தொடர்கள்
Published:Updated:

‘உரு கொடுத்தேன்... உயிர் கொடுத்தார்!’ - ஓவியர் ம.செ

 ‘உரு கொடுத்தேன்... உயிர் கொடுத்தார்!’ - ஓவியர் ம.செ
பிரீமியம் ஸ்டோரி
News
‘உரு கொடுத்தேன்... உயிர் கொடுத்தார்!’ - ஓவியர் ம.செ

எஸ்.கதிரேசன் - படம்: பாலாஜி

புராணங்கள், இதிகாசங்கள், ஆகமங்கள் முதலான ஞானநூல்கள் எல்லாம் பல பாகங்களாக, சர்க்கங் களாக, காண்டங்களாக விவரிக்கும்   தெய்வக் கதை களை, தத்துவங்களை, நீதிபோதனைகளை ஒரே ஃப்ரேமில் சொல்லிவிட முடியுமா என்ன..?

`முடியும்’ என்று நிரூபிப்பவர்கள்தாம் ஓவிய பிரம்மாக்கள். அவர்களிலும் குறிப்பிடத்தக்கவர் ஓவியர் ம.செ. முழுப்பெயர் மணியம் செல்வன் (இயற்பெயர் லோகநாதன்). ஓவியப் பிதாமகர் மணியம் அவர்களின் மைந்தன்.

இதுதான் என்று ஒன்றை மட்டுமே குறிப்பிட்டுச் சொல்ல முடியாதபடி, இவருடைய தூரிகைகள் படைக் கும் ஓவியம் ஒவ்வொன்றுமே தெய்விகம் உணர்த்தும்; தெய்வத்தை நம் கண்முன் உயிர்ப்புடன் நிறுத்தும். எனினும், ‘‘சிவரூபம் தனித்துவம் - சிவன் பிரபஞ்ச நாயகன்’’ என்று தன் சிவ ஓவியங்களைச் சிலாகிப்பார் ஓவியர் ம.செ. ‘‘அப்படியென்ன மகத்துவம் சிவத்தில் மட்டும்?’’ எனும் கேள்வியோடு தொடங் கினோம் அவருடனான உரையாடலை. உள்ளம் சிலிர்க்க தன் அனுபவங்களை விவரித்தார் ஓவியர் ம.செ.

 ‘உரு கொடுத்தேன்... உயிர் கொடுத்தார்!’ - ஓவியர் ம.செ

‘‘1967-ல் எனது 17-வது வயதில் தொடங்கியது ஓவிய வாழ்க்கை. அப்போதே எல்லாப் படங்களும் ஓரளவு வரைவேன். குறிப்பாக சிவ ஓவியங்கள்.  என் அப்பா, அவரின் அப்பான்னு எங்க குடும்பத்திலுள்ள எல்லோருக்குமே சிவன் என்றால் அதீத பிரியம் உண்டு.

ஒருமுறை, ‘கல்கி’ ராஜேந்திரன் சாருடன் காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்குப் படம் வரையப் புறப்பட்ட அப்பா, என்னையும் அழைத்துச் சென்றார். அங்கே போனதும், ‘நீ வேணும்னா கோயிலுக்குள் போய் சாமி கும்பிடு’ ன்னு சொல்லிட்டு, அங்குள்ள தல விருட்சமான மாமரத்தின் அருகிலேயே உட்கார்ந்து படத்துக்கு ஸ்கெட்ச் போட ஆரம்பிச்சிட்டார்.

மாமரத்தையும் அம்பாளையும் வரைஞ்சவர், பின்னணியில் காஞ்சி பரமாச்சார்யார் நடந்து வர்ற மாதிரியும் வரைஞ்சார். 1962-ல் அந்தப்படம் மிகப் பெரிய அளவுல பேசப்பட்டது. இதேபோல், மதுரை மீனாட்சி அம்மன், கோனேரிராஜபுரம் நடராஜர் ஓவியம்னு நிறைய வரைஞ்சிருக்கார். இன்னமும் எங்க வீட்டுப் பூஜையறையில் கோனேரி ராஜபுரம் நடராஜர் படத்தை வெச்சு வழிபட்டு வர்றோம். என் கொள்ளுத் தாத்தா இன்னும் ஒருபடி மேல். மிகப்பெரிய சிவ பக்தர். மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயிலிலுள்ள அதிகார நந்தியை வடிவமைத்தவர் அவர்தான்’’ என்றவர், தொடர்ந்து தான் வரைந்த ஓவியங்களைப் பற்றிப் பேசினார். ‘‘நான் படங்களை வரைய ஆரம்பிச்சப்போ சிவன் படங்களுக்கு அப்பாவோட படங்களைத்தான் ரெஃபர் பண்ணிப் பார்ப்பேன். அவர் என்ன மாதிரி விஷயங்களை ஹைலைட் பண்றார்னு கவனிப்பேன்.   பிறகு சோழர்கள், பல்லவர்கள் காலத்துக் கோயில் சிற்பங்களைப் பார்ப்பேன். இப்படிப் பலவற்றையும் உள்வாங்கிக்கொண்டதும் எனக்குள் ஓர் உருவம் திரண்டு வரும். அதை அப்படியே வரைவேன். இந்தப்பழக்கம் எனக்கு அப்பாகிட்ட இருந்துதான் வந்தது. அவருடைய ஆசீர்வாதம்தான் என்
ஓவியங்கள்’’ என்றார்.

 ‘உரு கொடுத்தேன்... உயிர் கொடுத்தார்!’ - ஓவியர் ம.செ

‘‘நீங்கள் வரைந்த முதல் சிவன் படம்...’’ கேள்வியை முடிக்குமுன்பே பளிச்சென்று பதில் வருகிறது...

‘‘1976-ல் வெளிவந்த கல்கி தீபாவளி மலர்ல, ‘இசை வரைந்த ஓவியங்கள்’னு மீ.ப.சோமுவோட கட்டுரைக்குதான் முதன்முதலா நான் படம் வரைஞ் சேன். அதிகாலை... சூரியன் பிழம்பாக மேலே வருகிறார். அந்த நேரத்தில் அலைகள் ஆர்ப்பரித்து இசை முழக்கமிட, சிவன் ஆனந்தத் தாண்டவமாடுகிறார். அவரை ரிஷிகள் எல்லோரும் வழிபடுகிறார்கள். இதுதான் அந்த ஓவியம். படத்தை எப்படியோ வரைஞ்சு அனுப்பிவிட்டேன். ஆனால், எனக்கு முழுத்திருப்தி வரலை. குறிப்பாக, படத்தின் மேல்பகுதியான சிவனின் திருமுகம் அவ்வளவு சிறப்பாக வரவில்லை.

‘நாம் எதிர்பார்த்த ஒரு பரவசம் ஓவியத்தில் இல்லையே’ என்ற நினைப்பில், என்னையுமறியாமல் கண்ணீர் வந்துவிட்டது. கயிலையானை வேண்டி நாயன்மார்கள் கசிந்துருகிக் கண்ணீர் உகுப்பார்களே... அப்படியொரு நிலை! எனது எண்ணத்தையே பிரார்த் தனையாக ஏற்று சிவன் அருள்பாலித்தார் போலும்... ஏதோ ஒன்றால் தூண்டப்பட்டவன், அந்த ஓவியத்தின் கீழ்ப்பகுதியை மிகச் சரியாக அளவெடுத்து மறுபடியும் வரைந்து சேர்த்தேன். மிகத் திருப்தியாக அமைந்தது ஓவியம். சிவனருளோடு என் தந்தையும் மெளன குருவாக இருந்து உதவினார் என்றே சொல்ல வேண்டும்’’ என்றவரிடம் வேறோரு கேள்வியை முன்வைத்தோம்.

 ‘உரு கொடுத்தேன்... உயிர் கொடுத்தார்!’ - ஓவியர் ம.செ

‘‘ஓவிய நுணுக்கங்கள் தெய்வத்துக்குத் தெய்வம் மாறுபடுமா?’’

‘‘சிவபெருமானின் படங்கள், சிலைகள் இவற்றை யெல்லாம் கவனித்துப் பார்த்தால், அவருடைய ஆளுமை, ஆண்மைத்தன்மை, கம்பீரம் இவையெல்லாம் அவரை ஒரு யுனிவர்சல் ஹீரோவாக நமக்குத் தோன்றவைக்கும். அவரை `காஸ்மிக் டான்ஸர்’ன்னு சொல்றோம்னா அது சாதாரண விஷயமல்ல.  விஷ்ணுவைப் பார்த்தோம்னா, மென்மைத்தன்மை, புன்னகைன்னு வேறுவிதமாக இருக்கும். படத்தில் கண்களை வரையும்போதே சிவனா விஷ்ணுவா என வித்தியாசப்படுத்திவிடலாம்’’ என்றார் புன்னகை மாறாமல்.

ஓவியர் ம.செ. எவ்வளவோ படங்கள் வரைந்திருந் தாலும், பொள்ளாச்சி மகாலிங்கத்தின் `சக்தி’ இதழுக்காக வரைந்த ‘ரிஷபாரூடர்’ படத்தையே ஸ்பெஷல் என்கிறார். அதேபோல், ஒரு மகாசிவராத்திரி தினத்தன்று ஓரிரவுக்குள் வரைந்த சிவதாண்டவ ஓவியம் குறித்தும் சிலாகித்துச் சொல்கிறார்.

 ‘உரு கொடுத்தேன்... உயிர் கொடுத்தார்!’ - ஓவியர் ம.செ

‘`2007-ம் வருடத்தின் மகாசிவராத்திரி தினம். அன்றிரவு எல்லோரும் மயிலை கபாலீஸ்வரர் கோயிலுக் குப் போயிட்டு வந்தோம். எனக்கென்னவோ அன்றைக்கு இருப்புகொள்ளவில்லை. சிவனின் ஆக்ரோஷமான ஆனந்தத் தாண்டவம் என் மனக் கண்ணில் நிழலாடத் தொடங்கியது என்றே சொல்ல லாம். சிவ ஓவியம் வரையத் தொடங்கினேன்.

ராத்திரி என்பது இருள். பிரபஞ்சத்தின் அந்த இரவை ஒளி வெள்ளமாக்குவது ஈசனின் திருநீறு என்பதால், கறுப்பு நிறப் பின்புலத்தில் வெள்ளைக் கீற்றுகளாக சிவனின் ஓவியத்தை வரைந்தேன்.

பூமியின் மண் நிறமாக ருத்ராட்சத்தையும், துளிர்க்கும் மலர்களாக பச்சை நிறத்தையும் பயன்படுத் தினேன். அந்தப் படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. ஆண்டுதோறும் அந்தச் சிவ ஓவியத்தைக் கொண்டு காலண்டர்களை தனியார் நிறுவனம் ஒன்று வெளியிட்டு வருகின்றது.

 ‘உரு கொடுத்தேன்... உயிர் கொடுத்தார்!’ - ஓவியர் ம.செ

கோவையைச் சேர்ந்த நண்பர் மாதவன் அந்தச் சிவ ஓவியத்தை லேமினேஷன் செய்து தனது மேஜை யில் வைத்திருந்தார். அவருக்கு வயது 80 இருக்கும். ஒருமுறை, அவரின் பேரப்பிள்ளை வீட்டுக்கு வந்திருந் தாராம். அப்போது அவர் மேஜையிலிருந்து ஏதோ ஒரு பொருளை எடுக்கும்போது, சிவன் படம் கீழே விழுந்து விட்டதாம். பேரப் பிள்ளை படத்தை எடுத்து மீண்டும் மேஜையில் வைத்துவிட்டுப் போய்விட்டாராம். எதேச்சையாக அந்தப் படத்தைப் பார்த்த நண்பருக்குப் பெரும் வியப்பு. காரணம் என்ன தெரியுமா?

பேரப்பிள்ளை படத்தைத் தலைகீழாக வைத்துச் சென்றிருக்கிறான். இவர் அதைப் பார்க்கும்போது, ஓவியம் விநாயகரின் திருவுருவாகத் தெரிந்திருக் கிறது. உடனே எனக்கு போன் செய்தார். அதன் பிறகுதான் நானும் கவனித்து ஆச்சர்யப்பட்டேன். இறைவனின் லீலையை என்னவென்று சொல்வது?’’ என்று கூறியவர் முத்தாய்ப்பாகச் சொன்னார்:

‘`நான் வரையும் ஓவியங்களுக்கு உருவம் கொடுக் கறதுதான் நான். மத்தபடி அந்த ஓவியங்களுக்கு ஜீவனைக் கொடுக்கறது இறைவனோட கருணையே’’ என்று சிலிர்ப்புடன் கூறி, நமக்கு விடைகொடுத்தார்.