மற்ற எபிசோடுகள்
Published:Updated:

குறை தீர்க்கும் கோயில்கள் - 18 - ‘மூன்றாம் காலத்தில் மூலிகைச்சாறு!’

குறை தீர்க்கும் கோயில்கள் - 18 - ‘மூன்றாம் காலத்தில் மூலிகைச்சாறு!’
பிரீமியம் ஸ்டோரி
News
குறை தீர்க்கும் கோயில்கள் - 18 - ‘மூன்றாம் காலத்தில் மூலிகைச்சாறு!’

டாக்டர் ஜெயம் கண்ணன் - படங்கள்: சாய் தர்மராஜ்

சிவகங்கை மாவட்டத்தில் நெற்குப்பை என்னும் சிற்றூரின் அருகிலுள்ளது   பரியாமருது பட்டி. இந்தக் கிராமத்தின் தொடக்கத்திலேயே அமைந்துள்ளது ஸ்ரீபறியா மருந்தீஸ்வரர் ஆலயம். சிவகங்கை சமஸ்தானத்துக்கு உட்பட்ட இந்த ஆலயம், 1829-ம் வருடம் நகரத்தாரால் கல் திருப் பணி செய்து கட்டப்பட்ட ஆலயம்.

மாட்டுப்பொங்கல் தினத்தன்று இந்தக் கோயிலில் நந்திக்குச் சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்படும் என்பதால் அன்றைய தினத்தில், கோயிலுக்குச் சென்றோம்.

பிரமாண்டமான மதிலுடன் கூடிய கோயில். கோயிலுக்கு முன்பு, மிக பிரமாண்டமாய்க் கிளை பரப்பி நிற்கும் ஆலமரத்தின் நிழலில், மாட்டுப் பொங்கல் வைத்துக்கொண்டிருந்தனர் பெண்கள். ராஜ கோபுரத்தைத் தாண்டி உள்ளே நுழைந்ததும், நந்தவனம் அடங்கிய பெரிய சுற்றுப் பிராகாரம். ராஜகோபுர வாசலைத் தாண்டியதும் நமக்கு நேரே கண்ணில்படுகின்றன அந்த வாசகங்கள்.

‘மருந்து மருந்து அறியா மருந்து அறியா வினை தீர்த்த பறியா மருந்து’  இந்த வரிகளைப் படிக்கும் போதே இந்தத் தலத் தின் மகிமை நமக்கு விளங்குகிறது.

குறை தீர்க்கும் கோயில்கள் - 18 - ‘மூன்றாம் காலத்தில் மூலிகைச்சாறு!’

கொடிமரம், பலிபீடம், நந்தி மண்டபம் கடந்து சென்றால் வரும் உள் பிராகாரத்தில் நேரே மூலவர் சந்நிதி அமைந்திருக் கிறது. ‘‘முதலில் பிராகாரத்தில் இருக்கும் மருத விநாயகரைக் கும்பிட்டுவிட்டு வாருங்கள்’’ என்றார் கைலாச குருக்கள்.

வெளிப் பிராகாரத்தில், மருத மரத்தடியில் அருள்புரிகிறார் மருதவிநாயகர். பக்தர்களின் குறைகளையும் பிணிகளையும் தீர்க்கும் சக்தியோடு இருப்பதால், மருத விநாயகர் சந்நிதி மிகவும் பிரபலம். மேலும், ராகு - கேது பரிகாரம், நாக தோஷ நிவர்த்தி ஆகிய வற்றுக்காக வேண்டிக்கொண்டு பக்தர்களால் அடித்து வைக்கப்பட்டுள்ள கல் நாகங்கள் விநாயகர் சந்நிதியைச் சுற்றிலும் எக்கச்சக்கமாக உள்ளன.

குறை தீர்க்கும் கோயில்கள் - 18 - ‘மூன்றாம் காலத்தில் மூலிகைச்சாறு!’


மருத விநாயகரின் உருவம் வழக்கமாக நாம் பார்க்கும் உருவம் போலல்லாது வித்தியாசமாக இருந்தது. காரணம் கேட்டபோது, மருத கணபதியும் கோயிலுக்குள் இருக்கும் கன்னிமூல கணபதியும் வாதாபி காலத்து விக்கிரகங்கள் என்று அறிந்தோம்.

‘‘இந்த மருத மரம்தான் தல விருட்சம். இந்த ஆலயத்தை எழுப்பும்போது, மண்டபத்தின் சுற்றுச்சுவர் எழுப்பும் பணிக்காக இந்த மரத்தை வெட்ட முயற்சி செய்தனர். அப்போது மரத்தி லிருந்து ரத்தம் போன்ற நீர் வடிந்ததால், வெட்டும் முயற்சி கைவிடப்பட்டது. பின்னர் தானாகவே அந்த மரம் முறிந்து விழுந்து, கோயில் சுவர் கட்டு வதற்கு உதவியது இறைவனின் திருவிளை யாடல்தான். அதன் பின்னர் மருத மரம் தானாக வளர்ந்தது.

ஒரு முறை, இம்மரத்தில் சிவ ரூபமே பிரத்யட்சமாகத் தோன் றியதைப் பேரதிசயமாக பக்தர்கள் சிலாகித்துச் சொல் கிறார்கள். இந்த மரமும் அதன் பட்டைகளும் மிகவும் மருத்துவ சக்தி வாய்ந்தவை. மரத்திலிருந்து தானாகவே உதிரும் மருதம் பட்டையைப் பொடி செய்து நீரில் கலந்து சாப்பிட்டு வந்தால், உடலில் ஆறாத புண், வயிற்று வலி போன்றவை நீங்கும்.

இங்கு சர்ப்பம் வந்து வழிபட்டதால், ராகு- கேது தோஷம் நிவர்த்தி ஆகும். இங்கே வழிபட்டு, நிவர்த்தி ஆனவர்கள், ராகு கேது உருவங்களை  வைப்பார்கள். இப்போதும் இங்கே சர்ப்பம் வந்து போவதை நானே பார்த்திருக்கிறேன்'' என்கிறார் கைலாச குருக்கள்.

குறை தீர்க்கும் கோயில்கள் - 18 - ‘மூன்றாம் காலத்தில் மூலிகைச்சாறு!’

வேடனாக வந்து வழிபட்ட பெருமாள்!

முற்காலத்தில் திருக்கண்ணையம்பதி என்றும் கண்ணை நகர் என்றும் வழங்கப்பட்டதாம் இவ்வூர். மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றாலும் சிறப்பு பெற்ற இதன் மகிமைகளை விரிவாகக் கூற ஆரம்பித்தார் கைலாச குருக்கள்.

‘‘சாட்சாத் பெருமாளே வேடுவர் ரூபத்தில் வந்து சிவரூபத்தைக் கண்டறிந்து, பூஜை செய்த புண்ணியத்தலம் இது. மூலவர் சுயம்பு மூர்த்தி; நான்கு யுகங்கள் கடந்து நிற்பவர். ஒவ்வொரு யுகத்திலும் இவருக்கு ஒவ்வொரு திருப்பெயராம்! கிருத யுகத்தில் செல்ல நயினார், திரேதா யுகத்தில் நல்ல நாயனார், துவாபர யுகத்தில் பரம்தலை ஆண்டவர் ஆகிய பெயர்களோடு திகழ்ந்த இறை வனுக்கு, இந்தக் கலியுகத்தில் பறியாமருந்தீஸ்வரர் என்ற திருப்பெயர் வழங்குகிறது.

‘பறியா மருந்து ஈஸ்வரர்’ என்றால், பறியாத மருந்தான ஈஸ்வரர் என்று பொருள். அதாவது செடியில் பறிக்காத மருந்தே இவர். இவரை நினைத்தாலே, வணங்கினாலே வந்த நோய் பறந்து போகுமாம். அதனால் ‘பறியா மருந்தீஸ்வரர்’ என்று அழைக்கப்பட்டு, பிற்காலத்தில் பரியா மருதீஸ்வரர் என்று மருவியதாகச் சொல்கிறார்கள்.

நான்கு யுகங்களாக இருப்பவர் என்பதால் இந்த ஈசன், ‘சதுர் முகங்கண்டவர்’ என்றும், பக்தர்களுக்கு மருந்தாகத் திகழ்வதால் ‘ஔஷதலிங்கம்’ என்றும், மருத மரங்கள் அடர்ந்த இடத்தில் இருப்பவர் ஆதலால் ‘மருதவனேஸ்வரர்’ என்றும் போற்றப் படுகிறார்.

சுயம்பு வடிவாக உள்ள மூலவரின் மேல் வடிவம் மற்ற சிவலிங்கங்களைப் போல உருளை வடிவமாக இல்லாமல், சரபு வடிவமாக (சதுர வடிவம்) திகழ்கிறது. இதற்குக் கீழே தோண்டத் தோண்ட பெரிய, அகன்ற மலை மாதிரி போய்க் கொண்டே இருந்ததாம். ஆக, அதன் முனைதான் மேலே தெரியும் சரபு லிங்கம் என்கிறார்கள். திருபுவனத்தில் அவதரித்த சரபேஸ்வரரின் கோபம் தணிந்த திருத்தலமாகவும் இதைச் சொல்கிறார்கள்’’ என்றார் கைலாச குருக்கள்.

குறை தீர்க்கும் கோயில்கள் - 18 - ‘மூன்றாம் காலத்தில் மூலிகைச்சாறு!’

பாரதப் போருக்குப் பிறகு கண்ணபிரான் வணங்கிய சிவன் என்பதற்குச் சான்றாக, கண்ண பிரான் வேடர் உருவத்தில் சங்கு சக்ரபாணியாக, வலது கையில் புஷ்பத்தை ஏந்தி பூஜிக்கும் கோலத் துடன் இருக்கிறார். அதனால்தான் இந்தத் தலம் ‘கண்ணையம்பதி’ என்று வழங்கப்பட்டதாகக் கூறு கிறார்கள்.

மகாபாரதப் போரில் காயமடைந்த பாண்ட வர்கள், இந்தத் தலத்தின் மண்ணை அள்ளிக் காயங்களின் மேல் பூச, உடனே காயங்கள் ஆறிய தாகச் சில குறிப்புகள் திருவண்ணாமலையில் உள்ள ஏடுகளில் இருந்தன என்றும் தகவல்கள் உண்டு.

இங்குள்ள நெய் நந்தீஸ்வரரும் வரப்பிரசாதியான வர். இவரிடம் வேண்டிக்கொண்டு, நெய் வாங்கி அபிஷேகம் செய்தால் எண்ணியது நடைபெறும் என்று நம்பிக்கை. எப்போதும் நெய் மூடியே இருந்தாலும், அதை ஈ, எறும்பு எதுவும் அண்டுவ தில்லை என்பதும் மிக ஆச்சர்யமான விஷயம்!

பார்வதி அம்பாளும் பரஞ்சோதி அம்பாளும்


பரியாமருதுபட்டியின் திருக்கோயிலில் இரண்டு அம்பாள்களை தரிசிக்கலாம். சுத்த பிரும்மமாக பரஞ்சோதி அம்பாளும் பர பிரும்ம மாக பார்வதி அம்பாளும் இந்தக் கோயிலில் அருள்பாலிப்பது அதிசிறப்பு. சுவாமி சந்நிதி மண்டபத்துக்குள்ளேயே, மூலவருக்கு வலப்புறமாக இருப்பது அருள்மிகு பரஞ்சோதி அம்பாள்.

சுவாமி சந்நிதிக்கு வெளியே, அவருக்கு இடப் புறமாக, மகா மண்டபத்தில் இருப்பது அருள்மிகு பார்வதி அம்பாள் சந்நிதி. அம்பாளின் 51 சக்தி பீடங்களில், கண் சிதறி விழுந்த இடங்களில் இதுவும் ஒன்றாகக் கூறப்படுகிறது.

குறை தீர்க்கும் கோயில்கள் - 18 - ‘மூன்றாம் காலத்தில் மூலிகைச்சாறு!’

இந்த அம்பாள் சந்நிதியில், கர்ப்பகிரகத்தின் உள்ளே அம்பாளுக்குப் பின்புறச் சுவரில் ஸ்ரீசக்ரமும் முன்புறச் சுவரில் ஸ்ரீமகாமேருவும் பதிக்கப்பட்டுள்ளன. இதனால் சர்வ சக்தி படைத்தவளாக இந்த அம்பிகை திகழ்கிறாள். அனைத்து வெள்ளி மற்றும் திங்கள்கிழமைகளில் அம்பிகைக்கு விசேஷமான வழிபாடுகள் நடைபெறுகின்றன.

உள்சுற்றுப் பிராகாரத்தில் ஸ்ரீதட்சிணாமூர்த்தி, ஸ்ரீகன்னிமூல கணபதி, ஸ்ரீவேடர் பெருமாள், ஸ்ரீகஜலட்சுமி, வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீசுப்ரமணியர், ஸ்ரீசண்டிகேஸ்வரர், ஸ்ரீதுர்கை, நவகிரகங்கள், ஸ்ரீபைரவர், ஸ்ரீவீரபத்திரர் ஆகியோர் தனித்தனி சந்நிதிகளில் அருள்கின்றனர்.

பெருநோய் தீர்த்த பெருமான்

அந்தக் காலத்தில் குலசேகர கூன் வழுதி என்ற பாண்டிய மன்னனுடைய பெருநோயை இந்தத் தலத்தின் எம்பிரான் தீர்த்து வைத்ததாக, பண்டைய சாசனங்களின் மூலம் தெரிந்திருக்கிறது.

இங்கேயே கோயில் வாசலில் இருந்த பெருநோய் கண்ட சாமியார் ஒருவர், பக்கத்தில் கிடைக்கும் கீரை வகைகளைச் சமைத்துச் சாப்பிட்டே, தன் நோய் நீங்கப்பெற்று, இறுதிவரை இந்த இறை வனையே வணங்கி அவரடி சேர்ந்ததாகவும் ஒரு சம்பவம் சொல்லப்படுகிறது.

‘‘காஞ்சி மகா பெரியவர் இங்கே வந்து வணங் கிய பிறகு இளையாற்றங்குடி சென்றதாகக் குறிப்புகள் உள்ளன. இந்த மண்ணே அவ்வளவு சக்தி வாய்ந்தது. முற்காலத்தில் சங்கச் செடிகள் நிறைந்த சங்கவனமாக இருந்திருக்கிறது. மூலிகை கள் நிறைந்திருந்த வனமாக  இருந்தபடியால், இன்றும் சிவராத்திரியின் போது, மூன்றாம் கால பூஜையில் மூலவருக்கு 108 மூலிகைச்சாறு அபிஷேகம் செய்யப்படுகிறது. அதுமட்டுமன்றி, ஒவ்வோர் ஆண்டும், சிவராத்திரிக்கு அடுத்த நாள் காலையில் சூரியனின் ஒளி மூலவர் மேல் பட்டு வணங்கும் நிகழ்வையும் காணலாம்’’ என்றபடி திருநீற்றுப் பிரசாதம் கொடுத்தார் கைலாச குருக்கள். 

குறை தீர்க்கும் கோயில்கள் - 18 - ‘மூன்றாம் காலத்தில் மூலிகைச்சாறு!’

இந்த ஆலயத்தில் பிரதோஷம், லட்சார்ச்சனை, சிவராத்திரி போன்றவை மிகச் சிறப்பாக நடத்தப்படுகின்றன. மேலும், சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம் போன்ற விழாக்கள் நடத்துவதற்கு ஏற்ற தலமாகவும் விளங்குகிறது. ‘ஸ்மரணே விநச்யாதி!’ என்ற ஸ்லோக வரிகளுக்கு ஏற்ப, பரியா மருந்தீசர் ஆலயத்தில் சுவாமி பேரைச் சொன்னாலே வியாதி நீங்கும். அந்த அளவுக்கு இந்த ஆலயம், தீர்த்தம், மூர்த்தி, மண், இறைவனின் நாமம் அனைத்தும் மிகவும் சக்தி வாய்ந்தவை. உடல் பிணி, மனப்பிணி நீக்கக் கூடியவை.

இந்தக் கோயிலுக்கு ஒரு முறை சென்று மருத கணபதியையும், சர்வானந்த தீர்த்தத்தையும், மருந்தீஸ்வரரையும், பரஞ்சோதி, பார்வதி அம்பாள்களையும், நந்தி எம்பெருமானையும் தரிசிப்போருக்கு, அந்த உண்மை புரியும்; அதீத ஆனந்த அனுபவம் கிடைக்கும் என்பது நிச்சயம்!

எப்படிச் செல்வது?: சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரிலிருந்து பொன்னமராவதி செல்லும் சாலையில், சுமார் 18 கி.மீ. தூரத்தில் உள்ளது பரியாமருதுபட்டி. பொன்னமராவதியிலிருந்து சுமார் 4 கி.மீ தூரம். திருப்பத்தூர், பொன்னமராவதி ஆகிய ஊர்களிலிருந்து பேருந்து வசதிகள் உண்டு.

நடை திறந்திருக்கும் நேரம் : காலை 7 முதல் 11 மணி வரை; மாலை 5 முதல் 7 மணி வரை. திங்கள், வெள்ளிக்கிழமைகளிலும் விசேஷ நாள் களிலும் சற்று கூடுதல் நேரம் கோயில் திறந்திருக்கும்

- தரிசிப்போம்...


தொகுப்பு: பிரேமா நாராயணன்

 சர்வானந்த தீர்த்தம்!

கோயிலுக்கு மிக அருகிலேயே உள்ளது சர்வானந்த தீர்த்தம். ஸ்ரீகிருஷ்ணரே உருவாக்கிய தீர்த்தமாம். உடலில் கட்டிகள் அல்லது தோல் வியாதிகள் இருந்தால், மருந்தீஸ்வரரை வேண்டிக்கொண்டு, வெல்லம் வாங்கி வந்து இந்தக் குளத்தில் கரைத்தால், உடலில் தோன்றிய கட்டிகள் மறைந்துவிடுவது பேரதிசயம்! மேலும், சுற்றுவட்டாரப் பகுதியில் தாய்மையுற்ற பெண்களுக்கு, ‘தீர்த்தம் அருந்துதல்’ என்ற மங்கல நிகழ்ச்சி நடக்கும்போது, இந்த சர்வானந்த தீர்த்தத்தைத்தான் குடத்தில் எடுத்து, சுவாமியிடம் வைத்து, அபிஷேகம், அர்ச்சனை செய்து எடுத்துச் செல்கிறார்கள். இந்தத் தீர்த்தத்தை அந்தப் பெண்கள் அருந்தினால் சுகப்பிரசவம் ஆகும் என்பது நம்பிக்கை