன தைரியத்துடன் வாழ்வதற்கு அருள்கிறார்.

இதோ... 21.12.11 அன்று சனிப் பெயர்ச்சி. இந்தப் பெயர்ச்சியில், விகடன் வாசகர்களும் அவர்கள்தம் குடும்பங்களும் சிறப்புற்று விளங்குவதற்காக, ஒரு சனி ஹோரை நாளில், சிறப்பு ஹோமங்களும் பூஜைகளும் சக்தி விகடன் சார்பில் நடைபெற்றது. ஸ்ரீமகா கணபதி ஹோமம், ஸ்ரீநவக்கிரக ஹோமம், ஸ்ரீசனி ப்ரீதி ஹோமம் என சிரத்தையுடன் செய்யப்பட்டது ஹோம பூஜை. இதையடுத்து, பொங்கு சனி பகவானுக்கு, சிறப்பு அபிஷேகங்களும் நடந்தேறின.

பொங்கு சனீஸ்வரருக்கு சிறப்பு பூஜை!

அதுமட்டுமா? ஹோம பூஜையில் விபூதியும் குங்குமமும் வைக்கப்பட்டன. அந்த விபூதி - குங்குமம், பொங்கு சனி பகவானின் திருவடியில் வைத்து பூஜிக்கப்பட்டது. அந்த விபூதியைக் கொண்டு, சனீஸ்வரருக்கு அபிஷேகம் செய்யப் பட்டது. கோயிலின் செயல் அலுவலர் மற்றும் அர்ச்சகர்களின் சிறப்பான உதவியுடன் இனிதே நடந்தேறியது பூஜை. ஹோம பூஜையிலும் பொங்கு சனி பகவானின் திருப்பாதத்திலும் வைக்கப்பட்ட விபூதி - குங்குமப் பிரசாதம், இதோ... உங்கள் கரங்களில்!  பொங்கு சனீஸ்வரரை மனதாரப் பிரார்த்தித்து, பிரசாதத்தை இட்டுக் கொள்ளுங்கள். இனி, பொங்கு சனீஸ்வரரின் பேரருளால், உங்கள் வாழ்வில், நிம்மதியும் சந்தோஷமும், பொங்கிப் பெருகட்டும்.

எல்லோரும் இன்புற்றிருக்க  
நினைப்பதுவே யல்லாமல்
வேறொன்றறியேன் பராபரமே!

ஸ்ரீசனி பகவானே சரணம்!

படங்கள்: ந.வசந்தகுமார்
இ.ராஜவிபீஷிகா

எங்கே இருக்கிறது? 

திருவாரூர் மாவட்டத்தில் உள்ளது திருக்கொள்ளிக்காடு. திருவாரூரில் இருந்து திருத்துறைப்பூண்டி செல்லும் சாலையில், சுமார்16 கி.மீ. தொலைவில் உள்ளது பாங்கல் நால்ரோடு. இங்கிருந்து கிளை பிரிந்து செல்லும் சாலையில், சுமார் 9 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது திருக்கொள்ளிக்காடு திருத்தலம்.

திருவாரூரில் இருந்து பஸ் வசதி குறைவுதான். கார் மற்றும் ஆட்டோ வசதிகள் உள்ளன.