தொடர்கள்
Published:Updated:

சிவமகுடம் - பாகம் 2 - 5

சிவமகுடம் - பாகம் 2 - 5
பிரீமியம் ஸ்டோரி
News
சிவமகுடம் - பாகம் 2 - 5

ஆலவாய் ஆதிரையான் - ஓவியங்கள்: ஸ்யாம்

வெள்ளை வஸ்திரம்!

மனித மனம் விசித்திரமானது. தனது ஆன்ம நிலையின் உண்மை அறியாது ஆட்டம்போடும்.  தான், இந்தப் பிரபஞ்சத்தின் ஒரு சிதறல், இறை எனும் பிரமாண்டத்தின் ஒரு துளி என்பதை உணராமல்,  எளிதில் மாயையின் வசம் சிக்கிக்கொள்ளும். விளைவு... மீள முடியாத வாழ்க்கைப் போராட்டத்தில் சிக்கித் தவிக்கும்.

இந்தச் சிக்கலைத் தவிர்க்க வழியே இல்லையா? உண்டு!

சிவமகுடம் - பாகம் 2 - 5

சிற்றோடைகள் நதியைச் சேர்வதுபோல், அந்த நதியின் மூலம் சமுத்திரத்தில் சங்கமித்து சமுத்திரமாகவே மாறுவதுபோல், தகுந்த குருவின் மூலம் பிரமாண்டத்தின் முன் நிற்கும்போது, இறைத் தன்மையை உணரும்போது, மாயை மயங்கும்; ஆன்மா விழித்துக் கொள்ளும்!

நம் இளங்குமரனுக்கும் அப்படியொரு நிலை வாய்த்தது என்றே சொல்லவேண்டும். ஆம்! இளங்குமரன் எனும் சிற்றோடை குலச் சிறையார் எனும் பெருநதியைச் சரணடைந்ததால் அல்லவா, இதோ இந்தப் பிரமாண்டச் சமுத்திரத்தில் - சங்கரனிடத்தில் வந்து சேர்ந்திருக்கிறான்.

சிவனருளால் சிவன் தாள் தொழுது வேண்டி விண்ணப்பித்தும், அவரின் திருமேனியின் மீது பாதம் பதிக்க மனதில்லாமல், அருகி லிருந்த குகைச் சுவர்களிலிருந்த பிடிமானங்களைப் பற்றி ஏறி அந்தச் சிவலிங்கத்தின் ஆவுடைப் பகுதியை அடைந்தவன், அதன் பிறகும் ஆவுடையின் மீது பொக்கிஷப் பேழையை நோக்கித் தவழ்ந்தே சென்றான்.

லிங்கத் திருவுருவத்துக்கு மூன்று பகுதிகள் உண்டு என்று சொல்கின்றன ஞான நூல்கள். அடிப்பகுதி பிரம்ம பாகம். நடுப் பகுதி - ஆவுடை என்ற பீடத்துக்குள் அமைந்துள்ள விஷ்ணு பாகம். மேற்பகுதியில் உள்ள பாணம் - ருத்ர பாகம். அதாவது, பூமிக்கு அதிபதியான பிரம்ம பாகம் பூமிக்குள்ளேயே மறைந்து திகழும். நீருக்கு அதிபதியான விஷ்ணுவின் பாகம் அபிஷேக நீரைத் தாங்கி நிற்கும். நெருப்புக்கு அதிபதியான சிவபாகம், மேலோங்கி ஜோதி போல் ஒளியுடன் திகழும். ஆக சிவலிங்கம் மூம்மூர்த்திகளின் வடிவே  ஆகும்.

இப்படி, ஞானநூல்கள் விவரிப்பது குறித்து குருநாதரான குலச் சிறையார் பலமுறை சொல்லக் கேட்டிருக்கிறான் இளங்குமரன். அவ்வகையில், இதோ அரியின் மடியில் அமர்ந்து அரனை தரிசிக்கும் பெரும்பாக்கியம் வாய்த்திருக்கிறது அவனுக்கு. அதனால் உண்டான சிலிர்ப்பிலும் ஆனந்தத்திலும் சில கணங்கள் மெய்ம்மறந்திருந்தவன்,  பின்னர் சுயநினைவுக்குத் திரும்பி மெள்ள நகர்ந்து பேழையை அணுகினான். அந்தப் பொக்கிஷத்தை அவன் தொட்ட வேளையில்தான் பேரரவம் கேட்டது குகை வாயிலில்.

சிவமகுடம் - பாகம் 2 - 5

புரவிகளின் கனைப்பொலிகளும், அதைத் தொடர்ந்து புரவிகளை விட்டு இறங்கி `தடதட’வென ஓடிவரும் வீரர்களின் காலடி ஓசைகளும், இவற்றால் எழுந்த சத்தத்தை குகைச் சுவர்கள் எதிரொலித்ததால் உண் டான பேரொலியும் சேர்ந்து, விநோத விகாரப் பேரரவமாக ஒலித்தது!

அதற்கு மேலும் அந்தப் பேழையைத் திறக்க முற்படவில்லை இளங் குமரன். அவனது இடக்கரம் அனிச்சையாய்... ஆயுத ஆயத்தத்துக்காக இடைக்கச்சையோடு பிணைக்கப்பட்டிருக்கும் வாள்பிடிக்கு நகர, வலக்கரமோ ஆவுடைத் தளத்தில் ஊன்றி ஆதாரம் கொடுத்து மிக உக்கிரமாக அவனை எழுந்துகொள்ளச் செய்தது. அதுவரையிலும் சிவத் திருமேனியில் பாதம் பதிக்கத் தயங்கியவன், ஆபத்தான அந்த ஒருகணப் பொழுது பாதம் பதித்து நின்றான். தாயினும் சாலப் பரிந்து அந்த அபவாதத்தை இறைவன் பொறுத்துக்கொள்வார் என்று அவன் மனம் சமாதானம் சொன்னாலும், அதற்குக் காரண மான கயவர்களைக் கடிந்துகொள்ளவும் தவறவில்லை.

மறுகணம் ஒற்றைத் தாவலில் குகைச் சுவரின் பிடிமானம் ஒன்றைப் பற்றித் தொங்கிக்கொண்டிருந்தான். தரைத் தளத்திலிருந்து அந்தப் பிடிமானப் பகுதி உயரமாகவே திகழ்ந்தது என்றாலும், தயக்கமின்றிக் குதித்தான். அதனால், பாதம் தொடங்கி முழங்கால்களைக் கடந்து இடுப்பைத் தாக்கியது பெருவலி. ஆனாலும், வந்திருப்பது யார் என்பதை அறிவதில் உண்டான ஆர்வமும், பகைவர்களாக இருப்பின் உயிரோடு விடக்கூடாது என்று அவனுள் எழுந்த ஆவேசமும் அந்த வலியைப் பொருட்படுத்தவிடாமல் செய்தன.

சிவமகுடம் - பாகம் 2 - 5உள்ளே நுழையும்போது மேடுபள்ளங்களின் பொருட்டும், குகை நீட்சிகளின் பொருட்டும் மிகக் கவனமாக அடிமேல் அடியெடுத்து வைத்து வந்தவன், இப்போது எதையும் கவனத்தில் கொள்ளாததால் தட்டுத் தடுமாறியும் சில இடங்களில் விழுந்து எழுந்தும் குகை வாயிலை நோக்கி நகர்ந்தான். அதேநேரம், உருவிய வாளுடன் உள்ளே நுழைந்துகொண்டிருந்தார்கள் இருவர்.

அவர்களைக் கண்டதும், ஏற்கெனவே வாள்பிடியைப் பற்றிக்கொண்டிருந்த இளங்குமரனின் இடக்கரம் சற்றுக் கீழிறங்கி வாளின் உரையை இறுகப்பற்றிக்கொள்ள வலக்கரம் பெரும் வாளை உருவிக்கொண்டது. தொடர்ந்து இடக்கரம் இடைக்கச்சையில் மறைவிலிருந்த குறுவாளை எடுத்துக்கொண்டது. அதே தருணம், இளங்குமரனின் கால் பட்டதால் சிறு கல் ஒன்று உருண்டோட, அதனால் எழுந்த சத்தம் இவனது இருப்பை எதிரிகளுக்குக் காட்டிக்கொடுத்தது.

அவ்வளவுதான்... உயர்த்திய வாளோடு ஓடி வந்தவர்கள் இளங்குமரனின் மீது பாய்ந்தார்கள். அடுத்து அங்கே சிறு போர் நிகழ்ந்தது.

எதிரிகள் இருவரானதாலும், தற்காப்புக்குக் கேடயம் இல்லாததாலும் இரு கரங்களைக் கொண்டும் போராடினான் இளங்குமரன். எதிரி ஒருவனின் வாள் வீச்சை இடக்கரத்தின் குறுவாள் தடுத்தது எனில், வலக்கரத்தின் பெருவாள் மற்றொருவனைத் தாக்கியது. இப்படி, வாள்களோடு வாள் மோத, அவ்வப்போது வாள் முனைகள் காயங்களை ஏற்படுத்தியதால் உண்டான வலியால் வீரர்கள் அலற, குகைச் சுவர்களும் தன் பங்குக்கு அந்த ஒலிகளை உள்வாங்கி விநோதமாய் எதிரொலித்து ஓர் அகோரச் சூழலை சிருஷ்டித்துவிட்டிருந்தது!

அந்த எதிரி வீரர்களை ஒப்பிட்டால், இளங்குமரன் இளம் வயதினன்தான் என்றாலும், கணத்துக்குக் கணம் வியூகத்தை மாற்றி அவன் தாக்குதல் தொடுத்த விதம் அவர்களை அயர வைத்தன. தடுத்த கையால் திடுமெனத் தாக்குவதும், தாக்கிய கை சட்டென்று அவர்களின் வாள்களைத் தடுப்பதுமாக அவன் மேற்கொண்ட யுக்திகள் அவர்களை நிலைகுலைய வைத்தன. ஆகவே, இருவரும் தங்களின் ஆவேசத்தையும் பலத்தையும் அதிகப்படுத்தினார்கள். அதனால் சற்று தடுமாறிய இளங்குமரன் உடனே சுதாரித்துக்கொண்டு தனது தாக்குதலையும் தீவிரப்படுத்தினான்.

சிவமகுடம் - பாகம் 2 - 5

எதிரி ஒருவனின் முகத்தைத் தாக்குவதற்காக இளங்குமரன் வாளை உயர்த்த, அதைத் தக்க வகையில் தடுக்கும் நோக்கோடு எதிரி தனது வாளை முகத்துக்குக் குறுக்கே அரணாக்கி மறிக்க, அவனது எதிர் பார்ப்பைப் பொய்யாக்கித் தனது வாளை எதிரியின் தோளில் வீசினான் இளங்குமரன். எதிரி வேதனையோடு `ஆ'வென்று பெருங்குரலெடுத்து அலற, அந்த அலறல் சத்தத்தையும் மீறிக் கேட்டது வெளியே ஒரு பெரும் சத்தம். எக்காளங்கள் எழுப்பிய பேரொலி அது!

தொடர்ந்து, `தொம் தொம்...’ `தொம் தொம் தொம்...’ என்று சீரான இடைவெளியில் ஏற்றமும் இறக்கமுமாக பேரிகைகளும் முழங்கின. ஆம்! அதே பஞ்சாட்சர முழக்கம்தான்! எனில், வெளியே வந்திருப்பது..?

அவரேதான்!

பேரிகைகளின் பஞ்சாட்சர முழக்கம் இளங்குமரனுக்கு வியப்பைத் தந்தது என்றால், எதிரிகளுக்கோ அதிபயங்கர திகிலை அளித்திருந்தது.  தோள்களில் வெட்டுப்பட்டவன் மீண்டும் ஒருமுறை பயங்கரமாக ஓலமிட்டான். ஆனால், இதற்குக் காரணம் வலியல்ல; வந்திருப்பவரைக் குறித்த சிந்தனையால் எழுந்த உயிர்பயம் என்பதை இளங்குமரன் உணர்ந்த தருணத்தில், எதிரிகள் இருவரும் வேகவேகமாகப் பின்வாங்கி ஓடினார்கள். காயப்பட்டவனை அணைத்து இழுத்தபடி ஓடினான் மற்றவன்.  அவர்களைப் பின்தொடரவும் தோன்றாமல் திகைத்து நின்ற இளங்குமரனை நோக்கி, ஓடியவன் சிறு வஸ்திரத்தையும் வீசிச் சென்றான். ஆங்காங்கே குருதி படிந்த கறைகளோடு தென்பட்ட அந்த வெண்ணிற வஸ்திரத்தை எடுத்துப்பார்த்த இளங்குமரன் அதிர்ந்தான்.

காரணங்கள் இரண்டு. ஒன்று, அதில் மெலிதாகத் தீட்டப்பட்டிருந்த நாக முத்திரை. மற்றொன்று, அந்த வஸ்திரம் சிவமகுடத்தைத் தென் மதுரைக்குச் சுமந்துவந்த நம்பிதேவனுக்குச் சொந்தமானது!

ங்கே இப்படியான களேபரங்கள் நடந்துகொண்டிருந்த அதே நேரத்தில், அங்கே மாமதுரையில், பாண்டியர் மாளிகையின் தீர்க்காலோ சனை மண்டபத்தையொட்டிய உப்பரிகையில், ஏதோ சிந்தனைவயப் பட்டவராக நின்றிருந்தார் பாண்டிமாதேவியார்.

தண்ணொளி தரும் பால்நிலவையும் தோற்கடிக்கும்விதம் எப்போதும் பொன்னொளி வீசித்திகழும் தேவியாரின் திருமுகமோ கல்லாய் இறுகிக் கிடந்தது. சற்று நேரத்தில் அவர் எதிர்பார்த்த இடத்திலிருந்து அந்தத் தகவலும் வந்து சேர்ந்தது. தேவியாரின் ஆணைக்கிணங்க அதைக் கொண்டு வந்த சேனைத்தலைவனே தகவலை வாசிக்கத் தொடங்கினான்.

தென்னவன்தேவியாரைப் பெருங்கொதிப்புக்கு ஆளாக்கிய அந்தத் தகவல்...

- மகுடம் சூடுவோம்...