Published:Updated:

சனங்களின் சாமிகள் - 18

சனங்களின் சாமிகள் - 18
பிரீமியம் ஸ்டோரி
சனங்களின் சாமிகள் - 18

அ.கா.பெருமாள் - ஓவியங்கள்: ரமணன்

சனங்களின் சாமிகள் - 18

அ.கா.பெருமாள் - ஓவியங்கள்: ரமணன்

Published:Updated:
சனங்களின் சாமிகள் - 18
பிரீமியம் ஸ்டோரி
சனங்களின் சாமிகள் - 18

அனந்தாயி அம்மனான திருக்கதை!

ஸ்ரீவைகுண்டம்... கரைபுரண்டோடும் தாமிரபரணி ஆற்றின் கரையில் இருக்கும் செழிப்பான, ஆழ்வாரால் பாடப்பெற்ற கோயிலிருக்கும் ஊர். ஒரு காலத்தில் அந்த ஊரில் பிராமணர்கள் குடியிருந்த அக்கிரஹாரம் ஒன்று இருந்தது. அக்கிரஹாரத்தில் அரிகிருஷ்ணன் என்ற இளைஞன் இருந்தான். நேர்மையானவன்; ஒழுக்கசீலன்; வேதங்கள் கற்றவன்; ஆகமங்கள் அறிந்தவன்; வசதிபடைத்தவன்.

அரிகிருஷ்ணன் அந்த அக்கிரஹாரத்துக்குத் தலைவன்; அதற்கான அத்தனை தகுதிகளும் அவனுக்கு இருந்தன. அவன் மனைவி அனந்தாயி செங்கோட்டையைச் சேர்ந்தவள். அழகானவள்; படித்தவள்; அன்பானவள்; உறவினர்களுடன் அனுசரித்துப் போகும் குணமுடையவள்.  அரிகிருஷ்ணனுக்கும் அனந்தாயிக்கும் திருமணமாகி ஐந்து ஆண்டுகள் ஆகியிருந்தன. செல்வம், செல்வாக்கு, ஆரோக்கியம் எல்லாம் இருந்த அந்தத் தம்பதிக்கு ஒரே ஒரு குறை... குழந்தையில்லை. அந்தக் குறையே உறவினர்கள் மத்தியில் அவர்களுக்கு மதிப்பில்லாமல் செய்திருந்தது.

சனங்களின் சாமிகள் - 18

ஒருநாள் மிகவும் மனம் வெதும்பிப்போனவளாக உள்ளூரில் குடிகொண்டிருந்த கோயிலுக்குப் போய் கள்ளபிரானைத் தொழுதாள் அனந்தாயி. வெகு நேரமாகக் கண்களை மூடி மனமுருகி வேண்டிக்கொண்டிருந்த அவளை அந்தக் கோயில் பூசகர் பார்த்தார். அவளுடைய குறையை அவர் அறிவார். அவர் அவளை அழைத்து ஒரு யோசனை சொன்னார்... ``நவதிருப்பதிகளுக்குப் போய்ப் பெருமாளைச் சேவித்துவிட்டு, பிறகு திருக்குறுங்குடி நம்பி கோயிலுக்குப் போ... நிச்சயம் உனக்குக் குழந்தை பிறக்கும்’’ என்றார். அனந்தாயி நடைப்பயணமாகவே ஒன்பது திருப்பதிகளுக்கும் சென்றாள். இறுதியில் திருக்குறுங்குடி நம்பியைக் கண்ணாரக் கண்டு அடிபணிந்து வணங்கினாள். அவருடைய அருள்பார்வை அவள் மேல் விழுந்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அனந்தாயி கர்ப்பமுற்றாள். குழந்தையைப் பெற்றெடுக்கும் காலம் வந்தது. அத்தனை செல்வமிருந்தும் பொறுப்பாகக் கூட இருந்து, அவளை நன்கு கவனித்துக்கொண்டு, பிரசவம் பார்ப்பதற்கென நம்பிக்கையான ஓர் உறவினர்கூட இல்லை. அனந்தாயியின் அம்மா இருந்தாள். ஆனால், உடல்நலமில்லாதவள்; படுக்கையிலேயே வாழ்க்கையைக் கழித்துக்கொண்டிருந்தாள். `அனந்தாயியின் பிரசவம் சிக்கலில்லாமல் முடிய வேண்டுமே! என்ன செய்யலாம்?’ அரிகிருஷ்ணன் நண்பர்களிடம் ஆலோசனை கேட்டான். அழகப்பன் என்ற நண்பன் ஒரு யோசனை சொன்னான்... ``வள்ளியூரில் மணமாலை என்ற பெண் இருக்கிறாள்; பிரசவ சாஸ்திரம் அறிந்தவள்; குழந்தையை வளர்க்கவும் சொல்லிக் கொடுப்பாள்; அவளை அழைத்துவர ஆளனுப்பு’’ என்றான். அரிகிருஷ்ணனனோ, ``அப்படியா... இவ்வளவு அறிந்துவைத்திருக்கிறாயே... நீயே போய் அவளை அழைத்து வா!’’ என்று கேட்டுக்கொண்டான். 

சனங்களின் சாமிகள் - 18

மருத்துவச்சி ஆயுதங்களுடன் வந்து சேர்ந்தாள். அனந்தாயியைப் பார்த்தவுடனேயே, ``உனக்கு சுகப்பிரசவம்தான். நல்லபடியா குழந்தை பிறக்கும் கவலைப்படாதே!’’ என்றாள். அனந்தாயிக்குச் சிறப்பாக வைத்தியம் செய்தாள். அனந்தாயிக்குப் பெண் குழந்தை பிறந்தது. அரிகிருஷ்ணனும் அனந்தாயியும் மகிழ்ச்சியில் திளைத்தார்கள். அரிகிருஷ்ணன் நண்பர்களுக்கு விருந்துவைத்தான்; ஊர் மக்களை அழைத்துச் சாப்பாடு போட்டான். குழந்தைக்கு `கிருஷ்ணத்தம்மை’ எனப் பெயரிட்டான்.

குழந்தை பிறந்த சில நாள்கள் கழிந்தன. பொருத்தமான ஒருநாளில் ஒரு ஜோதிடரை வீட்டுக்கு அழைத்தான் அரிகிருஷ்ணன். குழந்தையின் ஜாதகத்தைக் கணிக்கச் சொன்னான். ஜோதிடர், குழந்தையின் பிறந்த நேரம், நாள், நட்சத்திரம் அனைத்தையும் கவனமாக ஆராய்ந்து ஜாதகத்தைக் கணித்தார். பிறகு திரும்பத் திரும்ப அதையே பார்த்தவர், தயங்கித் தயங்கி ஒரு விஷயத்தைச் சொன்னார்... ``குழந்தைக்கு சர்ப்பதோஷம் இருக்கிறது. அதற்காக பயப்படத் தேவையில்லை. ஒரு பரிகாரம் இருக்கிறது. உங்கள் வீட்டிலேயே கீரிப்பிள்ளை ஒன்றை வளர்க்கலாம். அது குழந்தைக்குப் பாதுகாப்பாக இருக்கும்’’ என்றான். அரிகிருஷ்ணன் இதைக் கேட்டு சஞ்சலமடைந்தான். நண்பர்களிடம் யோசனை கேட்டான்.  நண்பர்கள் அவனுக்கு உதவுவதாகச் சொன்னார்கள். பாபநாசம் மலையிலிருந்து ஒரு கீரிக்குட்டியைப் பிடித்துக்கொண்டு வந்து தந்தார்கள். அரிகிருஷ்ணன் அதற்குக் கூடு ஒன்றைக் கட்டி பாதுகாப்பாக வளர்க்க ஆரம்பித்தான்.

அனந்தாயி கீரிக்கு வீட்டின் பின்புறத்தை ஒதுக்கியிருந்தாள். அது சாப்பிடுவதற்காகக் கீரைகளைப் பறித்துக் கொடுப்பாள். வீட்டின் பின்புறத்தில் தாமிரபரணி ஆறு ஓடிக்கொண்டிருந்தது. கீரி வீட்டின் பின்னால் பாதுகாப்பாக விளையாட வேண்டும் என்பதற்காகவே வேலி ஒன்றைக் கட்டியிருந்தாள். கிருஷ்ணத்தம்மையும் கீரிக்குட்டியுடன் விளையாடுவாள். குழந்தையோடு சேர்ந்து கீரியும் வளர்ந்தது. விதி வேறொரு விளையாட்டை விளையாடக் காத்திருந்தது.

ஒருநாள் குழந்தைக்குக் காவலாகக் கீரியை வைத்துவிட்டு தாமிரபரணி ஆற்றுக்குக் குளிக்கப் போனாள் அனந்தாயி. ஆறு, அது தந்த இதம், பகல் வேளையில் நீர் தந்த சுகம்... தன்னை மறந்து நீரில் அளைந்து நீராடினாள் அனந்தாயி. எவ்வளவு நேரம் நீரில் கிடக்கிறோம் என்கிற உணர்வேயில்லாமல் இருந்தவளுக்குத் திடீரென்று குழந்தையின் நினைவு வந்தது. அவசரமாக ஆற்றிலிருந்து எழுந்தாள்.

அங்கே வீட்டில் விதி தன் விளையாட்டை ஆரம்பித்திருந்தது. கொல்லைப்புறத்தில் கிருஷ்ணா கீரியுடன் விளையாடிக் கொண்டி ருந்தாள். கீரி போக்குக்காட்டி ஓடியது, அவள் பிடிக்குச் சிக்காமல் நழுவியது. குழந்தைக்கு அந்த விளையாட்டு பிடித்திருந்தது. கீரி மறைந்திருந்த இடங்களுக்கெல்லாம் கைகொட்டிச் சிரித்தபடி ஓடியது. கீரிக்கு தன் பகையாளியை அருகில் வந்தால் அறியும் சக்தியிருக்கும். அந்த உணர்வு அதற்கு அப்போது ஏற்பட்டிருக்க வேண்டும்.

மிக மெதுவாக விஷ நாகம் ஒன்று குழந்தையின் அருகே செல்வதைக் கீரி பார்த்துவிட்டது. அவ்வளவுதான்... பாய்ந்து சென்று அந்த நாகத்தைக் கடித்துக் குதறியது. துண்டுதுண்டாக வெட்டிப்போட்டது. நடந்த சண்டையில் கீரியின் முகமெல்லாம் ரத்தம். பாம்பைக் கொன்ற செய்தியை அனந்தாயிக்குத் தெரிவிக்க வேண்டுமே! அது அவளைத் தேடிப் போனது. எதிரே இடுப்பில் தண்ணீர்க் குடத்துடன், ஈரச்சேலையுடன் அனந்தாயி வந்துகொண்டிருந்தாள் கீரியைப் பார்த்தாள். அதன் முகமெல்லாம் ரத்தம் தெறித்திருந்ததைக் கண்டாள். திடுக்கிட்டாள். உடனே இப்படி யோசித்தாள்... `ஐயய்யோ... என் பிள்ளை கிருஷ்ணாவை இந்தக் கீறி கடித்துவிட்டு வந்து நிற்கிறதே...’

அவளுக்கு ஆவேசம் வந்தது. தவமிருந்து பெற்ற மகளைக் கீரி கொன்று விட்டதாகவே நினைத்துவிட்டாள். அவசரபுத்தி. அவள் யோசிக்கவேயில்லை. தன் கையிலிருந்த நீர்க்குடத்தைக் கீரியின் மேல் போட்டாள். அது நசுங்கிப்போய் தன் உயிரை விட்டது. அனந்தாயி வீட்டுக்கு ஓடினாள். அங்கே அவள் கண்ட காட்சி வேறாக இருந்தது. குழந்தை கிருஷ்ணத்தம்மை அவள்பாட்டுக்கு விளையாடிக்கொண்டிருந்தாள். குழந்தையின் அருகே  துண்டுதுண்டாக நாகம் செத்துக்கிடந்தது. அப்போதுதான் அனந்தாயிக்குத் தன் தவறு புரிந்தது. ``அறியாமல் பாவம் செய்துவிட்டேனே... சொந்தக் குழந்தையைக் கொன்ற பாவத்தை அடைந்துவிட்டேனே... என்ன செய்வேன்’’ என்று அழுது புலம்பினாள்.

சனங்களின் சாமிகள் - 18

வீட்டுக்குள் ஓடி, கணவனிடம் விஷயத்தைச் சொன்னாள். அழுது கதறினாள். ``நான் பெரும் பாவம் செய்துவிட்டேன். இந்தப் பாவம் தீர பாபநாசம் மலைக்குச் சென்று தீர்த்தமாடி வருகிறேன்’’ என்றாள்.

அரிகிருஷ்ணன் சொன்னான்... ``கண்ணே... உன் பாவத்தை நான் ஏற்றுக்கொள்கிறேன். உனக்காக நான் பாபநாசத்துக்குச் சென்று சுனையில் நீராடி உன் பாவத்தைப் போக்குகிறேன்’’ என்றான்.

அனந்தாயி வெகு நேரத்துக்குப் பிறகு அதற்கு ஒப்புக்கொண்டாள். ஒரேயொரு நிபந்தனை விதித்தாள். ``நீங்கள் தனியே போகக் கூடாது. இரண்டு நண்பர்களை உடன் அழைத்துச் செல்லுங்கள்’’ என்றாள்.

``நீ சொன்னபடியே செய்கிறேன்’’ என்றான் அரிகிருஷ்ணன்.

அரிகிருஷ்ணன் இரண்டு நண்பர்களுடன் பாபநாசம் சென்றான். மலைமேல் ஏறி தீர்த்தக்கரைக்குச் சென்றான். நீராடினான்; ஓய்வெடுத்தான். கிளம்புபோது அணையின் கரையில் ஒரு கீரிக்குட்டியைக் கண்டான். அதைப் பார்த்ததும் அவனுக்கு இறந்துபோன கீரியே திரும்பி வந்ததுபோல் தோன்றியது. நண்பர்கள் உதவியுடன் அதைப் பிடித்தான். சிவனே தனக்காக அந்தக் கீரிக்குட்டியை அனுப்பிவைத்ததாக நினைத்தான். காட்டுக் கொடிகளைச் சேகரித்து, ஒரு கூடு கட்டினான். கீரியை அதில் அடைத்தான். தோழர்களுடன் கீரியை எடுத்துக்கொண்டு நடந்தான்.

வெகுதூரம் நடந்த களைப்பு அவர்களைத் தொற்றிக்கொண்டது. வழியிலிருந்த ஒரு பெரிய ஆலமரத்தடியில் ஓய்வெடுத்தார்கள். எல்லோரும் அசந்து உறங்கிக்கொண்டிருந்த போது அது நடந்தது. மரத்தின் பொந்திலிருந்து ஒரு கருநாகம் வெளியே வந்தது. அரிகிருஷ்ணனைத் தீண்டியது. அடுத்த கணமே அவன் இறந்துபோனான்.

நண்பர்கள் எழுந்தபோது அரிகிருஷ்ணன் அசைவற்றுக் கிடந்தான். உடம்பு நீலம்பாரித்துக் கிடந்தது. பாம்பு கடித்து இறந்துவிட்டான் என்று அறிந்துகொண்டார்கள். கலங்கிப் போனார்கள். கதறியழுதார்கள். இனி என்ன  செய்வது என்பதறியாமல் திகைத்துப்போய் நின்றார்கள். இந்தச் செய்தியை அனந்தாயிக்கு எப்படிச் சொல்வது என்று அவர்களுக்குத் தெரியவில்லை. அரிகிருஷ்ணனின் உடலை அவர்கள் இரண்டு பேரால் மலையிலிருந்து சுமந்து செல்லவும் முடியாது. அப்படியே கொண்டுபோனாலும், நடந்தே ஸ்ரீவைகுண்டம் போய்ச் சேர்வதற்கு நான்கு நாள்கள் ஆகிவிடும். அதற்குள் அரிகிருஷ்ணனின் உடல் அழுகிவிடும். என்ன செய்யலாம் என யோசித்தார்கள் இரு நண்பர்களும். அவர்களுக்கு வேறு வழியிருக்கவில்லை. காட்டிலேயே அவன் உடலை எரித்தார்கள். ஊர் திரும்பினார்கள்.

கணவன் இறந்த செய்தியை அனந்தாயி அறிந்தாள். அழுது தீர்த்தாள். சில நாள்கள் கழிந்தன. கணவன் இறந்தாலும், வாழ்வாதாரப் பிரச்னை ஒன்றும் இல்லை என்றுதான் அவள் நினைத்தாள். அவளும் குழந்தையும் வாழ கணவனின் சொத்துகள் இருந்தன. அதிலும் இடிவிழுந்ததுபோல ஆனது. ஒருநாள் அவள் கணவனின் நெருங்கிய உறவினர்கள் சிலர் அவளைப் பார்க்க வந்தார்கள். வழக்கமான சில விசாரிப்புகளுக்குப் பிறகு பேச்சு ஆரம்பித்தது.

``அனந்தாயி... நம் சாதி வழக்கப்படி உன் கணவனின் சொத்தில் உனக்கு உரிமையில்லை’’ என்றார் ஓர் உறவினர்.

``என் கணவருக்குப் பிறந்த பெண் கிருஷ்ணத்தம்மை இருக்கிறாளே...’’ அனந்தாயி சொன்னாள்.

``பெண் வாரிசுக்கு நம் இனத்தில் சொத்து கிடையாது என்பது தெரியாதா?’’ என்றார் இன்னோர் உறவினர்.

``அப்படியானால் நான் வாழ்வது எப்படி?’’ என்று கேட்டாள் அனந்தாயி.

``இங்கே நீ வாழ வழியில்லை... உன் தாய்வீட்டுக்குப் போ. விரைவாக அதற்கான வேலைகளைப் பார்’’ என்றார் இன்னோர் உறவினர். அவர்கள் திரும்பத் திரும்ப அவளை அவள் பிறந்த வீட்டுக்குப் போகச் சொல்லி வலியுறுத்திவிட்டுக் கிளம்பிப் போனார்கள்.

சனங்களின் சாமிகள் - 18

அனந்தாயிக்குப் பிறந்த வீடு போக மனமில்லை. ஒருவனை நம்பி வந்த பிறகு, திரும்ப பிறந்தகம் போ என்பது என்ன நியாயம்? அவள் கடைசி வரை இங்கேதான் வாழ்வாள். அதுதான் முறை. அவளுக்கு நியாயம் வேண்டும். அதற்காக ஸ்ரீவைகுண்டத்தின் மணியக்காரரைத் தேடிப் போனாள்.

``ஐயா... என் கணவர் இறந்துவிட்டார். எனக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது. என் கணவரின் சொத்துகளும் இருக்கின்றன. அவற்றைக்கொண்டுதான் நானும் என் மகளும் வாழ வேண்டும். என் உறவினர்கள் எங்கள் சாதி வழக்கப்படி பெண்ணுக்குச் சொத்துரிமையில்லை என்கிறார்கள். நான் எப்படி வாழ்வது, குழந்தையை எப்படி வளர்ப்பது?’’ என்று கேட்டாள்.

``பெண்ணே, உங்கள் சாதி வழக்கம் சரியல்ல. உன் கணவரின் சொத்துகள் உனக்குத்தான் சேர வேண்டும். இதுதான் என் தீர்ப்பு. என்னை மீறி யார் என்ன செய்கிறார்கள் என்று பார்த்துவிடுகிறேன். நீ தைரியமாகப் போ’’ என்று சொல்லி அனுப்பிவைத்தார் மணியக்காரர்.

ஒரே நாள் இரவில் ஒரு மனிதனின் முடிவோ, தீர்மானமோ மாறுமா? மாறியது. அரிகிருஷ்ணனின் உறவினர்கள் மணியக்காரருக்குக் கணிசமாக லஞ்சம் கொடுத்தார்கள். அடுத்தநாளே மணியக்காரர் அனந்தாயியை அழைத்துவர ஆளனுப்பினார்.

``பெண்ணே, நான் இரவெல்லாம் யோசித்துப் பார்த்தேன். உன் உறவினர்கள் சொல்வதுதான் சரி. என்ன இருந்தாலும், சாதி வழக்கத்தை மீறக் கூடாது இல்லையா? பெண்ணுக்குச் சொத்துரிமை இல்லை என்பதே சரி. அந்த வழக்கத்தை நான் மீற முடியாது; கூடாது. நீ உன் தாய் வீட்டுக்குப் போ. அதுதான் சரி. வேண்டுமானால், உன் வழிச்செலவுக்குப் பணம் தரச் சொல்கிறேன்’’ என்றார்.

இதைக் கேட்டு அதிர்ந்துபோனாள் அனந்தாயி. ``பாவி... சண்டாளா! பணத்தை வாங்கிக்கொண்டு தீர்ப்பை மாற்றிவிட்டாயே... உன் குலம் அழியும். உன் மகள் திருமணத்தன்று கூண்டோடு உன் உறவினர்கள் அழிந்துபோவார்கள்” என்று சாபமிட்டாள். கிட்டத்தட்ட துரத்தப்பட்ட ஓர் அநாதையைப்போல குழந்தையை எடுத்துக்கொண்டு, கட்டிய உடையுடன் நடந்தே தன் தாய் வீடு நோக்கிப் போனாள். `கீரியைக் கொன்ற பாவம்தான் என்னை இப்படி அலைக்கழிக்கிறது. இந்தப் பாவத்தை அனுபவித்தே ஆக வேண்டும்’ என்றெல்லாம் யோசித்தபடி நடந்தாள். தாமிரபரணிக் கரையோரமாக நடந்துகொண்டேயிருந்தாள். வழியில் கிடைத்த பழங்களைப் பறித்துப் பசியாறினாள். அவளுக்குத் தாய் வீட்டுக்குப் போக மனமில்லை. கணவனோடு எல்லாவற்றையும் இழந்துவிட்டு வந்து நிற்கும் மகளைப் பார்த்தால், பெற்றோர் கலங்கிப்போய்விடுவார்களே..! ஒரு கணம் யோசித்தாள். தாமிரபரணியின் ஆழமான பகுதிக்குச் சென்றாள். ``மகாதேவா... என்னை அழைத்துக்கொள். அந்த மணியக்காரனின் வீட்டில் அவன் மகளுக்கு நிச்சயதாம்பூலம் நடக்கிறதாம். நீதான் கூலி கொடுக்க வேண்டும்’’ என்று வேண்டினாள். குழந்தையுடன் ஆற்றில் இறங்கினாள்.

எங்கிருந்து தோன்றியது என்று தெரியவில்லை. திடீரென்று ஒரு மின்னல் அடித்தது. பெரும் புயல்காற்று வீசியது; அடை மழை பொழிந்தது.  சில மணி நேரத்தில் தாமிரபரணி ஆறு பெருக்கெடுத்தது. மணியக்காரரின் வீட்டை நோக்கி வெள்ளம் பாய்ந்து சென்றது. அங்கே நடக்கவிருந்த இல்ல விழாவுக்கு அனந்தாயி கணவனின் உறவினர்களும் வந்திருந்தார்கள். பாய்ந்து வந்த வெள்ளம் வீட்டை அடித்துச் சாய்த்தது. அரிகிருஷ்ணனின் உறவினர்களைக் கொண்டு சென்றது. அனந்தாயியும் குழந்தையும் மணியக்காரர் வீட்டின் முன் பிணமாகக் கரை ஒதுங்கினார்கள்.

அனந்தாயிக்கு சிவன் வரம் கொடுத்தார். ``நீ வெள்ளத்தில் வந்ததால் வெள்ளமாரி ஆவாய்! `மாரியம்மாள்’, `முத்துமாரி’ எனப் பெயர் பெறுவாய். உனக்குக் கோயிலெடுக்க வரம் தருகிறேன்’’ என்றார். அனந்தாயியின் உறவினர்கள் அவளுக்குக் கோயில் எடுத்தார்கள்.

ஸ்ரீவைகுண்டத்தை ஒட்டிய கிராமங்களிலும், தென் மாவட்டங்களில் சில இடங்களிலும் வெள்ளமாரிக்குக் கோயில் உண்டு. இந்த அம்மன் துணைத் தெய்வமாகவும் இருக்கிறாள். இவளுக்கு சைவப் படையல்தான் படைக்கப்படுகிறது. வெள்ளமாரிக்கு அருகிலேயே கிருஷ்ணத்தம்மையும் வழிபாடு பெறுகிறாள். இந்த தெய்வத்துக்கு குழந்தைகள் உண்ணும் உணவு படையலிடப்படுகிறது.

- தரிசிப்போம்...

தொகுப்பு: பாலுசத்யா