Published:Updated:

கண்டமனூர் பரமேஸ்வரனின் பெரும் கருணை!

கண்டமனூர் பரமேஸ்வரனின் பெரும் கருணை!
பிரீமியம் ஸ்டோரி
கண்டமனூர் பரமேஸ்வரனின் பெரும் கருணை!

பாலு சத்யா - படங்கள்: சக்தி அருணகிரி

கண்டமனூர் பரமேஸ்வரனின் பெரும் கருணை!

பாலு சத்யா - படங்கள்: சக்தி அருணகிரி

Published:Updated:
கண்டமனூர் பரமேஸ்வரனின் பெரும் கருணை!
பிரீமியம் ஸ்டோரி
கண்டமனூர் பரமேஸ்வரனின் பெரும் கருணை!

ம்ஸ்கிருதத்தில் `சர்வ:’ என்று ஒரு சொல் இருக்கிறது. விஷ்ணு சகஸ்ர நாமத்தில்கூட இடம் பெற்றிருக்கிறது. இதற்கு `அருள்புரிபவர்’ என்று பொருள். உலகில் நல்ல செயல்களைச் செய்பவர் களுக்கும்,  தம்மிடம் பக்தியுடன் இருப்பவர்களுக்கும் பகவான் அளவற்ற கருணை காட்டுகிறார் என்று புரிந்துகொள்ளலாம். கருணைப் பெருங்கடல் ஈசன். கல்லினுள் தேரைக்கும், எப்பேர்ப்பட்ட கடையேனுக்கும் இரக்கம் காட்டும் பேரருளாளன். அவனருளை எனக்கு உணர்த்திய சம்பவம் அது.

`க.விலக்கு’ என்று சொல்லப்படும் அந்த இடத் தில் நாங்கள் ஒரு காலை நேரத்தில் வந்து இறங்கி யிருந்தோம். மதுரையிலிருந்து தேனிக்குச் செல்லும் பேருந்தில் ஏறி வந்திருந்தோம். `க.விலக்கு’ என்றால் கண்டமனூர் விலக்கு அல்லது ஊர் எல்லை என்று அர்த்தமாம். நான் அதை வெகு நாள்களுக்கு `விளக்கு’ என்றே நினைத்திருந்தேன். அதை ஊர் என்று சொல்ல முடியாது. `கூட்டு ரோடு’ என்று சொல்லலாம்.

என் நினைவில் அப்போது பார்த்த ஒரு கீற்றுக் கொட்டகை டீக்கடையும், நான்கைந்து சிறு வீடுகளுமே இருக்கின்றன. நான், அப்பா, அம்மா, என் இரண்டு அக்காக்கள், இரண்டு அண்ணாக் களுடன் ஒரு கூட்டமாக கண்டமனூர் செல்லும் பேருந்துக்காகக் காத்திருந்தோம். அந்நியர்கள் யாராவது ஊருக்கு வந்தால், யார், எவர் என்று விசாரிக்கும் நல்லவர்கள் அதிகமிருந்த காலமது. எதிர்ப்புறத்திலிருந்து ஒருவர் வந்தார்.

கண்டமனூர் பரமேஸ்வரனின் பெரும் கருணை!

``யாருங்க சாமி... ஏது இவ்வளவு தூரம்?’’

``கண்டமனூருக்குப் போறோம்...’’ அப்பா பதில் சொன்னார்.

``எங்கன இருந்து வாறீக?’’

``மெட்ராஸ்ல இருந்து...’’

``கண்டமனூர்ல யாரைப் பார்க்கணும்?’’

``எங்க குலதெய்வம் பரமேஸ்வரன் கோயி லிருக்கு... அங்கே பொங்கல் வைக்கப் போறோம்.’’

``ஈஸ்வரனா... ஓ ஊருக்கு அந்தால குளத்தங்கரை யில இருக்கே... அந்தக் கோயிலா?’’

``ஆமா.’’

``அடடா... இப்போ அஞ்சு நிமிஷத்துக்கு முன்னாடிதான் பஸ்ஸு போச்சு. இனிமே ஒரு மணி நேரமாவுமே... காபி தண்ணி எதுவும் குடிக்கிறீகளா?’’

``வேணாம். சாப்பாடு கொண்டாந்திருக்கோம்.’’

``அந்த மர நிழல்ல உட்காருங்க... பையன்கிட்ட தண்ணி குடுத்து அனுப்புறேன்.’’ அவர் கிளம்பிப் போனார். நாங்கள் ஒரு மரத்தடியில் அமர்ந்தோம். சற்று நேரத்தில் ஒரு பையன் ஒரு சிறு குடத்தில்  தண்ணீரும், ஒரு சொம்பும் கொண்டு வந்து கொடுத்தான். அம்மா, கட்டுச்சாதத்தைப் பிரித்து, புளியோதரையை உருட்டி உருட்டி எங்கள் கைகளில் கொடுக்க, நாங்கள் அருகிலுள்ள மரத்தில் ஓடிக்கொண்டிருந்த அணிலை வேடிக்கை பார்த்தபடியே சாப்பிட்டோம். சாப்பிட்ட பிறகு அண்ணாக்கள் ஓடிப்பிடித்து விளையாட, இரண்டு அக்காக்களும் ஒருவர் கையை மற்றொருவர் பிடித்துக்கொண்டு கொஞ்ச தூரம் நடந்து போனார்கள்.

நான் ஒரு சிறு கருங்கல்லின் மேல் அமர்ந்திருந்தேன். அம்மா என்னருகே வந்து அமர்ந்தார். என் இடது காதைத் தொட்டுப் பார்த்தார். ``வலிக்குதா பாலு!’’ என்று கேட்டார். ``இல்லைம்மா’’ என்றேன். ``ரொம்ப காத்தடிக்குது பாரு...’’ என்று சொல்லி ஒரு துண்டை எடுத்து என் காதுகளை மறைக்கும்விதமாகக் கட்டிவிட்டார். அப்பாவுக்கு சென்னை, ராயபுரம் ரயில்வே ஸ்டேஷனில் வேலை. அதற்கு முந்தின மாதம்தான் எனக்கு இடது காதில் ஒரு அறுவைசிகிச்சை நடந்திருந்தது. `பேபி ஆஸ்பத்திரி’ என அழைக்கப்படும் சென்னை, குழந்தைகள் மருத்துவமனையில் என் காதிலிருந்து ஒரு சீழ்க்கட்டியை அகற்றியிருந்தார்கள். சிகிச்சை முடிந்து, நான் தேறியிருந்ததால், குலதெய்வம் பரமேஸ்வரனுக்குப் பொங்கல் வைக்க குடும்பத்தோடு கண்டமனூர் வந்திருந்தோம்.

சென்னையில் நாங்கள் வண்ணாரப்பேட்டைப் பகுதியில் குடியிருந்தோம். அதோடு ஒப்பிட்டால் கண்டமனூர் குட்டியூண்டு ஊர். எங்கள் குலதெய்வம் கோயிலை அடைய ஊரைத் தாண்டிக் கொஞ்சம் தூரம் போகவேண்டியிருந்தது. மனித நடமாட்டம் அரிதாக இருந்தது. செம்மண் சாலை. ஆளையே தூக்கிக்கொண்டு போகிற மாதிரி சுழன்றடித்தது காற்று. ஒரு பெரிய குளக்கரையில் அந்தச் சிறு கோயில் அமைந்திருந்தது. கருங்கற்கள், செங்கற்களால் ஆன சிறு கோயில். கதவுகள் இல்லை. கர்ப்பகிரகத்தில் உருண்டையாக சாலிக்கிராமம் எனப்படும் சிறு கல். அப்பா கரங்களைத் தலைக்கு மேல் உயர்த்தி ``ஈஸ்வரா...’’ என்று சொல்லி நெடுஞ்சாண்கிடையாக விழுந்தார். அம்மாவும் நமஸ்காரம் செய்தார். நாங்களும் வணங்கினோம்.

கண்டமனூர் பரமேஸ்வரனின் பெரும் கருணை!

வெயில் பொரிந்து தள்ளியது. சுற்றிலும் பொட்டல்காடு. அப்பா, சோமு அண்ணாவை அழைத்துக்கொண்டு ஊருக்குள் போனார். ஆளுக்கு ஒரு குடத்தில் தண்ணீர் கொண்டு வந்தார்கள். அம்மா, ஓர் ஓரமாக கருங்கற்களைக் கொண்டு ஒரு தற்காலிக அடுப்பை உருவாக்கினார். அக்காக்கள் ஓடி ஓடி, சுள்ளிகளையும் குச்சி களையும் சிறு மரக்கிளைகளையும் எடுத்து வந்தார்கள். என்னை மட்டும் அம்மா எந்த வேலை யும் செய்ய வேண்டாம் என்று சொல்லிவிட்டார். 

காற்று சுழன்றடித்ததில் அம்மா அடுப்பைப் பற்றவைக்கவே மிகவும் சிரமப்பட்டார். அண்ணன் கள், அக்காக்கள், நான், அப்பா எல்லோரும் அடுப்பைச் சுற்றி நின்றுகொண்டோம். பொங்கல் பொங்கும் வரை அப்படியே நின்றிருந்தோம். அப்பா, ஈஸ்வரனுக்கு அபிஷேகம் செய்தார். பையிலிருந்த அர்ச்சனைக்குரிய பொருள்களை எடுத்து ஈஸ்வரனுக்கு அர்ச்சனை செய்தார். பொங்கலை நைவேத்தியம் செய்தார். பிறகு அப்படியே தரையிலமர்ந்து தன் கணீர்க் குரலால், ``தீன கருணாகரனே நடராஜா...’’ என்று கண்ணை மூடிப் பாட ஆரம்பித்தார். பாடல் சத்தத்தைக் கேட்டு தூரத்தில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த ஓர் ஆளும் சிறுமியும் ஓடி வந்தார்கள். ஊருக்குள் இருந்தும் சிலர் வந்து சேர்ந்திருந்தார்கள். பாடி முடித்ததும், எல்லோரையும் மனமுருக ஈசனை வேண்டிக்கொள்ளச் சொன்னார். கையோடு கொண்டு வந்திருந்த வாழையிலைகளில் பொங்கலை வைத்து வந்திருந்தவர்களுக்கு அம்மாவும் அப்பாவும் கொடுத்தார்கள். பிறகு கோயிலுக்கு அருகிலேயே வெகு நேரம் நாங்கள் உட்கார்ந்திருந்தோம். கிளம்பும்போது அம்மா, ``பரமேஸ்வரனை நல்லா கும்பிட்டுக்கோடா பாலு...’’ என்றார். நான் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கினேன். பிறகு பஸ் பிடித்து, க.விலக்கு வந்து, அங்கிருந்து மதுரைக்குப் போனோம்.  

அதற்குப் பிறகு பல சந்தர்ப்பங்களில் அம்மா என் இடது காதைத் தொட்டுப் பார்ப்பார். எனக்குக் காரணம் தெரியாது. அம்மா தன் இறுதி நாள்களில் இருந்த ஒரு சந்தர்ப்பத்தில் சூளைமேட் டில் என் வீட்டில் இருந்தார். அது ஒரு மாலை நேரம். ``பாலு இங்கே வாயேன்...’’ என்றார். நான் அருகே போய் அமர்ந்தேன். என் இடது காதின் பின்புறமிருந்த அந்தத் தழும்பைத் தடவிப் பார்த்தார். ``ஏம்மா இந்தக் காதை அடிக்கடி தொட்டுப் பார்க்கறே... அது என்ன அவ்வளவு பெரிய ஆபரேஷனா... ஒரு சாதாரண சீழ்க்கட்டி யைத்தானே ஆபரேஷன்ல எடுத்தாங்க?’’

அம்மா ஒருகணம் என்னை உற்றுப் பார்த்து விட்டுச் சொன்னார்... ``அது வெறும் சீழ்க் கட்டியில்ல பாலு... அந்தக் கண்டமனூர் ஈஸ்வரன் தான் உன் உயிரைக் காப்பாத்தியிருக்கான்.’’

அதற்குப் பிறகு அது என்ன கட்டியென்று அம்மாவிடம் நான் கேட்கவேயில்லை.

`அந்தச் சாளக்ராமம் சாட்சாத் பரமேஸ்வரனே!’

சுமார் முந்நூறு ஆண்டுகளுக்கு முன்னர் கண்டமனூர் குளத்தைத் தூர்வாரியபோது, ஓரிடத்தில் மண்வெட்டி பட்டு `மணியோசை’ கேட்டிருக்கிறது. மேலும் தோண்டியபோது, உருண்டை வடிவில் ஒரு சாளக்கிராமக்கல் கிடைத்திருக்கிறது. அதில் லேசாக ரத்தக்கசிவு தென்பட, கண்டமனூர் ஜமீன்தாரின் கவனத்துக்கு அதைக் கொண்டுபோயிருக்கிறார்கள். அன்று இரவு ஊரிலுள்ள ஓர் அந்தணரின் கனவிலும், ஜமீன்தாரின் கனவிலும் தோன்றிய முதியவர் ஒருவர், `அந்த சாளக்கிராமக்கல் சாட்சாத் பரமேஸ்வரன்’ என்று சொல்லியிருக்கிறார். அதன் பிறகு ஊர் மக்கள் கோயில் குளக்கரையிலேயே சாளக்கிராமக்கல்லை ஒரு பீடத்தில்வைத்து வழிபட்டார்கள்.

1965-ம் ஆண்டு கிராம அதிகாரியாக இருந்த வெங்கடகிருஷ்ணன் என்பவர், ஊர்க்காரர்களின் உதவியுடன் பீடமிருந்த இடத்தில், பரமேஸ்வரனை மட்டும் தரிசிக்கும்விதமாக சிறு கருவறையைக் கட்டினார். அந்த இடம் ஜமீன் காலத்தில் `பரமேஸ்வரன் கோயில்’ என்று செப்புத்தகட்டில் பதிவுசெய்யப் பட்டிருக்கிறது. அந்தக் கோயிலை வழிபட்டவர்களின் வழித்தோன்றல்கள், 2006-ம் ஆண்டு இந்தக் கோயிலை புனருத்தாரணம் செய்வதற்காகவே ஒரு கமிட்டியை அமைத்தனர். 2009-ம் ஆண்டு பரமேஸ்வரன் திருவருளால் சின்னஞ்சிறு கோயிலாக உயர்ந்தது. இப்போது இந்தக் கோயிலை விஸ்தரிக்கும் பணிகள் தீவிரமாகியுள்ளன. கோயில் திருப்பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. பரமேஸ்வரன் கோயில் கமிட்டியினர் கோயில் பணிகளை பூரணமாக நிறைவேற்றி, வரும் மார்ச் 3-ம் தேதி, கும்பாபிஷேகம் நடத்தும் வேலைகளில் ஈடுபட்டுவருகிறார்கள்.