தொடர்கள்
Published:Updated:

ஆன்மிக துளிகள்

ஆன்மிக துளிகள்
பிரீமியம் ஸ்டோரி
News
ஆன்மிக துளிகள்

ஆன்மிக துளிகள்

 பன்னீர் அபிஷேகம்!

பரம்பொருளான பரமேஸ்வரருக்குப் பன்னீர் அபிஷேகம் செய்து வழிபடுவதால் சகல சுகங்களும் ஸித்திக்கும் என்பார்கள் பெரியோர்கள். தற்போது ரோஜா மலர்களிலிருந்து தயாரிக்கப்பெற்ற பன்னீரைப் பயன்படுத்துகிறோம். முற்காலத்தில் பன்னீர் எப்படித் தயாராகும் தெரியுமா?

பனித்துளிகளைச் சேர்த்து இரண்டடுக்குள்ள மண் பாத்திரத்தில் வைத்துக் குளிரூட்டி, அத்துடன் வாசனை திரவியங்களைச் சேர்த்து, தூய்மையான பன்னீர் தயாரிக்கப்படுமாம்.

சிவாலயங்களில் பிரதோஷ காலத்தின்போது, பிராகாரத்தில் சுவாமி இரண்டாம் முறை வலம் வரும்போது, ஈசான பாகத்தில் நிறுத்தி, பன்னீரால் அபிஷேகம் செய்யும் வழக்கம் உண்டு.

ஆன்மிக துளிகள்

அஷ்ட மந்திரம்

சிவனாருக்கு ஆயிரம் நாமங்கள் இருப்பினும், சிறப்பானவையாக எட்டுத் திருப்பெயர்களைச் சொல்லி அவற்றை அஷ்ட மந்திரமாகப் போற்றுவார்கள் ஆன்றோர்கள். அவை:

1. ஓம் உமா மகேஸ்வராய நம:
2. ஓம் பரதேவாய நம:
3. ஓம் திரியம்பகாய நம:
4. ஓம் சோமசுந்தரேசாய நம:
5. ஓம் சர்வாய நம:
6. ஓம் பீமாய நம:
7. ஓம் மஹாபலாய நம:
8. ஓம் நீலகண்டாய நம:

- பூசை. ச.அருணவசந்தன்,

ஆன்மிக துளிகள்

வினைகள் தீர்க்கும் தைப்பூச வேல் வழிபாடு!

‘அஞ்சுமுகம் தோன்றில் ஆறுமுகம் தோன்றும். வெஞ்சமரில் அஞ்சேல் என வேல் தோன்றும்’ என்பது ஆன்றோர் வாக்கு. வந்த வினைகளும் வருகின்ற வல்வினைகளும் நீங்கிட வேலாயுதத்தை வழிபடவேண்டும் என்பது அவர்களது அறிவுரை.

அவ்வகையில், பெரியோர்கள் மட்டுமன்றி இளைய தலைமுறையினரும் வேல் வழிபாட்டின் உன்னதத்தை அறிந்து போற்றும் விதம், ஈரோடு `தமிழ்க்கடவுள் அறக்கட்டளை’ அமைப்பின் சார்பில் தைப்பூச வேல்வழிபாடு நடைபெறவுள்ளது. 4.2.18 ஞாயிற்றுக்கிழமை அன்று, ஈரோடு செங்குந்தர் மேல்நிலைப்பள்ளி வளாகத்திலுள்ள, முன்னாள் மாணவர் கலையரங்கத்தில் இந்த வைபவம் நடைபெறவுள்ளது.

காலை 9 முதல் மதியம் 2 மணி வரையிலும் நடைபெறவுள்ள இந்த வைபவத்தில், ஆன்மிக எழுத்தாளரும் பேச்சாளருமான வலைய பேட்டை ரா.கிருஷ்ணன் முன்னின்று வேல்மாறல் பாராயணம் நடைபெறும். அதைத் தொடர்ந்து தைப்பூச வேல் வழிபாடு சிறப்பாக நடைபெறவுள்ளது. குன்றுதோறாடல் வழிபாட்டுக் குழு உட்பட ஆன்மிக அமைப்பினரும் அன்பர்களும் இதில்கலந்துகொண்டு சிறப்பிக்கவுள்ளார்கள். அன்பர்கள் அற்புதமான இந்த வைபவத்தில் கலந்துகொண்டு வழிபட்டு, முருகப்பெருமானின் திருவருளையும், எண்ணிறைந்த சித்தர்பெருமக்களின் அருளாசியையும் பெற்றுச் செல்லலாம்.

சுக்ரீவர்... சிவனார்!

சுக்ரீவன் என்ற பெயரைக் கேட்டதும் ராமாயண வாலியின் சகோதரரே நம் நினைவுக்கு வருவார். ஆனால், சிவப்பரம்பொருளுக்கும் இப்படியொரு பெயர் உண்டு.

பாற்கடலில் தோன்றிய விஷத்தை சிவனார் அருந்தினார். அந்த விஷம் தொண்டையை விட்டு இறங்காதபடி சிவனாரின் கழுத்தை அம்பிகை அழுத்திப்பற்றிக்கொள்ள, விஷம் தொண்டையிலேயே தங்கியது. இதனால் திருநீலகண்டரானார் சிவனார். இதையொட்டி சுக்ரீவர் என்ற பெயரும் சிவபெருமானுக்கு ஏற்பட்டது. `கிரீவம்’ என்றால் கழுத்து. திருநீலகண்டரின் கழுத்து மேலான தியாகத்தை உணர்த்துவதைச் சுட்டிக்காட்டும் வகையில், சிறப்பான கழுத்தை உடையவர் எனும் பொருளில் சுக்ரீவன் எனும் பெயர் அமைந்ததாம்.

- கே.யமுனா, காரைக்கால்